இந்தியாவில் இஸ்லாம் வந்த வரலாறு

 

*தீரர் திப்பு சுல்தான் ரஹ் அவர்கள்.

இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்களில் மைசூரை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த தீரர் ஹைதர் அலீயின் தவப் புதல்வர் திப்பு சுல்தான் ரஹ் அவர்கள். ஆற்காடு “திப்பு ஷா” வலியின் நினைவாக இவருக்கு இப்பெயரை பெற்றோர்கள் சூட்டினார்கள். இவர் கி.பி 1750 – ல் மைசூரில் பிறந்தார். கி.பி 1767 – ல் தனது 17 – ம் வயதிலேயே இவருக்கு இராணுவத்தில் பணியாற்ற பொறுப்பு கொடுக்கப்பட்டது. இளம் பருவத்தில் ‘காஜீகான்’ என்ற இராணுவ கமாண்டரிடம் இராணுவப் பயிற்சி பெற்றார். தனது தந்தைக்கு உறுதுணையாக இராணுவத்தில் பணியாற்றினார்.
இளமையிலேயே கன்னடம் , உர்தூ, ஃபார்ஸீ ஆகிய மொழிகளை கற்றுத் தேறினார்.
தனது தந்தை இறந்த 4 – ம் நாளில் 1782- ல் தனது 32 – ம் வயதில் மைசூரு மன்னராக முடி சூடினார். இவரது அரசாங்கத்தின் வடக்கு எல்லையாக கிருஷ்ணா நதியும், தெற்கு எல்லையாக திருவாங்கூரும், கிழக்கு எல்லையாக கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்கு எல்லையாக அரபிக் கடலும் ஆகியிருந்தது.
ஷஹீத் திப்பு சுல்தான் ரஹ் அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான தன் யுத்தத்தை “ஜிஹாத்” என்றே கருதி வந்தார்கள்.
ஆங்கிலேயர்களுக்கெதிரான போரில் தனக்கு உதவி செய்ய காபூல் – வெர்சேல்ஸ் -மொரீசியஸ் – துருக்கி ஆகிய பகுதிகளுக்கெல்லாம் தூதுவர்களை அனுப்பி வைத்தார். ஆங்கிலேயரை தாம் பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கும் வரை தான் பஞ்சு மெத்தையில் படிப்பதில்லை என்று சூளுரைத்து கூடாரம் தைக்கப் பயன்படுத்தும் முரட்டுத் துணியில் படுத்துறங்கினார்.

1789 – ம் ஆண்டு திருவாங்கூர் மீது திப்பு சுல்தான் படையெடுத்த போது 1784 – ம் ஆண்டு தங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை திப்பு முறித்து விட்டார் என்று கூறி ஆங்கிலேயர்கள் மராட்டியர்களையும் நிஜாமையும் உதவிக்கு அழைத்துக் கொண்டு தாக்குதல் தொடுத்தனர் ஆம்பூரில் நடந்த போரில் திப்பு தோல்வியுற்றார். இதைத் தொடர்ந்து ‘கார்ன் வாலிஸ் பிரபு’ ஸ்ரீரங்கப் பட்டணத்தில் திப்புவின் அரண்மனையை முற்றுகையிட்டார். அச்சமயம் திப்பு தனது அரசாங்கத்தில் பாதியையும், 30 இலட்சம் ரூபாயும் தருவதாகக் கூறி உடன்படிக்கை செய்து தனது மகன்களான முஙிஜ்ஜூத்தீன் , அப்துல் காலிக் இருவரையும் அடைக்கலம் வைத்தார்.

பின்னாளில் அவர்களை மீட்டெடுத்த பின்பு பிரெஞ்சுப் படையுடன் சேர்ந்து கொண்டு ஆங்கிலேயரை எதிர்த்தார்.
இவரின் அலுவலர்களான திவான்பூர் – பூர்ணையா – மீர் சாதிக் – மீர் குலாம் அலீ போன்றோர் இவருக்கு செய்த துரோகத்தால் 18 – ம் நூற்றாண்டிலேயே விரட்டியடிக்கப் பட்டிருக்க வேண்டிய ஆங்கிலேயர்கள் மேலும் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக நம்மை அடிமைப்படுத்த காரணமானது.

