தப்லீக்வாதியிடம் வஹ்ஹாபிஸத்தின் துர்வாடை

     

 

     ஏகத்துவம் எனும் எழில் ஜோதியை ஏந்தி அல்லாஹ் ஒருவன் என்ற சங்கநாதத்தைப் பாரில் பறையடித்து உரைக்க வந்த நபிமார்களில் நாயகமானவர்கள் நம் இதயத்து வேந்தர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

       பாரினில் மண்டிய காரிருள் போக்க பகலவனாய் பாசநபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் பரிணமித்த போது அறியாமை இருள் அகன்றது,  மடமை மருள் மறைந்தது.

ஆனால் சூரியனையே செலவு கொண்டு மறைக்கச் சென்றது போல்,  அண்ணல் எனும் ஆதவனின் அழகுவரவையும் அமுத மொழிகளையும் ஜீரணிக்க முடியாத முனகர்கள் தம் அழுக்கு வார்த்தைகளால் எம் இதய வேந்தருக்கு இழுக்கு ஏற்படுத்த முயன்றனர்.

ஞானப்பரிதியின் மோனப் பாதையைக் குறுக்கிட்டனர்,  தடை செய்தனர்.  ஏன் உத்தம நபியின் உயிருக்கே உலைவகை;க எத்தனித்தனர்.  ஆனால் அந்த தூய தீபத்தை ஊதி அணைத்திட நினைத்த உன்மத்தர்களை உலகறிய தோல்வியுறச் செய்து தன் பேரொளியைப் பூரணப்படுத்தினான் இறைவன்.

     ஆம்,  ஆருயிர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றிய காலத்திலேயே சில புல்லுருவிகளின் பிதற்றல்களும் பிறந்துதான் இருந்தது.

அந்தக் கூறுகெட்ட குழப்பவாதிகளின் கூடார பெயர் பலகை காலத்திற்குக் காலம் மாறுப்பட்டாலும் கொள்கை ஒன்றுதான்.

அன்று முதல் இன்றுவரை அவதரித்த அத்துணை இயக்கத்தவரின் ஆழ்ந்த அடிமனதின் தாழ்ந்தக் கொள்கை கருணை நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்களின் புகழுக்குக் களங்கம் கற்பிப்பதேயாகும்.  அந்த வரிசையில் இன்று வலம் வரும் வகுப்பினரே “தப்லீக் ஜமாஅத்தினர்.”

பலருக்குக் கோபம் வரலாம்,  உதிரம் கொதிக்கலாம். ஆனால் சில உண்மை விவரங்களை உணர்ந்துவிட்டால் தப்லீக் ஜமாஅத்தின் அடிவேரில் ஊற்றப்பட்ட விஷத்தின் வாடை வெளிவரும்.

உயிரினும் இனிய உத்தமராம் நாயகம் ஸல்ல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்களைக் குறைபடுத்திப் பேசுகிறவன் யாரானால் என்ன?  அவன் எவனானால் என்ன? அவனை நோக்கியல்லவா நம்மின் கோபஜூவாலைகள் திருப்பிவிடப்பட வேண்டும்?

அப்படியென்னச் சொன்னார்கள்.  தப்லீக் ஜமாஅத்தினர்?  என்று தானே கேட்கிறீர்கள்?  உங்கள் ஆதங்கம் புரிகிறது வாருங்கள் வலம் வருவோம்.

தப்லீக் ஜமாஅத்தின் மூல மவ்லானாக்களில் ஒருவரான மவ்லானா இஸ்மாயீல் தஹ்லவீ.  இவர் தனது “ஸிராத்துல் முஸ்தகீம்” என்ற நூலின் 95ம் பக்கத்தில் எழுதியிருப்பதைக் கவனியுங்கள்.  “தொழுகையில் ஷைகு அல்லது அவர் போன்ற பெரியோர் ஏன் நாயகமேயானாலும் சரியே! அவர்களின் நினைவில் மூழ்குவது தனது ஆடு. மாடு,  கழுதையுடைய எண்ணத்தில் மூழ்குவதை விட கெட்டது?

