நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவருடைய வழிமுறையை தானும் பின்பற்றி பிறரையும் பின்பற்ற வேண்டும் என்றார்கள். அது இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வழிமுறையாகும்.
ஜைத் இப்னு அர்க்கம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் ;-
நபிகளாரிடம் ஸஹாபாக்கள் இந்த உள்ஹிய்யா [குர்பானி] எதற்காக என வினவிய போது இது உம்முடைய பாட்டனார் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வழிமுறையாகும் என்றார்கள். எங்களுக்கு இதனால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என வினவிய போது அதன் ஒவ்வொரு உரோமத்திற்கும் ஒரு நன்மை கிடைக்கும் என்றார்கள். [இப்னு மாஜா]
சிறந்த அமல் ;-
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அன்னை ஆயிஷா நாயகி அவர்கள் அறிவிக்கிறார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தினமன்று ஆதமுடைய மகனின் செயல்களில் குர்பானி கொடுப்பதை விட மேலான எந்த காரியமும் அல்லாஹ்வின் பிரியத்தை பெறுவதில்லை. மறுமை நாளில் குர்பானி பிராணி அதன் கொம்பு, முடி, கால்குளம்புகளுடன் வரும். நிச்சயமாக குர்பானியின் இரத்தம் பூமியில் விழும் முன்பே அது அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்படுகிறது. எனவே மனநிறைவுடன் நிறைவேற்றுங்கள் [திர்மிதி]
துல்ஹாஜ் பிறை பத்தாம் நாள் நாம் செய்யக்கூடிய பிற அமல்களை விட குர்பானிதான் இறைவனுக்கு மிக பிடித்தமான அமலாக இருக்கிறது. எனவே குர்பானியை பெருநாள் தினமன்று நிறைவேற்றுவது மிகச்சிறந்ததாகும்.
நாம் கொடுக்கும் பிராணி கொம்புகள் உடையதாகவும், உரோமங்கள், நிறைந்ததாகவும், ஊனமில்லாத்தாகவும், இருந்தால் மறுமையில் அது வரும் போது இறைவனுக்காகவே நாம் குறைவற்ற பிராணியை குர்பானி கொடுத்துள்ளோம் என்பதற்கு சாட்சியாக அமையும். மாறாக கொம்புகள் உடைந்து, நோயினால் உரோமங்கள் உதிர்ந்த, கால்கள் நொண்டியான, பிராணியை குர்பானி கொடுத்தால் அது நாளை வரும்போது இறைதிருப்தி கிடைக்காமல் போய்விடும். வேறு சில ஹதீஸ்களில் அது ஸிராதுல்முஸ்தகீம் பாலத்தில் உங்களை சுமந்து செல்லும் வாகனமாக வரும் என்று கூறப்பட்டுள்ளது.
குர்பானியின் இறைச்சியோ, இரத்தமோ, அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களுடைய இறையற்றம்தான் அடைகிறது என்று அல்லாஹ் அருள்மறையில் கூறுகிறான். (22; 37)
குர்பானியை மனமுவந்து நிறைவேற்ற வேண்டும். மாறாக பிறர் புகழவேண்டும் என்பதற்காகவோ, அல்லது ஏதோ கடமையை நிறைவேற்றினால் போதும் என்ற எண்ணத்திலோ, அல்லது மிக மெலிந்த பிராணியை குறைந்த விலைக்கு வாங்கியோ, அல்லது பக்கத்து வீட்டுக்காரர் குர்பானி கொடுக்கிறார் எனவே நாமும் கொடுப்போம் என்று குர்பானி கொடுத்தாலோ, குர்பானி நிறைவேறாது எந்த நன்மையும் கிடைக்காது. எனவே மனமுவந்து இறைவனுக்காக நிறைவேற்ற வேண்டும் . குர்பானி குர்பானியாக இருக்க வேண்டுமே தவிர குர்பானி பிர்யாணிக்காக இருக்கக் கூடாது.
