உலக முஸ்லிம்களின் நினைவுச் சின்னம் ‘தர்கா’

 

‘நோன்பு’ ‘சுன்னத்’ உள்ளிட்ட வழக்கம்

இஸ்லாமிய மரபுகளில் ஒன்றாக மாறுவதற்கு முன்பே நோன்பு என்பது இன்னொருவிதமான வடிவத்தில் கிறிஸ்துவத்திலும் நடைமுறை சமயப் பழக்கமாக இருந்து வந்துள்ளது.  உபாசம் என்கிற வகையில் அது மிகவும் நெகிழ்ச்சித்தன்மை கொண்ட வடிவத்தில் இருந்தது.  யூதர்கள் கூட பாவ பரிகார பண்டிகையான ஆஷுரா நோன்பு கடைபிடித்திருந்தார்கள்.  இந்து சமய நடவடிக்கைகளிலும் விரதமிருத்தல், கார்த்திகை மாதம் நோன்பு அனுசரித்தல், அவ்வை நோன்பு போன்ற வழக்கங்கள் பல்வேறு வடிவங்களிலும் இடம்பெறுகிறது.

இஸ்லாத்தில் நோன்பு ரமளான் மாதத்தில் என வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடான வடிவத்தில் கடுமையான ஆன்மிக பயிற்சியை உருவாக்கவும் பசித்துன்பம் நீக்கிட மனித நேய சாளரத்தை திறக்கும் நோக்கிலும் இயங்கியது.  அண்ணல் நபியவர்கள் முன்மாதிரிப்படி ஏற்றத்தாழ்வை சமன்படுத்தல் நோக்கிலான ஜகாத் எனும் ஏழைவரியும் கடமையாக்கப்பட்டுள்ளது.  எனவே நோன்பு என்ற அடிப்படையில் ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மைகள் உள்ளன.

யூதர்கள் பின்பற்றுகின்ற கிறிஸ்துவரகளிடத்தில் முன்பு நடைமுறையில் இருந்த விருத்த சேதனம் எனும் நிகழ்வைப் போல இஸ்லாமிய நடைமுறைப் பழக்கத்தில் ஆண் குழந்தைகளில் பிறப்புறுப்பு நுனியை கத்னா செய்தல் என்னும் மரபு வழக்கம் கடைப்பிடிக்கப்படுவதையும் பார்க்கலாம்.

இறந்தவர்களை புதைக்கும் வழக்கும் புராதன ஐரோப்பிய, ரஷிய சமூகங்களிலும் முற்பட்ட அராபிய சமூக வழக்கங்களிலும் புராதன தமிழ்ச் சமூகத்திலும் கூட இருந்து வந்துள்ளது.  இப்பழக்க முறை சாயல்கள் இஸ்லாத்தில் மரபாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது.

பழந்தமிழ்  சமூகப் பழக்கங்களில் ஒன்றான திருமணத்தின் போது மணமகளுக்கு மணமகன் பரிசுப் பணம் வழங்குதல் என்னும் நிகழ்வு இஸ்லாத்தின் மணமகன், மணமகளுக்கு மஹர் பணம் கொடுக்க வேண்டும் என்பதோடு ஒத்துப் போவதையும் கவனிக்கலாம்.

அரேபிய முற்காலச் சூழலில் பெண்களுக்கு சொத்துரிமை இருந்துள்ளது. கதீஜா நாயகி தனியாக முதலீடு செய்த வர்த்தக தொழிலில் தான் நபித்துவம் பெறுவதற்கு முன்பே நபிகள் நாயகம் (ஸல்) ஈடுபட்டிருந்தார்கள் என்கிற செய்தியும் கவனத்திற்குரியது.

அரேபியாவில் ஏற்கனவே பழக்கத்தில் இருந்த பலதார மணமுறையை காலத்திற்கும்,  சமூக வளர்ச்சிக்கும் ஏற்றவாறு நபிகள் நாயகம் வழி வடிவமைத்தது நிகழ்ந்துள்ளது.  முன்பிருந்த சமய, சமூக பழக்கங்களின் வளர்முகத் தன்மை கொண்ட சாரம்சத்தை சூழலுக்கேற்றவாறு இஸ்லாம் உள்வாங்கிக் கொண்டது என்பதே இவை கூறும் ஆழமான செய்தியாகும்.

தமிழ் சூழலில் இஸ்லாமியர்களின் சமூக ஆன்மிக வாழ்வில் முக்கியமாக இடம் பெற்றுள்ள தர்காக்களில் கப்ருகளை வரலாற்று ரீதியாகவும் பண்பாட்டிய சிந்தனை சமூகவியல் பார்வையிலும், உளவியல், மானுடவியல் நோக்கிலும், பண்முகப் பண்பு கொண்டு நோக்க வேண்டும்.  இஸ்லாமிய மக்களின் வாழ்வோடும், உணர்வோடும் தர்காக்கள் ஒன்று கலந்துள்ளன.  எனவே தான் அடிப்படை தெரியாமல் எழுப்பப்படுகின்ற தர்காக்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் அதன் பண்பாட்டியல் இருப்பினை அசைத்துப் பார்க்க முடியவில்லை.  அதுவே இஸ்லாமிய அடிப்படைகளில் மாற்றமின்றி அந்தந்த நாடுகளின் பகுதிகளின் வட்டார பண்புகளை உள்வாங்கி நிறுவச்சமய எல்லைகளை தாண்டி வெகுஜனமக்கள் மார்க்கமாக இஸ்லாம் (POPULAR RELIGION) வளர்வதற்கான மிக முக்கிய காரணமாகும்.

ஹெச்.ஜி.ரசூல்