அழுக்கு அகற்றப்பட்ட அழகு

 

‘அரசன் முதல் பாமரன் வரையிலும்,  ஏன்?  மதப் பெரியவர்களையும் கூட என் காலடியில் கிடத்திவிட்ட எனக்கு,  என் அழகுக்கு விடும் சவால் அல்லவா இவரது மவுன தியானம்.  இவரை நான் சும்மா விடமாட்டேன்.  எப்படியும் என் வலையில் வீழ்த்தியே தீருவேன்’ என்ற சபதத்தை நெஞ்சின் உறுதி மொழியாய் ஆக்கிய பின்னர் அங்கிருந்தும் நகர்ந்து ஆடல் மேடையை வந்தடைந்தாள்.

அன்றைய இரவில் ஆடலரங்கில் அவளது உடல்தான் ஆடிக் கொண்டிருந்ததே தவிர அவளது நினைவெல்லாம் கண் கதவு சாத்தி தவமிருக்கும் அந்தப் பெரியவரைச் சுற்றியே சுழன்று கொண்டிருந்தது. என்றாலும்,  தன் ஆட்டத்தால் பார்வையாளர்களைப் போதையுறச் செய்யவும் அவள் தவறவில்லை.

ஆடல் நிகழ்ச்சி நிறைவுற்றது. அவை கலைந்தது.

நாளை பிரமுகர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரிவுபசார விழா.  அந்த வேளையில் குவியும் அணிமணிகளையும்,  பரிசுப் பொருட்களையும் எண்ணிய தோழிகள் மகிழ்வுற்றிருக்க,  காலைத் திட்டங்களைக் கச்சிதமாகப் பட்டியலிட்டுத் தரவேண்டிய தலைவி கவலை தோய்ந்த முகத்தினளாய்ச் சிந்தனையில் மூழ்கியிருப்பதைக் கண்டு கலங்கினார்,  செய்வதறியாது திகைத்தனர்.

நேரமோ நட்ட நடுநிசி.  துயிலச் செல்லாமல் தன் நிலை கண்டு நிலை கொள்ளாமல் தவிக்கும் தோழிகளிடம் தன் கவலைக்குரிய காரணத்தை விவரித்தாள்.

மவுனம் விலக்கிய ஸஹவானத்தின் மனவேட்கையைத் தெரிந்த தோழிகள் ‘இதுதானா?’ என்ற சாதாரண நினைப்பில் நிம்மதி அடைந்தனர்.

“பொழுது விடிவதற்கு முன்பாக அந்தப் பெரியவரை நம் வலையில் வீழ்த்திட வேண்டும்.  முடியுமா உங்களால்?  இல்லா விட்டால் நானே செல்கிறேன்” என்று எழுந்த ஸஹவானத்திடம் ‘இதோ நாங்கள் செலகிறோம்.  கொஞ்ச நேரத்திலேயே அவருடன் நாங்கள் திரும்பி வருவதைப் பார்ப்பீர்கள்’ என்றுரைத்த மூன்று தோழிகள் கவர்ச்சித் தூண்டிலுடன் புறப்பட்டுச் சென்றனர்.

இந்த மூன்று பெண்களும் தங்களின் சாகச வலையை அந்தப் பெரியவரைச் சுற்றி விரித்தனர்.

இறைக் காதலெனும் காந்தத்தில் ஒட்டிக் கிடக்கும் மகான் அவர்களை அம்மங்கையரால் பிரித்து எடுத்துவர இயலவில்லை.

இந்தப் பெண்கள் தோல்வியுடன் திரும்பியதால் வேறுவேறு பெண்களும் முயற்சி செய்துப் பார்த்தனர். எல்லோருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

இந்தப் பெண்களின் காம இரையை மறைத்தத் தூண்டிலை மகானின் மனமீன் தொட்டுக்கூட பார்க்கவில்லை.

ஸஹவானத்தின் முன் தலைகுனிந்து நிற்கும் தோழியர் தங்களின் அழகும் கவர்ச்சியும் அந்தப் பெரியவரிடம் மரியாதை இழந்து செல்லாக் காசாகிப் போனதை உணர்த்தினர். கோடீசுவரர்களின் கவுரங்களைத் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்த பெண்கள்,  அதிகாரம் கிடைத்தால் ஆணவம் படைத்தவர்களைத் தங்கள் அடிமைகளாக்கி வைத்திருந்த பெண்கள்,  வியாபார விற்பன்னர்களைத் தங்கள் காலடியில் வீழ்த்தி வைத்திருந்த பெண்கள் ஒரு சாதாரண மனிதரை தங்களால் எதுவும் செய்ய இயலாத கையறு நிலையை எண்ணிக் கலங்கினர்.  இது,  அவர்களால் ஜீரணிக்க முடியாத அவர்களுக்கான அவமானமாகவும் அமைந்தது.