~~~~ ( 1 ) ~~~~
மன்னர் ஹாரூன் ரஷீத் பாதுஷா அவர்களும் அவர்களது அருமை துணைவி சுபைதா அம்மையாரும் ரம்மியமான அந்த காலைப் பொழுதில் ஓர் தெருவழியே காலார நடந்து கொண்டிருந்தனர்.மன்னர் ஹாரூன் ரஷீத் பாதுஷா பரந்த நிலப்பரப்பை ஆண்ட மிகச்சிறந்த சக்கரவர்த்தி மட்டுமல்ல.. மிகச்சிறந்த ஆன்மீக அரசர் என்றும் சொல்லலாம்.
அந்த தெருவின் ஓர் சிறு வீட்டின் முன் மண் தரையில் அமர்ந்துகொண்டு “புஹ்லூல்” என்று சொல்லப்படும் சூஃபித்துவ ஞானி அங்கு இருக்கிற மண்ணை தண்ணீரால் குழைத்து சிறுபிள்ளை போல் மண்வீடு கட்டிக் கொண்டிருந்தார்.அவரைச் சுற்றிலும் சிறிதும் பெரிதுமாக சில மண் வீடுகள்.சூபித்துவ ஞானிகளின் சில செயல்கள் பார்ப்பதற்கு பைத்தியக்காரத்தனமாக தோன்றும். இவரின் சிறுபிள்ளைத்தனமான செயலும் அப்படித்தான் தெரிந்தது.
ஆனால்… அந்த புஹ்லூல் சாதாரணமானவர் அல்ல. இமாம் அபூஹனிபா (ரஹ் ) அவர்களுக்கே பல ஞானங்களை கற்றுக்கொடுத்த ஆன்மீக குரு.இதோ.. ஹாரூன் ரஷீத் பாதுஷாவும் அவர்களின் துணைவி சுபைதா அம்மாவும் அந்த புஹ்லூலை நெருங்கிவிட்டார்கள். சுபைதா அம்மா புஹ்லூலின் மண் வீடுகளை பார்த்து “இது என்ன வீடுகள்”..? என்று கேட்க…
“இது ஒவ்வொன்றும் சொர்க்கத்து மாளிகைகள்.. உங்களுக்கு விலைக்கு வேண்டுமா”..? என்று கேட்டார் புஹ்லூல்..
“எவ்வளவு”..? என சுபைதா அம்மா எனக்கேட்க , “முப்பது தினார்கள்”.. என்று பதிலளித்தார் அந்த சூபித்துவ ஞானி.
சுபைதா அம்மா அவர்களும் மறுபேச்சு பேசாமல் “எனக்கு ஒரு மாளிகை தாருங்கள்”.. என்று கூறி முப்பது தீனார்களை அவரிடம் கொடுத்து விட்டு புன்னகையுடன் அங்கிருந்து தன் கணவரோடு மீண்டும் நடக்கத் துவங்குகினார் .
நடந்து முடிந்த பைத்தியக்காரத்தனமான வியாபாரத்தை பார்த்துக் கொண்டே வந்த ஹாரூன் ரஷீத் பாதுஷா தன் மனைவியிடம் “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா..? அவர் மண் வீட்டைக்காட்டி சொர்க்க மாளிகை.. என்கிறார். அதற்கு முப்பது தீனார் என்று சொல்கிறார். நீயும் முப்பது தீனார்களை கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டதாக சொல்கிறாய். ஏழைப்பட்ட அவருக்கு உதவி செய்வதாக இருந்தால் இரண்டு , மூன்று தீனார்களை தர்மமாக கொடுத்திருக்கலாமே. இது உனக்கே பைத்தியக்காரத்தனமாக தெரியவில்லையா”…? என்று கேட்க… அதை வெறும் புன்னகையோடு எதிர்கொள்கிறார் சுபைதா அம்மா.
அன்றைய இரவு ஹாரூன் ரஷீத் பாதுஷா அயர்ந்து தூங்க.. தூக்கத்தில் ஓர் அழகிய கனவு சொர்க்கத்தில் உலா வருவது போன்று.. அதில் கண்ணைக் கவரும் பல அழகு மாளிகைகள் . அதில் ஓர் மாளிகை இவரை மிகவும் கவர. அதன் உள்ளே சென்று பார்ப்பதற்கு எத்தனிக்கும் போது ஒரு குரல் .. “ஹாதா பைத்தி சுபைதா”.. இது சுபைதாவிற்கான மாளிகை. இறைநேசர் புஹ்லூல் இடத்திலிருந்து அவர் வாங்கியது. எனவே அதில் நுழைய உங்களுக்கு அனுமதி இல்லை.. என்று கேட்கிறது.
