முஸ்லிம்களாகிய நாம் ஷரீஆ வை நமது வாழ்வியல் திட்டமாக வைத்திருக்கிறோம். உலகில் எங்கு வாழ்ந்தாலும் சரி.
சிறு நீர் கழிப்பதிலிருந்து சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்வது வரை தேவையான ஒவ்வொரு விசயத்திலும் ஷரீஅத் நமக்கு வழிகாட்டுகிறது. இதைச் செய்யலாம் இதைச் செய்யக் கூடாது என்று அறிவுரை கூறிவிடுகிறது.
இதனால் மிகத் தெளிவான ஒரு வாழ்க்கை முறையை தலைமுறை தலைமுறையாக நாம் அனுபவித்து வருகிறோம். எனவே ஒரு முஸ்லிமுக்கு சலனப்படுவதற்கான சூழ்நிலைகளே எழுவதில்லை.
- பெண்கள் மருதாணி போட்டுக் கொள்ளலாம்.
- ஆண்கள் பெண்களைப் போல ஆடையணியக் கூடாது. அணிகலன்கள் கூடாது.
- வெள்ளியில் ஆண்கள் மோதிரம் அணிந்து கொள்ளலாமே தவிர பிராஸ்லட் செயின் அணிந்து கொள்ளக் கூடாது.
- டாட்டூ கூடாது.
- ஒயின் கலக்கப்பட்ட கேக் கூடாது.
- ஓட்டுக்குகாசு வாங்க கூடாது.
- காசு கொடுத்து ஓட்டு வாங்கக் கூடாது.
- இலஞ்சம் கூடாது.
- அறுக்கப் பட்டதை தான் சாப்பிட வேண்டும். தானாக செத்ததை சாப்பிடக் கூடாது.
- போதை தரும் எதுவும் அனுமதிக்கப்பட்டதில்லை
இந்தப் பட்டியலின் தொடரில் பன்னூற்றுக் கணக்கான சட்டங்கள் அடங்கியுள்ளன.
உலகிலுள்ள எந்த சட்ட அமைப்பிலும் இத்தகைய நுனுக்கமான வழிகாட்டுதல்கள் கிடையாது.
உலகின் அனைத்து மூலைகளிலும் சூழ்நிலை எவ்வளவு எதிரானதாக இருந்தாலும் ஷரீஆ பின்பற்றப்படுகிறது.
இந்தியாவின் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வெளிப்படையாக ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறினார்
நான் இஸ்லாமின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது மிகவும் ஈர்ப்பு கொண்டவன். முஸ்லிம்கள் முஹம்மது நபியின் வழிகாட்டுதல்களை பின்பற்றிய காலங்களில் அவர்கள் உலகின் மாஸ்டர்களாக இருந்தார்கள். ஸ்பெயின் வரை வெற்றி கொண்டிருந்தார்கள்.
ஷரீஆவைப் பற்றி புரிந்து கொள்ளாமல் பலரும் அது பற்றி பேச முற்படுகின்றனர். ஷரீஆ என்பது மத நம்பிக்கையோடு பிணைந்த ஒரு சட்டத் தொகுப்பு. அது தெய்வீகமானது.
அதாவது இஸ்லாமின் கொள்கை கோட்பாடுகளைப் போலவே ஷரீஆ எனும் சட்ட அமைப்பும் இறைவனால் அமைக்கப்பட்டதாகும். இதை முழுமையாக ஏற்பதைத் தவிர முஸ்லிம்களுக்கு வேறு வழியில்லை.
அமெரிக்க சபாநாயகராக இருந்த Newt Gingrich நியூட் கிங்கிரிக் ஒரு தடவை, முஸ்லிம்கள் அமெரிக்காவில் ஷரீஆ வை விட்டு விட வேண்டும் என்று கூறிய போது Huffingtonpost பத்திரிகை அவரது கருத்துக்கு மறுப்பு கூறி ஒரு கட்டுரை வெளியிட்டது.