ஆம்! 1799 மே 4 -ல் முன்னரே தீட்டிய திட்டப்படி படை வீரர்களுக்கு சம்பளம் தரப்படுவதாக “மீர் சாதிக்” அறிவிப்புச் செய்ய படைவீரர்கள் முண்டியடித்துக் கொண்டு ஓரிடத்தில் ஒன்று கூட ஆங்கிலேயப் படை ஸ்ரீரங்கப் பட்டணக் கோட்டையை முற்றுகையிட்டது.
அவ்வமயம் உணவருந்திக் கொண்டிருந்த திப்பு அக்கனமே களமிறங்கி ஒரு சாதாரண போர் வீரர் போல ஆங்கிலேயரை எதிர்த்து போர் செய்து ஷஹீதானார்.
“ஒரு நூறு ஆண்டுகள் நரி போன்று வாழ்வதை விட ஒரு நாள் புலி போல் வாழ்வது மேல்” என்று அவர் அடிக்கடி சொல்வது போல அவரது வாழ்க்கையின் முடிவும் அமைந்தது.
இவருடைய இறப்பு உறுதி செய்யப்பட்ட பின் ‘ஜெனரல் ஹார்ஷ்’ என்ற ஆங்கிலத் தளபதி ” இன்றிலிருந்து இந்தியா நம்முடையது” என்று கூறினார்.

முஸ்லிம்களின் ஆட்சியில் இந்திய

மக்களின் மனநிலை :-

முஸ்லிம்களின் ஆட்சியில் இந்திய மக்கள் மிகவும் நிம்மதியாக வாழ்ந்தார்கள்.
ஏனெனில் முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்த மண்ணை அந்நிய பூமியாக கருதவில்லை தங்களது சொந்த மண்ணைப் போல கருதி இங்கேயே திருமணம் முடித்து கோட்டைகள் கட்டி ஆட்சி செய்தார்கள். எனவே இங்கிருந்து எதையும் அவர்கள் தங்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை. இந்த மண்ணின் வளத்தை பெருக்கினார்கள். அணைகள் கட்டி, குளங்கள் வெட்டி நீராதாரத்தை பாதுகாத்தார்கள். பூங்காக்கள்,சாலைகள் அமைத்து நாட்டை அழகுபடுத்தினார்கள்,
பிரயாணிகள் வசதிக்காக ஆங்காங்கே நிழற்குடைகள் மற்றும் முஸாஃபிர் கானா ஏற்படுத்தினார்கள். சிறுபான்மை மக்களை அரவணைத்து பாதுகாத்தார்கள்.
எனவே இன்றளவும் அவர்களின் கோட்டைகள் இம்மக்களால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. முகலாயர்களின் நினைவுச் சின்னங்கள், திப்பு சுல்தான் அரண்மனைகள் இதற்கு பெரும் சாட்சியாக திகழ்கிறது.

கர்நாடக அரசாங்கமே திப்பு சுல்தான் பிறந்த தினத்தை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தது. அவர்களின் பாட புத்தகத்தில் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் திப்பு சுல்தான் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.

முஹம்மத் இப்னு காசிம் ரஹ் அவர்கள் இந்தியாவில் இருந்து தன் நாட்டுக்கு கிளம்ப முற்பட்ட போது அந்த மக்கள் எங்கள் ஆட்சியாளர்களின் அநீதத்திலிருந்து நாங்கள் இப்போத தான் நாடு மீண்டிருக்கிறோம் என்ற கூற்றும் இதை மெய்ப்படுத்துகிறது.

மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருஜி அவர்கள் தாங்கள் எழுதிய “DISCOVERY OF INDIA” என்ற நூலில் “இந்திய மக்கள் எங்களுக்கு நியாயம் வேண்டும் நீதி வேண்டும் என்று மற்ற மதங்களை ஏற்றுக் கொண்டு ஏமாற்றம் அடைந்த போது அந்த மக்களுக்கு இஸ்லாம் தான் சமத்துவத்தை நீதியை நியாயத்தை கொடுத்தது” என்று குறிப்பிடுகிறார்.
(நூல் : இஸ்லாமிய கலைக் களஞ்சியம்)