எங்கே மறைந்து போன அந்த வானசாஸ்திரம்

 

அல்குர்ஆனின் அறிவியல் அத்தாட்சிகளில்         

 

நீங்களும், நானும் இப்போது அலசிப்பார்க்க பல சுவராசியமான விஷயங்களில் ஒன்று நட்சத்திரங்கள்.  இது ரொம்ப ரொம்ப தொலைதூர சமாச்சாரம் இதன் தூரங்களை ஒளியைக் கொண்டு அளக்கிறோம்.  ஒளி ஒரு வினாடிக்கு துல்லியமாய் 2,99,79.5 கி.மீட்டர் செல்லும்.  இதை ஒரு வருடத்திற்கு ஒளி செல்லும் தூரம், கிலோமீட்டரில் 2,99,79.5 * 60 x 60 x 60 x 24 x 365.25 பெருக்கிக் கொள்ளவும்.  உதாரணமாக 10 ஒளி வருட தூரத்தில் ஷிஃபா என்னும் நட்சத்திரம் உள்ளது.  இது நம்ம சூரியனைவிட 1½  மடங்கு பெரியது அதே நேரத்தில் சூரியன் தரும் ஒளியைவிட  20  மடங்கும் அதிக ஒளியுடையது.

இந்த நட்சத்திரத்தை நான் ஹூது நபிமக்களாகிய ஆது சமூகத்தினர் வணங்கிக் கொண்டிருந்தனர் என்பதாக குர்ஆன் (53:  49,50)  வனங்கள் தெரிவிக்கின்றது.  ஆதிகாலத்தில் நட்சத்திரங்களைப் பற்றி நிறையவே ஆய்வு செய்துள்ளனர்.  அது உதயமாகி மறையும் வரையுள்ள காலகட்டத்தை தெளிவாக நிர்ணயம் செய்துள்ளனர்.  அக்காலமக்கள் நட்சத்திரங்களை ஆய்வு செய்துள்ளனர் என்பதற்கு உதாரணமாக குர்ஆன் இன்னொரு வசனத்தை சுட்டிக் காட்டுகிறது.

நபி இப்ராஹீம் (அலை) அவர்களது சமூகத்தார் நட்சத்திரங்களைக் குறித்து ஆய்வுக்காலத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றிருகிறார்கள்.  இதுகுறித்து அல்லாஹ் குர்ஆனில் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் நட்சத்திரங்களை கூர்ந்து பார்த்தார்.  (குர்ஆன் (37:88) நட்சத்திரங்களை கூர்ந்து பார்த்தார் என்றால்,  நட்சத்திரங்கள் குறித்த கல்வியில் கவனம் செலுத்தி அந்த ஞானத்தைப் பெற்றிருந்தார்கள் என்பதாகத்தான் விளங்கி கொள்ள வேண்டும்.  கூர்ந்து பார்த்தார் என்பது கருத்து அல்ல,  கூர்ந்து பார்த்திருந்தால் மேற்கூரிய வசனத்தில் இலா என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எனவே நட்சத்திரங்களைப் பற்றிய கல்வியில் அக்கால மக்கள் மேன்மைப் பெற்றிருந்தார்கள் என்பது இதன் மூலமாக அறிய முடிகிறது.

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்திற்குப் பிறகு கூட மக்கள் நட்சத்திரங்கள் குறித்தவான சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதை நாம் அறியும் போது,  நம்மை இன்னும் வியப்புக்குள்ளாக்கி இருக்கிற ஒரு வற்றாத ஆச்சரியம்.  அந்த வான சாஸ்திரம் ஏனோ உங்களுக்கும் எனக்குமான இக்காலத்தில் நிறையவே மறக்கப்பட்டுப் போனதா…. அல்லது மறைக்கப்பட்டுப் போனதா…? தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள்… இருந்தாலும் இக்காலத்து விஞ்ஞானிகள் சொல்ல சொல்லக் கேட்டுக் கொள்கிறோம்.  இருப்பினும் அக்காலத்தில் நட்சத்திரத்தைப் பற்றி கணித்த மிக துல்லியமான அந்த சாஸ்திரங்கள் இன்று நம்மிடையே இல்லாமல் போனது நமக்கு ஏற்பட்டிருக்கும் மாபெரும் இழப்பாகத்தான் நமக்குப்படுகிறது.

