ஹஜ்ஜின் அமல்கள்
இஸ்லாத்தின் இறுதிக் கடமை ஹஜ் என்னும் புனிதக் கடமையை நிறைவேற்றுதலாக உள்ளது. ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முஸ்லிமும் இஹ்ராம் என்னும் வெள்ளாடை தரித்தலும் மக்காவின் எல்லைப்புறமான மினாவில் தங்கி அங்கு ஷைத்தானை கல்லெறிவதும், கஃபாவைச் சுற்றி ஏழுமுறை வலம் வந்து இரண்டு ரக்அத் தொழுவதும், அங்குள்ள ஹஜ்ருல் அஸ்வத் பளிங்கு கல்லை முத்தமிடுவதும், சஃபா மர்வா குன்றுகளுக்கிடையே தொங்கோட்டம் ஓடுவதும், இறுதி நிகழ்வாக குர்பானி கொடுப்பதும் அரேபிய கலாச்சார சூழல் சார்ந்த திருக்குர்ஆன் நடைமுறைகளாகும். அச்சூழலில் வஹ்ஹாபிகள் சொல்வதைப் போல இந்துக்கள் கோவில்களில் நிற்க வைத்து கும்பிடுகிறார்கள். முஸ்லிம்களோ தர்காக்களில் படுக்கப் போட்டு கும்பிடுகிறார்கள் என்பதைப் போல கஃபாவை சுற்றும் வலம் வருவதை கோயிலை சுற்றி வலம் வருவதாகவோ, ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிடுவதை கறுப்புக்கல்லை வணங்குவதாகவோ முடி களைவதை கோவில் கடமை முடித்துவிட்டு மொட்டை போடுவதாகவோ அர்தப்படுத்திப் பார்த்தால் அனர்த்தமாகிவிடும். எனவே தர்கா நிகழ்வுகளையோ, ஹஜ்ஜின் அமல்களையோ மேலோட்டமாகவோ எந்திரமாகவோ இல்லாமல் வரலாறு, சூழல் வடிவம், உள்ளடக்கம் சார்ந்து அணுக வேண்டியுள்ளது.
பலியிடுதல் பற்றி
இஸ்லாத்திற்கு முற்பட்ட காலங்களில் அரேபிய நாடுகளில் மட்டுமல்ல, ஆசியப் பிரதேசங்களில் ஏன் உலகமெங்கும் பழங்குடி சமுதாய மக்களின் சமய வழக்கங்களில் ஒன்றாக கடவுளுக்காக பலியிடுதல் என்கிற வழக்கம் உள்ளது. வேதகாலப்பழக்கமும் நடைமுறையும் இது. சமண புத்த மதங்களின் உருவாக்கத்தின் போது (கிறிஸ்துவுக்கு முன்பு கி.மு.563 முதல்) இப்பழக்கம் கால்நடைகளை தெய்வத்திற்கு பலியிடுதல் தடுக்கப்பட்டது. இதற்கான சமூகக் காரணம் வேட்டைச் சமூகத்திலிருந்து விவசாய சமூகத்திற்கு மாறியது தான். புராதன விவசாய சமூகத்தில் கால்நடைகள் பங்களிப்பு மிக தேவையாயிருந்தது. எனவே அது அம்மத நம்பிக்கைகளில் தடை செய்யப்பட்டிருந்தது. எந்திர மயமாக்கப்பட்ட தொழிலுற்பத்தி சமுதாயத்தில் விவசாய உற்பத்திக்கு கூட கால்நடைகளின் தேவை குறைந்துவிட்டது. இக்காலத்தில் வைதீக இந்து மதம் ‘பசுவதைதடை’ என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட தலித்திய மற்றும் சிறுபான்மை மக்களின் உணவு பழக்கத்தில் கை வைக்கப்பார்க்கிறது. சைவம் உயர்ந்தது. அசைவம் தாழ்ந்தது என்ற பார்ப்பனீய கருத்தாடலை திரும்பவும் உயிர்ப்பிக்க முயல்கிறது.
இச்சூழலில் இஸ்லாம் கூறும் குர்பான் கொடுத்தல் (பலியிடுதல்) இப்ராஹீம் நபி அவர்தம் மகனார் இஸ்மாயீல் நபி ஆகியோரின் இறைபக்தியையும் இறை அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் வகையிலான ஒரு பாரம்பரியமான நடைமுறையாகும். முனிதப் பலி தடுக்கப்பட்டு விலங்கினப் பலி மாற்றாக முன்வைக்கப்பட்டது. ஹஜ் என்னும் புனிதக் கடமையை வசதியுள்ள முஸ்லிம்கள் நிறைவேற்றுகையில் குர்பானியிடுதலும் நிகழ்கிறது. ஹஜ்ஜூப் பெருநாளன்று வசதியுள்ள பெரும்பாலான முஸ்லிம் வீடுகளிலும் குர்பான் கொடுத்தல் நிகழ்கிறது. குர்பான் இறைச்சி ஏழை, எளிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. எனவே குர்பான் கொடுத்தலிலும் புறவடிவம் அகவடிவம் என்கிற இருநிலைகள் உள்ளன. இச்செயலின் புறவடிவம் சில பகுதிகளைப் பார்த்தால் பிற சமய நடவடிக்கையான கிராமப்புற தெய்வங்களுக்கு பலியிடுதல் போல் தோன்றும். எனவே குர்பான் கொடுக்கும் முறை, நோக்கம் உள்ளிட்ட அகவடிவம் மிக முக்கியமானதாக்கப்படுகிறது. இதுபோன்றுதான் பிற சமய செயலுக்கும் தர்கா நிகழ்வுக்குமான புற மற்றும் அகவடிவம் வித்தியாசங்களை கவனித்தல் வேண்டும்.