கஸ்ரு தொழுகையின் சட்டம் என்ன?

கேள்வி:  4, 5 தினங்களுக்கென்றே நிய்யத் செய்து ஊருக்குச் செல்பவர் முகீமாக தொழ வேண்டுமா? முஸாஃபிராக தொழ வேண்டுமா?  ஷாஃபி,  ஹனஃபி இரு மத்ஹபுகளிலும் சட்டம் என்ன?

அப்பாஸ் அலி, திருச்சி

பதில்: ஒரு ஊரில் வசிப்பவர் மற்றொரு ஊருக்கு சென்று அங்கு தன்னுடைய பணிகளை அமைத்துக் கொண்டு மீண்டும் அவர் தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பினால் அவர் முகீமாகவே கருதப்படுவார்.

அவ்வாறு இல்லாமல் தன்னுடைய சொந்த ஊரை முற்றாக துற்நதுவிட்டு வேறொரு ஊருக்கு அவர் குடிபெயர்ந்து சென்று தன் குடும்பத்தையும் வாழ்வாதாரத்தையும் அங்கேயே அமைத்துக் கொண்ட பிறகு ஏதேனும் ஒரு வேலை நிமித்தமாக தன் ஊருக்கு வருவாரேயானால் அவர் முஸாஃபிராக கருதப்படுவார்.

ஒரு முஸாஃபிர் (பயணி) தான் வசிக்கும் இடத்திலிருந்து 48 மைல்களைத் (82 கிலோ மீட்டர்) தாண்டி பிராயாணம் செய்ய நேர்ந்தால் அவர் தனது ஊர் எல்லையைக் கடந்தது முதல் லுஹர், அஸர்,  இஷா ஆகிய தொழுகையை இரண்டு இரண்டு ரகாஅத்துகளாக தொழுதுகொள்ள வேண்டும்.

ஹனஃபி மத்ஹபின் படி அவ்வாறு சுருக்கித் தொழுவது வாஜிபாகும்.  வாஜிபை விடுவது பாவம் என்பதால் அவர் அவசியம் கஸ்ராகத்தான் தொழ வேண்டும்.

ஷாஃபியீ மதஹ்பின் படி கஸ்ராக தொழுவது சுன்னத் என்பதால் பயணாளி விரும்பினால் சுருக்கித் தொழுவார். அல்லது நான்கு ரக்அத் முழுமையாக தொழுவார். கஸ்ராக தொழுவதுதான் உகந்தது.

ஹனஃபி மத்ஹபின் படி பயணம் செய்யக் கூடியவர் தான் செல்லுமிடத்தில் 15 நாட்களுக்கு குறைவாக தங்கவேண்டும் என்று முடிவு செய்தால் அவர் முஸாஃபிராகி விடுவார். அவர் கஸ்ரு செய்வது வாஜிபாகும். ஷாஃபியீ மத்ஹபின் படி 3 நாட்களுக்குக் குறைவாக தங்க வேண்டும் என்று முடிவு அவர் முஸாஃபிராகி விடுவார். அவர் கஸ்ரு செய்வது சுன்னத்தாகும்.

ஒரு பயணி ஏதேனும் ஒரு பணி நிமித்தமாக வெளியூருக்குச் செல்கிறார். அந்த வேலை அவர் நினைத்தபடி முடியாமல் இன்று நாளை என்று காலதாமதமாகிக் கொண்டே போனால் அதிகப்பட்சமாக 18 நாட்கள் வரை அவர் முஸாஃபிராக கருதப்படுவதால் கஸ்ராகவே தொழுதுகொள்ள வேண்டும். இது ஷாஃபியீ மத்ஹபின் சட்டமாகும்.

ஹனஃபி மத்ஹபின் படி ஒரு பயணி ஏதேனும் ஒரு வேலை நிமித்தமாக வெளியூருக்குச் சென்ற பின் குறிப்பிட்ட காலத்தில் அவ் வேலை முடியவில்லை எனில் முஸாஃபிர் தனது பயணகாலத்தை நிர்ணயிக்காமல் தனது பயணத்தைத் துவங்கியிருந்தால் அவருடைய வேலை முடியும் வரை முஸாஃபிராக கருதப்படுவார், கஸ்ரு செய்வார். அவ்வூரில் பல வருடங்கள் தங்கியிருந்தாலும் சரியே. முஸாஃபிர் தனது பயணகாலத்தை உறுதிசெய்துவிட்டு இத்தனை நாட்கள் தங்கவேண்டும் என்று பயணத்தை மேற்கொண்டிருந்தால் அதிகபட்சம் 15 நாட்கள் வரை மட்டுமே கஸ்ரு செய்ய வேண்டும். அதற்கு பிறகு அவர் பயணத்தில் இருந்தாலும் கஸ்ரு செய்வது கூடாது.

ஷாஃபியீ மத்ஹபின் படி ஹராமான காரியத்தை நாடி பிராயணம் செய்கிறவனுக்கு கஸ்ரு தொழுகை கூடாது. ஆனால் ஹனஃபி மத்ஹபில் கஸ்ரு தொழுகை கூடும்.