உலக முஸ்லிம்களின் நினைவுச் சின்னம் ‘தர்கா’

 

தர்காக்களில் அடங்கப்பட்டுள்ள பெரும்பாலான ஞானிகள் சரகலையில் தேர்ச்சி பெற்றவர்களாவும், சித்த மருத்துவத்தில் ஆழ்ந்த அறிவுள்ளவர்களாகவும் இருந்தார்கள் என்பதற்கான தரவுகள் உண்டு.  எனவே இம்மெஞ்ஞானிகளின் உறைவிடங்களை பாதுகாத்தல் என்பதும், மரியாதை செய்தல் என்பதும் நம் வரலாற்றுக் கடமையாகும். இதுவே, நம் தமிழ் இஸ்லாமிய பண்பாட்டின் அடையாளங்களை பாதுகாப்பதுமாகும்.  எனவே, தர்காக்களை முற்றிலுமாக நிராகரிப்பது என்பது தமிழகத்திலும் இந்தியாவிலும் இஸ்லாம் வளர்ந்த வரலாற்றுச் சுவடுகளையே நிராகரிப்பதாக அமைந்துவிடும்.

தர்காக்களில் இடம் பெற்றுள்ள கப்ரு ஜியாரத்தையும், சிலை வணக்கத்தையும், வஹ்ஹாபிகள் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்துகின்றனர்.  சிலை வணக்கம் செய்பவர்களுக்குரிய திருமறை வசனங்களை தர்கா ஜியாரத்திற்கும் அப்படியே எந்திரகதியாக பொருத்திக் காண்பிக்கின்றனர். ஆனால் யூத, கிறிஸ்தவர்களின் பழக்கங்களான தேவாலயத்தில் நல்லவர் எவரும் இறந்து விட்டால் அவரின் கப்ரின் மீது மஸ்ஜிது கட்டுவதும் அவரது உருவத்தை அங்கே செய்து வைத்து வணங்கி தொழும் முறையினைத்தான் நபிகள் நாயகம் கண்டித்தார்கள்.  குறிப்பாக, அபீஸினியாவின் மர்யா கிறிஸ்தவ ஆலய வழிபாட்டு முறைக்குறித்த நாயகத்தின் எதிர்வினையே இக்கூற்றாகும்.  இந்த பின்னணியிலேயே அடக்கஸ்தலம் மீது வணக்கஸ்தலம் எழுப்பி வணங்கும் யூத கிறிஸ்தவர் பழக்கத்தினை மறுத்தும் கப்ருக்களுக்குச் சென்று முஸ்லிமகள் செய்யும் ஜியாரத்தை அனுமதித்தும் புகாரீ ஷரீபில் 358, 359, 435, 1125, 1283, 1341, உள்ளிட்ட ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன. சிலை வணக்கம் போன்றதல்ல தர்காவில் ஜியாரத் செய்யும் முறை சிலை வணகத்தை மேற்கொள்வோர் தங்கள் மத நம்பிக்கை அடிப்படையில் தெய்வ ஆற்றலை சிலை வடிவ தெய்வ குறியீட்டின் மூலமாக காண்கிறார்கள்.  அதுவே தெய்வமென நம்புகிறார்கள்.  திருமறை இணைவைத்தலுக்கு அர்த்தமாக அல்லாஹ்வுக்கு பதிலாக சிலைகளை வணங்குவதையே கூறுகிறது.  தர்காவில் ஜியாரத் செய்பவர்கள் வலீமார்களை என்றுமே இறைவனாக கருதுவதில்லை.

லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹி என்று இஸ்லாமிய அடிப்படை சிந்தனையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் என்ற கலிமாவிலிருந்து வணக்கத்திற்குரியவர் வலீயுல்லாஹ் என்று எவரும் ஈமான் கொள்வதில்லை.

இறைவனை வணங்குதல் என்பதே ஐந்து வேளையும் இறைவனைத் தொழும் கடமையிலிருந்து எழுவதாகும்.  ஷிர்க் என்னும் இணைவைத்தலின் அடிப்படையில் எவரும் வலீமார்களை ஐவேளையும் தொழுதல் செய்வதில்லை.  தர்காக்களுக்கு பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்களில் தான் இறைவனுக்காக தொழுகை நடத்துகிறார்கள்.  தர்காக்கள் பள்ளிவாசல்கள் இரண்டையும் நம் முன்னோடிகள் தெளிவாக புரிந்து பிரித்து வைத்திருப்பதை நாம் பார்க்கலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) தரைக்கு மேலாக உள்ள கப்ருக்களை இடித்துத் தள்ளுங்கள் என உத்தரவிட்டார் என்பதான ஹதீஸ் கூட விவாதங்களில் முன்வைக்கப்படுகிறது.  இது முன்னும், பின்னும் கத்தரிக்கப்பட்டு சொல்லப்படுகிறது.  எந்தச் சூழலில் இது நிகழ்ந்தது என்பதை சொல்லாதது.

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (ஆண்டவன் என) அழைக்கிறார்களோ அவற்றை நீங்கள் பழிக்காதீர்கள் (6:108)

இவ்வாறாகத்தான் பிற சமய நம்பிக்கைகளில் பால் இஸ்லாமியர் பினபற்ற வேண்டிய அணுகுமுறையை திருமறை கூறுகிறது.  ஆனால் வஹ்ஹாபிகளோ சொந்த சமயத்தினர் ஜியாரத் செய்யும் தர்காக்களை இடிப்பதற்கு கடப்பாறைகளை தூக்கிக் கொண்டு வருவது அராஜகமாக இருக்கிறது.

கப்ருகளை செம்மையாக்குங்கள் சிலைகளை தரைமட்டமாக்குங்கள் என்று தான் ஹதீஸ் ஏடுகளில் இருக்கிறதேயன்றி கப்ருகளை தரைமட்டமாக்குமாறு எந்த ஹதீஸும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ருகள் உயர்த்தப்பட்டிருப்பதையும் அங்கே ஜியாரத் செய்வதையும் அங்கீகரித்தார்கள் என்பதற்கான சான்றுகள் பல ஹதீஸ்களில் உள்ளன. கப்ருகள் மறுமையைப் பற்றி ஞாபகப்படுத்தக் கூடியனவாக  இருக்கின்றன. (நூல்: முஸ்லிம்).