யோகா அது ஆகா

 

 

மலேசியாவினுடைய. “உகாமா” – இஸ்லாமிய மதவிவகாரம்   யோகாவை ஹராம் என்று ஃபத்வா கொடுத்திருக்கின்றது. எகிப்தில் கெய்ரோ இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய மார்க்க நிர்வாகம் அதில் கலந்து கொள்ளக்கூடாது என்கிறது. ஸவூதியில் கூட அது ஹராம் என்று ஃபத்வா வழங்கப்பட்டு இருக்கின்றது. உலகெங்கிலும் இருக்கக்கூடிய இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் யோகாவை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்கள். ஏன் அந்த யோகாவைத் தடுத்தார்கள் ? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். மார்க்க அறிஞர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று சொல்லுகிற போது நாம் அதை மதிக்க வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும்.

யோகா என்பது அது ஒரு இந்து மதத்தின் வணக்க வழிப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவான தியானம். பல்வேறு வடிவங்களில் பல்வேறு ரூபங்களில் அது வித்தியாசம் பெற்று இன்று காணப்படலாம்! ஆனாலும் கூட அதனுடைய வேர் ஒரு ஷிர்க்காகும். யோகாவின் சூத்திரம் என்ன? தமிழ்நாட்டின் முன்னால் முதல்வர் கூட அந்த யோகாவைப்பற்றி ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார் ; யோகாவைக் கற்றுக்கொடுத்த குரு எனக்கு ஒரு சூத்திரத்தைக் கற்றுக்கொடுத்தார். யோகாவுடைய சூத்திரம், “நாராயண நமகா” என்பதாகும். இதைத்தான் நீங்கள் சொல்ல வேண்டும்! என்று அவர்  சொன்னார். அது சமஸ்கிருதம். அந்தத் தலைவர் ஒரு தமிழ் அறிஞர், தமிழ் பற்றாளர். இதை தமிழில் சொல்லலாமா ?  என்று கேட்கின்றார் தமிழ் படுத்தியும் சொல்லலாமே! என்று சொல்லப்பட்டது. அதை தமிழ்ப்படுத்தினால் “சூரியனைப் போற்றி” என்று சொல்ல வேண்டும். நீங்கள் வேண்டுமானால் இப்படி தியானம் செய்யலாம் என்று அனுமதி கொடுக்கின்றார்.

சூரியன் உள்ளிட்ட எந்த சிருஷ்டிகளும் இஸ்லாத்தில் போற்றுதலுக் குரியவையல்ல. (அல்குர்ஆன்: 41;37) படைப்புகள் அனைத்தும் சிந்தனைக்குரியது. வணக்கத்திற்குரியதோ போற்றுத்தலுக்குரியதோ அல்ல. படைப்புகள் ஆரோய்ச்சிக்குரியது. ஆராதனைக்குரியதல்ல. இது இந்த யோகாவில் இருக்கக்கூடிய இஸ்லாத்திற்கு விரோதமான முதல் விஷயம்.

இவர்களைப் பொறுத்தமட்டில் மொழிமாற்றம் ஏற்பட்டதால் பிரச்சனை தீர்ந்து விட்டது.ஆனால் நமக்கு அதோடு மட்டும் பிரச்சனை தீராது. நமது மார்க்கம் மொழியைக் கடந்தது. மூலத்தை மைய்யமாகக் கொண்டது. ஆக இப்படி மொழிமாற்றம் செய்தும் கூட இஸ்லாமிய மக்கள் யோசிக்கிறார்கள் என்று வந்த பொழுது, இதைக் கூட நீங்கள் சொல்ல வேண்டிய அவசியமில்லை “ஓ…ம்” என்று சொன்னாலே போதும் என்று சற்று இறங்கி வந்தார்கள். அதிலும் பலனில்லை என்று வந்த போது இன்னும் சற்று தளர்த்தி  அதைக்கூட சொல்லத் தேவையில்லை. மனதால் அதை நினைத்தால் போதும். அதற்குக்கூட இப்பொழுது வியாக்கியானம் செய்து முஸ்லிம்களாகிய நீங்கள் “ஹூ…”என்ற திக்ர் செய்கிறீர்கள். அதனுடைய மறு உருவம் தான் “ஓ…ம்” என்பது.அது எப்படி என்று கேட்கப்பட்ட பொழுது வாயை திறந்து “ஹூ” என்று சொல்கிறீர்கள். அவ்வாறே வாயை மூடி “ஹூ” என்று சொல்லிப் பாருங்கள் அது “ஓம்” என்று தான் வரும். இவ்வாறு வியாக்கியானமும் செய்தார்கள். எது எப்படி இருந்தாலும் இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை, யோசிக்கிறார்கள் என்று  வந்த போது, இன்னும் ரொம்ப ரொம்ப இறங்கி வந்து “ஓ…ம்” என்று கூட நினைக்க வேண்டாம். நீங்கள் உங்கள் அல்லாஹ்வை நினைத்துக் கொண்டாலே போதும் என்ற அளவிற்கு கீழ் நிலைக்கு இறங்கி வந்துள்ளார்கள்.

அவர்களின் இந்த வியாபாரத்தின் முக்கியமான  டார்கட் முஸ்லிம்கள். இவர்களை  எப்படியாவது வேட்டையாட வேண்டும். இஸ்லாமியர்களைப் பொருத்தவரை அவர்கள் மதத்தை விட்டு வெளியே வரமாட்டார்கள். மதத்திற்கு விரோதமாக சொல்லவோ செயல்படவோ மாட்டார்கள். உலகத்தில் எந்த மதத்தைச் சார்ந்தவர்களையும் பிடித்து வந்து விடலாம் ஆனால், முஸ்லிம்களை சாதாரணமாக பிடித்து வர முடியாது. இஸ்லாத்திற்கு வெளிப்படையாக எந்த வகையான மாற்றத்திற்கும், அதற்கு முரணாக நடப்பதற்கும் அவர்களின் மனம் ஒப்பாது என்ற காரணத்தினால் இப்பொழுது இறங்கி வந்து நீங்கள் “அல்லாஹ்” என்பதை வேண்டுமானாலும் தியானம் செய்து கொள்ளுங்கள்! ஆனாலும் வாருங்கள் என்று அழைப்பு கொடுக்கப்படுகின்றது. நம்மில் பலர் அதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.