கனவு நிறைவுபெற திடுக்கிட்டு விழித்தெழுந்த ஹாரூன் ரஷீத் பாதுஷா ஆச்சரியம் அடைந்தார்.மறுநாள் காலை பொழுது விடிந்தவுடன் வேகவேகமாக நேற்றையதினம் மண் வீடு கட்டிக்கொண்டிருந்த புஹ்லூல் இருந்த அந்த தெரு வழியே அவரைத் தேடினார்.அன்றும் அதே போன்று சின்னச்சின்ன மணல் வீடுகளை கட்டிக் கொண்டிருந்தார் அந்த புஹ்லூல்.
புன்சிரிப்போடு மன்னரை எதிர்கொண்ட அந்த புஹ்லூல் .. “என்ன செய்தி”.. என்று கேட்க “எனக்கும் ஒரு மாளிகை வேண்டும்”.. என்றார் மன்னர்.
“சரி தருகிறேன்.. விலை 30 ஆயிரம் தீனார் “.. என்றார் புஹ்லூல்.
தூக்கிவாரிப்போட்டது மன்னருக்கு..
“நேற்று என் மனைவிக்கு முப்பது தீனாருக்கு தானே கொடுத்தீர்கள்.. இன்று எனக்கு மட்டும் என்ன முப்பதாயிரம் தீணார்”…? என்று கேட்க..
அதற்கு அந்த சூபித்துவ ஞானி புஹ்லூல் அமைதியாக அரசரைப் பார்த்து பதில் சொன்னார்..
“மன்னர் அவர்களே.. உங்கள் மனைவி சுபைதா அம்மா இந்த வீட்டை முப்பது தீனாரை கொடுத்து வாங்கும் போது சொர்க்கத்தில் இந்த மாளிகையை அவர் பார்த்திருக்கவில்லை … ஆனால் நீங்களோ சொர்க்கத்தில் இந்த மாளிகையை பார்த்துவிட்டு அல்லவா வந்து விலை பேசுகிறீர்கள்.. எனவே உங்களுக்கு முப்பதாயிரம் தீனார்”.. என்று அமைதியாக பதில் சொன்னார் புஹ்லூல்.
தான் கனவில் கண்டதை புஹ்லூல் அவர்கள் கூறுவதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஹாரூன் ரஷீத் பாதுஷா அன்னவர்கள்… அவர்களின் அகத் தோற்றத்தை புரிந்துகொண்டு இவர் சாதாரணமானவர் அல்ல.. என்று அன்னாரிடம் சில வருடங்கள் ஆன்மீக ஞானத்தை கற்றுக் கொண்டார்கள் என்பது வரலாறு சொல்லும் செய்தி.
பொதுவாகவே நம் கையில் கிடைக்கும் பலவற்றின் மதிப்பு நமக்கு இவ்வுலகத்தில் தெரிவதில்லை.. ரமலான் மாதத்தை போல.
ரமலான் மாதத்தின் மதிப்பை அறிந்த சஹாபிகளும் , இறைநேசர்களும் அந்த ரமலான் மாதத்திற்காகவே நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஆசைப்பட்டார்கள் என்பது வரலாறு சொல்லும் செய்தி. ரமலான் மாதத்தை பெற்றுக்கொள்வதற்காக ஆறு மாதத்திற்கு முன்பே ஆரோக்கியத்திற்கு அல்லாஹ்விடம் கையேந்த துவங்குவார்கள். நம் நபிகளார் (ஸல்) அவர்கள் “இந்த ரமலான் மாதத்தை எங்களுக்கு அடையச் செய்வாயாக” என்று இரண்டு மாதத்திற்கு முன்பே துஆச் செய்வார்கள் என்பது நாம் அறிந்த நபி மொழிச்செய்தி.
காரணம்.. ரமலான் மாதம் அவ்வளவு மதிப்புமிக்கது. . பன்மடங்கு நன்மைகளை வாரி வழங்கக் கூடியது.இதோ.. நம் கையில் பொக்கிஷமாய் கிடைத்திருக்கும் ரமலானை வீணாக்காமல் நல் அமல்களால் அதை நிரப்புவோம்.
மீண்டும் ஓர் சூபித்துவ இறைநேசரின் வரலாற்றோடு நாளை சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்..
* செய்யது அஹமது அலி. பாகவி*