யோகா அது ஆகா

 

நாம் விளங்க வேண்டிய விஷயம் என்னவென்றால்?  யோகா பயிற்சியில் “அல்லாஹ் “என்று தியானித்தாலும் கூட அதில் நாம் கலந்து கொள்ளக்கூடாது. ஏன்  கலந்து கொள்ளக் கூடாது ?  என்றால்! அடிப்படையில் அது ஷிர்க் என்னும் வேரில் இருந்து தான்  உருவாகி வருகிறது. இரண்டாவது ;  அல்லாஹ் அல்லது “லாயிலாஹ இல்லல்லாஹ்” போன்ற ஆகுமான அனுமதிக்கப்பட்ட மந்திரங்களைக்கூட, சொல்ல வேண்டியவர் சொல்லிக் கொடுத்தால் தான் அதை சொல்ல வேண்டும். அப்போது தான் அதன் பலன் முழுமையாகக் கிடைக்கும். அல்லாஹ்வை, “லாயிலாஹ இல்லல்லாஹ்” வை ஏற்றுக் கொள்ளாத ஒருவர் அந்த மந்திரத்தை சொல்லிக் கொடுத்தால் அந்தக் குருவை ஏற்றுக் கொண்டு அந்தக் கலிமாவைச் சொன்னால் அது ஏற்புடைய விஷயமல்ல. கலிமாவை ஏற்றுக் கொள்ளாத ஒருவரை குருவாக ஏற்றுக் கொண்டு அவர் சொல்லித்தரும் கலிமாவை நாம் எப்படி மொழியலாம் ?  என்பதை சிந்திக்க வேண்டும்.

முஸ்லிமல்லாதவர் “அல்லாஹ்”  என்று சொன்னாலும் கடவுளைப்பற்றி அவர்கள் விளங்கி நம்பியிருப்பதைப் போலத்தான் “அல்லாஹ்” என்ற சொல்லுக்கும் பொருள் கொடுப்பார். ”இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற நாகூர் ஹனீபாவின் பாடலை முஸ்லிமல்லாதவர்களும் பாடுகிறார்கள். இந்த ஒலிப்பதிவு நாடாவைக் கேட்டு மகிழ்கிறார்கள் என்று நாமும் சந்தோசப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் “இறைவனிடம்” என்று பாடும் போது அங்கே அவர்களது இறைவனைத்தான் நாடுகிறார்களே தவிர முஸ்லிம்கள் நம்பும் அல்லாஹ்வை அல்ல என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

அந்த யோகாவில் கலந்து கொள்வதால் எங்களுக்கு மனம் நிம்மதி அடைகின்றது, மனதிலே ஒரு வகையான சாந்தம் உண்டாகின்றது, எங்களுக்கு மன ஓர்மை ஏற்படுகிறது, வெற்றி கிடைக்கின்றது, அதன் மூலம் எங்களது துறைகளில் நாங்கள் சாதிக்க முடிகின்றது என்றெல்லாம் சொல்லப்படுவதை நீங்கள் கேட்கலாம்! இதே ஓர்மையும், மன அமைதியும், மன அமைதிக்கான பயிற்சியும் ஆகுமான வழிகளில் நம்மிடத்திலும் இருக்கிறது. அதைப் பின்பற்றலாம். இரண்டாவது, இந்த வெற்றியும் இந்த சமாதானமும் கிடைக்கின்றது என்பதற்காக வேண்டி மார்க்கத்திற்கு முரணாக எதையும் நாம் செய்து விட முடியாது!

நமக்கு நிக்காஹ் செய்ய வேண்டும் என்பதற்காக முஸ்லிம் அல்லாத ஒரு பெண்ணை நிக்காஹ் செய்ய மாட்டோம் இல்லையா! பசி எடுக்கின்றது. அந்தப் பசியை போக்க வேண்டும். சாப்பிட வேண்டும். அதற்காக ஹராமான ஒரு உணவை முஸ்லிம் அல்லாத ஒருவர் அறுத்த அசைவ உணவை நமக்கு தருகிறார். பசி தீர்ந்தால் போதும் தானே! தாகம் தீர வேண்டும். மதுவை தருகிறார். தாகம் அடங்கினால் போதும் தானே! என்பதற்காக நாம் அதைக் குடிக்கவோ!  அதைப் பருகவோ! அதை சாப்பிடவோ மாட்டோம்!  ஏன்?  கூடாது இல்லையா. அதைப் போல தியானம் செய்வது  அனுமதிக்கப்பட்ட ஒரு விஷயமாக இருந்தாலும், அதை யார் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற விவஸ்தை இருக்கின்றது. நிம்மதி கிடைக்கின்றது என்றாலும், எங்கே நிம்மதி கிடைக்கின்றது?  எப்படி நிம்மதி கிடைக்கின்றது?  என்பதை நாம் பார்க்க வேண்டும். நமக்கு ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால் நாம் முதலில் அந்தக் காரியம் எந்த வழியில் சென்றால் அது ஆகும் என்பதை கவனிக்க வேண்டும். ஆகுமான வழியில் சென்று தான் அந்தக் காரியத்தை முடிக்க வேண்டுமே தவிர ஆகாத வழியில் சென்று நாம் ஆக வேண்டிய காரியத்தை முடிப்பதற்கு முயலக்கூடாது.

நெருப்பு இருக்கின்றது. அந்த நெருப்பை அனைப்பதற்கு தண்ணீரை ஊற்றினாலும் நெருப்பு அனைந்து விடும். சிறுநீரை ஊற்றினாலும் நெருப்பு அனைந்து விடும். அதனால் இரண்டும் ஒன்றாகி விடுமா? அது சுத்தமானது, இது அசுத்தமானது. கண்ணாடியில் தூசி படிந்து இருக்கின்றது. முகம் அதில் தெளிவாக தெரிய வேண்டுமென்றால்  அந்தத் தூசிகளையெல்லாம் துடைக்க வேண்டும். அந்த அழுக்கை நீக்க வேண்டும். தண்ணீரை ஊற்றினாலும் தூசி நீங்கி தெளிவாகும். அந்தக் கண்ணாடியில் சிறுநீரை ஊற்றினாலும் கூட கண்ணாடி தெளிவாகும், பார்க்கலாம் என்பதற்காக இரண்டும் ஒன்றாகி விடுமா?  தியானத்தில் அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அந்த தியானத்தால் தெளிவுகள் பிறக்கின்றது. சில காட்சிகள் கூட தெரிகின்றது. ஆனாலும் அடிப்படையில் வித்தியாசங்கள் உண்டு. இங்கு அல்லாஹ்வுடைய திக்ரைக் கொண்டு கிடைக்கின்ற தெளிவு சுத்தமானது. இதல்லாமல் இஸ்லாம் அல்லாத மற்ற மதத்தின் வழியாக நமக்கு சில தெளிவே ஏற்பட்டாலும் அது அசுத்தமானது. தியானத்தின் மூலமாக இதயத்தை பரிசுத்தமாக்கிக் கொள்வதற்குப் பதிலாக அதே தியானத்தின் மூலமாக அது அல்லாத ஆகாத வழியைப் பின்பற்றுவதால் அந்த இதயம் மேலும் அழுக்காகுமே தவிர சுத்தமாகாது.