அந்த ஞானம் ஒன்றும் தொடுகுறி ஜோஸியம் மாதிரி இல்லை. அத்தனையும் சாஸ்திரங்கள் வான சாஸ்திரங்கள். வானத்தை காலம் காலமாக உற்று உற்றுப் பார்த்து சுடரும் நட்சத்திரம் தரும் சேதியைக் கொண்டுள்ள ஞானம் இது தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து தொடரப்பட்ட ஞானம்.  இப்படி தக்க வைத்த ஞானத்தைக் கொண்டு பூமியில் நிகழும் காலத்தைக் கணித்தார்கள்.  காலம் போகப்போகும் காலத்தை சொல்லிவைத்தார்கள்.

இதெல்லாம் எப்படி…? நமக்கு இன்னும் பிடிபடவில்லை. இருந்தாலும் அந்த உண்மையான நட்சத்திரங்களைப் பற்றி ஒவ்வொரு சம்பவங்களாக சொல்லி வருகிறேன்.

நபி நூஹ் (அலை) அவர்களது ஆறாவது தலைமுறையில் பைலபூஸ் இப்னு மதுஅயூஸ் என்கிற பேரரசர், கிரேக்க அரச குமாரியான நிலாயாவை மணந்தால் இந்த அரசகுமாரியின் தங்களை அல்காவை பக்கத்து நாட்டு சிற்றரசர் மலிக்கால் என்பவர் மணமுடித்துக் கொண்டார்.

இரு மன்னர்களும் ஏற்கனவே நண்பர்கள் கோத்திரவழியில் உறவினர்கள் தற்போது கிரேக்க அரசிளங்குமார்களை தத்தம் இருவரும் மணந்து கொண்ட பிறகு அந்த உறவும் நெருக்கமும் இரு குடும்பங்களுக்கிடையே மேலும் வளர்ந்திருந்தன.

அல்கா  – மல்க் நான் தம்பதியர் பைலபூஸ் தினம் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வானத்தைப் பார்த்து கோள்கள், நட்சத்திரங்களின் சஞ்சாரங்களையும் அவற்றின் அமைப்பு நிலைகளையும் ஆராய்கிற வழக்கம் ஒவ்வொரு நாளும் உண்டு.  விருந்தினர்கள் வந்திருந்த அன்றைக்கு அந்த நட்சத்திரங்களின் அமைப்பு அவருள் ஒருவித உற்சாகத்தை ஏற்படுத்திற்று.

உடனே தயாராய் வைக்கப்பட்டிருந்த எழுத்தாணி கொண்டு மெல்லிய சதுர பலகையில் குறுக்கும் நெடுக்குமாய்க் கோடுகளும்,  நட்டங்களும் வரைகிறார். ஏற்கனவேதான் கற்றிருந்த வான சாஸ்திரத்தின் யுக்திகளையும் கைக்கொண்டு தெளிந்து ஆராய்கிறார்.

ஆம்… இன்றிரவு தான் 40 ஆண்டுகள் எதிர்பார்த்திருந்த அந்த நட்சத்திரம்நடுநிசிக்கு ஒரு நாழிகைக்குப் பிறகு குறிப்பிட்ட நிலைக்கு வருகிறது.  அரை நாழிகை கணம் ஜனக்கிற குழந்தை இறைவனால் உவக்கப்பட்ட காமிலாகவும்,  உலகம் உள்ளளவும் இதன் ஆயுள் நீடித்திருக்கும் பாக்கியம் பெற்ற அவதாரப் புருஷராகவும் இருக்கும் என்பதை அறிந்து கொண்டு உடனேதான் மனைவியிடம் தெரிவிக்கிறார்.

கிலாயா… நான் தியானத்தில் அமர்ந்திருப்பேன்.  நீ விழிந்திருந்து நான் குறிப்பிட்ட அந்த நேரத்திற்கு சற்றுமுன்,  என்னை உணர்வடையச் செய்து,  நாம் இன்ப கிளர்ச்சியடைந்து அந்த பொன்னான புனித நேரத்தில் வீடு கூடி விடவேண்டும் என்கிறார் பைலயூஸ் மன்னர்.

