ஆஷுராநோன்பின்சிறப்புகள்

முஹர்ரம் மாதம் பிறை (9-10) நாளில் சுன்னத்தான தாஷூஆ -ஆஷுறா நோன்பின் சிறப்புகளும், அத்தினத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளும்

தாஷூஆ & ஆஷூறா என்றால் என்ன?

சங்கையாக்கப்பட்ட மாதங்களில் முஹர்றம் மாதமும் ஒன்றாகும். இம்மாதத்தின் மாண்பு அளப்பெரியதும் அதிசயமிக்கதுமாகும். இம் மாதத்தைக் கொண்டு இஸ்லாமிய புதுவருடம் கணிக்கப்படுகிறது.

​​இம்மாதத்தின் ஒன்பதாம் நாள் தாஷூஆ தினம் என்றும் பத்தாம் நாள் ஆஷூறா தினம் என்றும் அரபியில் அழைக்கப்படுகிறது. இந்நாளில் நோன்பு நோற்பதும் இதற்கு முன்தினம் “தாஷூஆ” ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் மார்கத்தில் சுன்னத்தாக்கப்பட்டுள்ளது. அதிகம் நன்மையை ஈட்டித்தரும் அமலுமாகும். இந்த நோன்பை நோற்பவரின் முன் சென்ற வருடத்தின் சிறு பாவங்கள் மன்னிக்கப்படும். இது சம்மந்தமான ஹதீதுகள் பின்வருமாறு.
​​
ஆஷுறா நோன்பின் சிறப்புகள்

இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ஆஷூரா நாளில் விரும்பினால் நோன்பு நோற்கலாம். ஹழ்ரத் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: புகாரி 2000, 2001

♦ ஆஷுரா நோன்பு பற்றி இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, இந்த நாளை (ஆஷுரா தினத்தை) தவிர வேறு எந்த நாளிலும் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சிறப்பாக தேடியதாக நான் அறியவில்லை. இந்த மாதத்தை (ரமழான் மாதம்) தவிர வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சிறப்பாக தேடியதாக நான் அறியவில்லை என அப்துல்லாஹ் இப்னு அபீ யஸீது அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள். நூல்: புகாரி, முஸ்லிம்

♦ ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை. அறிவிப்பவர்: ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு நூல்: புகாரி 2006

♦ ஸலமா இப்னு அக்வஃ (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, “இன்று ஆஷூரா நாளாகும்; எனவே, இந்நாளில் யாரேனும் சாப்பிட்டிருந்தால் அவர் இந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பாக இருக்கட்டும்! யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பாக இருக்கட்டும்!“ என்று அறிவிக்கச் செய்தார்கள்! நூல்: புகாரி 2007

​​
ஆஷுரா நோன்பு நோற்பது பற்றி ஆர்வமூட்டும் நபிமொழி

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். “இது என்ன நாள்?” என்று கேட்டார்கள். “இது மாபெரும் நாள்! மூஸா (அலைஹி ஸலாம்)அவர்களை இந்த நாளில்தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலைஹி ஸலாம்)அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்” என்று யூதர்கள் கூறினர். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள், ‘நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன்’ என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களையும் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு நூல்: புகாரி 3397, முஸ்லிம்

இன்னும் ஒரு அறிவிப்பில் (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்தி மூஸா (அலைஹி வஸல்லம்) அவர்கள் நோன்பு நோற்றார்கள் நாங்களும் நோன்பு நோற்போம் என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். இன்னும் ஒரு அறிவிப்பில்: அந்த நாளை கண்ணியப்படுத்துவதற்காக நாம் நோன்பு நோற்போம் என்றார்கள்.

​​
ரமழான் மாத நோன்பு கடமையாக்கப்பட்ட பின் ஆஷுரா நோன்பு பற்றிய நிலை

ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அறிவித்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஃஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கியபோது, ‘யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டுவிட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டுவிடட்டும்’ என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 1592, 2002, 2003, 2004

♦ அறியாமைக்கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டபோது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள், ‘நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டுவிடலாம்’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹழ்ரத் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு நூல்: புகாரி 1892, 1893 முஸ்லிம் 1901

♦ ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் ஆஷுரா நோன்பை நாங்கள் நோற்கும்படி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்களுக்கு ஏவுவார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது அவர்கள் அதை ஏவவுமில்லை தடுக்கவுமில்லை நாங்கள் அதை நோற்றுக் கொண்டிருந்தோம். ஹழ்ரத் ​​கைஸ் இப்னு ஸஃது இப்னு உபாதா (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: அஹ்மத்

