நோயும் சிகிச்சையும்
உலகில் நோய்கள் எத்தனை உண்டோ அத்தனைக்கும் மருந்துகளை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். குறிப்பாக ஒரு வியாதிக்கு மருந்து இல்லை என்று சொன்னால் அது மருத்துவர்களின் ஆராய்ச்சிக் குறைவே தவிர அல்லாஹ் அந்த மருந்தைப் படைக்கவில்லை என்பதல்ல.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹு தஆலா இந்த உலகில் எந்த நோயையும் அதற்குரிய மருந்துடனே தவிர படைக்கவில்லை. (நூல்: புகாரீ)
ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் தோழர்கள் ‘யாஸுலல்லாஹ் நாங்கள் மருந்து உட்கொள்ளலாமா? என்று கேட்டபோது நபி (ஸல்) கூறினார்கள். ஆம், இறைஅடியார்களே! தாராளமாக மருந்து உட்கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய மருந்தின்றி படைக்கவில்லை. ஆனால் முதுமை வராமல் தடுப்பதற்கு மட்டும் எந்த மருந்தும் இல்லை’. (நூல்: அஹ்மத், திர்மிதீ, அபூதாவூது)
முறையான மருந்தை உபயோகித்தல்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அனைத்து நோய்களுக்கும் மருந்து உள்ளது. அந்தந்த நோய்களுக்கு அதற்குரிய மருந்துகள் முறையாக உபயோகிக்கப்படும் போது அல்லாஹ்வின் அனுமதி கொண்டு நோய்கள் குணமடைகின்றன. (நூல்: முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து தம் சகோதரருக்கு தீராத வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருப்பதாக முறையிட்டபோது தேன் கொடுக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் போய்விட்டு திரும்பி வந்து ‘தேன் கொடுத்தும் கூட வயிற்றுப்போக்கு நிற்கவில்லை என்றார்’. இவ்வாறு மூன்று தடவைகள் அவர் போய்த் திரும்பி வந்த போதும் நபி (ஸல்) அவர்கள் அதே பதிலையே கூறினார்கள். நாலாவது தடைவை அவர் ‘யாரஸுலல்லாஹ்’ தேன் கொடுத்தும் வயிற்றுப் போக்கு நிற்கவில்லை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ் உண்மை சொல்கிறான். உன் சகோதரனின் வயிறு பொய் சொல்கிறதா?’ (தேன் சரியாக நீங்கள் தரவில்லை) என்றார்கள். இறுதியாக சென்று இன்னும் கொஞ்சம் தேனை அவருக்கு கொடுத்த போது வயிற்றுப் போக்கு நின்று விட்டது. (நூல்: புகாரீ, முஸ்லிம்)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மருந்து போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் ஹராமான மருந்துகளை உபயோகிக்க வேண்டாம். (நூல்: அபூதாவூத்)
கெட்டுப்போன (காலாவதியான) மருந்துகளை உபயோகப்படுத்துவதை விட்டும் நபி (ஸல்) எங்களைத் தடுத்தார்கள். (நூல்: திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத், அபூதாவூத்)
நோய் வராமல் தடுக்க:
நோய்கள் வராமல் தடுப்பதற்கு மிகச் சிறந்த வழி உணவில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுடைய உணவை அளவோடு சாப்பிடுங்கள். அதில் உங்களுக்கு பரகத்து ஏற்படும். (நூல்: புகாரீ)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உணவுகளைச் சேகரிக்கும்) இரைப்பையாகிறது ஒட்டு மொத்த உடலின் தடாகம் (மையப்பகுதி) ஆகும். இங்கிருந்து தான் (உடலுக்குத் தேவையான சத்துக்களை) அனைத்து நரம்புகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆகையால் அந்த இரைப்பை (சுத்தமான உணவை, அளவோடு சாப்பிட்டு) நலமோடு இருந்தால் நரம்புகளும் நலமாக இருக்கும். மாறாக (அளவுக்கு மீறி உண்பதாலோ, கெட்டுப் போனதைத் தின்பதாலோ) இரைப்பை சேதமடைந்தால் நரம்புகளும் சேதமடைந்து நோய்கள் உருவாகும். (நூல்: பைஹகீ)