யார் மீது கடமை [ஹனஃபி]
பெருநாளன்று 87 ½ கிராம் தங்கம் அல்லது 612 கிராம் வெள்ளி அல்லது 612 வெள்ளியின் அளவு பணம் இருந்தால் அவர் மீது குர்பானி வாஜிபாகும். [இச்செல்வம் ஒரு வருடம் நம்மிடம் இருந்தால் ஜகாத் வாஜிபாகி விடும்] கணவனிடமும், மனைவியிடமும், மேற்கூறப்பட்ட செல்வம் இருந்தால் இருவரும் தனித்தனியாக குர்பானியை நிறைவேற்றுவது வாஜிபாகும்.
கண்மணி நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள் ;-
வசதியிருந்தும் யார் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நாம் தொழுமிடத்திற்கு வர வேண்டாம் [இப்னு மாஜா]
அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்;-நபியவர்கள் மதீனாவில் தங்கிய பத்தாண்டு காலமும் விடாமல் குர்பானியை நிறைவேற்றினார்கள். [திர்மிதி, அஹ்மது]
ஒரு ஹதீதில் பெருநாள் தொழுகைக்கு வர வேண்டாம் என்று கண்டிக்கிறார்கள், மற்றோர் ஹதீதில் பத்தாண்டு காலமும் குர்பானியை நிறைவுபடுத்தினார்கள். என காணப்படுகிறது. எனவே இமாம் அபூஹனீபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்பானி வாஜிப் என்று கூறுகிறார்கள்.
ஷாபிஈ;-
பெருநாளன்று உணவு, உடை, செலவு, போக மீதம் இருக்கும் செல்வத்தை குர்பானி கொடுப்பது சுன்னத்தாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள் ;-
உங்களில் யாராவது குர்பானி கொடுக்க விரும்பினால் அவர் துல்ஹஜ் பிறை பார்த்ததிலிருந்து குர்பானியை நிறைவேற்றும் வரை தனது முடியை நகங்களை களைய [வெட்ட] வேண்டாம். [முஸ்லீம், அபுதாவூத்] இந்த ஹதீதில் நபியவர்கள் “உங்களில் யாராவது குர்பானி கொடுக்க விரும்பினால் என கூறுகிறார்கள். விருப்பம் ஒருபோதும் வாஜிப் ஆகாது. எனவே குர்பானி சுன்னத்தாகும் என இமாம் ஷாபிஈ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.
அதாவு இப்னு யாஸிர் அவர்கள் அபூஅய்யூப் அன்ஸாரி அவர்களிடம் ‘ நபியவர்கள் காலத்தில் குர்பானி எவ்வாறு கொடுக்கப்பட்டு வந்தன? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் “ஒருவர் தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும், ஒரு ஆட்டை குர்பானி கொடுத்து வந்தார். என கூறினார்கள். [திர்மிதி]
இந்த ஹதீதின் அடிப்படையில் ஒருவர் ஒரு குடும்பத்திற்கு ஒருஆட்டை மட்டும் நிறைவேற்றினால் மற்றவர்களின் கடமையும் நீங்கிவிடும் எனவும், குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் குர்பானியை நிறைவேற்றினால் அதுவும் சுன்னத்தாகும் எனவும், இமாம் ஷாபிஈ அவர்கள் கூறுகிறார்கள்.
எதை குர்பானி கொடுக்கலாம்;-
இறைவன் குர்பானி பிராணிகளைக் குறித்து திருக்குர்ஆனில் (22;28) வது வசனத்தில் “அன்ஆம்” எனும் அரபிச்சொல்லுக்கு ஆடு, மாடு, ஒட்டகம், என்பதாகும். இவற்றைத்தவிர வேறு எதையும் குர்பானி கொடுத்தால் அது குர்பானி ஆகாது.
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் ;-
பருவமடைந்த பிராணியை அறுங்கள் அது உங்களுக்கு சிரமமானதாக இருந்தால் [ஆறு மாதத்திற்கு மேல் ஒரு வருடத்திற்கு உட்பட்ட] செம்மறி ஆட்டுக்குட்டியை அறுங்கள் [முஸ்லீம்]
இந்த ஹதீதில் “பருவமடைந்த பிராணி” என்பதற்கு பின்வருமாறு இமாம்கள் விளக்கம் தருகிறார்கள்;-
ஆடு ஒரு வயதையும், மாடு இரண்டு வயதையும், ஒட்டகம் ஐந்து வயதையும், அடைந்திருக்க வேண்டும். வெள்ளாடு இரண்டு வயதை அடைந்திருக்க வேண்டுமென கூறுகிறார்கள்.
