ஆயிஷா பள்ளியில் ஆண்கள் இஹ்ராம் ஏன் அணிய கூடாது.

 

கேள்வி:  தற்போது ஹஜ் உம்ரா சர்வீஸ் நடத்துபவர்கள் ஆயிஷா பள்ளிக்குச் சென்று ஆண்கள் இஹ்ராம் கட்டக் கூடாது.  பெண்கள் மட்டுமே அங்கு சென்று இஹ்ராம் கட்ட வேண்டும் என்று கூறுகிறார்களே இது குறித்து முழுமையான விளக்கம் தரவும்?

எஸ். உபைதுர் ரஹ்மான், தொண்டி

பதில்: நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்ய வந்தபோதுதான் திடீரென ஆயிஷா (ரளி) அவர்களுக்கு உதிரப் போக்கு (மாதவிடாய்) ஏற்பட்டு விட்டது. அது சுத்தமாகும் வரை ஓர் இடத்தில் தங்கினார்கள். அதன் பின் தனது சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் அபூ பக்ர்(ரளி) அவர்களுடன் தன்யீம் என்ற இடத்திற்குச் சென்று குளித்து விட்டு இஹ்ராம் கட்டி வருமாறு நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். (முஸ்லிம்- 2298, புகாரி – 1556)

ஹஜ் செய்ய வந்தபோது தனக்கு ஏற்பட்ட மாதவிடாய் சுத்தம் ஆகின்றவரை தங்கிய இடம்தான் இன்றைய எல்லையாக மாற்றப்பட்டிருக்கும் ஆயிஷா பள்ளியாகும்.  நபி(ஸல்) அவர்களுடன் ஏற்கனவே உம்ரா செய்யும் எண்ணத்துடன் இஹ்ராம் அணிந்து வந்துள்ளார்கள்.  அதன் பின் அவர்கள் சுத்தமான பின் தனது சகோதரருடன் தன்யீம் என்ற இடத்திற்கு அனுப்பிதான் மீண்டும் இஹ்ராம் கட்டி ஹஜ், கடமைகளை நிறைவேற்ற நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

எனவே ஆயிஷா பள்ளி என்பது மாதவிடாய் வந்த பெண்கள் தங்குமிடமாக வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அல்லது மாதவிடாயிலிருந்து சுத்தமான பின் குளிக்கும் இடமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் எல்லையாக அமைக்க முடியாது.

எனவே இந்தியாவிலிருந்து புறப்பட்டு செல்வோர் மக்காவில் இஹ்ராம் அணிய நாடினால் தன்யீம் என்ற இடத்தில் இஹ்ராம் அணிவதே சுன்னத்தாகும்.  இப்போது நடைமுறையில் இருக்கும் ஆயிஷா பள்ளியில் இஹ்ராம் அணிவதற்கு காரணம் அங்கு குளித்து தூய்மையாகி இஹ்ராம் அணிவதற்கு போதிய வசதிகள் இருப்பதால் ஆண்கள் பெண்கள் இருபாலரும் அங்கேயே இஹ்ராம் அணிகிறார்கள்.  உண்மை இப்படி இருக்க பெண்களுக்கு மட்டும் அங்கு அனுமதி ஆண்களுக்கு அனுமதியில்லை என்ற சட்டத்தை எப்படி ஏற்படுத்தியுள்ளார்கள் என்று அவர்கள் தான் அறிவர்.