இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை – துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.
ஹழ்ரத் அபூ பக்ரா (ரலியல்லாஹு அன்ஹு)
(நூல் புகாரி – 3197. 4406. 4662. 5550)
வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளிலிருந்து இந்த நான்கு மாதங்களும் கண்ணியமாக்கப்பட்டிருந்த காரணத்தினால்தான் நபிகள் நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பிற்கு முன்பிருந்த காலத்து மக்களிடத்திலும் இந்த மாதங்கள் சிறப்பானதாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. இன்னும் இந்த மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள் என்றும் அல்லாஹ் உத்தரவிட்டிருக்கிறான். அதனால்தான் கண்ணியமிக்க இந்த மாதங்களில் புரியப்படும் நல்லமல்களுக்கு அதிகபட்ச நற்கூலியும், பாவச் செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும். கடும் குற்றச் செயல்களாகக் கருதப்படும் என ஸெய்யிதுனா இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவித்திருக்கிறார்கள்.
ரமழானுக்காக எமக்கு பயிற்சிப் பாசறையாக ரஜப் மாதம் திகழ்கிறது. ரமலான் மாதத்தில் நற்காரியங்களைச் செய்வதற்கு நாம் முன்கூட்டியே தயாராக வேண்டும். ரமலான் மாதத்தில் நாம் நிறைவேற்றும் மற்ற அமல்களையும் மாதத்திலும் நிறைவேற்றும்படி நாம் ஆர்வமூட்டப்பட்டுள்ளோம். இறை கடமையாக உள்ள வணக்க வழிபாடுகளை, நற்காரியங்களை முறைப்படி செய்வதற்கு மிகச் சிறந்த பயிற்சிப் பாசறையாக ரஜப் மாதம் திகழ்கிறது. இம்மாதத்தில் பயிற்சிகளை எடுத்துக் கொள்ளும்போது ரமலான் மாதத்தில் அது போன்ற நற்காரியங்களை அதிகமாகச் செய்வது மிக எளிதாகி விடுகிறது.
சன்மார்க்க அறிஞர்களில் ஒருவராகிய அபூபகர் அல்-பல்கி (ரஹ்மதுல்லஹி அலைஹி)அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: “ரஜப் மாதம் விதைகளை விதைக்கப்படும் மாதமாகும். ஷஃபான் மாதமாவது செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் மாதமாகும். ரமலான் மாதமோ பழங்களை அறுவடை செய்யும் மாதமாகும்” (நூல்: லதாயிஃபுல் மஆரிஃப்)
இறை நம்பிக்கையாளர்களாகிய நாம் நமது வணக்க வழிபாட்டுச் செயல்களின் மூலம் ஆன்மீக ரீதியில் நம்மை நாம் தயார் செய்து கொள்வதோடு, அறிவுப்பூர்வமாக முன்னேற்றம் காண்பதற்கு அதிகமானக் கல்வியறிவைத் தேடுவது அவசியமாகும் என்பதையும் உணர வேண்டும். ரமழானுக்கு முந்திய மாதமே ரஜப் ஷஃபான் மாதமாகும். அடுத்துவரும் ரமழானை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு ரஜப் மாதம் எமக்கு துணைபுரிகிறது.
புனிதமான ரஜபின் பிறையும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செயலும் ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஃபான் எனது மாதம், ரமழான் எனது சமுதாயத்தின் மாதம்’ என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
இம்முழு மாதத்தைப் பற்றி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக உறுதியான ஆதாரத்துடன் அறிய வருவது என்னவென்றால் ரஜப் மாதத்தின் பிறையை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டவுடன் பின்வரும் துவாவை ஓதுவார்கள். ‘அல்லாஹும்ம பாரிக்லனா ஃபீ ரஜபின் வஷஃபான வபல்லிங்னா ரமழானன’ (யா அல்லாஹ்! ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமழானை எங்களுக்கு அடையச் செய்வாயாக) என்று நமது நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரஜப் மாத துவக்கத்திலிருந்து புனித ரமழான் மாதத்தினை அடையும் வரை ஓதி வந்திருக்கிறார்கள். (நூல் முஸ்னத் அஹ்மத், தப்ரானீ)
நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் முன்கூட்டியே புனித ரமழான் மாதத்தின் வருகையை பற்றி மிக்க ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பார்கள். இந்த துஆ ஸஹீஹான ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகியுள்ளது இதை ஓதுவது சுன்னத்தாகும். ஆகவே தினமும் இந்த தூஆவை நாமும் ஒதுவது சுன்னத்தாகும்.