குறிப்பு: மேல் கூறப்பட்ட ஹதீதுகளிலிருந்து விளங்கக்கிடைக்கும் விடயம் என்னவென்றால், ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் ஆஷுரா நோன்பு நோற்பது அவசியமான ஒன்றாக இருந்தது. ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் அவசியம் என்பதுதான் எடுபட்டதே தவிர அது நோற்பது அதிக நன்மையை எதிர்பார்க்கக் கூடிய பாவங்களை போக்கக்கூடிய சுன்னத் என்பது எடுபடவில்லை, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் ஆஷுரா நோன்பை விட்டுவிட்டார்கள் என்பதின் கருத்து, அது அவசியம் என்பதைத் தவிர சுன்னத்து என்பதையல்ல. அது இதுவரையும் சுன்னத்தாகவே இருக்கின்றது என இப்னு ஹஜர் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் பத்ஹுல்பாரி என்னும் தனது நூலில் குறிப்பிடுகின்றார்கள்.

​​
ஆஷூறா நோன்பு பாவங்களுக்கு பரிகாரமாகும்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள்:”முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்.” அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூகதாதா ரலியல்லாஹு அன்ஹு நூல்: முஸ்லிம் 1976

குறிப்பு : மேல்கூறப்பட்ட ஹதீதில், முன் சென்ற வருடத்தின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது சிறு பாவங்களையே குறிக்கும். பெரும்பாவங்களுக்காக தவ்பா செய்வது அவசியமாகும். இதுவே இமாம்கள் அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும்.

​​
ஆஷூறா நோன்பு நோற்று யூதர்களுக்கு மாறு செய்தல்

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், ‘(அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?’ என்று வினவினர். அதற்கு நபியவர்கள், ‘இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் (சேர்த்து)நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மரணித்து விட்டார்கள்.மற்றொரு அறிவிப்பில், ‘அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால், ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன்’ என்று கூறியதாக வந்துள்ளது. அறிவிப்பவர்: ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு நூல்: முஸ்லிம்

♦ இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது யூதர்கள் ஒரு நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள் அதாவது ஆஷூராவுடைய (முஹர்ரம் 10வது) நாளில் (யூதர்கள்) நோன்பு நோற்று வந்ததை இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) குறிப்பிடுகிறார்கள் – யூதர்கள், “இது மாபெரும் நாள். மூஸா (அலைஹி வஸல்லம்) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான்; ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். எனவே, மூஸா (அலைஹி வஸல்லம்) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் நோன்பு நோற்றார்கள்“ என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “நான் அவர்களை விட மூஸா அவர்களுக்கு, மிக நெருக்கமானவன்“ என்று கூறிவிட்டு, அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் (உபரியான) நோன்பு நோற்கும்படி ஆணையிட்டார்கள். நூல்: புகாரி 3397, 3043, 4680, 4737

​​
பத்தாம் நாளோடு சேர்த்து ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்

ஆஷுரா தினத்தன்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோற்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபிகள் நாயகம் (ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர் வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மரணித்து விட்டார்கள். நூல்: முஸ்லிம் 2088, 2089

​​
பத்தாம் நாளோடு சேர்த்து பதினொன்றாம் நாளும் நோன்பு நோற்பது கூடுமா?

ஆஷுரா நாளின் நோன்பை நோருங்கள் அதற்கு முன் ஒரு நாள் அல்லது அதற்கு பின் ஒரு நாள் நோன்பு நோற்று யூதர்களுக்கு மாறும் செய்யுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்னறார்கள். நூல்கள்: அஹ்மத், இப்னு குஸைமா, பைஹகி

குறிப்பு : முஹர்ரம் 9ம்த நாள் நோன்பு வைக்க தவிர்க்க முடியாத காரணங்கள் ஏற்பட்டால் முஹர்ரம் 10/11ம் நாள் நோன்பு நோற்பது கூடும். ஏனெனில் யூதர்களுக்கு மாறு செய்வதற்காக வேண்டித்தான் ஒன்பதாம் நாளையும் சேர்த்துக் கொள்வது சுன்னத் என்றார்கள். எனவே 9ம் நாள் தவிர்க்க முடியாத காரணங்கள் ஏற்பட்டால் அந்த மாறு செய்வதை 10/11ம் நாளிலும் செய்யலாம் “எதிர்வரும் வருடம் நான் இருந்தால் ஒன்பதையும் சேர்த்து நோற்பேன்” என்ற நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீதை ஆதாரமாக வைத்து ஒன்பதாம் நாளையும் பத்தாம் நாளையும் நோன்பு நோற்பதே மிகச் சிறந்த முறையாகும்.