5 Things You Need To Know About Sharia Law
அந்தக் கட்டுரையில் ஷரீஆவின் சில நன்மைகளை அது பட்டியலிட்டிருந்தது. ஷரீஆ வை நாமும் புரிந்து உலகிற்கும் புரிய வைக்க மிகச் சரியான வார்த்தைகள் அவை
ஷரீஆ என்பது மக்களை இறைவனோடு இணைக்கிறது. Sharia is primarily about a personal relationship with God.
ஷரீஆ சட்டங்கள் என்பது இறைவனது வேதங்களிலிருந்தும் அவனது தூதரின் நடை முறைகளிலிருந்து எடுக்கப் பட்டவை.
ஷரீஆவை பின்பற்றுவதே இறை நம்பிக்கையின் வெளிப்பாடாகும். ஷரீஆ என்பது மனிதன் இறைவனோடு கொண்டுள்ள தனிப்பட்ட ஒரு தொடர்பாகும்.
Asking a Muslim to stop believing in Sharia is like asking her to stop practicing her religion. It is a blatant attack on religious liberty.
யூதர்களுடைய சட்ட முறையான ஹலகா (யூதர்களின் ஷரீஆவிற்குப் பெயர்) ஒரு தனி மனிதனுடைய உணவிலிருந்து அவர்கள் அணிகிற உடை வரை ஒரு கட்டுப்பாட்டை கூறுகிறதோ அது போலவே ஷரீஆ முஸ்லிம்களுடைய அனைத்து விவகாரங்களையும் பற்றிய சட்டங்களை கூறுகிறது.
ஷரீஆ என்பது வாழ்க்கை, கல்வி, பொருளீட்டுதல், குடும்பம். மரியாதை ஆகிய ஐந்து அம்சங்களிலும் மிகச் சரியான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது.
ஷரீஆ வை கை விடு என்று கூறுவது மதத்தை கைவிடு என்று சொல்வதற்கு சமமானது.
Huffingtonpost ன் இந்த வாசகங்கள் மிகச் சரியானவை. ஷரீஆ வை கைவிடு என்று கூறுவது மதத்தை கைவிடு என்று சொல்வதற்கு சமமானது.
நம்முடைய நாட்டில் தற்போதைய மத்திய அரசாங்கம் இந்த நோக்கில் முஸ்லிம்களை இழுத்துச் செல்லும் முயற்சியில் முதல் கட்டமாக முத்தலாக் தடை சட்டம் என்று அறியப்படுகிற முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைச் சட்டம் ஒன்றை இயற்றியிருக்கிறது.
இதன் மூலம் இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கும் சமூக நீதியாளர்களுக்கும் சட்ட அறிஞர்களுக்குமே கூட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பா.ஜ.க. அரசுக்கு அதிகப் பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் கிடைத்துள்ளதன் விசத்தன்மை வெளிப்படத் தொடங்கியுள்ள மிக முக்கிய அடையாளம் இது.
நாய்க்கு வெறி பிடிக்கிற போது அதன் வாயும் நாக்கும் கோரமாக அலை பாயும் என்பார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.
அதே போன்ற தொரு அதிகார வெறி பிடித்திருப்பதன் அடையாளத்தை தான் அவசர கதியில் கொண்டுவரப்பட்டு மற்றவர்கள் கூறும் எந்த திருத்தத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் சட்டம் கொண்டு வருகிற நடைமுறையிலும் அதற்கு சார்பாக வாயாடுகிற நடை முறையிலும் பார்க்கிறோம்.
அரசுக்கு வெறி பிடிப்பது என்பது அதிகார போதை தலைக்கேறி எதையும் பொருட்படுத்தாமல் நடப்பதாகும்
எகிப்திய மன்னன் பிர்அவ்னுக்கு அதிகார போதை தலைக் கேறி இருந்த சந்தர்ப்பத்தில் தான் எந்த வித நியாயமும் இல்லாமல் யூத சமூகத்தில் பிறக்கிற ஆண் குழந்தைகள் அனைவரையும் கொல்லுவதற்கு உத்தரவிட்டான். திருக்குர் ஆன் அந்த அக்கிரம ஆட்டத்தை படம் பிடிக்கிறது.
