அருள்மறை அறிய அரபி மொழியின் அவசியம்

 

அருளாளன் அல்லாஹ் அவனிக்கு அருளிய அளப்பரிய அருட்கொடை அருள்மறை அல்குர்ஆனாகும். அல்குர்ஆனை அறிவதும், அதன் ஆழமான அர்த்தங்களை விளங்குவதும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் அவசியம் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க இயலாது. மனித குலத்திற்கு தான் வழங்கிய இந்த அருள்மறை தெளிவான வசனங்களை உள்ளடக்கியது என்பதை வல்லான் அல்லாஹ் பல இடங்களில் குறிப்பிட்டுக் காட்டுகிறான்.

‘இன்னும், இதே விதமாக நாம் (குர்ஆனை) தெளிவான வசனங்களாக இறக்கியிருக்கின்றோம்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் தாம் நாடியவர்களை (இதன் மூலம்) நேர்வழியில் சேர்ப்பான்’. (அல்குர்ஆன் 22:16)

மேலும் இறைவசனங்களை விளங்க வேண்டும், அதன் கருத்துகளை ஆய்வு செய்ய வேண்டும், அதன் மூலமாக பல்வேறு படிப்பினைகளை மாந்தர் பெற வேண்டும் என்பதையும் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.

‘(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் – அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்’. (அல்குர்ஆன் 38:29)

ஆக ஒரு இஸ்லாமியன் நல்லுணர்வு பெற வேண்டும், இஸ்லாமிய அடிப்படைச் சித்தாத்தங்களையும் படிப்பினைகளையும் தெரிந்து அவற்றை தம் வாழ்வில் பின்பற்ற வேண்டும் எனில் அவன் அவசியம் அருள்மறை வசனங்களை படித்து, அறிந்து தெளிய வேண்டும். அருள்மறையை முழுவதுமாக வாசித்து அதன் அர்த்தங்களை விளங்க வேண்டும்.

ஆனால் அருள்மறையை அறிவதற்கும் அதனை விளங்குவதற்கும் அரபி மொழியை அறிந்திருக்க வேண்டும் என்பது அவசியம்தானா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். தகவல் தொழில் நுட்பம் விண்ணை முட்டிக் கொண்டு அதனையும் தாண்டிச் செல்ல முடியுமா என்று உந்திக் கொண்டிருக்கக் கூடிய இன்றைய நவீன யுகத்தில் மொழி பெயர்ப்புகள் என்பது சர்வ சாதாரணமான விஷயம். முந்தைய காலங்களைப் போன்று ஒரு மொழியிலிருந்து மற்றோர் மொழிக்கு மாற்றம் செய்ய மனிதர்களின் துணையே தேவையில்லை. இயந்திரங்களே அப்பணியை செய்து விடுகின்றன. அதற்காக வேண்டியே பிரத்தியேகமான செயலிகள் உருவாக்கப்பட்டும், செயல்படுத்தப்பட்டும் வருகின்றன என்பது ஊரறிந்த உண்மை. அல்குர்ஆனைப் பொருத்தவரை, ஆங்கிலம் மட்டுமல்லாது இத்தாலி, ஜெர்மன், பிரஞ்சு என ஆரம்பித்து இந்தோனேசியாவில் உள்ள ஜாவா என்ற மொழி வரை ஏறத்தாழ உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இப்படி பல்வேறு விதமான வசதிகள் பெருகியிருக்கக்கூடிய இக்காலத்தில் அரபி மொழி அறிந்தால்தான் அருள்மறையை விளங்க முடியுமா? மொழி பெயர்ப்புகள் மூலம் அர்த்தங்களை விளங்க இயலாதா? ஏனைய நூல்களை மொழி பெயர்ப்பதின் மூலம் விளங்க முடியுமெனில் அதே அளவுகோலை ஏன் குர்ஆன், ஹதீஸிற்கும் வைக்கக் கூடாது? தவறுகளும் சரியானவையும் கலந்துள்ள மனிதர்கள் எழுதிய அரபு மொழி நூல்கள் தமிழாக்கம் செய்யப்பட்டால் விளங்க முடியும் என்கிற பட்சத்தில் தவறே இல்லாத முற்றிலும் சரியாகவே உள்ள குர்ஆன், ஹதீஸ்கள் தமிழாக்கம் செய்யப்படும் போது ஏன் விளங்க முடியாது? மொழி பெயர்ப்புகளில் மொழி பெயர்த்தவர்களின் கவனக் குறைவினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ சில தவறுகள் ஏற்படலாம். குர்ஆன், ஹதீஸ் மட்டுமின்றி அனைத்து விதமான மொழி மாற்றத்தின் போதும் இது ஏற்படத்தான் செய்யும். இதை அரபி மொழியறியாதவர்களால் சில நேரங்கள் கண்டுபிடிக்கப் படாமலும் போகும். ஆனால் அதற்காக குர்ஆன், ஹதீஸை மொழி பெயர்க்காமல் விட்டு விட முடியுமா? அரபி மொழியை அறிந்தால்தான் அல்குர்ஆனை விளங்க முடியும் என்பது அறிவுப் பூர்வமானதுதானா? இவ்வாறு அடுக்கடுக்கான வினாக்களைத் தொடுக்கின்றனர் சில மெத்த படித்த மே(ல்)தாவிகள்… அவர்களுக்கு சில விளக்கங்களை தர வேண்டும் என்ற உந்துதலின் விளைவாகவே இந்தக் கட்டுரை தொகுக்கப்படுகின்றது.