​​
தாஸூஆ – ஆஷூறா நோன்புடன் கழா, நேர்ச்சை நோன்பு நோற்கலாம்

ரமழான் மாதத்தில் நோற்கத் தவறிய கழா நோன்புள்ளவர்களும் நேர்ச்சை நோன்புள்ளவர்களும் தாஸூஆ – ஆஷூறா ஒன்பதாம் பத்தாம் நாட்களில் தம்மீதுள்ள கழா அல்லது நேர்ச்சை நோன்பு நோற்றால் அவர் நோற்ற நோன்பு நிறைவேறுவதுடன் இவ்விரு சுன்னத்தான நோன்புகளின் நன்மையும் கிடைக்கும், ஆனால் நிய்யத் வைக்கும் பொழுது பர்ழான ரமழான் நோன்பு என்றும், நேர்ச்சை நோன்பு என்றும் நிய்யத் வைத்துக் கொள்ளல் வேண்டும்.

கழா நோன்பு அல்லது நேர்ச்சை நோன்பு இல்லாதவர்கள் ஆஷூறா – தாஸூஆ நோன்பு என்று நிய்யத் வைத்துக் கொள்ளல் வேண்டும். எனவே, இம்மாதத்தின் ஒன்பதாம், பத்தாம் நாட்களில் நோன்பு நோற்றும், குடும்பத்தவர்கள் உறவினர்களைப் பேணியும், ஏழைகளுக்கு உணவு, உடை, பணம் முதலியன வழங்கியும் நல்லடியார்களில் சேர்வோமாக!

​​
ஆஷூறா தினத்தில் ஓத வேண்டிய விசேஷட துஆ

اَللهم يَاقَابِلَ تَوْبَةِ آدَمَ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَا رَافِعَ إِدْرِيْسَ إِلَى السَّمَاءِ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَا مُسَكِّنَ سَفِيْنَةِ نُوْحٍ عَلَى الْجُوْدِيِّ يَوْم عَاشُوْرَاءَ َ
وَيَا مُنَجِّيَ إِبْرَاهِيْمَ مِنْ نَارِ نُمْرُوْدَ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَاجَامِعَ شَمْلِ يَعْقُوْبَ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَاكَاشِفَ ضُرِّ أَيُّوْبَ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَافَارِجَ كُرْبَةِ ذِي النُّوْنِ يُوْنُسَ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَاغَافِرَ ذَنْبِ دَاؤُوْدَ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَاسَامِعَ دَعْوَةِ مُوْسَى وَهَارُوْنَ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَازَائِدَ الْخَضِرِ فِى عِلْمِهِ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَارَافِعَ عِيْسَى بْنِ مَرْيَمَ إِلَى السَّمَاءِ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَانَاصِرَ مُحَمَّدٍ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَاخَالِقَ الْجَنَّةِ وَالنَّارِ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَا مُنَزِّلَ التَّوْرَاةِ وَالزَّبُوْرِ وَالْإِنْجِيْلِ وَالْفُرْقَانِ الْعَظِيْمِ يَوْمَ
عَاشُوْرَاءَ
وَيَاخَالِقَ جِبْرِيْلَ وَمِيْكَائِيْلَ وَإِسْرَافِيْلَ وَعِزْرَائِيْلَ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَاخَالِقَ الْعَرْشِ وَالْكُرْسِيِّ وَالَّلوْحِ وَالْقَلَمِ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَاخَالِقَ الشَّمْسِ وَالْقَمَرِ وَالنُّجُوْمِ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَاخَالِقَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَوْمَ عَاشُوْرَاء
اَللهم إِقْضِ لَنَا الْحَاجَاتِ يَاقَاضِيَ الْحَاجَاتِ، وَادْفَعْ عَنَّا السَّيِّئآتِ وَالْبَلِيَّاتِ، يَادَافِعَ الْسَيِّئآتِ وَالْبَلِيَّاتِ، وَسَلِّمْنَا مِنْ آفَاتِ الدُّنْيَا وَفِتَنِهَا وَبَلَائِهَا وَوَبَائِهَا وَمُصِيْبَاتِهَا وَاَسْقَامِهَا وَآلَامِهَا وَشِدَّاتِهَا وَفَقْرِهَا وَمِنْ آفَاتِ الْآخِرَةِ وَعَذَابِهَا وَأَهْوَالِهَا بِحُرْمَةِ سَيِّدِ الثَّقَلَيْنِ وَرُسُوْلِ الْكَوْنَيْنِ مُحَمَّدٍ الْمُصْطَفَى خَاتَمِ النَّبِيِّيْنَ يَاحَيُّ يَاقَيُّوْمُ يَاذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يَامَالِكَ يَوْمِ الدِّيْنِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِيْنُ وَبِحُرْمَةِ سَيِّدَيْنِ الشَّهِيْدَيْنِ أَبِيْ مُحَمَّدٍ الْحَسَنِ وَأَبِيْ عَبْدِ اللهِ الْحُسَيْنِ، اَللهم زِدْهُمَا تَعْظِيْمًا وَتَكْرِيْمًا، وَصَلَّى الله وَسَلَّمَ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَآلِهِ وَصَحْبِهِ أَجْمَعِيْنَ، َ

