தப்லீக்வாதியிடம் வஹ்ஹாபிஸத்தின் துர்வாடை

 

அஷ்ரஃப் அலீ தானவீ

தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகர்களிலும் மேல்மட்டத் தலைவர்களிலும் ஒருவரான அஷ்ரஃப் அலீ தானவீ இவரால் எழுதப்பட்டது தான் “பிஹிஸ் தி ஜேவர்” (சுவர்க்க நகைகள்) என்ற உருது நூல்.  பூமாலை போடுவது ஷிர்க் (இணைவைப்பு) யாரஸுலல்லாஹ்! என அழைப்பது ஷிர்க்,  மவ்லிது ஷரீஃப் ஓதுவது அதன் சீரணிகளைச் சாப்பிடுவது கூடாது.  இவைகளெல்லாம் தாங்கியதே இந்நூல்.  இவரின் முரீது ஒருவர் இவருக்குக் கடிதம் எழுதுகிறார்.  அதில் அவர் ஒரு கனவு கண்டதாகவும் அந்தக் கனவில் “லாயிலாஹா இல்லல்லாஹ் அஷ்ரஃப் அலீ ரஸுலுல்லாஹ் என்று ஓதியிருக்கிறார்.  உடனே பயந்து விழித்தெழுந்து ஸலவாத் சொல்கிறார்.  அதிலும் அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா வநபிய்யினா,  வமவ்லானா அஷ்ரஃப் அலீ என்றே ஓதியிருக்கிறார்.

இப்படி நிகழ்ந்துவிட்டது.  இதன் பரிகாரம் என்ன?  என்று கேட்டு எழுதியிருக்கிறார்.  அதை அங்கீகரித்து நீர் நேர்வழியில் தான் இருக்கிறீர் என பதில் எழுதினார் இந்த அஷ்ரஃப் அலீ தானவீ.

பார்த்தீர்களா?  அடிப்படை ஈமானுக்கே உலை வைக்கும் விதத்தில் கலிமாவிலேயே தன் பெயரை இணைத்ததை இதயம் மகிழ ஏற்றுக் கொண்ட இவரெல்லாம் தான் தப்லீகின் தலைவர்.  அத்தோடு முடிந்து விடவில்லை.  மவ்லானாவின் மவுனவிளையாட்டுகள்,  அதே மவலானா அஷ்ரஃப் அலீதானவீ எழுதிய பிஹ்ஷ்தி ஜேவர் என்ற நூல் தமிழிலே சுவர்க்க நகைகள் என உருமாற்றப்பட்டு வெளிவந்தது.  காயல் படடிணம் அல்லாமா அஷ்ஷெய்கு அப்துல் காதிர்ஸுஃபி ஹள்ரத் அவர்கள் அந்த நூலின் விபதரீதக் கொள்கைகளைக் கண்டறிந்து சமுதாயத்தின் முன் சமர்ப்பித்தார்கள்.  உண்மை விசுவரூபம் எடுத்தால் பொய் புறமுதுகிட்டு ஓடத்தானே வேண்டும்.  அந்த நிலையில் தான் சுவர்க்க நகைகளின் முகவரியும் மறைந்து போனது.

 பின்னர் மஹான் அவர்களின் மறைவுக்குப் பின் அதே சுவர்க்க நகை என்ற நூல் மார்க்கச் சட்டங்கள் என்று முக்காடு மாற்றி வெளிவந்திருக்கிறது.  குலாம் ரசூல் என்பவர் தமிழாக்கம் செய்ய,  தஞ்சை காஜியா புக் டிப்போ நிறுவனத்தார் இந்நூலுக்கு வாழ்க்கை கொடுத்தார்கள்.  இந்நூல் நெடுகிலும் விஷ விதைகள் விதைக்கப்பட்டிருக்கின்றன.  “அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்” எனும் சுகந்த சித்தாந்தமுடையோரின் சிந்தனைக்காக அவற்றில் சிலதை விட்டு வைக்கிறோம்.  அந்த நூலின் 167ம் பக்கத்தில் ஒரு கேள்விக்கு அவர் கொடுத்த விடையை அப்படியே தருகிறோம் பாருங்கள்.

