நோயும் சிகிச்சையும்

 

கண் திருஷ்டி:

சில நேரங்களில் கண் திருஷ்டியின் மூலமாகக் கூட மனிதர்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு உடல் நலக் கோளாறுகள் ஏற்படக் கூடும்.  அவற்றை முறியடிப்பதற்கு இரு வழிகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். ஒன்று சொல் வடிவம் கொண்டது.  மற்றொன்று செயல் வடிவம் கொண்டதாகும்.

ஆயிஷா (ரலி) கூறினார்கள்: கண் திருஷ்டிக்கு ஓதிப் பார்க்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.  (நூல்: புகாரீ, முஸ்லிம்)

அபூஸாயீதுல் குத்ரீ (ரலி) கூறினார்கள்:  கண் திருஷ்டிக்கு சூரத்துல்ஃபலக்,  சூரத்துன்னாஸ் இரண்டைக் கொண்டும் நபி (ஸல்) பாதுகாவல் தேடுவார்கள்.  (நூல்: திர்மிதீ)

அஸ்மா பின்து உமைஸ் (ரலி) என்ற பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் யாரஸுலல்லாஹ்,  ஜஃபர் (ரலி) உடைய குழந்தைகளுக்கு ‘கண் திருஷ்டி’ விரைவாக தாக்குகிறது.  அதற்காக ஓதிப் பார்க்கலாமா? என்று கேட்ட போது ‘தாராளமாக ஓதிப் பாருங்கள்’.  விதியைக் கூட மிஞ்சுகின்ற ஒரு விசயம் இருக்குமானால் ‘கண்திருஷ்டி’ மட்டுமே அவ்வாறு மிஞ்ச முடியும் அதற்காக உங்களைக் கழுவி விடச் சொன்னால் கழுவி விடுங்கள்.  (நூல்:  அஹ்மது, திர்மிதீ, இப்னுமாஜா)

சஹ்ப் இப்னு ஹுனைஃப் (ரலி) என்ற நபித்தோழர் குளித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஆமிர் இப்னு தபீஆ (ரலி) இவருடைய கட்டுடலைப் பார்த்து அல்லாஹ்வின் மீது சத்தியமாக மறைத்து வைக்கப்பட்ட இவ்வளவு அழகான மேனியை இன்று வரை நான் பார்த்ததில்லை  என்று கூறி (கண் திருஷ்டியை) ஏற்படுத்தி விட்டார்.  அடுத்த நிமிடமே சஹ்ல் (ரலி) கீழே விழுந்தார். (உடலில் பலமாக அடிப்பட்டுவிட்டது.  அவரை நபி (ஸல்) அவர்களிடம் தூக்கி வரப்பட்டு யாரஸுலல்லாஹ்! இவருக்கு ஏதாவது வைத்தியம் செய்ய முடியுமா? அல்லாஹ்வின்மீது சத்தியமாக இவர் தலையைக் கூட தூக்க முடியாமல் இருக்கிறார் என்று கூறப்பட்ட போது நபி (ஸல்) இவர் மீது யாராவது கண் பட்டதாக சந்தேகப்படுகிறீர்களா?  என்று கேட்க, ஆம்! ஆமிர் இப்னு ரபிஆவை சந்தேகிக்கிறோம் என்று தோழர்கள் கூறினர்.  உடனே ஆமிரை அழைத்து வரச் சொல்லி அவரிடம் எதற்காக உங்கள் சகோதரரை நீங்கள் கொலை செய்கிறீர்கள் (அவரது உடல் வியக்கும் அழகாக தென்பட்டால்) பரக்கத்துக்காக துஆ செய்திருக்கலாமே என்று கண்டித்து விட்டு சஹ்லை (ரலி) கழுவி விடுங்கள் என்று நபி (ஸல்) உத்தரவிட்டார்கள்.  உடனே ஆமிர் (ரலி) மீது, அந்த தண்ணீரை ஊற்றியபோது அவர் குணமடைந்து எந்த வலியும் இல்லாதவராக எழுந்து சென்றார்.  (நூல்: ஷரஹுஸ்ஸுன்னா)

இவ்வாறாக எல்லாவித நோய்களுக்கும் ஆன்மிக மருத்துவத்தையும், உலகியல் மருத்துவத்தையும் இஸ்லாம் போதிக்கும் அதே வேளையில் நம்பிக்கையை மட்டும் இறைவன் மீது வைக்கச் சொல்லி அவனே குணமளிப்பவன் என நம்பச் சொல்லி கட்டளையிடுகிறது. எனவே அத்தகைய நம்பிக்கையை நமக்குள் ஏற்படுத்தி இஸ்லாம் கூறும் மருத்துவ முறைகளை பின்பற்றுவோமாக.

                                                                                                                                                         மௌலவி,  ஹாபிழ் 

                                                                                                                             A.முஹம்மத் அலி ஜின்னாஹ் சிராஜி