கப்ருகளை ஜியாரத் செய்யுங்கள். (அவ்வாறு செய்வதை) பாவம் என்றும், கெடுதி என்றும் கூற வேண்டாம். (நூல்: தப்ரானீ).
இஸ்லாமிய சித்தாந்தப் பிரச்சனைகள் திருமறை, நபிவழி, இஜ்மாஃ, கியாஸ், அடிப்படைகளிலேயே தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் நபிகள் நாயகத்தின் காலத்திற்குப் பிறகு அவர் தம் கப்ருகூட உயர்த்தப்பட்டிருந்தது என்பதற்கான ஆதாரம் புகாரீ ஷரீஃபில் உள்ளது.
ஸுப்யானுத் திமாரைக் கொண்டு அறிவிக்கப்படுகிறது. நான் நபிகள் நாயகத்தின் கப்ரு இப்பூமியை விட்டு உயரமாக ஒட்டகத் திமிழ் போல் கூர்மையாக இருக்கப் கண்டேன். (நூல்: புகாரீ). மேலும் நபிகள் நாயகத்தின் கப்ரு ஷரீஃபின் மீது நபித்தோழர்கள் குப்பாவை கட்டிவைத்திருந்தனர். நபிகள் நாயகத்தின் துணைவியரான அன்னை கதீஜா நாயகி மற்றும் குடும்பத்தாரின் கப்ருகள் மீதும் குப்பாக்கள் கட்டப்பட்டிருந்தன.
நபிகள் நாயகத்தின் காலத்திற்கு பிறகு ஏறத்தாழ 1200 ஆண்டுகளுக்குப் பின் (ஹிஜ்ரீ 1233) வஹ்ஹாபிய சிந்தனைக்கு மூலவராக இருந்த முஹம்மதுபின் அப்துல் வஹ்ஹாபின் கொள்கை அடிப்படையில் செயல்பட்ட ரியாதை வெற்றி கொண்ட அமீர்ஸவூதுபின் அப்துல் அஜீஸ் வம்சத்தினர் பிரிட்டிஷ் படையின் பக்கத் துணையுடன் நபிகளாரின் கப்ருஸ்தானத்தை துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்தும், குப்பாவின் மேலிருந்து கலசத்தை உடைத்தும் எறிந்தனர். மேலும், கதிஜா நாயகி மற்றும் நபித் தோழர்களின் கப்ருக்களையும் அவர்கள் இடித்துத் தள்ளினர் என்பது இஸ்லாமிய வரலாற்றில் பாசிசத்தின் தடங்களாய் உள்ளன. இன்று அந்த கப்ருகள் எல்லாம் நடைபாதைகளாக உள்ளன.
இத்தோடு ஈராக்கின் மீது போர் தொடுத்து அங்கு கர்பலா களம் கண்ட இமாம் ஹுசைன் அவர்கள் கப்ரு மீது கட்டப்பட்டிருந்த குப்பாவை எல்லாம் இடித்து உடைத்தெறிந்த அராஜகம் நடந்தேறியதையும் நாம் ஞாபகப்படுத்தி பார்க்க வேண்டும். அரேபிய வரலாற்றில் இஸ்லாமியர்களிடையே ஆழப்பதிந்திருந்த ஆட்சி வெறி, குல, இன வம்சாவழிப் பெருமை சார்ந்த அதிகாரங்களை நிலை நிறுத்த உருவாக்கிய முயற்சிகளாகும். இன்றும் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாபின் கொள்கை ஏற்று செயல்படுபவர்களே தங்களை வஹ்ஹாபிகள்த/வ்ஹீத்வாதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
பெண்கள் கப்ருகளுக்குச் சென்று ஜியாரத் செய்வது “தடுக்கப்பட்டிருந்தது” என்று ஒரு குறிப்பிட்ட சூழலில் சில காரணங்களால் தடுக்கப்பட்ட செய்தியை மட்டுமே சிலர் குறிப்பிடுகின்றனர். ஏன்? முதற் கட்டத்தில் பெண்கள் கப்ருக்களுக்குச் செல்வது தடுக்கப்பட்டிருந்தது பின்னர் அது எப்படி நபிகள் நாயகத்தால் அனுமதிக்கப்பட்டது என்ற உண்மைகள் மறைக்கப்படுவது சரியல்ல.
இஸ்லாத்தின் துவக்க காலங்களில் பெண்கள் தங்களது உறவினர்களின் கப்ருக்களுக்குச் சென்றால் ஓலமிட்டு அழுவதும், மார்புகளில் அடித்து தலையை கப்ரில் முட்டுவதும், இறந்தவரின் குழந்தையை கப்ரில் வைத்து உருட்டி அழுவதுமாக இருந்த நிலையை மாற்றவே முதலில் நபிகள் நாயகம் அதைத் தடுத்தார்கள். பின்னர் கப்ருக்குச் செல்வதையும் பெண்கள் ஜியாரத் செய்வதையும் அனுமதித்தார்கள், இதற்கென பல ஹதீஸ் ஆதாரங்களை குறிப்பிடலாம்.
“ஸஹாபிகளில் சிலர் யாரஸுலல்லாஹ் பெண்கள் ஜியாரத் சொல்வதை தடுத்திருந்தீர்களே: என்று கேட்ட பொழுது ஆம்! தடுத்திருந்தேன். இப்பொழுது பெண்கள் திருந்திவிட்டார்கள். இனி பெண்கள் ஜியாரத் செய்ய ஆதரவு கொடுக்கிறேன் என்றார்கள் (நூல்: திர்மிதி: ஜியாரத் பாடம்).
நபிகள் நாயகத்தின் மகள் ருகையா மரணித்த போது நபிகள் நாயகம் பத்ரு யுத்தத்தில் இருந்தார்கள். மதீனா வந்தவுடன் ஃபாத்திமாவை அழைத்துக் கொண்டு ஜன்னத்துல் பகீஃவுக்கு சென்று ஜியாரத் செய்தார்கள். அதே நேரத்தில் ஃபாத்தினா அவர்கள் கண்ணீர் விட்டார்கள் (நூல்: ஜஸ்புல் குலூப்)
அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள் தம் சிறிய தந்தை ஹம்ஸாவின் கப்ருக்குச் சென்று ஜியாரத் செய்வார்கள் ஒரு தடவை கப்ரின் தலைமாட்டில் இருந்த குறிக்கல் சரிந்துவிட்டது. அதனை ஃபாத்திமா (ரலி) அவர்கள் எடுத்து தோண்டி நட்டினார்கள். அன்னை ஃபாத்திமா அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சென்று ஜியாரத் செய்து இரண்டு (ரக்அத்) தொழுது அவர்களுக்காக துஆ செய்வார்கள்.
உஹ்து யுத்ததில் ஷஹீதான 72 ஷுஹதாக்கள் அடங்கப்பட்ட கப்ருக்குச் சென்று அவர்களுக்காக ஃபாத்திமா நாயகி கண்ணீர் சொரிந்த வண்ணம் துஆச் செய்தார்க்ள். (நூல்: ஜியாரத்துல் குபூர்).