கேள்வி-மவ்லிது ஓதுவது அவசியமா?

பதில்- ரபீவுல் அவ்வல் மாத்தில் அண்ணல் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் பெயராலும்,  ரபீவுல் ஆகிர் மாதத்தில் ஹள்ரத் கவுதுல் அஃலம் அவர்கள் பெயராலும்,  ஜமாதுல் ஆகிர் மாதத்தில் நாகூர் ஹள்ரத் ஷாஹுல் ஹமீது வலீயுல்லாஹ் அவர்கள் பெயராலும்,  மவ்லீது ஓதுவதைச் சிலர் ஃபர்ளான கடமைபோல் எண்ணி மிகப் பேணுதலுடனும்,  கட்டுப்பாட்டுடனும் நடத்துகிறார்கள்.  ஓதப்படும் இந்தப் பெரியார்களின் மவ்லிது பைத்துகளில் ஏராளமான கற்பனைகள் புகுத்தப்பட்டுள்ளன.  அந்த மவ்லிதுகள் ஓதும் பொழுது பெரியார்களது ஆத்மாக்கள் அங்கு வருகின்றன என்று நம்பி சில சந்தர்ப்பங்களில் எழுந்து நின்று  கொள்கிறார்கள்.  இவையெல்லாம் வீண்பிரமைகள்.  ஷரீஅத்தில் இதற்குக் கடுகளவும் ஆதாரமில்லை.  ஆதாரமில்லாத செயல்களை மிகவும் பேணுதலாகச் செய்வதும்,  அதனை நம்புவதும் பெருங்குற்றமாகும்.  கூலிக்கு ஆட்களை நியமிக்காது சுயமே திருக்குர்ஆன் ஓதியும்,  நஃபில் தொழுதும்,  நஃபில் நோன்பு வைத்தும் அவற்றின் நன்மைகளை அப்பெரியார்களுக்குச் சேர்ப்பிப்பதும் ஷரீஅத் விதிப்படி ஆகும்.

படித்தீர்களா?  இந்த பதிலை?  இப்படி பதிலளித்தது ஒரு வஹ்ஹாபியோ நஜாத்வாதியோ,  அஹ்லெ குர்ஆன்,  அஹ்லெ ஹதீஸுடையவர்களோ இல்லை.  மாறாக நாங்கள் மத்ஹப் வாதிகள் தான்.  தரீ(க்)காவை ஏற்றவர்கள் தான் எனக்கூறும் தப்லீக் இயக்கத்தின் ஸ்தாபகர் மவ்லானா அஷ்ரஃப் அலீ தானவீ தான்.

மவ்லிதுகளிலே கற்பனைகள் புகுந்திருக்கிறது என நாவு கூசாமல் கூறும் இவரது ஆதரவாளர்களான மவ்லவீகள் ஏன் மவ்லிதுகளை ஓதி அங்கே பரிமாறப்படும் ஹத்யாக்களைப் பெற்றுக் கொள்கிறார்களோ தெரியவில்லை.  மேலும் இந்த மவ்லிதுகளுக்கு ஷரீஅத்தில் ஆதாரமில்லை என்றும் சரடுவிட்டிருக்கிறார்கள்.

அதே நூலின் 170ம் பக்கத்தில் இடம் பெறும் இன்னொரு கேள்வி பதிலைக் காணுங்கள்.

கேள்வி-ரபீவுல் அவ்வல் பன்னிரெண்டாம் நாள் என்ன செய்ய வேண்டும்?

பதில்- ரபீவுல் அவ்வல் பன்னிரெண்டாம் நாள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தார்கள் என்று பலர் அந்நாளை மீலாது விழாவாக கொண்டாடுகிறார்கள்.

