இந்தியாவில் இஸ்லாம் பரவியது
மகான்களாலே…
இந்தியாவில் இஸ்லாம் பரவியதற்கு இஸ்லாமிய ஆட்சியாளர்களில் ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் பெரிதாக பங்களிப்புச் செய்யவில்லை காரணம் சிறுபான்மை மக்களிடம் தங்களின் மார்க்கத்தை போதிப்பதால் தங்களின் ஆட்சிக்கு எதிராக புரட்சி ஏற்படுவதை அவர்கள் பயந்து ஒதுங்கி இருந்தார்கள்.
இந்திய நாட்டிற்கு மார்க்கத்தை போதிக்க வந்த மகான்களே இங்கே இஸ்லாம் தளைக்க பெரும் பங்காற்றினார்கள்.
கி.பி 9 – ம் நூற்றாண்டில் அபூ ஹிஃப்ழ் இப்னு ரபீஃ இப்னு சாஹிப் என்ற மகான் சிந்துவுக்கு வந்து மார்க்க அழைப்புப் பணி செய்து இங்கேயே அடக்கமானார்கள்.
கி.பி 979 – ல் ஷைகு ஸைஃபுத்தீன் கர்ஸோனீ இந்தியா வந்து ‘உச்’ என்னுமிடத்தில் தங்கி இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்கள்.
கி.பி 11 – ம் நூற்றாண்டில் ‘பாபா ரிஹான்’ பக்தாதிலிருந்து பல சீடர்கள் புடை சூழ “புரோச்” என்ற இடத்திற்கு வந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்து புரோச் அரசரின் மகனை இஸ்லாத்தை தழுவச் செய்தார்.
“மஹ்மூத் ஙஜ்னவி”யின் இந்திய படையெடுப்புக்குப் பிறகு இங்கு ஏராளமான முஸ்லிம் மகான்கள் மதப் பிரச்சாரம் செய்ய இந்தியா வந்தனர்.
அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ‘சையது அலீ இப்னு உஸ்மான் அல்ஹூஜ்வீரீ’ ரஹ் ஆவார்கள். கஜினியில் பிறந்த இவர்கள் இஸ்லாமிய நாடுகளில் பிரச்சாரம் செய்து லாகூர் வந்து தங்கி மார்க்கப் பிரச்சாரம் செய்து அங்கேயே இறப்பெய்தினார்கள்.
இவர்களின் கரம் பற்றி லாகூரின் ஆளுநர் ‘ராய் ராஜா’ என்பவர் இஸ்லாத்தை தழுவினார்.
மேலும் ‘ஸையத் அஹ்மத்’ என்ற ஷைகு அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்களின் சீடர் இந்தியாவில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்கள். இவர்களின் கரம் பற்றி இலட்சக்கணக்கான மக்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். மக்கள் இவர்களை “ஸ(கீ)ஹீ ஸர்வர்” (தர்மப்பிரபு)”லாக் தாதா”
(இலட்சம் அறம் செய்தவர்) என்றும் பிரியமுடன் அழைத்தனர்.
கி.பி 1197 – ல் காஜா முயீனுத்தீன் சிஸ்தீ ரஹ் அவர்கள் இந்தியா வந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்கள் அவர்கள் கரம் பற்றி 90 இலட்சம் நபர்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். கி.பி 1234 – ல் இவர்கள் அஜ்மீரில் வஃபாத்தானார்கள்.
இவர்கள் தவிர 13 – ம் நூற்றாண்டில் குத்புத்தீன் பக்தியார் காக்கீ (ரஹ்), பஹாவுத்தீன் ஜகரிய்யா (ரஹ்), ஜலாலுத்தீன் ஷர்க்கு போஸ் (ரஹ்) போன்றோரும், கி.பி 16 – ம் நூற்றாண்டில் முஹம்மத் கௌஸ் குவாலியரீ (ரஹ்) அவர்களும் இந்தியாவில் இஸ்லாம் தளர முக்கியப் பங்காற்றினார்கள்.