அல்லாஹ் குர்ஆனை தாம் இறக்கி வைத்தது குறித்து கூறும்போது ‘நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம’;. (அல்குர்ஆன்: 43:3) மேலும் அரபி மொழியில் தாம் அருள்மறையை அருளியதின் சூட்சுமத்தைப் பின்வருமாறும் குறிப்பிடுகிறான். ‘(நபியே!) நாம் இ(வ் வேதத்)தை உம்முடைய மொழியில் (அருளி) எளிதாக்கியதெல்லாம், இதைக் கொண்டு நீர் – பயபக்தியுடையவர்களுக்கு நன்மாராயங் கூறவும், முரண்டாக வாதம் செய்யும் மக்களுக்கு இதைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமேயாகும். (அல்குர்ஆன்: 19:97)

ஆகவே அரபி மொழியை அறியாதவரால் அல்குர்ஆனை முழுவதுமாக விளங்க முடியாது என்பதை மேற்குறிப்பிடப்பட்ட வசனங்கள் தெளிவாக்குகின்றன. மேலும், அருள்மறையை விளங்குவதற்கும் அரபி மொழி கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் என்ற செய்தியும் தௌ;ளத் தெளிவாகிறது. இதன் காரணமாகவே அருள்மறையை விரிவுரை செய்வதற்கும், நபிமொழிகளுக்குத் தெளிவுரை எழுதுவதற்கும் அரபி மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதை மார்க்க அறிஞர்கள் நிபந்தனையாக ஆக்கி வைத்துள்ளார்கள். அரபி மொழித் திறன் மிக்கவரால் மட்டுமே அல்லாஹ் ஒரு குறிப்பிட்ட வசனத்தில் என்ன பொருளை வைத்துள்ளான் என்பதைத் தெளிவாக விளங்க முடியும்.

அரபி மொழியின் மகத்துவம்:

மொழிகளுக்கெல்லாம் தலையாய மொழி அரபி மொழி என வரலாற்றாய்வளார்களால் கருதப்படுகிறது. ஆதம் (அலை) சுவனத்தில் பேசிய மொழி அரபி மொழி என்று இமாம் இப்னு அஸாகிர் (ரஹ்) பதிவு செய்கிறார்கள். இமாம் இப்னு கஃதீர் (ரஹ்) அவர்கள் அரபி மொழியில் அருள்மறை இறக்கப்பட்டது குறித்து விளக்குங்கால், ‘உலகில் உள்ள மொழிகளில் மிகச்சிறந்ததும், தெளிவானதும், விசாலமான உள்ளடக்கத்தைக் கொண்டதும், அதிகமான அர்த்தங்களை எளிய முறையில் மனங்களில் பதியச் செய்ய ஏதுவாக அமைவதும் அரபி மொழியே ஆகும். எனவேதான் மிகச் சிறப்பான வேதத்தை மிகச்சிறப்பான மொழியில் மிகச் சிறப்பான தூதருக்கு மிகச்சிறந்த மலக்கு மூலம் அல்லாஹ் வழங்கினான். அது இறக்கப்பட்டதும் மிகப் புனிதமான பூமியான மக்கமாநகராகும். மேலும் அது இறக்கப்பட்ட மாதமும் புனித ரமளான் மாதமாகும். ஆகவே இது எல்லா வகையிலும் பரிபூரணமாக அமைந்துள்ளது’ என்று கூறுகிறார்கள்.