     மீலாது விழா என்று தனியாக ஒரு நாளைக் கொண்டாடுவதும்,  அதனை ஒரு முக்கியக் கடமையாகக் கருதுவதும் ரபீவுல் அவ்வல் முதல் தேதியிலிருந்து 12ம் தேதி வரை “ஸுப்ஹான மவ்லிது” என்ற அரபு பைத்துகள் ஓதுவதும் கடைசி நாளை விஷேசமாகக் கொண்டாடுவதும் இஸ்லாமிய ஷரீஅத்திற்கு அப்பாற்பட்டதாகும்.  இது நபிவழியல்ல.  அண்ணல் நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்களோ, நாயகத் தோழர்களோ இமாம்களோ மார்க்கப் பெரியவர்களோ மீலாது விழா கொண்டாடும்படி சொல்லவில்லை.  சொல்லாத ஒன்றை பேணுதலான கடமையாக நினைத்துச் செயல்படுவது குற்றமாகும்.

படித்தீர்களா?  மவ்லிது,  மீலாது இவைகளை இன்றைய வஹ்ஹாபீகள் சாடுகின்றனர் என்று ஆதங்கப்படுகிறோமே.  ஆனால் அன்றே அவைகளைச் சாடி விஷ விதையை விதைத்தவர்தான் இந்த தப்லீக் ஜமாஅத்தின் மூல மவ்லானா அஷ்ரஃப் அலீ தானவீ என்பவர்.  மீலாது விழா நடத்துவது குற்றமாகும் என பகீரங்கமாகவே கூறும் இவரின் தொண்டர்களான இளைய மவ்லானாக்கள் ஏன் மவ்லிதுகளிலும்,  மீலாதுகளிலும் பங்கேற்கிறார்களோ?

மேலும் இதே நூலில் இறந்தவர்களுக்கு நன்மை சேர்ப்பிப்பதற்காக மூன்றாம் நாள், பத்தாம் நாள்,  இருபதாம் நாள்,  முப்பதாம் நாள்,  நாற்பதாம் நாள் என நாட்களை எண்ணி ஃபாத்திஹா ஓதுவது பெரிய தவறாகும் என்று வரையப்பட்டிருக்கிறது.  நாட்களைக் குறித்து ஃபாத்திஹா ஓதுவதைத் தவறு என வாதிக்கும் இவர்களுக்கும் இதே கருத்துள்ள வஹ்ஹாபீகளுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?  அதே நேரம் அவர்கள் மட்டும் 40 நாள்,  ஒருவருடம்,  3 நாள்,  ஜோடு,  சில்லா என்று பேர் வைத்து புறப்படுவதற்கு மட்டும் எந்த நூலில் ஆதாரம் கண்டார்களோ?  தெரியவில்லை.

இப்படியாக,  இன்னும் பல கொள்கைகளைத் தகர்த்தெடுக்கும் கோடாலிக் காம்பு தான் தப்லீக் ஜமாஅத்.

உங்கள் இமை இமைப்பதையே மறந்து திகைக்கச் செய்யும் வியப்பான இன்னொரு தகவலைத் தருகிறேன் பாருங்கள்.

தேவ்பந்தி மவ்லவியொருவர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கனவில் பார்க்கிறார்.  அவருடன் பெருமானார் அவர்கள் உருதுவில் பேசினார்கள்.  அதைக் கேட்ட இந்த மவ்லவி நாயகமே! நீங்கள் அரபியல்லவா? உங்களுக்கு எப்படி உருது தெரியும்? எனக் கேட்டபோது தேவ்பந்த் உலமாக்களின் தொடர்பில் தான் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்களாம்.

இப்படி எழுதியவர் யார்?  என்று தானே கேட்கிறீர்கள்?  தப்லீக் ஜமாஅத்தின் இன்னொரு தலைவர் மவ்லானா கலீல் அஹ்மது என்பவர் தனது “பராஹீனே காத்திஆ” என்ற நூலில் 26ம் பக்கத்தில் எழுதியிருக்கிறார்.  பார்த்தீர்களா?  நம் தேவ்பந்த் மத்ரஸாவின் பெருமையை என்று ஏக்கப் பெருமூச்சு விட்டிருக்கிறார்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை யார்முன்னும் அமர்ந்து பாடம் பயில அனுமதிக்காத இறைவன்.  அந்தப் பொறுப்பை அவனே ஏற்று “அண்ணலின் ஆசிரியன்” என்ற மணிமகுடத்தைத் தனக்கே சூட்டி மகிழ்ந்தான் இறைவன்.  நாயகமே நீங்கள் எதுவெல்லாம் தெரியாதிருந்தீர்களோ அவை அனைத்தையும் நாம் உங்களுக்குக் கற்பித்தோம். (4:113) என்ற இறைவசனத்தின் வழியே கருணை நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் கற்காத கல்வியே இல்லை என்பதையும்,  அவை அனைத்தையும் மறை மூலம் பறை முழங்குகிறான் இறைவன்.

