‘மனித இனத்தைப் படைத்த நோக்கமே இறையுணர்வை இதயத்துள் இருத்தி, அவனை வணங்குவதற்காகவும் துதிப்பதற்காகவுமே’ என்பதை அந்த இறைவனை அழுத்திச் சொல்கிறான். அதனால் மனுக்குலம் அடைந்து கொள்ளும் நன்மைகளையும் அடுக்கிக் காட்டுகிறான்.
மறையோனை ஏந்திச் சுமக்கும் மனமும் அவனை வணங்கி மகிழும் உடலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் என்பதால் அண்ணல் நபி(ஸல்) அவர்கள், உடல் நோய்களுக்கும் மனநோய்களுக்கும் மட்டில்லா மருந்துகளை மனித சமூகத்திற்கு வழங்கியிருக்கிறார்கள்.
உணவு பொருட்களின் மருத்துவக் குணங்களை எடுத்துரைத்து எளிதாக அவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் வகுத்துத் தந்துள்ளார்கள்.
‘மருந்தில்லா எந்த நோயையும் மனிதர்க்கு இறைவன் தருவதில்லை’ என்றும் தெரிவித்தார்கள்.
உள்ளச் சுத்தம், உடல் சுத்தம், உடைச் சுத்தம், உறைவிடச் சுத்தம், சுற்றுப் புறச் சுத்தம் ஆகிய ஒவ்வொன்றுக்கும் மிகத் தெளிவாக வழிகாட்டிய வாஞ்சை நபி(ஸல்) அவர்கள் ‘சுத்தம் என்பது ஈமானில் பாதி’ எனவும் பகர்ந்தார்கள்.
‘வயிற்றுப் பாத்திரத்துள் உணவை அழுத்தித் திணித்துக் கொண்டிருந்தால் நோய்களின் விளைநிலமாக அதுவே ஆகிவிடும் என்பதை எடுத்துக் கூறிய அண்ணல் நபி(ஸல்) அவர்கள், வயிற்றின் மூன்று பாகக் கொள்ளிடத்தில் ஒரு பாகம் உணவும், ஒருபாகம் நீரும் மற்றொரு பாகம் வெறுமையாகவும் இருக்கும் வகையில் பார்த்துக் கொண்டால் உடல் நலம் ஊறுகாணாமல் இருக்கும்’ என்பதாகவும் அறிவுறுத்தினார்கள்.
இதையே நேற்றைய இயற்கை மருத்துவம் முதல் இன்றைய நவீன மருத்துவம் வரை அழுத்தமாகப் பேசுகின்றன.
‘காய்ச்சல் சளி இருமல் போன்ற சின்னச் சின்ன நோய்களை பெரியப் பெரிய நோய்களை உடலுக்குள் நுழைய விடாமல் கதவு சாத்திக் காக்கின்றன’ என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மொழிந்ததை இன்றைய விஞ்ஞான மருத்துவம் வழிமொழிகிறது.
நோய்களை உருவாக்கும் தண்ணீரின் தன்மைகளைத் தெரிவித்த தாஹா நபி(ஸல்) அவர்கள், ‘ தேங்கிக் கிடக்கும் தண்ணீரால் சிறுநீர் கழிக்கவோ அத்தகைய நீரைப் பயன்படுத்தவோ வேண்டாம்’ என்றும் தடுத்து அப்படிப்பட்ட நீரினால் உருவாகும் தீமைகளையும் விவரித்துள்ளார்கள்.
மேலும் ‘வெயிலில் சூடேறிய தண்ணீரில் குளிக்கும் வழக்கம் தொடர்ந்தால் அது வெண்குஷ்டத்தை ஏற்படுத்தும்’ என்றும் எச்சரித்தார்கள். இந்த ஹதீஸை உமர் கத்தாப்(ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நின்ற நிலையில் நீரை அருந்த வேண்டாம், ஒட்டகத்தைப் போல் ஒரே மூச்சில் பருக வேண்டாம், அருந்தும் தண்ணீரைச் சுவாசக் காற்று அழுத்த வேண்டாம், சூடான பானத்தில் ஊதிஊதிக் குடிக்க வேண்டாம்’ என்றெல்லாம் தண்ணீர்க் குடிப்பதற்கான ஒழுங்குகளையும் உபதேசித்தார்கள்.
இப்படிப்பட்ட செயலைச் செய்வோர் எத்தகைய பிணிகளால் பீடிக்கப்படுவார்கள் என்பதை இன்றைய மருத்துவ உலகத்தின் விவரிப்பு வியப்பை ஏற்படுத்துகிறது.
உதாரணம: நின்ற நிலையில் தண்ணீர்க் குடிப்பவர்களுக்கு குடலிறக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு.
‘நீங்கள் குடிக்கின்ற நீரைக் கவனித்தீர்களா? மேகத்திலிருந்து நீங்கள் அதனைத் பொழிவிக்கின்றீர்களா? அல்லது நாம் பொழிவிக்கின்றோமா? (சூரத்துல் முல்க்)
நாம் விரும்பினால் அதனை (நீங்கள் பருக முடியாத) உப்பு நீராக்கி விட்டிருப்போம். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா? (அல்குர்ஆன் 56:68,69,70)
நீரும் காற்றும் காசு கொடுக்காமல் நமக்குக் கிடைப்பதால் அவற்றின் மதிப்பை நாம் உணர்வதில்லை. அதனால் தான் ஆண்டவனின் அருட்கொடைகளை அனுபவித்துக் கொண்டே நன்றிகெட்டுத் திரியக்கூடிய நம்மைப் பார்த்து அவன் கேள்வி கேட்கிறான்.
‘பெருமானார்(ஸல்) அவர்கள் பாலைப் பிரியமுடன் பருகுவார்கள்’ என்று, இப்னு அப்பாஸ்(ரளி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பண்பு நபி(ஸல்) அவர்கள் பாலை அப்படியே பருகாமல் தண்ணீர் சேர்த்துப் பருகுவார்கள்.
உடல் சூட்டைக் கட்டுப் படுத்தும் பால், ஜீரண ஆற்றலைத் தூணடும், முகப்பொலிவை மேம்படுத்தி உடல் அழகை அதிகப்படுத்தும்.
அக்ரூட் பருப்பைப் பொடித்துப் பாலுடன் சேர்த்துப் பருகிவந்தால் ஒல்லியான உடம்பில் சதைப்பிடிப்பு ஏற்படும்.