படித்தீர்களா?  இந்த அக்கிரமச் சொல்லை. அண்ணல் நபி ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொழுகையில் நினைப்பதைத் தவறு என்று தன் கருத்தை வலுப்படுத்த அவர் காட்டிய உதாரணத்தைப் பார்த்தீர்களா?

மாநபியின் நினைவை மிருகங்களின் நினைவோடு ஒப்பிட்டுப் பார்க்க முனைந்த இந்தக் குறை மதியாளர்களின் கூடாரம் தான் தப்லீக் ஜமாஅத்.  இவரின் தரங்கெட்ட இந்த வாதத்தைத் தட்டிக் கொடுக்கும் விதத்தில் தமிழகத்து மவ்லவீ எழுதுகிறார், மாநபியை நினைத்தால் அந்த நினைவு அதிலேயே மூழ்கி அல்லாஹ்வின் நினைவை தடுத்துவிடும்.  எனவே தான் மவ்லானா அவர்கள் இவ்வாறு எழுதினார்கள் என தன் வக்கிரப்புத்தியால் வக்காலத்து வாங்கியிருக்கிறார்.

“ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும் அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின் பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்குப் பதிலளியுங்கள்”. (8.24).

என்ற மாமறை வசனத்தின் மூலம் அல்லாஹ்வும் ரஸுலும் அழைத்தால் உடனே பதிலளியுங்கள் என்று வலியுறுத்துகிறான் இறைவன்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் அழைத்தால் அது அல்லாஹ்வின் அழைப்புதான்.  எனவே தொழுகையில் இருந்தாலும் கூட பெருமானாரின் அழைப்பை ஏற்று தொழுகையை விட்டுச் செல்ல வேண்டும்.  திரும்ப வந்து தொழுகையை விட்ட  இடத்திலிருந்து தொடர வேண்டும் என ஃபிக்ஹு கலை வல்லுநர்கள் வரைந்து வைத்திருக்கின்றனர்.

ஒருமுறை அபூ ஸயீதுல் முஅல்லா அவர்கள் தொழுகையிலிருந்த போது மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழைக்கிறார்கள்.  தொழுது முடித்துவிட்டு வந்த ஸஹாபியிடம் மேற்கண்ட வசனத்தை ஓதி அல்லாஹ்வும், ரஸுலும் அழைத்தால் உடனே வரவேண்டும் என்பது தெரியாதா?  என வினவினார்கள் நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள்.  இந்த ஹதீஸ் அபூ ஸயீதும் மு அல்லா அன்ஹு வழியாக புகாரீயிலும்,  அபூ முசல் அஷ்அரீ அவர்கள் வழியாக திர்மிதீயிலும் இடம் பெற்றிருக்கிறது.  தொழுகையிலேயே அண்ணலின் அழைப்பிற்குப் பதில் சொல்லலாம்.  சொல்லியாக வேண்டும் என்பது குர்ஆன் ஹதீஸின் கூற்றாக இருக்கிற போது மாநபியின் நினைவில் மூழ்கினால் அது அல்லாஹ்வின் நினைப்பை அப்புறப்படுத்தும் என்ற வாதத்தை வலியுறுத்தும் இந்த இஸ்மாயீல் தஹ்லவீயையும் அவரின் தப்லீக் ஜமாஅத்தையும் எவ்வாறு ஏற்க முடியும்?

சாந்த நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்களால் சபிக்கப்பட்ட நஜ்து தேசத்தில் பிறந்த குழப்பவாதி “இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தீ” எழுதிய “கிதாபு தவ்ஹீத் என்ற சர்ச்சைக்குரிய அரபு நூலை உருது தெரிந்த மக்களிடமும் அந்த சர்ச்சை ஏற்படட்டுமே என்ற மேலெண்ணத்தில்(?) அந்நூலை உருதுவில் உருமாற்றி அதற்கு “தக்விய(த்)துல் ஈமான்” என பெயரிட்டு வெளியிட்டவர் தான் இந்த இஸ்மாயீல் திஹ்லவீ.