♣ ஆஷூறா தினத்தின் மாண்புகளும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளும்

ஆஷூறா தினம் அதிவிஷேடங்களை உள்ளடக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ள நாளாகும் இதனால்தான் இந்நாளை முஸ்லிம்கள் விஷேட நாளாக அமைத்துள்ளார்கள்.

1) இன்றுதான் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டினால் ஆதம் (அலைஹி வஸல்லம்) அவர்களின் குற்றத்தை அல்லாஹ் மன்னித்து அவர்களை ஏற்றுக் கொண்டான்.

2) இன்றுதான் நபி நூஹ் (அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்பல் ஜூதி எனும் மலையில் தரை தட்டியது. இந்தக் கப்பல் தூபான் என்ற வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட சமயம் நூஹ் நபீ (அலைஹி வஸல்லம்) அவர்களால்தான் செய்யப்பட்டது. ஜூதி மலையில் தட்டிய கப்பலை ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளார்கள். ஜூதி மலை இன்னும் இருக்கிறது. இந்த மலையில் நபீ நூஹ் (அலைஹி வஸல்லம்) அவர்கள் கட்டிய பள்ளிவாயல் ஒன்று இன்றும் அவ்வாறே இருக்கிறது. மனிதர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று அதைப் பார்த்து வருகிறார்கள்.

3) இன்றுதான் நபீ மூஸா (அலைஹி வஸல்லம்) அவர்களும், நபீ ஈஸா (அலைஹி வஸல்லம்) அவர்களும் பிறந்தார்கள்.

4) இன்றுதான் நும்றூத் எனும் சர்வாதிகாரி நபீ இப்றாஹீம் (அலைஹி வஸல்லம்) அவர்களை நெருப்புக் கிடங்கில் எறிந்தான்

5)இன்றுதான் நபீ யூனுஸ் (அலைஹி வஸல்லம்) அவர்களின் சமூகத்தை விட்டும் வேதனை நீக்கப்பட்டது

6)இன்றுதான் நபீ ஐயூப் (அலைஹி வஸல்லம்) அவர்களின் துன்பம் நீங்கியது.

7)இன்றுதான் நபீ யஃகூப் (அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது மகன் யூசுப் (அலைஹி வஸல்லம்) அவர்களை இழந்ததால் இழந்திருந்த கண்பார்வையை மீண்டும் பெற்றார்கள்.

8)இன்றுதான் பாழ் கிணற்றில் எறியப்பட்டிருந்த நபீ யூசுப் (அலைஹி வஸல்லம்) அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்

9) இன்றுதான் நபி ஈஸா (அலைஹி வஸல்லம்) அவர்களும் இத்ரீஸ் (அலைஹி வஸல்லம்) அவர்களும் வானத்தின் பக்கம் உயர்த்தப்பட்டார்கள்.