ஆண் குழந்தைகளை கொன்றார்கள். தங்களது தேவைகளுக்காக பெண் குழுந்தைகளை விட்டு வைத்தார்கள். -அல்குர்ஆன்
எந்த சத்தியத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு நீதியை தங்களது செயல்களுக்கு அவர்கள் கற்பித்துக் கொள்வார்கள். தற்போதைய மத்திய அரசாங்கமும் பிர்அவ்னிய கொடுங்கோன்மையை கையில் எடுத்திருக்கிறது.
டிஸம்பர் 28 ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் அரசு நிறைவேற்றியுள்ள முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைப் பாதுகாப்புச் சட்டம் என்ன சொல்கிறது என்று பாருங்கள். அதில் முஸ்லிம் சமுதாயத்திற்கெதிரான பிர் அவ்னிய குணத்தின் மொத்த அம்சமும் வெளிப்படுவதை பார்க்கலாம்.
- முத்தலாக் செல்லாது
- அது சட்டவிரோதமானது.
- முத்தலாக் விடுகிற கணவனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை
- ஜாமீன் கிடைக்காது.
- இதற்கு நீதிபதி விரும்புகிற அபராதம் விதிக்கலாம்
- மனைவிக்கு அவள் வாழும் காலம் வரை ஜீவனாம்சம் வழங்கவேண்டும்
- குழந்தைகளுக்கும் பராமரிப்புச் செலவு வழங்க வேண்டும்
- குழந்தைகள் மனைவியிடமே ஒப்படைக்கப்படுவார்கள்.
இந்தச் சட்டங்களை பிர் அவ்னிய கொடுங்கோன்மை என்று ஏன் சொல்கிறோம் தெரியுமா ?
இந்தச் சட்டங்களில் எந்த ஒரு அம்சமும் பெண்களை காப்பதற்காக கொண்டு வரப்பட்டவை அல்ல.
முஸ்லிம்களையும் இஸ்லாமையும் இழிவு படுத்துவதற்காகவும், முஸ்லிம்களிடையே அச்சத்தை வளர்ப்பதற்காகவும் அவர்களை உரிமைகளற்றவர்களாகவும் ஆக்குவதற்காகவே கொண்டு வரப் பட்டவையாகும்
இந்த சட்டத்தை அறிமுகப் படுத்துகிற மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நாடாளுமன்ற மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இந்தச் சட்டம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கேற்ப கொண்டு வரப்பட்டதாக கூறுகிறார்.
உண்மையில் உச்ச நீதிமன்றம் முத்தலாக் செல்லாது என்று அறிவித்தது. முத்தலாக்கிற்கு சாட்சி அளித்து காஜிகள் சான்று அளிக்க கூடாது என்று கூறியது. ஒரு இடத்திலும் கூட இதற்கான தண்டனையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூற வில்லை. அதுவும் இப்படி கடுமையான தண்டனையைப் பற்றி உச்சநீதிம்னறம் கற்பனை கூட செய்து பார்த்திருக்காது. ஏனெனில் 3 ஆண்டு சிறைத்தண்டனை என்பது ஒரு சிவில் வழக்கில் கற்பனை கூட செய்ய இயலாதது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு தவறாக பயன்படுத்திக் கொண்டு விட்டது. உச்ச நீதிமன்றம் முத்தலாக்கை இன்வாலிட்-செல்லாது என்று கூறியது. இல்லீகல்-சட்டத்திற்கு புறம்பானது என்று கூற வில்லை.
ஆனால் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சட்டம் முத்தலாக்கை இன்வாலிட்-செல்லாது என்பதோடு இல்லீகல்- சட்டத்திற்கு புறம்பானது என்றும் கூறுகிறது.
