இதற்கு மேலும் தம் தோழிகளை நம்பிப் பயனில்லை என்பதை உணர்ந்த ஸஹவானத் தனது சபதம் நிறைவேற தானேதான் களத்தில் இறங்க வேண்டும் என்ற முடிவுடன் அந்த அகால வேளையிலும் கூட அந்தப் பெரியவரின் இருப்பிடம் நோக்கி அடிமேல் அடி வைத்து நடந்தாள்.
பேரின்பப் பேரமுதைப் பருகிக் கொண்டிருக்கும் அந்தப் பெரியவரைத் தன் சிற்றின்பச் சிருங்காரச் செயல்களால் சிறைப்பிடித்து, வசப்படுத்தித் தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கங்கணம் கட்டிக் கொண்டாள்.
பெண்கள் தாங்கள் நினைத்ததை நிறைவேற்றுவதில் வல்லவர்கள். அதிலும், உலக அழகியாகத் திகழும் ஸஹவானத்தின் சபதம் இதுவென்றால் கேட்கவா வேண்டும்.
தானும் கெட்டலைந்து மற்றவரையும் கெடுத்துவிட முனைபவர்கள் எல்லாக் காலங்களிலும் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டாகும். நல்லவர்களிடமும், இறைநேசச் செல்வர்களிடமும் ஷைத்தானின் சூழ்ச்சி வீழ்ச்சியடைந்தே போகின்றன.
கண் பொத்திக் கால் நீட்டிப் படுத்திருந்த மகான் அவர்கள் தம்மருகில் சிதறிய சலசலப்பால் கண் விழித்துப் பார்த்தார்கள். இக்காரிகையைக் கண்டதும் மறுபுறம் திரும்பிப் படுத்து விட்டார்கள்.
கல்லையும் கரைத்து விடும் வகையிலான ரஸவாதக் கவிகளைப் பாடி பெரியவரைப் பரவசப்படுத்தப் போராடினாள்.
செவிடன் காதில் ஊதிய சங்கொலியாய் தன் முயற்சிகள் வீண்பட்டதைக் கண்டு பொறுமை இழந்த அவள் அவரின் உடலை அசைத்து தன்னைத் திரும்பிப் பார்க்குமாறு கெஞ்சினாள்.
தன்னை ஒருமுறையேனும் பார்க்கச் செய்துவிட வேண்டும் என்று அவள் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியடைய தலைகுனிந்தவளாய், நிலை தளர்ந்தவளாய், சோகம் சுமந்தவளாய் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தாள்.
தானும் தன்னுடைய தனி அழகும் அந்த மகானிடம் அற்பமாய் ஆகிப்போனதை நினைத்து அந்த இரவின் தூக்கம் தொலைத்தாள், தன் வேதனையை அழுது வடித்தாள்.
ஐவகறை வந்தது. பஜ்ருத் தொழுகைளை நிறைவேற்றிய மகான் அவ்ராதுகளை ஓதிய வண்ணம் அமைதியாக இருக்கிறார்கள்.
இறைநேசத்தில் தோய்ந்து அற்புதமான புலனடக்க வலிமையைப் பெற்ற மகானிடம் தன் ஆற்றாமையை வெளிப்படுத்தி தன் அக வெப்பத்தைத் தணித்துவிட எண்ணிய ஸஹவானத் நல்லுடை அணிந்து முக்காடிட்டவளாய் வந்து மரியாதை காட்டி ஸலாம் உரைத்து நின்றாள்.
ஸஹவானத்தின் இந்தக் கோலத்தைக் கண்ட மகான் ஹளரத் ஜூனைதுல் பக்தாதி(ரஹ்) அவர்கள் விண்ணை நோக்கிக் கையேந்தியவர்களாய்ப் புன்முறவல் பூத்தார்கள்.