இமாம் அபூஹனீஃபா(ரஹ்) இமாம் அபூயூஸுஃபுக்கு(ரஹ்) சொன்ன விதிமுறைகள்

 

மார்க்கச் சட்ட நிபுணர்களின் வரிசையில் இமாம் அபூஹனீஃபா(ரஹ்) சிறப்பான இடத்தை வகிக்கின்றார்.  இவர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த மாணவர்களுக்கு கல்வி, மார்க்க ஞானம்,  மார்க்கச் சட்டப் பயிற்சியளித்தார்.  அவர்களில் ஒருவரான அபூயூசுஃப் தான் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றக்கூடியவராக இருந்தார்.  ஆனால் அவருக்கு அபரிதமான கல்வித் தாகம் இருந்து வந்தது.  இதையறிந்த இமாம் அபூஹனீஃபா(ரஹ்) சிறுவயதிலிருந்தே அவரைத் தன்னுடன் வைத்து கல்வியை அளித்து வந்தார்.  அவரது தாய் தந்தையருக்கு ஒவ்வொரு மாதமும் குடும்பச் செலவுக்கு இமாம் அபுஹனீஃபா(ரஹ்) பணம் அனுப்பி வந்தார்.

அபூஹனீஃபா(ரஹ்) போன்ற கல்வியாளர்,  பயிற்றுவிப்பரின் கீழ் இருந்த அபூயூசுஃப்(ரஹ்) உயர்ந்த கல்விமானாகவும்,  மார்க்கச் சட்ட நிபுணராகவும், நீதிபதியாகவும் பரிணமித்தார்.  தன் மாணவர்களிலேயே அபூயூசுஃப் தலைசிறந்த மதிநுட்பம்,  ஞானம் பெற்று அனைத்து வகையிலும் சிறந்து தேர்ச்சி பெற்று விட்டார் என்று உணர்ந்ததும்,  இமாம் அபூஹனீஃபா தன் வளர்ப்பு மகனைப் போன்ற மாணவரான அவருக்குச் சில அறிவுரைகளை,  வழிகாட்டும் விதிமுறைகளாகத் தந்தார்.

  1. கல்வி கற்பதை முக்கிய நோக்கமாகவும், முன்னுரிமை அளிக்கக்கூடிய விஷயமாகவும் கொள்ள வேண்டும்.
  2. கல்விப் பயிற்சி முடிந்து வெளியானதும் ஆகுமான வழிகளில் செல்வத்தை ஈட்டவேண்டும். ஏனெனில் ஒரே சமயத்தில் கல்வியையும் செல்வத்தையும் ஈட்ட முடியாது.
  3. அதன் பின் நிக்காஹ் (திருமணம்) செய்துகொள்ள வேண்டும். ஆனால் குடுமபத்தை,  குழந்தைகளைப் பராமரிக்கவும், வாழ்க்கை நடத்தவும் பொறுப்புகளைத் தாங்வும் முடியும் என்று பூரண நம்பிக்கை வந்த பின்னர்தான் இந்தப் பணியை நிறைவேற்ற வேண்டும்.
  4. பின்வரும் விஷயங்களிலிருந்து கட்டாயம் விலகியே இருக்க வேண்டும்.

                  அ. கடைத்தெருக்களில் சுற்றியலைதல்.

                 ஆ. கடைகளில் தேவையின்றி உட்காருதல்.

                 இ.  தெருக்களில்,  பள்ளிவாசல்களில்,  ஏதாவது உண்டு கொண்டும்,

                         குடித்துக் கொண்டும் இருத்தல்.

