அழுக்கு அகற்றப்பட்ட அழகு

 

இரவு உணவு பரிமாறப்பட்டது.  உண்டவர்கள் உறக்கத்தை நாடாமல் கப்பலின் மேல் மாடத்தை நோக்கி ஆர்வத்துடன் விரைந்து சென்ற வண்ணம் இருந்தனர்.

இந்தக் கப்பலின் பயணிக்க விரும்பாத மகான் அவர்களை ஏதோவொரு உணர்வின் கரம் உந்தித் தள்ளியதால் அவர்களும் இதில் பயணப்பட நேர்ந்து விட்டது.

கப்பலின் கீழ்த்தளத்திற்குச் சென்ற மகான் அவர்கள் ஒதுக்குப் புறமான ஒரு இடத்தில் மக்ரிபையும், இஷாவையும் தொழுது முடித்து,  தனக்கான அந்த இரவை இறை தியானத்தால் வெளிச்சப் படுத்துவதற்காக உலகம் மறந்தார்கள். இறை இன்பத்தில் மூழ்கி விட்டார்கள்.

கண்களுக்குள் குளிர்ச்சியையும்,  மனத்துக்குள் சூட்டையும் உண்டாக்கி விடுகின்ற ஸஹவானத்தின் கவர்ச்சியைக் காண பெரும் வணிகர்களும்,  செல்வந்தர்களும் பட்டபாடு வர்ணிக்க இயலாதவை.

செல்வத்தை அள்ளிச் சொரிந்தாலும் தான் விரும்பாதோரைப் பார்க்க விரும்பாதவள் ஸஹவானத். இவளின் தோழிகள்கூட அன்றைய பணம் படைத்தவர்களைப் படுத்திய பாடு சொல்லுந் தரத்தன்று.

இப்படிப்பட்ட தன் தோழிகளோடு வந்திருக்கும் ஸஹவானத்தை ஒரு முறை அல்ல பல முறை,  ஒரு நாளல்ல ஐந்து இரவுகளும்,  நான்கு பகல்களும் பார்க்கப் போகிறோம்: அவளுடனேயே பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியின் மத்தாப்புத் தெறிப்பு அவர்களின் மனங்களிலும்,  முகங்களிலும் ஓயாமல் நிகழ்ந்து கொண்டிருந்தது.

முதல் நாள் நிகழ்ச்சி ஆரம்பமாகியது.

இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்த ஒளிவெள்ளத்தில் மிதந்து சென்ற அந்த அழகிய கப்பலின் ஆடலரங்கில் தோழிகளின் ஆடல் கண்டு மெய்மறந்தது கூட்டம்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக ஸஹவானத் ஆடினாள்.  விளக்கில் விழுந்த ஈசலைப் போல் அனைவரும் ஆகிப்போனார்கள்.

ஸஹவானத்தின் கவர்ச்சி,  கண்டோரின் காமத்தை வெளியே இழுத்துப் போட்டது.  அந்த போதையில் மிதந்து நின்றவர்களை அப்படியே விட்டுவிட்டு அவள் தன் இருப்பிடம் சென்று விட்டாள். இவை எதையும் அறியாமல் இறைக் காதலில் மூழ்கித் திளைத்திருக்கும் மகானை எவரும் கவனிக்கவில்லை.

பகலை இரவாகவும்,  இரவைப் பகலாகவும் ஆக்கி மூன்று தினங்களைக் கழித்துவிட்ட பிரயாணிகள் நான்காம் இரவை வரவேற்றுக் கொண்டதுடன் ஸஹவானத்தின் தோழிகளுடன் அளவளாவும் வாய்ப்பினையும் பெற்றனர்.

அந்த பிரமுகர்களில் பலரும் தங்கள் செல்வப் பகட்டைப் பறைசாற்றும் நோக்கில் விலை உயர்ந்தப் பரிசுப் பொருட்களை அந்தப் பெண்களுக்குக் கொடுத்து மகிழ்வூட்டினர்.  இதன் மூலமாக ஸஹவானத்தின் கடைக்கண் பார்வை தங்கள் மீது படாத என்றும் நப்பாசை கொண்டனர்.

தந்ததையெல்லாம் பெற்றுக்கொண்ட தோழிகள் அன்றைய இரவு ஆட்டத்தில் அவர்களை மேலும் கிறங்கடித்தனர்.  ஸஹவானத்தின் ஆட்டமோ அவர்களைக் கிறுக்கர்களாகவே ஆக்கிவிட்டது.

பொழுது புலர்ந்தது,  விரைந்து நடந்தது,  பகலும் முடிந்தது.

இன்று ஐந்தாம் இரவு,  இறுதி இரவு. வழக்கம் போல் தோழிகளின் ஆடல் ஆரம்பமாகி விட்டது.  ஆண்கள் அனைவரும் அவையில் அமர்ந்திருந்தனர்.

அலங்காரமான கப்பலின் உட்பகுதிகளை யாரும் இல்லாத இந்த வேளையில் பார்த்து வரலாம் என்று எண்ணிய ஸஹவானத் கப்பலைச் சுற்றி வருகிறாள்.

ஒவ்வொரு இடமாகப் பார்த்து அதன் கட்டுமான அழகை ரசித்து வந்தவள் ஓரிடத்தைப் பார்த்ததும் அப்படியே நின்று விட்டாள். தன்னையும்,  தன் ஆட்டத்தையும் சுவைப்பதற்காக ஊண் உறக்கத்தைத் துறந்து,  மற்றைய உலக நினைவுகளை மறந்த பிரயாணிகளைச் சுமக்கும் இந்தக் கப்பலில் இப்படியும் ஒரு பிரயாணியா?  என வியக்கிறாள்.

ஆம்! கண் மூடிய வண்ணம் இறை எண்ணத்தில் மூழ்கி இருக்கும் மகானின் தியானக் காட்சியே இந்த ஆடல் நாயகியை நிலைகுலையச் செய்து விட்டது.