அருள்மறையை பாதுகாக்கக் கூடிய ஒரு சாதனமாக அரபி மொழியை அல்லாஹ் ஆக்கி வைத்துள்ளான். எவ்வாறு அது இறக்கப்பட்டதோ அதே போன்று இம்மியளவும் மாறாமல் இன்று வரை நிலைத்துள்ளது. மறுமை நாள் வரைக்கும் அவ்வாறே நிலைத்தும் இருக்கும். இன்னும் சொல்வதென்றால், அரபி மொழி வளர்ச்சிக்கு அல்குர்ஆன் மகத்தான பங்கு வகித்துள்ளது.

அரபி மொழி இலக்கிய வளர்ச்சியில் அல்குர்ஆனின் பங்கு:

இஸ்லாமிய மார்க்கம் அரபின மக்களுக்கு இடையே காணப்பட்ட கோத்திர, குழு ரீதியான வெறியுணர்வை ஒழித்து ஓர் உயரிய சமூகத்தைக் கட்டியெழுப்பியது. அச்சமூகத்தில் மலிந்து காணப்பட்டக் குழப்பங்கள், காட்டு மிராண்டித்தனம், சிலை வணக்கம் போன்றவற்றிலிருந்து அவர்களை மீட்டெடுத்து உன்னதமானவர்களாக மாற்றியது. அவர்களிடையே சாந்தி, சமாதானம், அமைதி, சுபிட்சம், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் போன்றவற்றை ஏற்படுத்தியது.

இத்தகைய சமூக மாற்றம் அரபி மொழி இலக்கியத்திலும் மிகப்பெரிய மாற்றங்களைத் தோற்றுவித்தது. எனவே, இஸ்லாமின் வருகைக்குப்; பின்னர் இலக்கிய கருப் பொருட்களாக இழிவான விடயங்கள் நீங்கி உன்னதமான விடயங்கள் இடம் பிடித்துக் கொண்டன. அரபி மொழி இலக்கியத்தின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் தன்னுடைய மகத்தான பங்களிப்பை இஸ்லாம் வழங்கியது. அது அல்குர்ஆன் மூலமாக ஒரு புதிய மொழி வடிவத்திற்கு வழி திறந்தது. குர்ஆனின் வருகையானது அரபி செய்யுள் வடிவத்திற்கு புதிய வடிவத்தை கொடுத்தது. அதன் நீண்ட வசனங்கள் அரபிக் கவிதை உருவாக்கத்திற்கான வாசலைத் தள்ளி விட்டன.

இதன் காரணமாகவே, அருள்மறை அல்குர்ஆன் அரபி இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்பாக கருதப்படுகின்றது. அல்குர்ஆனின் இலக்கிய நடை ‘நஸ்ர்’ எனப்படும் உரை நடை மட்டுமோ அல்லது ‘நழ்ம்’ எனப்படும் செய்யுள் நடை மட்டுமே சேர்ந்தது அல்ல. மாறாக, இரண்டும் இணைந்ததாகும். அல்குர்ஆனின் பலாகா (அணியிலக்கணம் மற்றும் இலக்கிய நயம்) மற்றும் பயான் (மொழி வளம் மற்றும் அர்த்தச் செறிவு) ஆகியவற்றுக்கு நிகராக அந்த மொழியில் மட்டுமல்ல, உலகில் உள்ள வேறு எந்த மொழியிலும் கிடையாது என்பதை உறுதியாகக் கூறலாம்.