10) இன்றுதான்ந பீ யூனுஸ் (அலைஹி ஸ்ஸலாம்) அவர்களை மீனின் வயிற்றில் இருந்து காப்பாற்றிய தினம்

11) இன்றுதான் நபீ தாஊத் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் பாவத்தை மன்னித்த தினம்

12) இன்றுதான் நபீமார்களான மூஸா, ஹாறூன் அலைஹிமுஸ் ஸலாம் ஆகியோரின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட தினம்

13) இன்றுதான் நபீ ஹழிர் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் அறிவை அதிகப்படுத்திய தினம்

14) இன்றுதான் சுவர்க்கம், நரகம் இரண்டையும் படைத்த தினம்

15) இன்றுதான் தவ்றாத், சபூர், இன்ஜீல், குர்ஆன் முதலான வேதங்களை இறக்கி வைத்த தினம்

16) ஜிப்ரீல், மீக்காயீல், இஸ்றாபீல், இஸ்றாயீல் (அலைஹிமுஸ் ஸலாம்) ஆகியோரை படைத்த தினம்

17) இன்றுதான் அர்ஷ், குர்ஸீ, லவ்ஹு, கலம், முதலானவற்றை படைத்த தினம்

18) இன்றுதான் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் யாவையும் படைத்த தினம்

19) இன்றுதான் வானங்கள், பூமி யாவையும் படைத்த தினம்

20) இன்றுதான் உலகம் படைப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட நாள்

21)இன்றுதான் பூமியில் முதன் முதலாக மழை பெய்த நாள்

22)இன்றுதான் அல்லாஹ்வின் அருள் பூமியிலுள்ளவர்களுக்கு முதன் முதலில் இறங்கியது

23) இன்றுதான் நபீ நூஹ் (அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கின் பின்பு முதன் முதலாக இப்பூமியில் சமையல் செய்யப்பட்டது பத்தாம் நாளான ஆஷூறா தினம்தான். நபீ நூஹ் (அலைஹி வஸல்லம்) அவர்கள்தான் முதலில் சமையல் செய்தார்கள்

24)இன்றுதான் சுலைமான் நபீ (அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முழுவுலக ஆட்சியும் வழங்கப்பட்டது.

25)இன்றுதான் நபீ ஸகரிய்யா (அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு நபீ யஹ்யா (அலைஹி வஸல்லம்) மகனாகப் பிறந்தார்கள்.

26)இன்றுதான் நபீ மூஸா (அலைஹி வஸல்லம்) அவர்கள் பிர்அவ்னையும், அவனுடைய சூனியக்காரர்களையும் தோற்கடித்தார்கள்

27)இன்றுதான் பிர்அவ்ன் நீரில் மூழ்கி இறந்தான்.

28)இன்றுதான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பேரர் ஹுஸைன் (ரழியல்லாஹு அன்ஹு) ஷஹீதாக்கப்பட்டார்கள்

29)இன்றுதான் அஹ்லுல்பைத் என்று அழைக்கப்படுகின்ற நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் இனபந்துக்களில் அநேகர் ஷஹீதாக்கப்பட்டார்கள்.

எனவே முஸ்லிம்கள் இந்நாளை சாதாரண நாளாக நினைத்து வீண் விளையாட்டில் கழிக்காமல் நோன்பு நோற்றல், குர்ஆன் ஓதுதல், ஸலவாத் ஓதுதல், திக்று செய்தல், மௌலித் ஓதுதல், ராதிப் மஜ்லிஸ்,பிக்று செய்தல், தியானம் செய்தல்,முறாகபஹ் முஷாஹதஹ் எனப்படும் பேரின்ப ஆத்மீக தியானம் செய்தல் போன்ற நல்ல விடயங்களைக் கொண்டு இந்நாளைச் சிறப்பித்தல் அவசியமாகும்.

♣ ஆஷூறா தினத்தில் ரொட்டி சுட்டு ஏழைகளுக்கு தர்மம் செய்து, யாஸீன் ஓதுதல்.

நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பேரர் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அவர்களின் குடும்பத்தினல் அனேகர் ஈராக் நாட்டிலுள்ள கர்பலா எனுமிடத்தில் எதிரிகளால் ஷஹீதாக்கப்பட்டது இத்தினத்திலேயாகும். இதனால்தான் ஆஷூறா தினத்தில் ரொட்டி சுட்டு (ஹஸன், ஹுஸைன், அலி, பாதிமாஹ், அஹ்லுல் பைத்துகள்) ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோரின் ஆத்மசாந்திக்காக யாஸீன் கத்தம் ஓதி வருகிறார்கள். இன்றுவரை இந்த வழக்கம் பல நாடுகளில் குறிப்பாக இந்தியா இலங்கையில் பல ஊர்களில் ஓதிவரப்படுகிறது இந்த வழக்கம் பல்லாண்டு காலமாக இருந்து வந்த போதினும் சமீபத்தில் தோன்றிய வழிகெட்ட கூட்டங்களிற் சில இவ்வழக்கம் பித்அத் என்றும், ஷிர்க் என்றும் மக்களிடையே பறை சாற்றி வருகின்றது. இத்தகைய கூட்டங்கள் பற்றிப் பொது மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

