அழுக்கு அகற்றப்பட்ட அழகு

 

கூடார வாசலில் நின்று ஸலாமுரைத்த மகானுக்குப் பதிலுரைத்து,  உள்ளே அழைத்து அமரச் செய்தாள்.

நோன்பு திறப்பதற்கான எந்த உணவு வகைகளும் அங்கே இருக்கவில்லை. தயாரித்துத் தருவதற்காகவும் உரிய பொருட்கள் எதுவும் அங்கில்லை.  மகான் ஜூனைதுல் பக்தாதி(ரஹ்) அவர்கள் அமைதியாக அமர்ந்திருக்க,  அந்தப் பெண் தனது வணக்க அறைக்குள் சென்று இறைவனிடம் இறைஞ்சத் துவங்கினாள்.

“யா அர்ஹமர் ராஹிமீனே! மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு விண்ணிலிருந்து எப்படி நீ உணவு வகைகளை இறக்கி அருளினாயோ அவ்வாறே இப்போதும் இறக்கி அருள்வாயாக!”

என்ன வியப்பு! ஏந்தியக் கைகளை இறக்குவதற்கு முன்பாகவே விண்ணிலிருந்து விந்தைமிகு உணவு வகைகள்,  கனி வகைகள்,  குளிர் பானங்கள் வந்திறங்கின.

இறைவனின் மகிமையைப் புகழ்ந்தவராய் அவற்றை உண்டு மகிழ்ந்த மகான் அவர்கள் அவளை மரியாதையுடன் நோக்கி “பெண்மணியே! இத்தகு ஆற்றலைத் தாங்கள் எதன்மூலம் பெற்றீர்கள் என்பதைத் தயைகூர்ந்து தெரிவிக்க இயலுமா?” என்று வினவினார்கள்.

இது கேட்ட அப்பெண்மணி புன்னகைப் பூத்தவளாய் “மகானே! என்னைக் கூர்ந்து கவனியுங்கள் நான் யாரென்று தங்களுக்குப் புரியும்.  கண்களை மூடி கல்பைத் திறக்கச் சொன்ன குருநாதரே! உங்கள் அறிவுரைப்படி நடந்ததாலேயே இந்தப் பேற்றினைப் பெற்றேன்.  நான்  தான் ஸஹவானத்!”

மகானின் மனம் மறையோனைப் புகழ்ந்துப் போற்றியது.

“நான் கடலில் குதிப்பதற்கு முன்பு,  இறைவா! உன் நாட்டம் எதையும் நான் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.  ஆயினும்,  எவரின் பொருட்டால் இந்த நிலைக்கு நான் வந்தேனோ அந்த மகானை மீண்டும் ஒருமுறை சந்தித்து அவரின் துஆவைப் பெற்றவளாய் என்னை மரணிக்கச் செய்வாயாக! வேண்டுகோளுடன் கடலில் குதித்து விடடேன்.

கருணைமிக்க நாயன் என் கடைசி ஆசையை இப்போது இங்கே நிறைவேற்றி விட்டான்.  தாங்களும் என் ஜனாஸாவை அடக்கம் செய்துவிட்டுச் செல்லுமாறு வேண்டுகிறேன்” என்ற ஸஹவானத் தனது இறுதி இறைஞ்சல்களை இறைவனின் முற்றத்தில் சமர்ப்பித்தாள்.

சற்று நேரத்திற்கப்பால்,  அஞ்ஞானம் அகற்றியதால் மெய்ஞ்ஞான மரியாதையைப் பெற்றுயர்ந்த அந்த ஞானப் பெண்மணியின் ஆவி பிரிந்தது.  உடற்கூண்டு தனிமைப்பட்டது.

மகான் ஹளரத் ஜூனைதுல் பக்தாதி(ரஹ்) அவர்களை வஸீலாவாக்கி இறை வழிப்பாட்டில் மூழ்கித் திளைத்து இவ்வுலக மாயைகளாம் அழுக்குகளை அகற்றியதால் அப்பழுக்கற்ற இறையழகைக் கண்டு களித்த ஸஹவானத்தைப் போல் நாம் இல்லையாயினும; மறுமையில் அல்லாஹ்வின் அழகிய ‘லிகா’ வைத் தரிசிக்கும் மகத்தான பேற்றை அந்தக் கருணை நாயன் நமக்கெல்லாம் தந்தருள்வானாக! ஆமீன்!

கவிஞானி G.S.T.  மஹ்பூப் சுப்ஹானி