தராவீஹ் தொழுகை

إِن اللَّهَ عَزَّ وَجَلَّ فَرَضَ عَلَيْكُمْ صِيَامَ رَمَضَانَ، وَسَنَنْتُ لَكُمْ قِيَامَهُ فَمَنْ صَامَهُ وَقَامَهُ إِيمَانًا وَاحْتِسَابًا، أُخْرِجَ مِنَ الذُّنُوبِ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

நிச்சயமாக அல்லாஹ் ரமழான் மாதத்தில் நோன்பை உங்களுக்கு கடமையாகியுள்ளான். நான் ரமழானில் (இரவு) நின்று வணங்குவதை சுன்னத்தாக ஆக்கியுள்ளேன். எனவே எவர் நோன்பு நோற்று நின்று வணங்குவாரோ அவரை அன்று அவர் தாய் பெற்றெடுத்தது போல அவரது பாவங்களிலிருந்து வெளியாக்கப்படுவார். ( நஸாயீ, இப்னுமாஜா )

புனித ரமழான் மாத இரவுகளில் மட்டும் இஷா தொழுகைக்குப் பிறகு தொழுகின்ற சிறப்புத் தொழுகையே தராவீஹ் தொழுகை ஆகும்.

 ‘தராவீஹ்’ என்பது பன்மைச் சொல். இதன் ஒருமை ‘தர்வீஹ்’ என்பதாகும். ‘தர்வீஹ்’ என்றால் ஓய்வு எடுத்தல் என்பது பொருள். ஆரம்பகாலத்தில் ஒவ்வொரு நான்கு ரகஅத்துகளுக்கிடையிலும் நான்கு ரக்அத்துகள் தொழும் அளவிற்கான நேரத்தை ஓய்வாக-ராஹத்தாக ஸஹாபாக்கள் எடுத்துக் கொண்டனர். இதனால் இத் தொழுகைக்கு தராவீஹ் என்று பெயர் வைக்கப்பட்டது.

ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ரமழான் மாதத்தில்) ஒரு நாள் இரவு தங்கள் இல்லத்திலிருந்து வெளியாகி மஸ்ஜிதிற்கு வந்து தொழுதார்கள். அப்போது சில ஸஹாபாக்கள் அவர்களைப் பின்பற்றி தொழுதார்கள். மறுநாள் காலையில் இது பற்றி அவர்கள் பேசிக் கொண்டார்கள். (இரண்டாம் நாள் இரவு) இன்னும் அதிகமான மக்கள் கூடி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேர்ந்து தொழுதனர். மறுநாள் காலையிலும் மக்கள் இதுபற்றி பேசிக் கொண்டனர். மூன்றாம் நாள் இரவு இன்னும் அதிகமான மக்கள் கூடிவிட்டனர். அன்றும்  ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதிற்கு வந்தார்கள். அன்னாரைப் பின்பற்றி ஸஹாபாக்கள் தொழுதார்கள்.

 நான்காம் நாளிரவு மஸ்ஜித் கொள்ளாத அளவிற்கு மக்கள் கூடிவிட்டனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதிற்கு வரவில்லை. சுப்ஹுத் தொழுகைக்குத்தான் வந்தார்கள். பஜ்ரு தொழுது முடிந்தவுடன் ஸஹாபாக்களை நோக்கி உட்கார்ந்து, அல்லாஹுத்தஆலாவை புகழ்ந்தபின் ‘உங்களுடைய நிலை எனக்கு மறைந்ததாக இல்லை. எனினும், இது உங்கள் மீது கடமையாக்கப்பட்டு, அதனை நீங்கள் நிறைவேற்ற முடியாமல் ஆகி விடுவீர்களோ என்று தான் நான் பயந்தேன்’ என்று கூறினார்கள். இவ்விஷயம் இவ்வாறிருக்கும் நிலையில்  ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றார்கள் . ( நூல்: புகாரி).

ஹஜ்ரத் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிகிறார்கள்:

 ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழான் மாதத்தில் தொழும் விஷயத்தில் (மக்களுக்கு) ஆர்வமூட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதனை (பர்ளைப் போன்று) கட்டாயமாகத் தொழ வேண்டும் என்று கட்டளையிடவில்லை. மேலும், எவரேனும் ஒருவர் ஈமான் கொண்டவராக, நன்மையைக் கருதியவராக ரமழான் மாதத்தில் தொழுவாரானால் அவருடைய முந்திய சிறிய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிடும். என்றும் கூறினார்கள். இவ்விஷயம் இவ்வாறிருக்கும் நிலையில் அன்னார் இவ்வுலகை விட்டும் பிரிந்து சென்று விட்டார்கள். பிறகு அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்திலும், உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆரம்ப ஆட்சி காலத்திலும் இந்நிலை நீடித்து வந்தது.  (நூல்: (முஸ்லிம், மிஷ்காத் 114.)