தற்செயலாக மறைவில் நின்றிருந்த நிலாயாவின் தங்கை அல்கா இந்த உரையாடலைக் கேட்கிறான். உடனே தன் கணவர் மலிக்கானிடம் விபரம் சொல்கிறாள்.

அல்ஹம்துலில்லாஹ் அப்படியொரு பாக்கியம் பெற்ற உன் அக்காவிற்கு கிடைக்கட்டும். அதற்காக நாம் பெருமைபடுவோம் என்கிறார் மலிக்கான்.

நான் சொல்ல வந்தது வேறே என்கிறார் சுல்கா.

சொல்லு….

பைலபூஸூக்குத் தெரிந்த அந்த உண்மை மற்றவருக்குத் தெரியாதிருக்கலாம்.

ஆமா…. தெரியாது இருக்கலாம்.

அந்த குறிப்பிட்ட நேரத்தில் எத்தனையோ தம்பதியர்கள் சாதாரணமாய் இன்ப கிளர்ச்சிக்கு வசப்பட்டு வீடு கூடலாம் அல்லவா…?

ஆமாம்… ஒப்புக் கொள்கிறேன்.

பாக்கியம் பெற்ற அந்தக் குழந்தை யாருக்கோ.  எங்கோ ஒரு தாயின் கருவறையில் இடம்பிடிக்கப் போகிறது.

உண்மை…உண்மை…

அந்தப் பாக்கியமான நானாகக் கூட இருக்கலாம் அல்லவா…?

மலிக்கான் சட்டென்று நிமிர்ந்தார்.

நமக்கோ இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. அல்லாஹ் பெரியவன், தான் நாடுவதையே நிறைவேற்றுவதாக இறைவன் கூறுகிறான்.  மேலும் அல்லாஹ் எந்தப் பெரிய வெகுமதியும் அறியாத புறத்தில் இருந்தே அறியாத நிலையிலேயே ஒருவனுக்கு கிடைக்கச் செய்கிறான் என்பது உண்மைதானே என்கிறார் அல்கர்.

இரு தம்பதியர்களும் நடுநிசி வரை இறைவனை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  நேரம் நெருங்கி நெருங்கி அந்தக் கணப்பொழுது வந்ததும் இருவரும் வீடு கூடுகிறார்கள்.  அவர்கள் குரல் உயர்த்தி அல்லாஹ்வைத் துதிக்க மெஞ்ஞான புரியின் மங்காத பாதுஷா,  ஆன்மலோகத்து அற்புத பேரரசர், வலிமார்களின் கருணைக் கைவிளக்கு,  ஜீவத்துவத்தின் புதுமை பேரொளி கருணையே,  காருண்யமே இரக்கமே வடிவான மெய்யொளி ஹள்ரத் செய்யிதுனா நபி ள்ரு (அலை) அவர்கள் அன்னை அல்கா அவர்களது கருவறையில் அரும்பினார்கள்.  இவர்களைப் பற்றி குர்ஆன் (18:65) வசனத்தில் குறிப்பிடுகின்றான் இறைவன்.

பைலபூஸ் யோக நித்திரையில் ஆழ்ந்திருக்கையில் கிலாயா உறங்கிவிடவில்லை.  கணவர் அறிவுறுத்திய அந்தக் கணப்பொழுது நெருங்கிக் கொண்டிருந்தது.  ஆனால் கிலாயா இயல்பாகவே அதிகச் கூச்ச சுபாவம் கொண்டிருந்தமையால்,  கணவரை நெருங்குவார்,  வெட்கம் முறுக்கேறிக் கொள்ள திரும்பிவிடுவார்.  இப்படியே பலமுறை நெருங்க,  பின் திரும்ப,  நெருங்க… திரும்ப ஒரு முறை மட்டும் கணவரை உசுப்பிவிட்டார்.