♣ ஆஷூறா தினத்தில் நாம் செய்ய வேண்டிய நல்ல விஷயங்கள்

இத்தகைய சிறப்புகளை பெற்ற ஆஷுராவுடைய நாளில் நாம் செய்ய வேண்டிய நல்ல விஷயங்களை பார்ப்போம். சில முஸ்தஹ்பான அமல்களை சூபியாக்கள், உலமா பெருமக்கள் கிதாபுகளில் எழுதியுள்ளார்கள்.

1) ஆஷுராவுடைய தினத்தில் குளிப்பது. இதனுடைய பலன் என்னவென்றால் அந்த வருடம் முழுவதும் நோய் நொம்பலங்கள் ஏற்படாது.

2) கண்ணுக்கு சுர்மா இடுவது. இதனுடைய பலன் கண் நோய் வராது.

3) ஸதகா செய்வது. ஏனென்றால் ஹதீஸில் வருகிறது. எவரொருவர் ஒரு திர்ஹம் ஸதகா செய்தால் எழுநூறு ஆயிரம் திர்ஹம் ஸதகா செய்த நன்மை கிடைக்கும்.

4) அனாதைகளின் மீது இரக்கம் காட்டுவது. யாரொருவன் ஆஷுராவுடைய தினத்தில் அநாதைக்கு இரக்கம் காட்டுவானோ அந்த அனாதையின் ஒவ்வொரு தலைமுடியின் அளவுக்கு ஸவாபு கிடைக்கும்.

5)நோயாளிகளை சந்திப்பது. நோயாளிகளை சந்திப்பதனால் ஷஹீதுடைய அந்தஸ்து கிடைக்கும்.

6)அதிகமான நபிலான தொழுகைகளை தொழுந்து கொள்ளுங்கள். இத்தினத்தில் நான்கு றக்அத்துக்கள் தொழுவது ஒவ்வொரு றக்அத்திலும் பாத்திஹா ஸூறத் ஒரு தரமும் ஸூறதுல் இஹ்லாஸ் பதினொரு தரமும் ஓதி தொழுகையை முடித்தால்அவனது ஐம்பது வருட பாவங்களைஇறைவன் மன்னிப்பதுடன் ஒளியினால் ஒரு மின்பர் மேடையும் அமைக்கின்றான்.

7)உறவை துண்டித்தவர்களுடன் சேர்ந்து நடக்க வேண்டும்.

8)குடும்பத்தார்களுக்கு செலவழிப்பது

9)துஆ கேட்பது மிகுதியாக பாவ மன்னிப்பு கேட்பது.

10)நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பேரர் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் பெயரால் மௌலித் ஓதுதல், அந்த அடிப்படையில் ஆஷுறா தினமும், ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஷஹாததும் ஹிஜ்ரி 61ம் ஆண்டு ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் (ஷஹாதத்) வீர மரணமடைந்ததாக இஸ்லாமிய வரலாற்று நூல்களில் இமாம்கள் பதிவு செய்துள்ளார்கள்(நூல் : தாரீக் தபரீ-5 /400, அல் பிதாயா வந் நிஹாயா-8/215)

ஆகவே எல்லாம் வல்ல அல்லாஹ் புனிதப்படுத்திய இம்மாதத்தின் புனிதத் தன்மையை பேணி, இம்மாதத்தில் அதிகமதிக நன்மைகளை செய்து, சுன்னத்தான நோன்பாகிய ஆஷூரா நோன்பையும் நோற்று நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பேரர் இமாம் ஹூசைன் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் பெயரால் மௌலித் ஓதி கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய நற்கூலியை அடைய நம் அனைவருக்கும் அருள் புரிவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

💐💐ஹலாவதுல் ஈமான்💐💐
✳ BY Moulavi
S.L Abdhur Rahman Ghawsi
தகவல் பகிர்வு: காயல் ஜெஸ்முதீன் Dca