இவ்வாறிருக்க,  தங்கத் திருமேனி தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் மதரஸாவில் வந்து தான் உருது பயின்றார்கள் என்ற உலுத்த வார்த்தை,  உருவகப்படுத்தும் இவர்களைப் பின் பற்றுவது ஈமானையே அழித்துவிடாதா? நடுநிலையோடு,  உண்மையை உணர வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு படிக்கும் எந்த முஸ்லிமின் இதயமாவது இதை ஏற்குமா?

     நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது வற்றாத பற்றும்,  பிரியமும் கொண்ட உண்மை முஸ்லிம் எப்படி இதை ஜீரணிப்பான்?  இது மட்டுமின்றி இன்னும் பல குழப்பவிதைகளை இவர்கள் விதைத்திருக்கிறார்கள்.

தப்லீக் ஜமாஅத்தை ஆதாரிக்கும் உலமாப் பெருமக்களாவது எங்கள் மவ்லானாக்கள் அப்படி எழுதவில்லையென்று சொல்வார்களா? அல்லது அப்படி எழுதியது தவறு என்றாவது ஒப்புக்கொள்வார்களா?  அல்லது அவ்வாறு எழுதிய மவ்லானாக்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றாவது சொல்வார்களா?

எதுவுமே இல்லாமல் அந்த தப்லீக் ஜமாஅத்தின் மேல் தனியாத மோகம் கொள்வது ஏன்?  தப்லீக் ஜமாஅத்தின் மூல மவ்வானாக்களுக்கும் ஸுன்னத் வல்ஜமாஅத் மவ்லானாக்களுக்கும் இடையே சொத்துப் பிரச்சனையா? கொடுக்கல் வாங்கல் தகராறா?  வியாபார நஷ்டங்களா?  சம்பந்த உறவில் சிக்கலா?  எதுவுமில்லாமல் ஏன் நாங்கள் தப்லீக்கைச் சாடுகிறோம்?

     யாருடைய தனிமனிதத் தவறுகளுக்காகவோ,  அல்லது சட்டியைத் தூக்கிக்கொண்டு அலைகிறார்கள்.  பள்ளியில் மின்சாரம்,  தண்ணீரை வீணாக்குகிறார்கள் என்பதற்காகவோ இல்லை.  மாறாக நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் மகிமையை மட்டரகமாக மதிக்கும் நபர்களை ஏசாமல்,  பேசாமல் எப்படி இருக்க முடியும்?

“தொழுகைக்குத் தானே அழைக்கிறார்கள்,  என்று சொல்கிறார்கள்.  அப்படியானால்,  “அல்லாஹ்வால் பொய் சொல்ல முடியும்” என வாதிடும் மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹீயை ஏற்று நடப்பது ஏன்?  வஸீலா கூடாது கந்தூரி-உரூஸ் கூடாது என கொக்கரிக்கும் அஷ்ரஃப் அலீ தானவீயை அங்கீகரிப்பது ஏன்?  இதற்கான விடைகள் என்ன?

அன்பர்களே! தப்லீக் ஜமாஅத் என்பது வெளிப்படையில் தொழுகைக்கு அழைக்கும் கூட்டமாக தோற்றமளித்தாலும்,  ஜியாரத்,  மவ்லித் போன்ற அம்சங்களை மறுக்கும் கூட்டமே என்பதை உணர்ந்து அந்த இயக்கத்தை விட்டும் வெளியே வாருங்கள்.

T.S.A. செய்யது அபூதாஹிர் மஹ்ழரீ