நோயும் சிகிச்சையும்

 

அளவோடு உண்பவனே முஸ்லிம்:

ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு காபிர் விருந்தாளியாக வந்தார். அவருக்காக ஆட்டுப்பால் கறந்து தரும்படி நபி (ஸல்) அவர்கள் கூற (ஒரு கோப்பையில்) ஆட்டுப்பால் தரப்பட்டது.  அதை அவர் குடித்தார்.  மீண்டும் (ஒரு கோப்பை) தரப்பட்டது.  அதையும் குடித்தார்.  இப்படியாக 7 கோப்பைகளை குடித்து முடித்தார்.  அடுத்த நாள் அவர் முஸ்லிமாகி விட்டார்.  அப்போது நபி (ஸல்) அவர்கள் (முதல் நாளைப் போலவே) அவருக்கு ஆட்டுப்பால் தரும்படி கூற (ஒரு கோப்பையில்) ஆட்டுப்பால் தரப்பட்டது அதை அவர் குடித்தார். மீண்டும் (ஒரு கோப்பை) தரப்பட்ட போது அவரால் அதை முழுவதுமாக குடிக்க முடியவில்லை.  அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், முஸ்லிம் ஓர் இரைப்பையை நிரப்பிக் கொள்ள சாப்பிடுவான்.  ஆனால் ஒரு காபிர் 7 இரைப்பையை நிரப்பிக் கொள்வது போல் சாப்பிடுவான். (நூல்: முஸ்லிம்)

எல்லோருக்கும் இருப்பது ஓர் இரைப்பை தான்.  ஆனாலும் ஒரு காபிருக்கு (பெரும்பாலும்) உணவில் கட்டுப்பாடு இருக்காது என்பதே இதன் கருத்து.

ஆன்மிக மருத்துவம்:

உலகில் மருத்துவத்தோடு,  ‘நோய்கள் தீர இரண்டு மருந்துகளை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். ஒன்று தேன்,  மற்றொன்று குர்ஆன்’.  (நூல்: இப்னுமாஜா)

‘தேன் இருக்க வேண்டும்’ என்பது உலகியல் மருத்துவத்தைக் குறிப்பதாகும்.

ஆலி (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்:  ஒரு நாள் இரவு நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்த போது கையைத் தரையில் வைத்தார்கள்.  அப்போது ஒரு தேள் அவர்களைக் கொட்டிவிட்டது.  உடனடியாக அதனை செருப்பால் அடித்துக் கொன்று விட்டார்கள்.  தொழுகை முடிந்ததும் நபி (ஸல்) அவர்கள் (கையில் வேதனையோடு) ‘அல்லாஹ் இந்தத் தேளைச் சபிப்பானாக! தொழுபவரைக் கூட இது விட்டு வைப்பதில்லை’ என்று கூறி விட்டு உப்பையும், தண்ணீரையும் எடுத்து வரச் சொன்னார்கள்.  ஒரு பாத்திரத்தில் இரண்டையும் கலந்து அந்த நீரை தேள் கடிபட்ட விரலில் ஊற்றித் தடவினார்கள்.  பின்பு சூரத்துல்ஃபலக், சூரத்துன்னாஸ் இரண்டையும் ஓதி கையில் ஊதிக் கொண்டார்கள். (நூல்: பைஹகீ)

ஷிஃபா பின்து அப்துல்லாஹ் (ரலி) என்ற பெண்மணி கூறினார்கள்:  நான் ஹஃப்சா (ரலி) உடைய வீட்டில் இருந்த போது அங்கு வந்த நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து ‘நீ இந்த ஹஃப்சாவுக்கு எழுதக் கற்று தந்ததைப் போல காயங்களுக்கு ஓதிப் பார்ப்பதையும் கற்றுத் தந்திருக்க வேண்டாமா?’ என்றார்கள்.  (நூல்: அபூதாவூத்) நபி (ஸல்) அவர்களுக்கு உடம்பில் எங்காவது காயமோ, கொப்புளமோ ஏற்பட்டால் (வலி தெரியாமல் குளிர்ச்சியாக இருப்பதற்கு) மருதாணியை அரைத்து அதன்மீது வைத்து விடச் சொல்வார்கள்.  (நூல்: திர்மிதீ)