ரஜப் வரும் முன்னே, ரமளான் வரும் பின்னே

கால நேரங்களையும் மனிதர்களையும் படைத்த அல்லாஹ், அவற்றில் தான் விரும்பியதை சிறப்பாக்கியும் வைத்திருக்கிறான். அந்த வகையில் மனித இனத்தில் நபிமார்களை அவர்களில் சிறப்பாக்கி வைத்திருப்பதுடன் ‘உலுல் அஸ்ம்’ என்று அந்த ரசூல்மார்களில் குறிப்பிடத்தக்க ஒரு சிலரைத் தெரிவு செய்து அவர்களில் மிக மிகச் சிறப்பான நபியாக ரசூலாக அடியானாக அண்ணலார் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் தேர்வு செய்தான்.

​​இவ்வாறே இடங்களைப் படைத்த அல்லாஹ் மக்கா முகர்ரமா. மதீனா முனவ்வரா, பைத்துல் முகத்திஸ் ஆகிய இடங்களை ஏனைய சகல இடங்களைவிடவும் கண்ணியப்படுத்தி வைத்தான்.  இது போல கால நேரங்களைப் படைத்த அல்லாஹ் வெள்ளிக்கிழமையை நாட்களின் தலைவனாகவும் மாதங்களில் முஹர்ரம், துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, ரஜப், ஆகிய நான்கு மாதங்களை அல்லாஹ் சிறப்பாக்கியும் வைத்திருக்கிறான்.

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும், அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும், ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள், இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.      (அல்குர்ஆன் : 9:36)