கணவர் பைலயூஸ் தியானத்திலிருந்து திடுக்கிட்டு,  கண்விழித்து ஓடோடிச் சென்று சாளரம் வழியே வானத்தைப் பார்த்தார்.  விறுவிறுவென்று கணித்துப் பார்த்தார்.  இடிதாக்கிபோல் இருந்துவிட்டார்.  அந்தோ…  அந்த நட்சத்திரம் இடம் மாறிவிட்டது மட்டுமல்ல அந்தக் குழந்தை யாரோ ஒருவருக்கு மகனாய் ஜனித்துவிட்டதையும் கணித்தார்.

தன் மனைவியிடம் என்ன நடந்தது ஏன் தம்மை எழுப்பவில்லை என்ற மனைவியை உலுக்கினார்.

வெட்கம்…

உன் வெட்கம் என் நாற்பது ஆண்டு கால கடும் முயற்சியை பாழாக்கிவிட்டது கிலாயா என்றார்.

பைலபூஸின் சிந்தனையில் சிறிது தவறு இருந்தது. வானசாஸ்திரத்தின்மூலம் அறிந்து அதைத்தாமே பெற்றுக் கொள்ள முடியும் என நம்பினார்.  இங்கேதான் அறிவு தவறுகிறது.   வான சாஸ்திரத்திறமையினால் சில உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும்.  அதனால் அந்த அறிவு அல்லாஹ்வின் நாட்டத்தை அறியவோ அல்லது எதை மாற்றவோ ஒருபோதும் உதவாது என்கிறது அக்கால வான சாஸ்திரம்.

எனினும் அந்த புனித நட்சத்திரம் தனியாக மட்டும் ஒளி வீசிக் கொண்டிருப்பதில்லை என்பது வானசாஸ்திரத்தின் சாரம்சம்.  எனவே பைலபூஸ் அவசரம் அவசரமாய் புதிய கணிப்பு ஒன்றைக் கணித்துப்பார்க்க,  வேறொரு அதிர்ஷ்ட நட்சத்திரம் இன்னும் கொஞ்ச நாழிகையில் ஒளிர இருக்கிறது.  இது ஒளிரும் நேரத்தில் ஜனிக்கும் குழந்தை உலகை ஆளும் பேரரசராக தவயோக மன்னராக திகழக்கூடும் என்பதையும் அறிகிறார்.  உடனே இறைவனிடம் இறைவா இந்தப் பாக்கியத்தையேனும் எனக்கும் அருள்வாயாக! என மனம் உருக வேண்டி மனைவியுடன் வீடு கூடுகிறார்.

உலகில் அதற்கு முன்னரும்,  பின்னரும் தோன்றிராத பேரரசரான ஹலரத் சுல்தான் ஷா ஸ்கந்தர் துல்கர்னைன் அன்னை கிலாயாவின் கர்ப்பத்தில் கருவானார்.  இவர்களைப் பற்றி குர்ஆனில் (18:84)  வசனத்தில் குறிப்பிடுகிறான்.

இதையே இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  எந்த நபியுடைய ஜன்ம

நட்சத்திரம் விண்ணில் அவர் பிறப்பதற்கு முன்தோன்றாமல் இருந்ததில்லை.

ஹெர்குலிஸ் மன்னர் விண்கோள்களை ஆய்ந்து சோதிடம் சொல்லுவதில் வல்லவராயிருந்தார்.  மன்னர் அல்அக்ஸா ஆலயத்திற்கு வருகை தந்தபோது ஒரு நாள் கவலை தோய்ந்த முகத்தினராகக் காணப்பட்டார்.

மன்னரின் கவலைக்கு காரணமென்னவென்று வினவியபோது அவர் இன்றிரவு நான் நட்சத்திர மண்டலத்தை ஆராய்ந்து கொண்டிருந்தபோது,  விருத்த சேதனம் செய்யப்பட்டவர்களின் மன்னர் தோன்றிவிட்டதாக அறிந்தேன் என்று கூறிவிட்டு,  இக்கால மக்களில் விருத்த சேதனம் செய்து கொள்ளும் வழக்கமுடையவர்கள் யார்,  என வினவினார்.  யூதர்களைத் தவிர வேறு யாரும் விருத்த சேதனம் செய்துகொள்வதில்லை.  அவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.  உங்கள் ஆட்சிக்குட்பட்ட நகரங்களுக்கெல்லாம் எழுதி அங்குள்ள யூதர்களை கொன்றுவிடுமாறு கட்டளையிடுங்கள் என்றார்கள்.

