இந்தியாவில் இஸ்லாம் வந்த வரலாறு

 

முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வழங்கிய
கொடைகள்…

1 . ஏக இறைத் தத்துவம் இந்த மண்ணிற்கு இஸ்லாம் வழங்கிய பெரும் கொடையாகும்.
மலையாள நாட்டில் உள்ள ‘காலடியில்’ பிறந்த ‘சங்கரர்’ கி.பி 8 – வது நூற்றாண்டின் பிற்பகுதியில் கேரளத்தில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தவர்களிடம் வந்து உருவமற்ற ஒரே இறை வணக்கப் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு “அத்வைதக் கொள்கையை” இந்து மதத்தில் நுழைத்தார் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இஸ்லாத்தின் ஏக தெய்வ வணக்கப் பிரச்சாரத்தின் காரணமாக லிங்காயத்துகள் தோன்றினர்.
இவர்கள் சமீபத்தில் கூட கர்நாடக மாநிலத்தில் தாங்கள் இந்துக்கள் அல்ல என்று அறிவிக்கக் கோரி போராட்டம் நடத்தியது நினைவிருக்கலாம்.
இவர்கள் இஸ்லாமியக் கொள்கைகள் பலவற்றை பின்பற்றினார்கள்.
உதாரணமாக : *திருமணத்திற்கு முன் மணமகளின் அனுமதி பெறுவது.
*மணவிடுதலையை அங்கீகரிப்பது.
*விதவைகளின் மறுமணத்தை அங்கீகரிப்பது.
*பிரேதங்களை எரிக்காது குளிப்பாட்டி அடக்கம் செய்வது.
*சாதியக் கொடுமைகளை ஒழித்து எல்லோரும் ஒன்று கூடி அமர்ந்து உண்ணும் வழக்கத்தை மேற்கொள்வது.
இஸ்லாம் வருவதற்கு முன்பு இவ்வழக்கம் இந்திய மண்ணில் இருந்ததில்லை.

தமிழ் நாட்டில் சித்தர்கள் தோன்றி உருவமற்ற ஒரே வழிபாட்டை மேற்கொண்டதும் இஸ்லாத்தால் ஏற்பட்ட நற்பலனேயன்றி வேறில்லை.

2 . இறைவனின் படைப்பில் எல்லோரும் சமமே; பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை, எந்தத் தொழிலையும் எவரும் செய்யலாம் என்னும் உயரிய கொள்கையை இந்தியாவில் புகுத்தி வர்ணாச்சிரம தர்மத்தை தகர்த்தெறிந்தது இஸ்லாம்.

3 . பெண்களுக்கு சொத்துரிமை முதலான சுதந்திரங்களை வழங்கியது இஸ்லாம்.

4 . கணவன் இறந்ததும் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கத்தை நிறுத்தியது இஸ்லாம்.

5 . ஆங்கிலேயர்களுக்கு முன் சிதறுண்டு கிடந்த இந்திய அரசுகளை ஒன்றிணைத்து ஒரே குடையின் கீழ் ஆண்டவர்கள் முஸ்லிம்களே ஆவர். இத்தகு அரசியல் ஜக்கம் முஸ்லிம்கள் வருவதற்கு முன் இந்தியாவில் இருக்கவில்லை.

6 . இந்தி, ஃபார்ஸீ, அரபி கலந்த ஒரு பொது மொழியான உர்தூவை வழங்கி அம்மொழியில் இஸ்லாமிய இலக்கியக் கருவூலங்களை கொண்டு வந்து குவித்து அதனை வளப்படுத்தியவர்கள் முஸ்லிம்களேயாவர்.

7 . முஸ்லிம்கள் வரவால் இந்தியாவின் விண்ணியல் கல்வி வளம் பெற்றது. அக்ஷரேகை, தீர்க்க ரேகை ஆகியவை பற்றிய முஸ்லிம்களின் கணிதமுறைகளை இந்துக்கள் பின்பற்றலாயினர்.
நஸீருத்தீன் தூஸி அவர்களின் விண்கலை முறைகளை பின்பற்றி இங்கு பல ஆய்வுகள் நடத்தப்பட்டன.

8 . முஸ்லிம்களே இந்தியாவிற்கு “யுனானீ” மருத்துவ முறையைக் கொண்டு வந்தார்கள். ஐநூறு ஆண்டுகள் இம்மருத்துவ முறை இந்தியாவில் செல்வாக்கு பெற்றிருந்தது.

9 . காகிதத்தை முதன் முதலில் இந்தியாவில் புகுத்தியவர்கள் முஸ்லிம்களே! “சுல்தான் மஹ்மூத் ஷா” குஜராத்தில் காகித உற்பத்தி சாலையை நிறுவினார்.

10 . துணி நெய்யும் தொழிலை இந்தியாவில் முஸ்லிம் மன்னர்கள் அபிவிருத்தி செய்தனர். அதற்கு முன்பு முரட்டுத் துணிகளே இங்கு தயாரிக்கப்பட்டு வந்தது.
அக்பர் ஆட்சிக் காலத்தில் துணி நெய்யும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன.

11 . முஸ்லிம்களே நிலங்களை அளந்து கணக்கிட்டு வரிவிதித்து வசூலிக்கும் சிறந்த முறையை இந்தியாவில் புகுத்தினர். நிதித் துறையில் அக்பரும், ஷேர்ஷாவும் சிறந்த சீர்திருத்தங்களை செய்தனர்.