எனவேதான், அல்குர்ஆனை ஓதுவதனை செவிமடுத்த குறைஷிக் கூட்டத்தின் தலைவர்களில் ஒருவரான வலீத் பின் முகீரா தனது குழுவினரிடம் பின்வருமாறு கூறினார்:

لقد سمعت من محمد كلاما ماهو من كلام الإنس والجن وإن له لحلاوة وان وإن عليه لتلاوة وإن أعلاه لمثمر وإن أسفله لمغدق وانه ليعلو ولا يعلي عليه

‘நான் முஹம்மது (ஸல்) அவர்களிடமிருந்து சில வாக்கியங்களைக் கேட்டேன். அது மனிதனின் பேச்சல்ல. ஜின்களின் பேச்சுமல்ல. அது இனிமையானது. சுவையான தேனைப் போன்றது. உன்னதமான உரைநடை கொண்டது. அதன் மேற்பரப்பு மலையை விட உயரமானது. அதன் அடிப்பரப்பு கடலை விட ஆழமானது. ஆதலால் அது வெற்றியின் சிகரத்தை அடைந்தே தீரும். அதனை வெல்ல யாராலும் முடியாது.’  நூல்: நூருல் யகீன், ஹாகிம், பைஹகீ

இதனால் தான் அல்குர்ஆன் பின்வருமாறு சவால் விடுகிறது :

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து, சிலர் சிலருக்கு உதவியாக இருந்து இதைப்போன்ற ஒரு குர்ஆனைக் கொண்டுவர முயற்சித்தபோதிலும் இதைப்போல் கொண்டுவர அவர்களால் (முடியவே) முடியாது. (அல்குர்ஆன்: 17-88).

‘நாம் (நமது தூதர் முஹம்மது என்னும்) நமது அடியாருக்கு இறக்கிய இ(வ்வேதத்)தில் நீங்கள் சந்தேகப்பட்டு (இது அல்லாஹ்வினால் அருளப்பட்டதல்ல என்று கூறுகின்ற) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர உங்களை ஆமோதிப்பவர்களையும் (திறமையாளர்களையும், உதவியாளர்களையும்) நீங்கள் அழைத்து(ச் சேர்த்து)க்கொண்டு இதைப் போன்ற ஒரு அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டு வாருங்கள்’. (அல்குர்ஆன்: 2-23)

அரபிகள் மத்தியில் மொழியில் பாண்டித்யம் பெற்ற வல்லுனர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் என பலர் நிறைந்திருந்தனர். இலக்கண இலக்கியத்தில் தன்னிகரற்று விளங்கினார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் கவிதைகள் எழுதும் ஆற்றல் பெற்ற ஒருவராவது இருப்பார். அதன் காரணமாக தங்களுக்குள் பெருமை பாராட்டிக் கொண்டிருந்தனர், தங்களுடைய சிறப்பம்சமாக அரபி மொழியைக் கருதினர். இருந்தபோதும் அவர்களால் அல்குர்ஆனைப் போன்று ஒரு அத்தியாயத்தை மட்டுமல்ல ஒரு வசனத்தையேனும்; கொண்டு வர முடியவில்லை. பல அறிஞர்கள் முயன்றும் குர்ஆனைப் போன்று என்று சொல்லி சில உளறல்களை மட்டுமே கொண்டு வந்தனர்.

அல்குர்ஆன் அரபி இலக்கியத்தில் பின்வரும் மாற்றங்களைச் செய்தது எனலாம். அல்குர்ஆனின் மொழி குறைஷிகளின் மொழியாக இருந்தமையால், அம்மொழி இலக்கிய மொழியாக மாறியது. ஒருமித்த அரபி மொழியை அனைவரும் பயன்படுத்த வழிவகுத்தது. மனிதன் எங்கு வாழ்ந்தாலும் அல்குர்ஆனை அரபி மொழியிலேயே ஓத வேண்டும் எனப் பணித்தது. அதுமட்டுமல்லாது, இலக்கிய கருப் பொருட்கள் புதியதாயின. புதிய சொற்கள் அறிமுகமாயின. அல்குர்ஆனின் அணி இலக்கணம், உயர் இலக்கிய நடை, வார்த்தை வளம், மொழி நயம் போன்றவற்றால் மக்கள் கவரப்பட்டனர். அதனால் அல்குர்ஆனின் கருத்துகள், சொற்கள் கவிதைகளில் கையாளப்பட்டன.

