உலக முஸ்லிம்களின் நினைவுச் சின்னம் ‘தர்கா’

தொழுகை பற்றி….

இஸ்லாத்தின் முக்கிய கடமையென வலியுறுத்தப்பட்டு உலக முஸ்லிம்களால் (நாளொன்றுக்கு ஐந்து நேரம் என வரையறுக்கப்பட்ட இறைவனை வணங்கும் தொழுகை முறையானது) நபிகள் நாயகத்தின் வழிமுறையாக பின்பற்றப்படுகிறது.  மிகப்பழமைவாய்ந்த இந்திய வகைப்பட்ட வைதீக சாதிய மரபுகளுக்கு மாற்றமான யோக மரபின் கூறுகளோடு தொழுகையின் அம்சங்கள் ஒத்திருப்பதை கவனிக்கலாம்.  பதஞ்சலியின் யோக சூத்திரத்திற்கு கி.பி. 4ம் நூற்றாண்டிலேயே வியாச பஷ்யம் விரிவுரையை வியாசர் படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொழுகையின் அமைப்பு முறையில் இடம் பெறும் காட்சி நிலைகள் இகாமத் சொன்னவுடன் நிற்கும் நிலை சமஸ்திநிலை, அல்லாஹு அக்பர் சொல்லி தக்பீர் கட்ட கையை உயர்த்துதல் கர்ணசக்தி விகாஸாகா நிலை, ருகூவுக்கு செல்லும் குனிந்த நிலை சமன் சக்தி விகாஸாகா நிலை ஸமியல்லாஹு லிமன் ஹமிதா என நிமிரும் நிலை சத்ரவாகசனம். பூமியில் நெற்றிபட ஸுஜூது செய்யும் நிலை அர்த்த சிரசாசனம் அமர்நிலையில் பூமி தொடும் நிலை வஜ்ராசனம். துலையை திருப்பி ஸலாம் கொடுத்தால் அர்த்த மஸ்த எந்திராசனம் என்பதாக யோக, தியான மரபின் கூறுகளோடு தொழுகை பின்னிப் பிணைந்திருப்பதை கவனத்தில் கொள்ளலாம். இந்நிலையில் வஹ்ஹாபிகள் முன்வைக்கும் தூய்மைவாதக் கோட்பாடின் அடிப்படையில் பிறசமய நடவடிக்கை கூறுகள் தொழுகையில் உள்ளதெனக் கூறி இதைப் புறக்கனிக்க முடியாது என்பதே யதார்த்தமாகும்.  அதுவே தர்கா கலாச்சாரம் நடவடிக்கைகளை புரிந்து கொள்ள போதுமானதாகும்.

கஃபா என்னும் இறையில்லம் பற்றி

வரலாற்று பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கி.பி. 3ம் நூற்றாண்டுகளிலேயே அரேபியாவிற்கு வடக்கே ரோமானியப் பேரரசும், கிறிஸ்துவமும் வடகிழக்கே பாரசீகப் பேரரசும், ய10தமதமும் அதிகாரத்தில் நிலை பெற்றிருந்ததையும் காணலாம்.

இப்ராஹீம் நபியும், அவர் தம் மகன் இஸ்மாயில் நபியும் புதுப்பித்துக்கட்டிய உலகின் முதல் வணக்கஸ்தலம் தான் கஃபா என்னும் இறையில்லம்.  எனினும் நபிகள் நாயகத்திற்கு முற்பட்ட (கி.பி. 7ம் நூற்றாண்டு) காலத்திலும் நாயகவாழ்வின் முற்பகுதிகளிலும் கஃபா பழங்குடி மக்கள் பண்பாடுகளின் அடையாளமாகவே இருந்தது.  குறைஷி, ஹுதைல் சிமிட்டிக் உள்ளிட்ட இன மக்கள் ஹோபல், அல்உஜ்ஜா, மனாத் அல்லாத பெண் தெய்வங்கள் உள்ளிட்ட 360 க்கும் மேற்பட்ட தெய்வச் சிலைகளை கஃபத்துல்லாஹ்வில் வணங்கி வந்தனர்.  நபிகள் நாயகத்தால் தான் இத்தகு பிறமத அடையாளங்கள் நீக்கப்பட்டு கஃபா இஸ்லாமியப் பண்பாடு அடையாளமாக நிலை பெறுகிறது. பிற சமயத்தார் காலம் காலமாக பயன்படுத்தியமைக்காக கஃபத்துல்லாஹ்வை நபிகள் நாயகம் புறக்கணித்து விடவில்லை.  இக்கட்டிடத்தின் மீது வெள்ளி, தங்கஜரிகைகளால் திருக்குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்பட்ட கருப்புநிற பட்டுத்திரை போர்த்தப்பட்டிருக்கும்.  கஃபாவில் தொழுவோருக்கு திசைக்கட்டுப்பாடு ஏதும் இல்லை.  ஆண்டிற்கு ஓரிருதடவை மட்டுமே இது திறக்கப்படுகிறது.  இஸ்லாத்தின் இறுதிக் கடமையான ஹஜ் என்னும் புனிதக் கடமை நிறைவேற்றல் என்பதே அரசியல் ரீதியாக மக்காவில் நுழைந்து கஃபாவில் தொழ நபிகள் நாயகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மறுவருடம் அதை வெற்றிக் கொண்டு கஃபாவில் தொழும் உரிமையைப் பெற்றதின் அடையாளமும் உலக முஸ்லிம்களை இன மொழி நிறத்திற்கு அப்பால் ஒன்றிணைத்தலையும் கொண்டதாகும்.