சொந்த வீடு
-சொல்லும் உரிமை
எங்களுக்கே சொந்தம்.
எங்கள்
உடலே உருவாக்கும்
ஒற்றைப் பொருளால்
கட்டி முடிக்கிறோம்.
வலை வீடுகட்டி
கற்கோட்டை கட்டிய
பாதுகாப்புக் கற்பனையில்
மனதுக்குள் மிதக்கிறோம்.
எங்கள் வீட்டின்
வரைபட ஓவியம்
அழகின் அற்புதம்.
அத்தனைத் திறமையும்
அடையப் பெற்றதால்
கண் திருஷ்டியில்
அடிக்கடி கிழிந்து
அடிபடுகிறோம்.
வீட்டையே
வலையாய் விரித்து
வேடர்களாகிறோம்.
கோட்டைக்குள் இருக்கும்
அரண்மனையாய்
மனிதர் வீட்டுக்குள்ளே
தன்வீடு கட்டுகிறோம்.
ஒட்டடைக் கோல்களால்
எங்களுக்கான
பூகம்பங்களில்
இடிந்து விழுகிறோம்.
மரங்களில் கட்டப்படும்
எங்கள் வீடுகளுக்குக்
காற்றே எதிரியாய்
ஆகிப் போகிறது.
முன்னறிவிப்பற்ற போர்கள்
திடீர்த் திடீரெனத்
தாக்கினாலும்
புத்தி வருவதில்லை
எங்களுக்கு.
வீடு இடிந்து
தலையில் விழுந்து
சாகும் விதி
எங்களுக்கில்லை.
மூச்சுக் காற்றைப் போல்
எங்கள் வீடுகளும்
மென்மையாக இருப்பதால்.
வீடிழப்பு
நிகழும் போதெல்லாம்
மனத்துயரில்
மண்டியிடுவதில்லை
நாங்கள்.
மீண்டும் மீண்டும்
கட்டுகிறோம்
சொந்த வீட்டின்
சுகத்தைத் தொடர.
மனிதர்களே!
உங்கள் மனமும்
எங்களைப் போலத்தான்.
சொந்தக்
கற்பனை நூலில்
வீடுகள் கட்டுகிறீர்கள்
இடிய இடிய.
– கவிஞானி, G.S.T மஹ்பூபு சுப்ஹானி