இவ்வாறு, அரபி மொழியை சாகாவரம் பெற்ற மொழியாக அல்குர்ஆன் மாற்றியது. அரபி மொழியின் போக்கை மிகத் தெளிவாக வரையறுத்தது. பழைய இலக்கிய நடைகளில் இருந்து அதன் நடையை ஒழுங்குபடுத்தியது. கருத்து ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஆழம், நுட்பம், ஒழுங்கு போன்றவை பேணப்பட்டன. நாகரிகமற்ற ஜாஹிலியா காலக்கருத்துகள் புறந்தள்ளப்பட்டன. கோத்திர வெறி, அளவுக்கு மீறிய புகழ் மற்றும் இகழ் கைவிடப்பட்டு தூய்மை, நன்மை போன்றவற்றுக்கு முதலிடம் வழங்கப்பட்டது.

அரபி மொழி கற்பதின் சட்டம்:

ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிற்குப் பின்னர் அரபி மொழியில் புத்தகங்கள் எழுதுவதற்கு பல அறிஞர்கள் தலைப்பட்டனர். அப்பாஸிய கலீஃபாக்கள் காலத்தில் அரபி இலக்கியம் உச்சத்தைத் தொட்டது. இக்காலக் கட்டத்தில்தான் உலகின் பல்வேறு கலாச்சாரத்தை சேர்ந்த நூல்களும், தொன்மங்களும், வரலாறுகளும், புராணங்களும் அரபி மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டன.

இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக புத்தகங்கள் எழுதும் கலை பரிணாம வளர்ச்சிப் பெற்று வளர்ந்தது. அரபி மொழி நூல்களில் முன்னிலை வகிப்பது குர்ஆனின் விரிவுரைகளான தஃப்ஸீர்களாகும். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களின் சீடர்களே பெரும்பாலும் அருள்மறையின் தெளிவுரையை எழுதத் தலைப்பட்டவராவர்.

இஸ்லாமிய மார்க்கத்தின் இபாதத் மற்றும் முஆமலாத் எனப்படும் அடிப்படை மார்க்கச் சட்ட நூல்களைப் பொருத்தவரை, சட்ட நூல்களை தொகுக்க வேண்டும் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் முதன் முதலாக அதை எழுதியவர் இமாம் ஷாஃபிய்யி (ரஹ்) அவர்களாவர். ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் அன்னார் எழுதிய ‘அர் ரிஸாலா’ எனப்படும் நூல் அப்துர் ரஹ்மான் இப்னு மஹ்தி மூலமாக மக்களின் கரங்களுக்கு போய் சேர்ந்தது. அந்நூலில் அரபி மொழி அறிவதின் அவசியத்தைப் பாங்குற தெளிவுப் படுத்தியுள்ளார்கள்.

அரபி மொழியைப் போதிய அளவில் தெரிந்தால் போதும் என்ற நிலையில் உள்ள முஸ்லிம்கள், குர்ஆன் ஹதீஸை தீவிரமாக ஆராய்ச்சி செய்ய வேண்டிய நிலையில் உள்ள முஸ்லிம்கள் என்று இஸ்லாமிய சமுதாயத்தை இரண்டு வகையினராக பிரிக்கிறார்கள். முதல் வகையைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

‘ஏகத்துவத் திருக்கலிமாவின் அர்த்தத்தைப் புரிவதற்கும், அருள்மறையை ஓதுவதற்கும், திக்ரு மற்றும் தஸ்பீஹ்கள் செய்வதற்கும் தேவையான அளவிற்கு அரபி மொழியை அறிவதற்கு ஒவ்வொரு முஸ்லிமும் இயன்ற அளவு முயற்சிக்க வேண்டும்;’ (அர் ரிஸாலா, பக்கம்: 84). இமாம் ஷாஃபியைப் பொருத்தவரை எந்த ஒரு காரியம் ஃபர்ளான கடமையை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக உள்ளதோ, அதைத் தெரிவதும் கடமையாகும். அந்த அடிப்படையிலேயே அரபி மொழியை குறைந்த பட்சம் ஓதத் தெரிவது அவசியம் என்கிறார்.