 மேற்கூறிய ஹதீதுகளிலிருந்து  ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழான் இரவு காலங்களில் தொழுவதற்கு ஆர்வமூட்டியதும், ஜமாஅத்துடன் தொழுததும் தெரியவருகிறது. இதனை அடிப்படையாக வைத்துத் தான் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தராவீஹ் தொழுகையை ஜமாஅத்தாக தொழும்படி ஆக்கினார்கள்.

தராவீஹ் 20 ரக்அத்துகள் என்பதற்கான ஆதாரங்கள்:

عن ابن عباس رضي الله عنهما  أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

 كَانَ يُصَلِّي فِي رَمَضَانَ عِشْرِينَ رَكْعَةً وَالْوِتْرَ

  1. ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலானில் 20 ரக்அத்துகள் மற்றும் வித்ரையும் தொழுபவர்களாக இருந்தார்கள்.

 –அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு.

 இந்த ஹதீதை இப்னு அபீ ஷைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக அப்துப்னு ஹுமைத் தங்களுடைய முஸ்னதிலும், தப்ரானி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கபீரிலும், பைஹகீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுடைய ஸுனனிலும், பகவீ அவர்கள் தங்களுடைய முஃஜமிலும் பதிவு செய்துள்ளனர்.

  1. நாங்கள் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் 20 ரக்அத்துகள் தொழுவோம். மேலும் வித்ரும் தொழுவோம்.

அறிவிப்பவர் லாயிப் இப்னு யஸீது. இதனை பைஹகீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மஃரிபாவில் ஆதாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். – ஷரஹுன்னிகாயா பாகம் 1, பக்கம் 102.

  1. உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் மக்கள் 23 ரக்அத்துகள் தொழுபவர்களாக இருந்தார்கள். (தராவிஹ் 20+வித்ரு 3 = 23)

                           அறிவிப்பவர்: யஸீத் இப்னு ரூமான் ரழியல்லாஹு அன்ஹு.

 -முஅத்தா இமாம் மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, ஷரஹுன்னிகாயா பாகம் 1 பக்கம் 104, ஸுனன் பைஹகீ பாகம் 1 பக்கம் 496-தன்வீருல் ஹவாலிக் ஷரஹ் முஅத்தா லில் மாலிக்

  1. உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் மக்கள் 20 ரக்அத்துகள் தொழுபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர்: ஸாயிப் இப்னு யஸீது. ரழியல்லாஹு அன்ஹு

இதனை பைஹகீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி  தமது ஸுனனில் ஆதாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

– பத்ஹுல் பாரி பாகம் 5 பக்கம் 157-ஐனி பாகம் 11 பக்கம் 127 ஜாமிஉர் ரிழ்வி பாகம் 3 பக்கம் 598.

  1. உபை இப்னு கஃபு ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள், ரமழான் இரவில் தொழுவிக்கும்படி உமர் ரழியல்லாஹு அன்ஹு கட்டளையிட்டு விட்டுச் சொன்னார்கள், ‘மக்கள் பகலில் நோன்பு நோற்கிறார்கள். (களைப்பால்) இரவில் திருமறையை ஒழுங்காக ஓதுகிறார்களில்லை.நீங்கள் (உபை இப்னு கஃபு) இரவில் (ஜமாஅத் நடத்துவதன் மூலம்) அவர்கள் மீது திருமறையை ஓதினால் நன்றாக இருக்கும்.’ இது கேட்ட உபை இப்னு கஃபு ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள், ‘அமீருல் முஃமினீன்! இது (முன்னர்) நடைபெறாத ஒரு விஷயமாயிற்றே!’ ஆம்! அதனை நான் நன்கறிவேன். ஆயினும் இது நல்ல அழகிய ஒன்றே!’ என உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பதிலிறுத்தனர். (பின்) இருபது ரக்அத்துகள் ஜமாஅத்தாக உபை இப்னு கஃபு ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.

 அறிவிப்பவர்: உபை இப்னு கஃபு ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நூல்: கன்ஸுல் உம்மால் பாகம் 4, பக்கம் 284 ஹதீது எண்: 5787.

  1. ரமலானில் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் காரிகளை அழைத்து அவர்களில் ஒருவரை மக்களுக்கு 20 ரக்அத்துகள் தராவீஹ் தொழுகை வைக்கும்படி பணித்தார்கள். (பின்னர்) வித்ரை அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுவித்தார்கள். – அறிவிப்பவர்: அபூ அப்துற் றஹ்மான் ஸலமீ. நூல்: ஸுனன் பைஹகீ.
  2. அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் 5 தர்வீஹ்களில் தொழுகை நடத்தும்படி ஒரு மனிதரைப் பணித்தார்கள். – அறிவிப்பவர்: அபுல் ஹஸனாஸ். நூல்: பைஹகீ பாகம்-2 பக்கம் 497, கன்ஸுல் உம்மால் , பாகம் 7 பக்கம் 284 ஹதீது எண் 5790

தொகுப்பு :

மௌலவி T.S.A. அபூதாஹிர் ஃ பஹீமீ மஹ்ழரி

அல் அஸ்ரார் மாத இதழ் 9841567213