பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
2011 நவம்பர் மாதம் முதல் 2016 ஜூன் மாதம் வரை அச்சுப்பிரதியாக வெளிவந்துக் கொண்டிருந்த அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் கொள்கைப் பிரகடன மாத இதழ் ‘அஹ்லுஸ் சுன்னா’ ஈடுசெய்ய முடியாத பொருளாதார நஷ்டத்தினால் தொடர்ந்து இதழ் வெளிவரவில்லை.
இப்படியொரு இதழ் நின்றுவிட்டதே என்ற நெருடல் நாளொரு மேனியும் என்னை பெரிதும் வாட்டி வதைத்தது. இதற்கொரு மாற்றுவழியை நிச்சயம் ஏற்படுத்திட வேண்டும், ‘இனி அஹ்லுஸ் சுன்னா இல்லை’ என்ற நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான திட்டத்தைத் தீட்டினேன். திட்டமிடப்பட்ட வேலைகளில் இரவுபகல் பாராமல் ஈடுபட்டேன். அதன் விளைவாகத்தான் www.ahlussunnah.in என்ற இணையம் உருவாகியுள்ளது.
2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வெளிவராத ‘அஹ்லுஸ் சுன்னா’ நாயன் அல்லாஹ்வின் நற்கிருபையாலும், நமது நாயகக் கண்மணி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பரகத்தினாலும் நம்மில் நல்லவர்களின் துஆவினாலும் (ஜனவரி-2018) இம்மாதம் முதல் இணையப் பத்திரிகையாக வெளிவந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ். அதன் முதல் பிரதியைத்தான் இப்போது ஒளித்திரையில் தாங்கள் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதுபோன்றதொரு இணையப் பத்திரிகை நம் தாய்மொழியாம் தமிழ் மொழியில் இஸ்லாமியர்களுக்காக அதிலும் குறிப்பாக அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் கொள்கைப் பிரகடன மாத இதழாய் தமிழகத்தில் வெளிவருவது இதுவே முதலும் முன்னோடியுமாகும். 2013 ஆம் ஆண்டு இப்படியொரு இணையத்தை உருவாக்க வேண்டும் என்று எனக்கு ஏற்பட்ட எண்ணமும் கனவும் இன்று நிறைவேறிவிட்டது. எல்லாப் புகழும் இறைவனுக்கே.
‘அச்சுப் பத்திரிகையைப் போன்று இணையப் பத்திரிகை எல்லோரையும் போய்சேருமா, இது வெற்றியைத் தருமா’ என்பது பலரின் கேள்வி. இந்த கேள்விக்குரிய பதிலை இப்போது என்னால் சொல்ல முடியாது; அதற்குரிய பதிலை காலமே சொல்லும்.
அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினர் பணம் கொடுத்துதவ முன்வரவில்லை என்றாலும் இந்த இதழை எவ்வித சிரமமும் இன்றி எல்லோரிடமும் இலகுவாய் கொண்டு போய் சேர்ப்பார்கள், அது அவர்களின் தார்மிகக் கடமை என்ற நம்பிக்கையே எனது அச்சாணியாகும். அந்த நம்பிக்கையில் தான் துணிவுடன் இக்காரியத்தில் ஈடுபட்டுள்ளேன்.
ஒவ்வொரு நாளும் வெவ்வேறான குழப்பங்கள் பெருகி வரும் இவ்வேளையில் நமது சத்தியமான கொள்கையை நிலைநாட்ட நம்மால் முடிந்த ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும். இல்லை எனில் நாம் முஸ்லிமாக, முஃமினாக வாழ்வதில் அர்த்தமில்லை. அந்த வகையில் என்னால் முடிந்த ஒரு சிறு சேவைதான் இந்த இணையப் பத்திரிகை. இதை தொடர்ந்து நடத்துவதற்கு அறிவாற்றல், உடல் உழைப்பு, தைரியம் ஆகிய மூலதனங்கள் இருந்தால் போதும். மிகப்பெரிய பொருளாதாரம் அவசியம் இல்லை.
இருப்பினும் எங்களின் இந்த சேவையை ஊக்குவிக்கும் எண்ணத்தில் உங்களில் நல்லுள்ளம் படைத்தோர் இணையத்தின் மூலமே நன்கொடைகள் செலுத்தலாம். அன்புள்ள அபிமானிகள் ஆயுள் சந்தா அல்லது ஆண்டு சந்தா செலுத்தி உறுப்பினராகலாம். நாங்கள் செய்து வரும் இந்த சேவைக்குரிய கூலியை அல்லாஹ்விடம் மட்டுமே எதிர்பார்ப்பதைப் போன்று, தாங்கள் இந்த சேவைக்காக செய்யும் எல்லா உதவிகளுக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்கிட துஆ செய்கிறோம்.
எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் கவனிக்க!
கட்டுரை, கதை, கவிதை மற்றும் விமர்சனக் கடிதங்கள் அனுப்புவோர் தங்களின் புகைப்படத்துடன் info@ahlussunnah.in என்ற மின்னஞ்சலின் மூலம் அனுப்ப வேண்டும். மேலும் தங்களின் படைப்புகளை தயவு கூர்ந்து சிரமம் கருதாமல் Unicode Font மூலம் தட்டச்சு செய்து அனுப்பவும்.
பதிப்பாளர்கள் மற்றும் நூலாசிரியர்கள் கவனிக்க!
பதிப்பாளர்கள் மற்றும் நூலாசிரியர்கள் தங்களின் புதிய நூல்கள், நூலாய்வுப் பகுதியில் இடம்பெற விரும்பினால் அந்த நூலின் முன் அட்டைப்படத்தை ahlussunnah18@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அனுப்பப்படும் நூல்களை அங்கீகரிப்பதும் நிராகரிப்பதும் நூலாய்வுக் குழுவின் உரிமையாகும். அனுப்பப்படும் நூல்கள் திருப்பித்தரப்படமாட்டாது.
விளம்பரதாரர்கள் கவனிக்க!
நம்முடைய இப்பணிகள் சிறக்க ஆதரவு தரவிரும்பும் தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், பள்ளி & கல்லூரி தாளாளர்கள் மற்றும் வணிகர்கள் தயார் செய்யப்பட்ட தங்களின் விளம்பரச் செய்தியை Image File ஆக ahlussunnah18@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள். ஒரு பக்கத்திற்குரிய விளம்பரக் கட்டணம் ரூபாய் ஆயிரம் மட்டும் ஆன்லைனில் செலுத்த வேண்டும். பணம் செலுத்தப்பட்ட பின்புதான் விளம்பரம் வெளியிடப்படும். தொடர் விளம்பரமாக இருந்தால் மூன்று மாதத்திற்குரிய விளம்பரக் கட்டணத்தை மொத்தமாக முன்பணமாக செலுத்தினால் நான்காம் மாதம் கட்ணமின்றி விளம்பரம் வெளியிடப்படும்.
மேலும் இதுகுறித்து அதிகப்படியான தகவலைப்பெற 9962199621 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
-அன்புடன் ஆசிரியர்