12 . இந்தியாவின் பல்வேறு பாகங்களையும் ஒன்றிணைக்கும் சாலைகளையும், இடையிடையே பயணிகள் தங்குவதற்கான தங்குமிடங்களையும் நிர்மாணித்து சாலைகளின் ஓரங்களில் பழம் தரும் மரங்களை வைத்து வளர்த்தவர்கள் முஸ்லிம்களேயாவர்.

13 . முஸ்லிம்கள் வரவால் இந்தியாவின் உணவுக்கலை பல்வேறு மாறுதல்கள் அடைந்தது. பிரியாணி, குருமா, ஹல்வா, ஜிலேபி, பாதாம்கீர், ஷர்பத் முதலானவைகள் முஸ்லிம்களால் இந்தியாவிற்கு வழங்கப் பட்டவையாகும்.

14 . தென்னாட்டவரின் கையில் அயர்து கிடந்த கடல் வழி வாணிபத்தை புதுப்பித்தவர்கள் முஸ்லிம்கள் தான்.
இந்திய கடற்படையை முதன்முதலில் நிர்மாணித்தவர்கள் முஸ்லிம்கள் தான்.

15 . முஸ்லிம்களே இந்தியாவின் வரலாற்றை முதன்முதலில் எழுதியவர்களாவர். முஸ்லிம் அரசர்கள் சிலர் தங்களின் வாழ்க்கைக் குறிப்புகளை எழுதியதோடு பல வரலாற்றாசிரியர்களைக் கொண்டு இந்திய வரலாற்றை எழுதுமாறும் செய்தனர்.

16 . இந்தியாவின் கட்டடக் கலையில் முஸ்லிம்களின் கட்டடக் கலையும் ஒன்று சேர்ந்து இந்தோ – முஸ்லிம் கட்டடக் கலை உருவாகியது.
இந்தியாவில் முஸ்லிம் கட்டடக் கலை குத்புத்தீன் ஐபக் டில்லியிலும், அஜ்மீரிலும் இரண்டு பள்ளிவாயில்களை நிர்மாணித்ததில் இருந்து துவங்கியது எனலாம்.
முஸ்லிம்களின் கட்டடக் கலைக்கு சான்றாக தாஜ்மஹால், செங்கோட்டை, குதுப்மினார், முஸ்லிம்களின் அரண்மனைகள் பெரும் எடுத்துக் காட்டாக திகழ்கிறது.

17 . அனைத்திற்கும் முத்தாய்ப்பாக ஆலம்கீர் அவுரங்கஜீப் ரஹ் அவர்களின் ஆட்சிக் காலத்தில் “ஃபதாவா ஆலம்கீரி” என்ற ஃபதாவா ஹின்திய்யா என்ற ஓர் அற்புத நூல் மார்க்கச் சட்டங்களின் கருவூலம் 24 பெரும் உலமாக்களை வைத்து தொகுக்கப் பட்டது. இதில் நான்கு பெரும் ஆலிம்கள் முக்கியப் பங்காற்றினர்.
1. القاضي محمد الجونفوري رحمه الله.
2. الشيخ علي أكبر الحسيني رح.
3. الشيخ حامد بن أبي الحامد الجونفوري رح.
4. المفتي محمد اكرم الحنفي اللاهوري رح.

இவர்கள் நால்வரில் ஒவ்வொருவருக்கு‌ம் இந்த கிதாபை தொகுப்பதில் கால் பங்கு உள்ளது என்று அல்லாமா அபுல் ஹஸன் அலீ அந்நத்வீ ரஹ் “المسلمون في الهند” என்ற தங்களது நூலில் குறிப்பிடுகிறார்கள்.
இதில் தேர்வு செய்யப்பட்ட மார்க்கச் சட்டங்களையே தொகுத்துள்ளார்கள்.
இந்த நூலை தொகுப்பதற்காக ஆலம்கீர் அவுரங்ஜீப் ரஹ் அவர்கள் அப்போதே இரண்டு இலட்சம் ரூபாய்களை செலவழித்தார்கள்.

இன்னும் எண்ணற்ற வெகுமதிகளை இஸ்லாம் இந்திய மண்ணிற்கு வழங்கியுள்ளது எனவே தான் இம்மண்ணிலிருந்து இஸ்லாத்தை அப்புறப் படுத்த நினைப்பவர்கள் ஆட்சியில் இருந்த போதும் அது சாத்தியப் படவில்லை இன்ஷா அல்லாஹ் கியாமத் வரை சாத்தியப் படாது.

இறுதியாக அல்லாமா அபுல் ஹஸன் அலீ அந்நத்வீ ரஹ் அவர்கள் கூறியது போல “இந்தியாவில் முஸ்லிம்களுக்கு மிக நீண்ட வரலாறு இருக்கிறது இம்மண்ணில் கடமையான வணக்கங்கள் மட்டுமல்ல எல்லா சுன்னத்தான நஃபிலான காரியங்களையும் கடைபிடித்து வாழ்வோம்” நம் முன்னோர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து பிற மக்களுக்கும் போதித்து நம் வாழ்வியலை அர்த்தமுள்ளதாக ஆக்கிடுவோம் வல்ல ரஹ்மான் தனது கிருபையால் இந்தியாவில் முஸ்லிம்களை அவர்களின் ஷரீஅத் சட்டங்களை பேணி வாழ்வதற்கான எல்லா சாதகமான சூழ்நிலைகளையும் ஏற்படுத்துவானாக ஆமீன்.