“மகான் அவர்களே! நானும், என் தோழிகளும் இன்றைய உலகின் எழிலரசிகள். எங்களில் ஒருத்தியிடமே அனைத்தையும் இழந்து நிற்கும் ஆடவர் பலரை அன்றாடம் பார்த்து வருகிறோம். இப்படியிருக்க, நாங்களோ அனைத்தையும் இழந்து உங்கள் முன் நின்றும்கூட உங்களை எங்கள் வசம் ஈர்க்க முடியாத மர்மம் என்ன?” என்று கண்ணீர் மல்க வினவினாள்.
“பெண்ணே! ஆண்டவனின் அற்பப் படைப்பே! உன்னுடைய உடல் உண்மையாகவே அழகானதுதானா? நிச்சயமாக இல்லை. அனைத்து அழகையும் தன்னில் கொண்ட அல்லாஹ்வை தரிசிக்கும் பேறடைந்த என்னைப் போன்றவர்க்கு உன் அற்ப அழகு எம்மாத்திரம்? என் நிலையில் நீயே இருந்தாலும் கூட காலத்தின் கணப்பொழுதையும் வீணாக்கி இருக்கமாட்டாய்” என்றார்கள்.
“காணக்கிடைக்கா ஆண்டவனின் தரிசனத்தை பாவியாகிய நானும் காண இயலுமா? என்று ஆர்வத்தோடு கேட்டாள்.
“நீ என்ன! உன்னிலும் தாழ்ந்தவர் கூட இறையழகைக் கண்டு ஆனந்திக்கலாம். ஆனால், அதற்குச் சில நிபந்தனைகள் உண்டு இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவதும், இனி, பாவத்தின் நிழலைக்கூட நாடுவதில்லை என்று உறுதி கொள்வதும், இறைவனின் சொற்களையும் இறைத் தூதரின் சொற்களையும் அப்படியே பின்பற்றுவதும் உனக்கும் இறைவனுக்கும் உள்ள திரைகளை விலக்கி விடும்” என்று அறிவுறுத்தினார்கள்.
மனங்களை மாற்றும் பெரியோனாம் அல்லாஹ் ஸஹவானத்தின் மனத்தையும் அந்த நொடியில் மாற்றி விட்டான்
“மகான் அவர்களே! இப்போதே இறைவனிடம் என் பிழைகளைப் பொறுக்க மன்னிப்புக் கோருகிறேன்” என்றுரைத்துக் கதறினாள். கதறிக் கதறி மன்னிப்புக் கோரினாள்.
“இறைவா! இனி ஒரு கணப்பொழுதுகூட ஆண்களின் ஆசைப் பொருளாக என்னை வைத்து விடாதே! இந்த மெய்ஞ்ஞான மேதையின் பொருட்டால் உன்னிடம் இறைஞ்சுகிறேன். பாவங்களிலிருந்து விடுவித்து என்னைப் பரிசுத்தப் படுத்துவாயாக! உன் திருக்காட்சி ஒன்றே எனது குறிக்கோளாகும்” என்றுரைத்த ஸஹவானத் யாரும் எதிர்பாரா வண்ணம் கடலில் குதித்து விட்டாள்.
ஈடில்லா எழிலரசியின் ஈடுசெய்ய முடியாத இழப்பு அந்தக் கப்பலையே சோகத்தில் வீழ்த்தியது. நீச்சல் அறிந்தோரின் அத்தனை முயற்சிகளும் வீணாயின. உயிருடனோ அது இல்லாமலோ அவளின் உடலைக் கண்டெடுக்க இயலவில்லை. மீனுக்கு இரையாகி இருக்கக்கூடும் என்ற முடிவுடன் ஒரு நாள் தாமதப்பட்ட கப்பல் துயரத்தோடு கரை சேர்ந்தது.
உற்சாகமாக கப்பலுக்கு வந்தவர்கள் உடைந்து நொறுங்கியவர்களாக இறங்கிப் போனார்கள்.
ஆண்டுகள் பல கடந்து விட்டன. ஹளரத் ஜூனைதுல் பக்தாதி(ரஹ்) அவர்கள் பல இடங்களுக்குச் சென்று மார்க்கப் பணியாற்றி தம் வாணாளைக் கழித்து வருகிறார்கள்.
இந்த ஆண்டின் ரமலானைக் கஃபாவில் கழிக்க எண்ணிய அவர்கள் மக்கா நகர் வந்து தங்கி விட்டார்கள்.
கஃபாவைத் தவாபு செய்துவிட்டு ஓரிடத்தில் சற்று ஓய்வாக அமர்ந்திருந்த வேளையில் பெண்ணொருத்தி அவர் முன் வந்து ஸலாமுரைத்தாள். பதில் ஸலாம் பகர்ந்ததும், ‘இன்றைய நோன்பைத் திறக்க தன் இருப்பிடம் வரவேண்டும்;’ என்று பணிவாக வேண்டினாள். மறுத்தும், அவள் அதில் விடாப்பிடியாக இருந்ததால் மக்ரிபுக்குப் பிறகு வருவதாக வாக்களித்து அனுப்பி வைத்தார்கள்.
மக்ரிபு தொழுகையை நிறைவேற்றிய பின் அம்மங்கையின் கூடாரத்திற்குச் சென்றார்கள். அதுவோ, இடையில் தடுப்பு வைத்து மறைக்கப்பட்ட இரண்டு அறை கொண்டதாக இருந்தது. முன்பகுதி வந்தோர் அமரவும், இதர காரியங்களுக்கு உரியதாகவும், பின்பகுதி அவளின் வணக்க வழிபாட்டிற்கு உரியதாகவும் அமைக்கப் பட்டிருந்தது.