எதை குர்பானி கொடுக்கக்கூடாது ;-
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக பரா இப்னு ஆஸிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் ;-
வெளிப்படையாக ஊனம் தென்படக்கூடிய நொண்டி பிராணியையும், வெளிப்படையாக ஒரு கண் தெரியாத ஒற்றைக்கண் பிராணியையும், வெளிப்படையாக நோய் தென்படும் நோயுற்ற பிராணியையும், சதைப் பற்றில்லாத மெலிந்த பிராணியையும், குர்பானி கொடுக்கக் கூடாது. [திர்மிதி]
வெளிப்படையாக என நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது என்னவெனில் நாம் பார்க்கின்ற பொழுது அவற்றின் நோய்களை தெளிவாக அறிந்து கொள்ளலாம். வாங்கிய பிறகு குறை ஏற்பட்டால் மாற்றிக் கொள்ளலாம். ஏழையாக இருப்பவர் அதையே அறுப்பது கூடும்.
கூட்டுக் குர்பானி;-
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் ;-
ஒட்டகத்தில் ஏழு பேரும், மாட்டில் ஏழு பேரும் கூட்டு சேர்ந்து கொள்ளலாம். [முஸ்லீம்]
இந்த ஹதீதின் மூலம் ஆட்டில் யாரும் கூட்டு சேர முடியாது என்று தெளிவாகிறது. பிராணி ஆணாகவோ, பெண்ணாகவோ, இருக்கலாம். பசு, எருமை, ஒட்டகம், ஆகியவற்றில் ஏழு பேர் கூட்டு சேரலாம். குர்பானி, அல்லது அகீகா, நிய்யத் இருக்க வேண்டும். ஆனால் ஷாபிஈ மத்ஹபில் வலீமா போன்றவற்றிற்க்கும் கூட்டு சேர்ந்து கொள்ள ஏழுபேரைவிட குறைவானவர்கள் கூட்டு சேரலாம். ஆனால் ஏழு பேரை விட அதிகமானவர்கள் கூட்டு சேரக்கூடாது. ஒருவர் ஒரு மாட்டையோ, ஒட்டகத்தையோ, குர்பானி கொடுக்கலாம்.
இறந்தவர்களுக்கு ஈஸால் தவாபு ;-
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் ;-
அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இரண்டு ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள். அதைக்கண்ட நான் அவர்களிடம் காரணம் கேட்டேன். அதற்கவர்கள் ஒன்று எனக்காக, மற்றொன்று நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக, என கூறிவிட்டு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் அவர்களுக்காக குர்பானி கொடுக்க வேண்டுமென உபதேசம் செய்தார்கள் எனக் கூறினார்கள். [திர்மிதி, அபூதாவுது,]
அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் முதலில் தன்னுடைய கடமையை நிறைவேற்றி விட்டு பின்பு நபியவர்களுக்காக நிறைவேற்றினார்கள். மதலில் நாம் நம் கடமையை நிறைவேற்றி விட்டு பிறகு இறந்தவர்களுக்கு நிறைவேற்ற வேண்டும்.
பெண்கள் அறுக்கலாமா?;-
கஃபு இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் ;-
ஒரு பெண்மணி கூர்மையான கல்லால் ஒரு ஆட்டை அறுத்து விட்டார்கள். இதைப் பற்றி நபியவர்களிடம் கேட்கப்பட்ட போது அதை சாப்பிடுமாறு ஏவினார்கள் [புஹாரி]
பெண்கள் அறுப்பது கூடும் ஆனால் கவனமாக செயல்படவேண்டும்.
