நபிகள் நாயகம் மரணித்த பின்பு ஆயிஷா நாயகி அவர்கள் திறந்த முகத்துடன் பெருமானார் அவர்களையும், வேறு இடத்தில் அடக்கமாயிருந்த தங்களது சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்களையும், ஜியாரத் செய்து ஸலாம் கூறி வந்திருக்கிறார்கள். அருமைத் தந்தை அபூபக்கர் சித்தீக் அவர்கள் மறைவுக்குப் பின்பும் திறந்த முகத்துடனேயே ஜியாரத் செய்வது வழக்கம். கலீஃபா உமர் அவர்கள் வஃபாத்தாகி நபிகள் நாயகத்தின் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது முதல் அன்னை ஆயிஷா நாயகி அவர்கள் கருமையான துப்பட்டியைப் போர்த்திக் கொண்டு ஜியாரத் செய்துவரலானார்கள். (நூல்: மிஷ்காத்: மாஜா அல்ஹக்)
மேற்கண்ட வரலாற்று ஆதாரங்களிலிருந்து இஸ்லாத்திற்காக தங்களை அர்ப்பணித்த இறை நேசர்கள் அடங்கப்பட்டிருக்கும் தர்காவின் கப்ருகளுக்குச் சென்று ஜியாரத் செய்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
மேலும், எந்தவொரு தத்துவமும் குறிப்பாக இஸ்லாம் கூட தனக்கு முந்தியதான தத்துவங்களை யூத கிறிஸ்தவ பண்பாடு நடவடிக்கை அவற்றின் வளர்முகம் கொண்ட சாரம்சத்தை தேவைக்கேற்றவாறு உள்வாங்கி புதுப்பித்து புது அம்சங்களை இணைத்து அதன்பின்னரே புதுவடிவத்தில் அறிமுகப் படுத்துகிறது. இதனைக் கீழ்க்கண்ட கூற்றுகளின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
ஏகத்துவ அரசியல்:
இஸ்லாம் முன்வைக்கும் ஏகத்துவ கொள்கையான ஓரிறை அரசியல் நபிகள் நாயகத்தின் காலமான கி.பி. 7 ம் நூற்றாண்டு முதல் இஸ்லாமியர்களுக்கு புனித உண்மைகளை உருவாக்கித் தருகின்றன. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் இல்லை. (லாயிலாஹ இல்லல்லாஹு) அவன் தனித்தவன் (வஹ்தஹு) அவனுக்கு யாதொரு இணையுமில்லை (லாஷரீக்கலஹு) அல்லாஹ் ஒருவன் எனக்கூறுவீராக. அல்லாஹ் தேவையற்றவன் யாரையும் அவன் பெறவுமில்லை. யாருக்கும் அவன் பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாரும் இல்லை (குல்வஹுல்லாஹு அஹது, அல்லாஹுஸ்ஸமது, லம் யலித், வலம் யூலத், வலம் யக்குல்லஹு குஃபுவன் அஹது) என்பதாக பல நிலைகளில் இது அறிவிக்கப்படுகிறது. இந்த ஏகத்துவ கொள்கை புரதான இந்திய சமூகத்தில் கி.மு 4முதல் 7ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட வேத உபனிடதங்களில் இயற்கை கடவுள் வணக்கம் தாண்டிய மற்றொரு நிலையில் ஓரிறை தத்துவமாக அடையாளம் காணப்பட்டது. அவதாரமா? தூதரா? உருவமா? அருவமா? என்பதான எல்லைத் தாண்டி இது செயல்படுகிறது.
உபநிடதங்களின் சில சுலோகங்கள் கீழ்க்கண்டவாறு உள்ளன. அவன் ஒருவனே வேறு எவரும் இல்லை (ஏகம், ஏவல், அத்வைதம்) அவனுக்கு பெற்றோர்களும் இல்லை, பாதுகாவலரும் இல்லை (நா கஒளய கஸ்சிக் ஜனிதா நா கதிபத்) அவனுக்கு நிகராக எதுவுமில்லை. (நா தஸ்தி பிரதிம அஸ்தி).
யஜூர் வேதத்தில் சில பகுதிகளிலும், இத்தகையான ஏக இறைசார்ந்து சிந்தனை அவனுக்கு எந்தவொரு தோற்றமும் கிடையாது. (நா தஸ்ய பிரமதி அஸ்தி) என்பதாக வெளிப்பட்டுள்ளது. படைப்பவன் என்கிற அர்த்தத்தில் பிரம்மாவென இறைவனை திக்வேதம் சுட்டிக்காட்டுகிறது. தெய்வீகத்தன்மை வாய்ந்த அவனையல்லாது வேறு எவரையும் வணங்காதீர்கள் அவனை மட்டுமே வணங்குங்கள் (மா சி தன்யதிவி சன்தா) என்பதாக இதன் நீட்சி தொடருகிறது. இதுபோன்ற இந்துமத பிரம்ம சூத்திரம் இறைவன் ஒருவனே வேறு இல்லை இல்லவே இல்லை (ஏகம் பிரஹம் தவித்ய நாஸ்தே நஹ்னே நாஸ்தே கின்ஜன்) என்பதாக பேசுகிறது. தமிழ் மரபில் சமண, பௌத்த, சமய சாயல்களை உள்வாங்கி கி.பி. 2ம் நூற்றாண்டிலேயே வானுறையும் தெய்வம்/இவ்வுலகு இயற்றியாள/ஆதிபகவன்/மெய்ப்பொருள் என்பதான ஏகச் சிந்தனையை கடவுள் கோட்பாடாக வள்ளுவம் கூறுவதையும் சொல்லலாம்.
பாரசீகத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஜெராஷ்டிரிய மதமும் அஹுரா மஷ்பா எனும் அறிவியல் மிகைத்த கடவுள் பற்றி குறிப்பிடுகிறது. பார்சிகளின் புனித நூலான தசாதிர் இறைவனை ஆதியும், அந்தமும் இல்லாதவன், அவன் ஒருவன், அவனைப்போல எவருமில்லை என்பதாக குறிப்பிடுகிறது.
தர்கா கலாச்சாரத்தில் இந்த மதக் கலாச்சாரம் புகுந்துவிட்டது என்று வஹ்ஹாபிகள் குற்றம் சாட்டுவதை நாம் ஏற்றுக் கொள்வோமேயானால் இஸ்லாம் பேசும் ஓரிறை அரசியலிலும் பிற உலக மதங்கள் பேசும் ஏகத்துவ அரசியல் புகுந்துவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுவரும். சமய தத்துவ நடவடிக்கைகளிடையே பொது அடையாளங்களும் உடன் படும் ஒத்த போக்குகளும் உண்டு. ஒன்று போல் தெரிந்தாலும் அவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனி அடையாள அரசியல் உண்டு என்பதை அச்சூழலில் யாரும் மறந்து விடக் கூடாது.