நோயும் சிகிச்சையும்

 

ஜின், ஷைத்தான் தீங்குகள்:

கெட்ட ஜின், ஷைத்தான்களின் தீமைகளால் கூட மனிதர்களுக்கு (குறிப்பாக குழந்தைகளுக்கு) உடல் நலக் குறைவுகள் ஏற்படக்கூடும்.  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  உங்களுடைய குழந்தைகளை மாலை (சூரியன் மறையும்) நேரத்தில் வெளியில் அனுப்பாமல் தடுத்து வையுங்கள்.  ஏனெனில் அந்நேரத்தில் கெட்ட ஜின், ஷைத்தான்களின் தீமைகள் அதிகம் இருக்கும். சிறிது நேரம் கழித்து அவர்களை வெளியே அனுப்புங்கள். (நூல்: புகாரீ, முஸ்லிம்)

இத்தகைய தீமைகளை விட்டும் பாதுகாவல் பெறும் வழிமுறைகளையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

அபூ ஸாயீதுல் குத்ரீ (ரலி) அறிவித்துள்ளார்கள்:  ஆரம்ப காலத்தில் நபி (ஸல்) அவர்கள் (பொதுவான வார்த்தைகளைக் கொண்டே) ஜின், (ஷைத்தான்)களின் தீங்கை விட்டும், கண் திருஷ்டியை விட்டும் பாதுகாவல் தேடுவார்கள். பின்பு சூரத்துல்ஃபலக்,  சூரத்துன்னாஸ் ஆகிய சூராக்கள் இறங்கிய பிறகு அவற்றை ஓதி பாதுகாவல் தேடினார்கள்.  மற்றவற்றை விட்டு விட்டார்கள்.  (நூல்: திர்மிதீ, இப்னுமாஜா)

இதுபோல் நோய்களை விட்டும் பாதுகாவல் கோரும் வசனங்கள், துஆக்கள் குர்ஆனிலும், ஹதீஸிலும் நிறையவே உள்ளன.  அவற்றை ஓதி அல்லாஹ்விடம் நிவாரணம் தேடுவதில் தவறில்லை.

சாமியாரிடம் போகாதீர்!

ஆன்மிக மருத்துவம் என்பது ‘ஷிர்க்’ உடைய அமைப்பில் இருந்து விடக் கூடாது.  ஆனால் இன்று முஸ்லிம் என்ற பெயர் மட்டும் வைத்துள்ள சில பெண்கள் தேவாலயத்திற்கும்,  கோவிலுக்கும் போய் மந்திரித்துக் கொள்வதோடு, அங்கு போவதால் நிவாரணம் கிடைக்கிறதல்லவா என்றும் கூறுகிறார்கள்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி அறிவித்துள்ளார்கள்:  ஒருமுறை என் கழுத்தில் ஒரு கயிறு (தாயத்து) இருந்ததை என் கணவர் பார்த்துவிட்டு இது என்ன? என்று கேட்டார்.  இது (அறியாமைக் காலத்தில் மந்திரித்து போட்ட கயிறு (தாயத்து) என்று நான் கூறிய போது அதை எடுத்து வீசி எறிந்து விட்டு என்னிடம் கூறினார்.  இந்த அப்துல்லாவின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ‘ஷிர்க்’ கான வழியில் (மந்திரித்து அணியும்) கயிறு, தாவீஜ் ஆகியவற்றை அணிவதும், சூனியம் செய்வதும், தெளிவான இணைவைக்குதலாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கற்பதை என் கணவர் சொல்லி முடித்தபோது நான் கேட்டேன் என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்?

அறியாமைக் காலத்தில் எனக்கு ஒரு கண் எரிச்சல் இருந்தது. நான் யூத மதப் பாதிரி ஒருவரிடம் சென்று மந்திரித்தவுடன் அது நின்றுவிடும் என்று நான் கூறிய போது என் கணவர் அப்துல்லாஹ் (ரலி) கூறினார்கள்.  இது ஷைத்தானுடைய வேலையாகும் (பாதிரியாரிடம் போனால்) சரியாகிவிடும் என்ற நம்பிக்கையை உண்டாக்குவதற்காக) உன் கண்ணுக்குள் அவன் குத்தி விட்டுக் கொண்டிருப்பான்.  பாதிரியார் மந்திரித்தவுடன் ஷைத்தான் அதை நிறுத்திக் கொள்வான்.  இனிமேல் உனக்கு கண் எரிச்சல் ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்கள் சொல்லித் தந்த இந்த துஆவை ஓதினால் போதும்.

            இஷ்பில் பஅஸ ரப்பன்னாஸி                                                        

               இஷஃபி அன்தஷ்ஷாஃபி

            லா ஷிஃபா அ இல்லா ஷிஃபாவுக

            ஷிஃபா அன் லா யுஙாதிரு சக்மா

                                                    (நூல்: அபூதாவூத்)