அதைத் தொடர்ந்து சொல்லும் போது, ‘யார் அதை விட அதிகமாக அருள்மறை அருளப்பட்ட அரபி மொழியை மென்மேலும் விளக்கத்துடன் கற்பாரோ, அவருக்கு அதிக நன்மை கிடைக்கும். ஆனால் அது கடமையல்ல, மேல் மிச்சமானதே. அவ்வாறு ஆழமான முறையில் அரபி மொழியைக் கற்காதவர் பின்பற்றப்படுபவர் அல்ல, (மாறாக) அவர் பின்பற்றுபவராகும்’ என்று பதிவு செய்கிறார்.

இதன் மூலம் இரண்டு கருத்துகள் தெளிவாகின்றன. முதலாவது, அரபி மொழியைக் கற்பது இறைவனிடம் நன்மையைப் பெற்றுத் தரக்கூடிய கடமையாகும். இரண்டாவது, அரபி மொழியை ஆழமாகக் கற்பது அனைவரின் மீதும் கடமையல்ல. அவ்வாறு அருள்மறையின் விளக்கங்களை ஆழமாக அறிய முற்படுபவர் அறிஞர் பெருமக்களின் உதவியை நாட வேண்டும். ஏனெனில் அரபி மொழியின் நுட்பங்களை அறியாதவரால் சரியான பொருளை வைக்கவோ விளக்கவோ முடியாது என்று இமாம் ஷாஃபி (ரஹ்) ஆணித்தரமாக பின்வருமாறு எடுத்துரைக்கிறார்கள்.

‘அரபி மொழியின் அதிகமான கோணங்களையும், அதன் நுட்பமான பல்வேறு விதமான அர்த்தங்களையும் தெளிவாக வலியுறுத்தும் அரபி மொழியின் அடிப்படை இலக்கண இலக்கியத்தைக் கற்காதவரால் அல்குர்ஆனின் வசனங்களுக்கு சரியான பொருளை வைக்க இயலாது. யார் சரியான முறையில் அரபி மொழியைக் கற்கிறாரோ, அரபி மொழியை அறியாதவரிடத்தில் ஏற்படும் சந்தேகங்களெல்லாம் அவரை விட்டு சென்று விடும்’. (அர் ரிஸாலா பக்கம்: 50).

நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, அருள்மறை ஏராளமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருந்த போதிலும், எத்தனை மொழி பெயர்ப்பு அகராதிகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், எப்படிப்பட்ட அரபி மொழி விற்பன்னர்கள் அப்பணியில் ஈடுபட்டிருந்தாலும், அரபி மொழி மூலத்தில் அல்லாஹ் அருளிய அனைத்து அடிப்படை அர்த்தங்களையும் நம்மால் விளங்க இயலாது என்பது மறுக்கவியலா உண்மை.

அருள்மறை உடைய மொழிபெயர்ப்பை மட்டுமே படிப்பேன் என்பது ஒருவித முரட்டுப் பிடிவாதம் என்கிறார் தஃப்ஸீருல் மனார் உடைய ஆசிரியர் ரஷீத் ரிளா அவர்கள். மேலும் மொழி பெயர்ப்புகள் மூலம் வெறுமனே பொருளை மட்டுமே நம்மால் விளங்க இயலும் அதன் அசல் விளக்கத்தை ஏன் விளங்க முடியாது என்பதற்கு அவர்; பின்வரும் காரணங்களை அடுக்குகிறார். 1. அருள்மறையின் சிறப்பியல்பான பலாகா (அணி இலக்கண மற்றும் இலக்கிய நயம்) உடைய அடிப்படையில் முழுமையாக மொழி பெயர்க்க முடியாது. 2. அருள்மறையில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு பொருத்தமான ஒத்த வார்த்தைகள் மற்ற மொழிகளில் கிடையாது. எனவே ஒரு மொழியில் (உதாரணமாக ஆங்கிலத்தில்) மொழி பெயர்ப்பவர் ஏறத்தாழ குறிப்பிட்ட வார்த்தைக்கு ஒத்துள்ள ஒரு வார்த்தையைக் கொண்டு வருவார். அந்த ஆங்கில மொழிபெயர்ப்பு வார்த்தையே வேறு மொழிகளுக்கு மொழி பெயர்க்கப் பயன்படும். காலப்போக்கில், அதன் அசல் அரபி வார்த்தையின் பொருள் மாறுபட்டுப் போய்விடும். 3. எண்களில் அடிப்படையில் சில கட்டமைப்புகள் அல்குர்ஆனில் காணப்படுகிறது. அது அரபி மொழிக்கு மட்டுமே சொந்தமான பிரத்தியேகத் தன்மையாகும். மொழி பெயர்க்கப்படும்போது அந்த இயல்பு தானாக மறைந்து விடும். (தஃப்ஸீருல் மனார், பாகம் 9, பக்கம்: 276).

எனவேதான் ஆரம்ப காலம் முதலே அல் குர்ஆனை மொழி பெயர்ப்பது குறித்து இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. சிலர் இதைக் கூடுமென்றும், வேற சிலர் கூடாதென்றும் கூறுகின்றனர். இது குறித்து ஏராளமான நூல்களையும் தொகுத்துள்ளனர். புகழ்பெற்ற அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் முஸ்தஃபா அல் மராகீ அவர்கள் அருள்மறையை மொழி பெயர்ப்பது ஆகுமென்று வாதிட்டு ஒரு பெரிய நூலை எழுதியுள்ளார்கள். சில அறிஞர்கள் இதை ஆதரிக்கவும் செய்துள்ளனர். அதே நேரத்தில் துருக்கி நாட்டின் புகழ்பெற்ற அறிஞர் முஸ்தஃபா ஸப்ரீ அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து ‘மஸ்அலத்து தர்ஜமத்தில் குர்ஆன்’ எனும் தலைப்பில் ஒரு நூலை யாத்துள்ளார்கள். இமாம் ரஷீத் ரிளா அவர்கள் திருக்குர்ஆன் மொழி பெயர்ப்ப எதிர்த்து ‘தர்ஜமத்துல் குர்ஆன் வமா ஃபீஹா மினல் மஃபாஸிதி வ முனாஃபாத்தில் இஸ்லாம்’ (குர்ஆன் மொழி பெயர்ப்பும், அதில் இருக்கும் குழப்பங்கள் மற்றும் இஸ்லாத்திற்கு மாறுபட்ட கருத்துகளும்) எனும் தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்கள்.

இந்தப் பிரச்சனையை பின்வருமாறு வகைப்படுத்தலாம். குர்;ஆன் மொழி பெயர்ப்பு என்பது அத் தர்ஜமத்துல் ஹர்ஃபிய்யா (எழுத்துகள் அடிப்படை மொழி பெயர்ப்பு), அத் தர்ஜமத்துல் தஃப்ஸீரிய்யா (விளக்க அடிப்படையிலான மொழி பெயர்ப்பு) என இருவகைப்படும். முதலாவது வகையில் அல்குர்ஆனின் வசன அமைப்பு, வரிசைக்கிரமம், அதன் ஒத்தப்பொருள் என நுணுக்கமாக, கவனமாக மொழி பெயர்ப்பர். இது றுழசன கழச றுழசன வுசயளெடயவழைn (வார்த்தை ரீதியான மொழிபெயர்ப்பு) என அழைக்கப்படும். இரண்டாவது வகை மொழிபெயர்ப்பில் வார்த்தை, வரிசை, எழுத்து போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்காமல் வசனத்தின் நோக்கம் மற்றும் கருத்து மட்டுமே மையமாகக் கொள்ளப்படும். இதற்கு ‘அத் தர்ஜமத்துல் மஃனவிய்யா’ (அர்த்தரீதியான மொழிபெயர்ப்பு) என்றும் கூறப்படும்.

ஆகவே விளக்க அமைப்பிலான மொழிபெயர்ப்பு ஆகுமானதாகும். உண்மையில், நாம் இன்று பார்க்கும் அனைத்து தர்ஜமாக்களும் அந்த வகையிலானதே ஆகும். ஆனால் முதல் வகையான எழுத்து ரீதியான மொழிபெயர்ப்பு என்பது நிச்சயமாக சாத்தியமில்லாதது. ஏனெனில், அவ்வாறு மொழி பெயர்க்கும்போது அருள்மறை சுட்டிக்காட்டக்கூடிய சைக்கினை அர்த்தங்கள், இலக்கிய ரீதியான வேறு பொருட்கள், மற்றும் விளக்கங்கள் முதலானவை வெளிpப்படாது. எனவேதான் மொழிபெயர்க்கப்பட்ட குர்ஆனுக்கு ‘தர்ஜமத்துல் குர்ஆன்’ என்று பெயரிடாமல் ‘தர்ஜமத்து மஆனில் குர்ஆன்’ அல்லது ‘அத் தர்ஜமத்துல் தஃப்ஸீரிய்யா லில் குர்ஆன்’ என்று பெயரிட வேண்டும் என சில அறிஞர்கள் கருத்துரைக்கிறார்கள்.

இதே கருத்தையொட்டி இமாம் ஷாதிபி அவர்கள் பின்வருமாறு பதிவு செய்கிறார்கள். ‘அரபி மொழியைப் பொருத்த வரை, அதனுடைய வார்த்தைகள் அர்த்தங்களை அறிவிக்கும் விதம் இரண்டு வகைப்படும். முதலாவது, வார்த்தைகளும் வாசகங்களும் எதை அறிவிக்குமோ அதனுடைய அர்த்தம். இதுவே அடிப்படையாகும். இரண்டாவது, வார்த்தைகளுக்கான நேரடி அர்த்தங்கள் அல்லாது வேறு அர்த்தங்கள் தொனிக்கும் அல்லது அதிகப்படியான விளக்கங்களைச் சொல்லும் வாசகங்கள் மற்றும் வாக்கியங்கள். இப்படிப்பட்ட வாசகங்களின் சரியான அர்த்தங்களை எக்காலமும் அரபி மொழியிலிருந்து வேறு மொழிக்கு கொண்டு வர இயலாது’. (அல் முவாஃபகாத் ஃபீ உஸுலில் ஃபிக்ஹ், பாகம்: 2, பக்கம்: 66).

மேற்கூறப்பட்ட கருத்துகளிலிருந்து நமக்குத் தெளிவாக விளங்கக்கூடிய செய்திகள் என்னவெனில், அருள்மறையின் இரகசியங்களையும், அதன் வாசகம் மற்றும் அமைப்பின் சிறப்பியல்புகளை தெளிவாக அறிவதின் மூலமே ஒரு அடியான் அல்குர்ஆனின் உள்ளடக்கத்தை விளங்க முடியும். அரபி மொழி அறிவது மட்டுமே அதற்கு உறுதுணையாக இருக்கும். அந்த அடிப்படையில் அரபி மொழியின் முக்கியத்துவம் நமக்கு மேலும் தெளிவாகிறது. அது மட்டுமல்லாமல், அல்குர்ஆனின் அற்புதமும் விளங்குகிறது. முற்கால உலமாப் பெருமக்கள் அரபி மொழியின் சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், அணி இலக்கணம் என அனைத்தையும் கற்பதற்கு உந்துகோலாக அமைந்தது அல் குர்ஆனின் அற்புத வார்த்தை அமைப்பேயாகும். அரபி மொழியின் ஆழமான விளக்கங்களை அறியாத ஒருவரால் எந்நிலையிலும் அல் குர்ஆனை விளங்கவோ, சரியாக மொழி பெயர்க்கவோ முடியாது. எனவே ஒருவர் மொழி பெயர்ப்பின் மூலமாக அல்குர்ஆனின் வார்த்தை ரீதியான அர்த்தங்களை விளங்க முடியுமே தவிர அதனுடைய ஆழமான உட்கருத்துகளை விளங்க முடியாது.

இன்று அருள்மறைக்கு வழங்கப்படக்கூடிய பல தவறான விளக்கங்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைவது அரபி மொழிப் புலமை இன்மையே ஆகும். வசனங்களுடைய உண்மையான விளக்கங்களை தேட முயற்சிக்காமல் மேலோட்டமாக வார்த்தைகளின் அர்த்தங்களை சொல்வதே பல பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைகிறது. எனவேதான் இமாம் முஜாஹித் அவர்கள், ‘அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஈமான் கொண்ட ஒருவர் தமக்கு அரபி மொழியில் புலமை இல்லாத நிலையில் அல்லாