ரஜப் வரும் முன்னே, ரமளான் வரும் பின்னே

 

மிஃராஜ் இரவின் சிறப்புகள்:

பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வாழ்விலும்,  இஸ்லாத்தின் வளர்ச்சியிலும் மிஃராஜ் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. அடியானுக்கும்,  அல்லாஹ்வுக்கும் மிடையிலான நெருக்கத்தின் எல்லையையும் அன்நெருக்கத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் மிஃராஜ் விளக்குகிறது. ஆன்மீகப் பயணத்தின் யதார்த்தமான விளக்கமாகவும்,  ஆன்மாவின் ஆற்றலின் வெளிப்பாடாகவும் மிஃராஜ் நிகழ்வு அமைகிறது.பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் நபிமார்களின் நாயகர் என்பதையும், மலக்குகள் அர்ஷ், குர்ஷ் அனைத்தையும் விட மேலானவர்கள் என்பதையும் மிஃராஜ் நிரூபித்துக்காட்டுகின்றது.

வேந்தர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிரபஞ்சத்தில் எதிலும் தேவையற்றவர்கள் என்பதையும், வல்ல நாயனான அல்லாஹ்விடத்தில் மாத்திரமே தேவையுள்ளவர்கள் என்பதையும் மிஃராஜ் சுட்டிக் காட்டுகின்றது. ஆன்மீகப் படித்தரங்களில் அடிமைத்துவமே மேலானது என்பதையும், அதன் மூலமே எஜமானான இரட்சகனை அடையலாம் என்பதையும் மிஃராஜ் விளக்கிக் காட்டுகின்றது. இவ்வாறு பல்வேறு தத்துவங்களை உள்ளடக்கியுள்ள மிஃராஜ் பயணமாகும்.

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன், அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான், (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம், நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்போனாகவும் இருக்கின்றான்.(​​அல்குர்ஆன் : 17:1)

மேலும் இந்த சிறப்பான சங்கையான மாதத்தில் அல்லாஹ் தன் வல்லமையை வெளிப்படுத்துவதற்காக நமது நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாயிலாக நிகழ்த்துக் காண்பித்த மகா அற்புத நிகழ்வே ‘அல் இஸ்ராஉ வல் மிஃராஜ்’ எனும் அதிசய நிகழ்வாகும்.  ரஜப் பிறை 27 புனித மிஃராஜ் தினமாகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை சந்திக்க விண்ணுலகப் பயணம் சென்ற நாள். இன்றுதான் நமக்கு ஐவேளை தொழுகை கடமையாக்கப்பட்டது.

இந்த நாளில் சிறப்பு வாய்ந்த ரஜப் பிறை 27 அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அன்றைய தினத்தில் நோன்பு வைப்பது சுன்னத்தாகும். ஆகவே புனிதமான நாட்களில் நோன்பு வைப்பதும், குறிப்பாக ஒவ்வொரு மாதமும் ‘அய்யாமுல் பீல்’ என்று சொல்லப்படும் பிறை 13,14,15  ஆகிய மூன்று நாட்களும் அதேபோன்று ஒவ்வொரு திங்கட்கிழமை,  வியாழக்கிழமை நோன்பு வைப்பதும் அதேபோன்று அந்நாளில் அதிகமதிகம் ஸலவாத்து ஓதுவது, இபாதத் எனும் வணக்க வழிபாடுகளில் ஈடுபதுவது சிறப்பிற்குரிய சுன்னத்தாகும்.