பிணிகள் போக்கும் பூக்கள்

 

றைவன் எதையும் வீணுக்காகப் படைக்கவில்லை என்பதை பூக்களும் மணமாகவும், மவுனமாகவும் பேசுகின்றன.  அவற்றின் பேச்சைக் கேட்பவர்க்கு மருந்தாகி உதவுகின்றன. இலை முதல் வேர் வரையிலான தாவர உறுப்புக்கள் தனித்தனித் தகுதியைத் தம்முன் தாங்கி நிற்கின்றன. இறைக் கருணையின் ஆதார அர்த்தங்களாகவும் அவை அமைகின்றன.  நறுமணத்திற்காகப் பயன்படுத்தப்படும் மலர்கள் மற்றும் மணம் பெறாத மலர்களின் மருத்துவ குணங்களையும் சற்றே நாம் பார்க்கலாம்.

ரோஜாப்பூ:  பன்னீர், அத்தர் ஆகியவற்றின் ஒற்றை மூலப் பொருளான ரோஜாவின் மருத்துவத் தன்மை மகத்தானதாகும். கருவுற்ற பெண்கள் குழந்தை பெறுவது வரையிலும் அதிகாலையில் ரோஜாப்பூ இதழ்களை உண்டுவந்தால் குழந்தை நல்ல நிறமுடனும், அழகுடனும் பிறக்கும். இரத்தத்தைச் சுத்தி செய்து மலச் சிக்கலை நீக்கி வயிற்றுவலி, வயிற்றுக் கடுப்பு ஆகியவற்றைப் போக்கும். ரோஜாப்பூ சர்பத் உடல் உஷ்ணத்தைத் தணிக்கும்.

குங்குமப்பூ:  பசுப்பாலில் இந்தப் பூவைப் போட்டுக் காய்ச்சி கர்ப்பிணிப் பெண்கள் அருந்திவந்தால் பிறக்கும் குழந்தை அழகாகவும் நிறமாகவும், பிறக்கும்.  தாய்ப்பாலில் இதை இழைத்து கண்களில் சில துளிகள் விட்டுக் கொண்டால் கண்நோய்கள் நீங்கும்.

வெண்தாமரைப் பூ: இதன் கசாயம் மூளையின் சோர்வைப் போக்கி சுறுசுறுப்பாக்கும்.  அன்றாடம் காலையில் அருந்தினால் அறிவு விரிவடையும். இதய நோய்களை நீக்கும் ஆற்றலும் இதற்குண்டு.

செந்தாமரைப்பூ:  பூவிதழ்களைக் காயவைத்து தூளாக்கி தேனுடன் கலந்து காலை மாலை உண்டுவந்தால் இதயம் பலமடையும்.  அதன் செயற்பாடும் சீராகும்.

மாதுளம் பூ:  மாதுளம் பழத்தோல், ஆமம், சீரகம், மாங்கொட்டை பருப்பு இவற்றை மாதுளம் பூவுடன் சேர்த்துக் காய்ச்சிக் கொடுத்தால் வயிற்றுப் போக்கு உடனே நின்றுவிடும்.  கருப்பைச் சுருக்கத்தால் கருபிடிக்காமல் இருக்கும் பெண்கள் ஐந்து மாதுளம் பூக்களை இடித்துக் கசாயம் வைத்து, பனங்கற்கண்டு சேர்த்து பருகிவந்தால் மூன்று மாதத்திற்குள் கருபிடித்தல் நிகழும்.

மருதாணிப் பூ:  இதைப் போட்டுக் காய்ச்சிய எண்ணெயை நாள்தோறும் தலைக்குத் தடவினால் முடி செழித்து வளரும் கருமை நிறமடையும்.  தூக்கம் வராமல் தவிப்பவர்கள் மருதாணிப் பூவை தலையணியின் அருகில் வைத்துக் கொண்டால் நல்ல தூக்கம் வரும்.  மூளையைக் குளுமைப் படுத்தும்.

மல்லிப்பபூ:  ஜாதி மல்லிப்பூக் கசாயம் மாதவிலக்கை ஒழுங்கு படுத்தும்:  அந்த நேரத்து வலியைப் போக்கும்.  இதை அரைத்துக் கழிம்பாக்கி உடம்பில் பூசிய பின்னர் குளித்தால் அரிப்பு, நமைச்சல், தடிப்பு முதலான தொல்லைகளைத் தகர்த்துவிடும்.

பாரிஜாதப் பூ:  பவளமல்லி எனச் சுட்டப்படும் இதைக் கசாயமாக்கி காலை மாலை பருகினால் இதயம் வலுவடையும்.  இரத்தத்தை உருவாக்கி விருத்தி செய்யும்.

சம்பங்கிப்பூ:  இந்தப் பூவின் கசாயம் பாலியல் பிழையால் நேர்ந்த பிணிகளைப் போக்கும்.

மாம்பூ:  இத்துடன் சமஅளவு நாவற்பழக் கொட்டைப் பருப்பைச் சேர்த்துத் தூளாக்கி காலை மாலை உட்கொண்டால் மாதவிடாய்க் காலத்து அதிக ரத்தப் போக்கு, சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறுதல், இரத்தமூலம் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

தாழம்பூ: இதன் சாற்றைக் காதில் விட்டுக் கொண்டால் காதுவலி, காது குடைச்சல், காது இரைச்சல, காதுக்கட்டி, காதுப்புண் முதலியவற்றை முற்றாக அகற்றும்.

வாழைப்பூ:  இதன் சாற்றுடன் சீரகம், சோம்பு சேர்த்து நெய்யில் தாளித்து தினமும் சாப்பாட்டுடன் உண்டால் ஒருவாரத்தில் கருப்பைச் சுருங்கி மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் அத்தனைத் தொல்லைகளும் தொலைந்துவிடும்.

முருங்கைப் பூ:  இதைப் பாலுடன் சேர்த்துக் காயவைத்துத் தூளாக்கி ஒரு தேக்கரண்டி அளவில் பாலுடன் கலந்து உண்டால் இல்லற இன்பம் நீடிக்கும்.