  1. யாரேனும் மார்க்க சம்பந்தமாகக் கேள்வி கேட்டால், கேள்விக்கான பதிலை மாத்திரம் தரவேண்டும். தாமாக எதையும் சேர்த்துக் கூறக்கூடாது.
  2. அகீதா (கொள்கை, கோட்பாடுகள்) சம்பந்தமாக பொது மக்களிடம் விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  3. மாணவர்களோடு பாசத்துடன், பரிவுடன் நடந்து கொள்ளுங்கள். வேற்று ஆள் யாராவது பார்த்தால் சொந்த மகன்களோ என்று நினைக்கும் படி நடத்த வேண்டும்.
  4. குறைந்தத் தகுதியுள்ள, சாதாரண அறிவுத்திறன் உள்ள மக்கள் விவாதத்திற்கு அழைத்தால் கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
  5. ஏதாவது புதிய நகரத்திற்குச் சென்றால் அங்குள்ள கல்விமான்கள், அறிஞர்கள் உள்ளத்தில் போட்டி,  பொறாமை எதுவும் வராதபடி உரையாட வேண்டும்.
  6. அறிவார்ந்த விவாதங்களின் போது நன்கு சிந்தித்து, உணர்ந்து எதையும் பேச வேண்டும்.  அதே சமயம் எதை வலுவான ஆதாரங்களுடன் நரூபிக்க முடியுமோ அதை மட்டும் பேச வேண்டும்.
  7. குறைவாகவே சிரிக்க வேண்டும். அதிகமாகச் சிரிப்பதினால் உள்ளம் சோர்வடைகிறது.
  8. எந்தப் பணியைச் செய்தாலும், மனத்திருப்தியுடனும்,  நிதானத்துடனும் செய்ய வேண்டும்.
  9. பேச்சில் கடுமை இருக்கக் கூடாது. குரலை உயர்த்திப் பேசுவதும் கூடாது.
  10. மன்னர்களுக்கு அருகில் இருப்பது கூடாது. அனைத்து விஷயங்களிலும் பற்றற்ற தன்மை வெளிப்பட வேண்டும்.
  11. அனைத்து விஷயங்களிலும் இறைச்சத்தையும், அமானிதத்தையும் பேணும் பண்பைக் கடைபிடிக்க வேண்டும்.
  12. மக்களுக்கு முன்பு எதை பகிரங்கமாக வெளிக்காட்டுகிறீளோ, அதே நடைமுறையை அல்லாஹ்விடமும் பின்பற்றுங்கள்.
  13. பாங்கு சத்தம் கேட்டதும் தொழுகைக்கு தயாராகி விடவும்.
  14. ஒவ்வொரு மாதமும், இரண்டு அல்லது நான்கு நாட்களை நோன்புக்காக ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.
  15. தொழுகைக்குப் பின் நாள்தோறும், ஓரளவேனும் ‘திக்ர்’ (தியானம்) கடைப்பிடிக்க வேண்டும்.
  16. திருமுறை ஓதுதலை ஒருபோதும் தள்ளிப்போடுதல் கூடாது.
  17. உலக ஆசாபாசங்களில் அதிகமாக ழூழ்கிவிட கூடாது.
  18. அடிக்கடி கப்ருஸ்தான் (அடக்கத்தலம்) சென்று வாருங்கள்.
  19. வீண் கேளிக்கைகளை விட்டும் விலகி இருங்கள்.
  20. அண்டை வீட்டாரின் தீய நடத்தையைக் கண்ணுற்றால் பாராமுகமாயிருங்கள் மறைத்து விடுங்கள்.
  21. நூதன காரியங்கள் (பித்அத்) செய்வோரிடமிருந்து தூரமாகவே இருங்கள்.
  22. தொழுகையில், மக்கள் உங்களை இமாமாக நிற்குமாறு கேட்டுக் கொண்டான்றி, இமாமாக நிற்க வேண்டாம்.
  23. உங்களைச் சந்திக்க வருபவரிடம், அறிவார்ந்த ஞானம் மிகுந்த கருத்துகளைக் கூறுங்கள்.  அவர்கள் அறிஞர்களாக இருப்பின் அவை அவர்களுக்கு பயனளிக்கும்.  இல்லையெனில் குறைந்த அளவு உங்கள் மீது அன்பையாவது செலுத்துவார்கள்.
  24. செல்வந்தரிடம் குறைவாகவே பழகுங்கள்.
  25. வீட்டுப் பணிகளை நேர்மையான பணியாளர்களிடம் விட்டு விட வேண்டும். ஏனெனில் தம் கடமைகளைப் பொறுப்புணர்வுடனும் கவனம் சிதறாமலும் செய்ய முடியும்.
  26. யாராவது ஒருவர் ஏதேனும் நூதன கிரியையினை ஆரம்பிக்கின்றவராக இருந்தால் பகிரங்கமாக அந்த தவறான செயலைக் கண்டியுங்கள். ஏனெனில் மற்றவர்களுக்கு அதைப் பின்பற்றும் துணிவு உண்டாகக் கூடும்.  எத்தனை பெரிய மனிதராக இருப்பினும் சரியே.  ஆதனை அலட்சியம் செய்யாதீர்… ஏனெனில் அல்லாஹ் சத்தியத்துடன்- சத்தியத்தை நிலைநாட்டுபவர்களுடன் இருக்கின்றான்.

                                     “யா புனைய்ய” என்ற நூலிலிருந்து