முதலில் ஒரு சிவில் வழக்கை கிரிமினல் வழக்காக எப்படி மாற்ற முடியும்.
ஒரு கணவன் மனைவியை விவாகரத்துச் செய்தால் அதை தண்டனைக் குரிய குற்றம் என்று சொல்ல என்ன இருக்கிறது. விவாகரத்து ஒரு கிரிமினல் குற்றமல்ல.
முத்தலாக் என்பது என்ன ? அது ஒரு உடனடி தலாக். மாற்று வழிகளுக்கு இடமளிக்காதது. அதே நேரத்தில் பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு முழுமையாக விடுதலையை தரக் கூடியது.
இது குற்றம் என்றால், இதை விட பெரிய குற்றம் மனைவியை கை விட்டு விட்டுச் செல்வது. அவள் சேர்ந்தும் வாழாமல் இன்னொருவருடன் சேரவும் முடியாமல் விட்டு விடுவது அல்லவா ?
இதற்கு கடும் தண்டனை இருக்கிறதா ?
இதை கடும் தண்டனைக்குரிய குற்றம் என அரசு அறிவிக்குமானால் நம்முடைய பிரதமர் தான் முதல் குற்றவாளியாக இருப்பார். குடும்ப வன்முறைச் செயல்கள் எதற்கும் இவ்வளவு கடுமையான தண்டனை கிடையாது.
எந்த அடிப்படையில் மத்திய அரசு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது ? இது இன்னும் கூட பெரும் வழக்கறிஞர்களுக்கும் சட்ட வல்லுனர்களுக்கும் புரியாத புதிராக இருக்கிறது,
பிரிவு 148 கலவரக் காரர்களுக்கும் அபாயகரமான ஆயுதங்களை வைத்திருப்போருக்கும் மூன்றாண்டு சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் அளிக்கிறது.
பிரிவு 153 A இன மோதல்களை தூண்டுவோருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கிறது.,
பிரிவு 237 சட்ட விரோத நாணயப் பரிவர்த்தனையில் ஈடுபடுவோருக்கு மூன்றாண்டு தண்டனை வழங்குகிறது.
பிரிவு 295A மத உணர்வுகளுக்கு எதிராக திட்ட மிட்ட செயல்களில் ஈடுபடுகிறவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை வழங்குகிறது,
இந்த குற்றங்கள் எதுவும் மூன்று மாதங்கள் காத்திராமல் ஒரே தடவையில் தலாக் விட்டவரின் குற்றத்தோடு ஒப்பிடத் தகுந்தது அல்ல. பெரும்பாலும் இத்தகைய தலாக்குகள் அறியாமையினால் அல்லது கடும் கோபத்தினால் நிகழ்ந்து விடக் கூடியவை சட்டத்திலேயே இதற்கு விதி விலக்குகள் உண்டு. மிக கடுமையான சில குற்றச் செயல்களுக்கே கூட மூன்றாண்டு சிறை தண்டனை கிடையாது.
ஆனால் எப்போதாவது தவறிழைத்து விடுகிற முஸ்லிம் ஆண்களுக்கு இந்த தண்டனை என்பது தான் தோன்றித்தனமான தண்டனையாகும். பெருத்தமற்றதாகும் சட்டமீறலுமாகும்.
காஷ்மீரில் மட்டும் கலவரம் செய்கிறவர்களுக்கு எதிராக எப்படி துப்பாக்கிகள் வெடிக்கிறதோ அதே போல இந்தியா முழுவதிலும் தவறிழைத்து விடுகிற முஸ்லிம்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட ஆயுதம் ஏந்துகிற நடவடிக்கையாகும்.
அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய சட்டமானது முஸ்லிம்களை குறி வைக்கிற , இஸ்லாத்தை குறிவைக்கிற ஆத்திரத்தில் அவசர கதியில் கொண்டு வரப் பட்டுள்ளது. சட்டத்தில் எந்த அறிவார்த்தமான அணுகுமுறையும் லாஜிக் இல்லை என்பதை சட்ட வல்லுனர்களே ஒப்புக் கொள்கிறார்கள் .