ஏழைக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி;-
அபூ ஸயீதுல் ஹுத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்;-
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஆட்டை குர்பான் கொடுத்தார்கள். இது என் சமுதாயத்தாரில் குர்பானி கொடுக்க இயலாத ஏழைகள் சார்பாக எனக் கூறினார்கள். மேலும் சில ஹதீஸ்களில் தமக்காக ஓர் ஆட்டையும், தன சமுதாயத்திற்காக ஓர் ஆட்டையும், குர்பானி கொடுத்தார்கள் என வந்துள்ளது. எனவே பெருநாளன்று குர்பான் கொடுக்க முடியாத ஏழைகள் கவலை பட தேவையில்லை. காரணம் அவர்களுக்காக நபியவர்கள் குர்பான் கொடுத்துவிட்டார்கள். இந்த பாக்கியம் ஏழைகள் தவிர வேறு யாருக்கும் கிடைப்பதில்லை. எனவே ஏழைகள் பெருநாளன்று மகிழ்ச்சி அடைவதோடு நபியவர்கள் நமக்காக நிறைவேற்றிய குர்பானியை நினைத்தும் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைய வேண்டும்.
எப்பொழுது குர்பானியை நிறைவேற்ற வேண்டும்;-
இறைவன் கூறினான் “எனவே உம் இறைவனுக்கு நீர் தொழுது குர்பானியும் கொடுப்பீராக!”
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக பராஃ இப்னு ஆஸிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்;-
உங்களில் யாரும் பெருநாள் தொழுகையை நிறைவேற்றாத வரை கண்டிப்பாக அறுக்க வேண்டாம். [திர்மிதீ]
பெருநாள் தொழுகையை நிறைவு செய்த பிறகுதான் குர்பானியை நிறைவேற்றவேண்டும்.
அறுக்கும் முறை;-
அறுக்கும் முன்பு “இன்னீ வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ ஃப்தரஸ்ஸமாவாத்தி வல்அர்ழ ஹனீஃபன் முஸ்லிமன் வமா அன மினல் முஷ்ரிகீன் . வமமாதி லில்லாஹி ரப்பில் ஆலமீன். என்ற துஆவை ஓதிக் கொள்ள வேண்டும் பிறகு குர்பானி பிராணியின் முகத்தை மேற்கு பக்கமாக திருப்பி “அல்லாஹும்ம ஹாதா மின்க வ இலைக பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்” என்று கூறி அறுக்க வேண்டும். பிறகு “அல்லாஹும்ம ஹாதா மின்க வ லக வதகப்பல் மின்ணீ கமா தகப்பல் த மின் கலீலிக இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் வ மின் ஹபீபிக முஹம்மதுன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று ஓத வேண்டும்.
குர்பானி இறைச்சியை தனக்காக ஒரு பங்கும், தன சொந்தக்காரர்களுக்காக ஒரு பங்கும், ஏழைகளுக்காக ஒரு பங்கும், பிரித்துக் கொடுக்க வேண்டும். பிராணியின் மர்மஸ்தளங்கள், கழளை, நீர்ப்பை, பித்து, இரத்தம், ஆகியவை சாப்பிடுவது கூடாது.
எத்தனை நாட்கள் குர்பானியை நிறைவேற்றலாம் ;-
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்;-
குர்பானி நாள் என்பது பெருநாள் மற்றும் பெருநாளுக்குப் பிறகு இரண்டு நாட்களாகும்.[முஅத்தா]
இந்த ஹதீதின் அடிப்படையில் பிறை 11, 12,13, மஃரிப் வரை குர்பானியை நிறைவேற்றலாம். என இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்.
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஜூபைர் இப்னு முத்இம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்;-
“தஷ்ரீக் உடைய நாட்களிலும் குர்பானி உண்டு” [அஹ்மது]
இந்த ஹதீதின் அடிப்படையில் தஷ்ரீக் உடைய நாட்களான பிறை 10, 11, 12, 13, மஃரிப் வரை குர்பானியை நிறைவேற்றலாம் என இமாம் ஷாபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளார்கள்.
முதல் நாளில் குர்பானியை நிறைவேற்றுவது மிகச்சிறந்தது என இமாம்களும் கூறுகிறார்கள்.
குர்பானி தோலை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். தோலை விற்றால் அத்தொகையை தர்மம் செய்து விடவேண்டும். பிராணியை அறுத்தவருக்கு தோலை கூலியாக கொடுப்பதும் கூடாது. தோலை தர்மம் செய்வது கூடும்.
அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்.
நன்றி – அல் அஸ்ரார் மெய்ஞ்ஞான மாத இதழ்
M. சேக் தாவூது மஹ்ழரி ஃபாழில் ஜமாலி M.A
பேராசிரியர் ஜமாலியா அரபிக் கல்லூரி