சங்கத் தமிழ் இனமே தீங்கு சூழுது தினமே!

ன்று தோன்றியது என வரையறுத்துக் கூறமுடியாத அளவிற்குப் பழைமை வாய்ந்த தொன்மைமொழி தமிழாகும். தமிழ் நாட்டின் ஆட்சி மொழியாக, இந்திய அரசியலமைப்பின் எட்டாவது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளில் ஒன்றாக, இலங்கை நாட்டில் மூன்று ஆட்சி மொழிகளுள் ஒன்றாக, சிங்கப்பூர் நாட்டில் நான்கு ஆட்சி மொழிகளுள் ஒன்றாக, தென்னாப்பிரிகா அரசியலமைப்பு அங்கீகாரம் பெற்ற மொழியாக, மலேசியா நாட்டில் முதல் நான்கு மொழிகளுள் ஒன்றாக இன்றைக்கும் ஏற்றம் பெற்றுத் திகழ்கின்ற  செம்மொழி தமிழே ஆகும்.

சங்கக் காலத்தில் சமூக மொழியாக இருந்து வந்த தமிழ், சமயம் மற்றும் தத்துவ உணர்வுகளைத் தனித்துவத்தோடு எடுத்துரைக்கவல்ல சமய மொழியாகவும் விளங்கியது. காரணம், காலத்திற்கேற்பத் தனது வளர்ச்சிப் போக்கைக் கொண்ட வளமிக்க மொழியாகத் தமிழ் விளங்கியதாலேயே ஆகும்.  ஆகவேதான் சைவ சமயமானாலும், வைணவ சமயமானாலும், சமண-பௌத்த சமயங்களானாலும், கிறிஸ்துவ-இஸ்லாமிய மார்க்கங்களானாலும் அவ்வச் சமயமொழியாக நெகிழ்ந்து தனது தனித்தன்மை இழக்காது உயர்ந்து இலங்கும் ஆற்றல்மிகு மொழியாகத் தமிழ் விளங்குகிறது. சைவ-வைஸ்ணவ, சைவ-சமணச் சண்டைகள் மலிந்திருந்த காலக் கட்டத்தில்கூட மெலிந்து போனதில்லை தமிழ்மொழி.

ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் உலகில் 18ஆம் இடத்தைத் தமிழ் மொழி பெற்றுள்ளது. இந்திய மொழிகளிலேயே இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளில் முதலாமிடத்தைப் பெற்றுத் தமிழ்மொழி சிறப்படைந்திருக்கிறது.

இந்தியாவில் கிடைத்துள்ள ஒரு இலட்சம் கல்வெட்டு மற்றும் தொல் எழுத்துப் பதிவுகளில் 60,000க்கும் அதிகமானவை தமிழ்நாட்டில் கிடைத்தவையே ஆகும். அவற்றில் 95 விழுக்காடு தமிழில் அமைந்திருப்பது நோக்குவதற்குரியதாகும். 2500 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழைமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்ட மொழி தமிழாகும்.  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே சங்கத் தமிழரின் கொள்கையாகும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே அவர்தம் கோட்பாடாகும்.