முத்தலாக் செல்லாது என்று சொல்லி விட்ட பிறகு கணவனுக்கு சிறைத் தண்டனை எதற்கு ?
முத்தலாக் நிகழாது என்றால் கணவன் மனைவியாக இருவரும் தொடர்கிறார்கள் என்று தானே பொருள் பிறகு கணவனை சிறைக்கு அனுப்புவது எதற்காக!
இந்தச் சட்டம் பெண்களுக்கு எதிரானது என பெண்ணுரிமை பேசும் அமைப்புகள் குரல் எழுப்பு கின்றன.
கணவனை சிறைக்கு அனுப்பி விட்டால் தொடரும் திருமண பந்தத்தில் குடும்பத்தை யார் கவனிப்பது. ? சிறையிலிருக்கிற கணவன் எப்படி செலவுத் தொகை கொடுப்பான், எப்படி அவனால் பிள்ளைகளை பராமரிக்க முடியும்.
சுருக்கமா கூறினால்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்லாத விசயங்களை அதன் பெயரைச் சொல்லியே அபத்தமாக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.
மத்திய அரசு முஸ்லிம்களை குறி வைத்து விட்டதாக நினைக்கிறது. உண்மையில் இந்திய ஜனநாயகத்தையும் நாடாளுமன்றத்தின் பாரம்பரியத்தையும் தகர்த்திருக்கிறது.
இது தேசத்திற்கு கெட்ட சகுனமாகும்.
மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக இன்று முஸ்லிம்கள் தமிழகமெங்கும் அடையாளப் பூர்வமாக தமது எதிர்ப்பை வெளிக்காட்ட திரள்கிறார்கள்.
அரசு தன்னுடைய போக்கை திருத்திக் கொள்ளாவிட்டால் முஸ்லிம்கள் தங்களது போராட்ட வடிவங்களை அரசுக்கு புரிகிற வழியிலும் தெரிவிக்க தீவிரமான போராட்டங்களில் ஈடுபட நேரிடும்
நாட்டுக்கு நன்மை செய்கிற நலத் திட்டங்களை செயல் படுத்துவதில் பல வகையிலும் தோற்று விட்ட அரசு அதனுடைய பல திட்டங்களும் தோற்றுப் போனதை மறைப்பதற்காக ஒரு மத விரோத மனப்பான்மையை நாட்டில் ஏற்படுத்துவதற்காக இந்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது,
முஸ்லிம்களுடைய கருத்து தெளிவானது.
அரசியல் சாசனம் அங்கீகாரம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றமோ பாராளுமன்றமோ எந்த ஒரு சட்டத்தை கொண்டு வந்தாலும் முஸ்லிம் சமூகத்தையோ இஸ்லாமிய மார்க்கத்தையோ இழிவு படுத்துகிற வகையில் நடந்து கொண்டாலும் அவற்றை முஸ்லிம்கள் நிராகரிப்பார்களே தவிர ஒரு போதும் தமது ஷரீஅத்தை விட்டுத் தர மாட்டார்கள்.
அதை அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் உணர்த்துவதற்காக நடைபெறுகிற கண்டனப் பொதுக் கூட்டங்களில் உங்களது வருகையையும் பதிவு செய்யுங்கள்.
அல்லாஹ்விற்காக, சத்தியத்திற்காக சாட்சியாக நில்லுங்கள், அசெளகரியங்களை பொருட்படுத்தாதீர்கள்! கவனமாக இருங்கள்! உணர்ச்சி வசப்பட்டு காரியம் எதையும் செய்து விடாதீர்கள். எதிரிகள் நம்மை பலவீனப்படுத்திவிடவே நினைக்கிறார்கள்
நாம் ஷரீஅத்தில் நிலைத்திருப்போம். நீதிமன்றங்களை புறத்தில் வைப்போம்.
ஆக்கம்: கோவை அ. அப்துல் அஜீஸ் பாகவி