தமிழகத்தில் ஏர்வாடி ஷஹீத் இப்ராஹீம் பாதுஷா ரஹ் அவர்கள், நாகூர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ரஹ் அவர்கள், திருச்சி நத்ஹர் வலீ ரஹ் போன்றோர்கள் இஸ்லாமிய வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்காற்றினார்கள்.
இந்த மகான்கள் எல்லாம் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள் அல்ல அரச குடும்பத்தில் பிறந்து மார்க்கப் பணிக்காக உலக ஆடம்பரங்களை துறந்தார்கள்.
ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ரஹ் அவர்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் திருப்பரம்பரையில் வந்தவர்கள்.
ஏர்வாடி ஸையது இப்ராஹீம் பாதுஷா ரஹ் அவர்களின் தந்தை மொரோக்கோவின் ஆளுநராக இருந்தவர். சிலுவைப் போர் உள்ளிட்ட நிறைய ஜிஹாத்களில் பங்கேற்று இறுதியாக மதுரையில் ஆட்சியாளராக இருந்து கொண்டு மார்க்கப் பிரச்சாரம் செய்து வந்த போது பாண்டிய மன்னர்களோடு ஏற்பட்ட யுத்தத்தில் ஷஹீதானார்கள்.
திருச்சி நத்ஹர் ஷாஹ் வலீ ரஹ் அவர்களின் தந்தை “அஹ்மத் கபீர்” சிரியா நாட்டின் அரசராக இருந்தார்கள். இவர்களுக்கு ஏழு வயது இருக்கிற போது தந்தை இறப்பை தொடர்ந்து அரியணை ஏறினார் பதினைந்து ஆண்டுகள் அரசாண்ட பின்னர் ஒரு நாள் உலகில் சுகபோகமாக வாழ்ந்த மன்னர் ஒருவர் நரகில் வேதனை செய்யப் படுவதைப் போல கனவு காண்கிறார் அதற்கு பின் சொத்து சுகங்களை துறந்து தனது இளைய சகோதரரை அரசாளச் செய்து விட்டு ஹஜ்ஜூக்காக மக்கா சென்று விட்டு மதீனாவில் நபிகள் நாயகம் ஸல் அவர்களை ஜியாரத் செய்து விட்டு கனவில் நபிகளாரின் உத்தரவுக்கிணங்க தமிழ் நாடு வந்து தீன்பணி செய்தார்கள் திருச்சியில் மார்க்கப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த அவர்கள் அங்கேயே மரணித்து அடக்கமானார்கள்.
(நூல்: இஸ்லாமிய கலைக் களஞ்சியம்)
மேலும் இந்தியாவில் இஸ்லாம் ஸ்தரம் பெறுவதற்கு ஆலிம்களின் மார்க்கக் கல்வியை போதித்த சேவை முக்கியத்துவம் வாய்ந்தது.
காஜீ முபாரக் ரஹ் அவர்களின் மாணவர்களான ஷைகு ஷாஹ் வலிய்யுல்லாஹ் தெஹ்லவீ ரஹ்,
ஷைகு அப்துல் அஜீஜ் தெஹ்லவீ ரஹ், ஷைகு ரஃபீவுத்தீன் ரஹ், ஷைகு அப்துல் காதிர் ரஹ், ஷைகு அப்துல் ஹை ரஹ், ஷைகு இஸ்மாயீல் ரஹ், ஷைகு முஹம்மத் இஸ்ஹாக் ரஹ் ஆகியவர்கள் இந்தியாவில் தீன் கல்வி கற்றுத் தந்து இஸ்லாம் நிலை பெற பெரும் முயற்சி கொண்டார்கள். இவர்களின் வழியில் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் மார்க்கத்தை பாதுகாக்கும் பொருட்டு வட இந்தியாவில் 19 – ம் நூற்றாண்டில் துவக்கப் பட்ட தாருல் உலூம் தேவ்பந்த் சர்வ கலா சாலை இந்திய முஸ்லிம்களின் ஈமானை பாதுகாக்க பெரும் பங்காற்றியது இன்றளவும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது. ( நூல் : அல் – முஸ்லிமூன ஃபில் ஹிந்த் )