இவ்வாறு அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போதே நபி (ஸல்) அவர்களைப் பற்றி தகவல் ஒன்றைக் கொண்டு வந்திருக்கும் ஒருமனிதரை கஸ்ஸான் என்ற கோத்திரத்தின் குறுகில மன்னர் ஹெர்குலிஸிடம் அனுப்பி இருந்தார்.

அம்மனிதர் அவரது முன்கொண்டு வந்து நிறுத்தப்பட்டார்.  அவரிடம் தகவல்களைப் பெற்றுக் கொண்ட ஹெர்குலிஸ் இவரை அழைத்துச் சென்று இவர் விருத்தசேதனம் செய்திருக்கிறாரா?  சோதியுங்கள் என்று ஆணையிட்டார்.

அவரை அழைக்கச் சென்று பரிசோதித்தவர்கள் அவர் விருத்தசேதனம் செய்திருப்பதாகக் கூறினார்கள்.  அவரிடம் அரபிகள் வழக்கம் பற்றி மன்னர் விசாரித்தபோது அவர்கள் விருத்த சேதனம் செய்து கொள்ளும் வழக்கமுடையவர்கள் தாம் என்றார்.

உடனே ஹெர்குலிஸ்,  அவர் தாம் முஹம்மது (ஸல்) இக்காலத்தின் மன்னராவார்.  அவர் தோன்றிவிட்டார் என்று கூறினார்.  பின்னர் ரோமாபுரியிலிருந்து தமக்கு நிகரான கல்வியறிவும்,  ஞானமும் பெற்றிருந்த தமது நண்பர் ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு,  ஹிம்ஸ் என்ற நகரத்திற்கு பயணமானார்.

அவர் ஹிம்ஸூக்குப் போய் சேர்வதற்குள் பதில் கடிதம் வந்தது.  அக்கடிதத்தில் ஹெர்குலிஸின் கருத்துப்படியே இறைத்தூதரின் வருகை பற்றியும் அத்தூதர் இவர் தாம் என்ற எழுதப்படடிருந்தது. புகாரி பாகம் 1: ஹதீஸ்

நபி (ஸல்) அவர்களின் ஜென்ம நட்சத்திரத்தை ரோமாபுரி மன்னர் ஹெர்குலிஸ் கணித்துள்ளார் அதுவும் மிகத்துல்லியமாக.

இதுபோன்றே நபி ஈஸா (அலை) அவர்கள் பிறக்கும்போது மூன்று வானஇயல் வல்லுநர்கள் ஈஸா (அலை) அவர்களின் ஜன்ம நட்சத்திரம் விண்ணிலே தோன்றியதைக் கண்டு அதைப் பார்த்த வண்ணமே பைத்துல் முகத்தஸ் வந்து சேர்ந்து,  இஸ்ரவேலர்களின் அரசர் பிறந்துவிட்டாரா…? என்று அங்கிருந்தோரை வினவ, இச்செய்தி ஐஅதூஸ் மன்னன் செவியேறியதும், அவர் அவர்களை அழைத்துவரச் செய்து விசாரித்தான் என்பதாக விளக்கம் கிடைத்துள்ளது.

…இப்படியாக ஆதிகால நட்சத்திரங்களின் வான சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு நபிமார்களுக்குரிய ஒவ்வொரு ஜன்ம நட்சத்திரத்தையும் கணித்தார்கள்,  நட்சத்திரங்கள் சொல்லும் ஒவ்வொரு சேதியையும் நுணுக்கமாக தெரிந்து கொண்டார்கள்.  அந்த ஆதிகால நட்சத்திரங்களின் வான சாஸ்திரம் எங்கே மறைந்து போனது…?  எப்படி தற்கால மனிதகுலம் அதனை பயன்படுத்த முடியாமல் போயிற்று…?  என்பதுதான் இக்கட்டுரையின் மையக்கருத்து.  சரி…  தேடுவோர்… கிடைக்கும்.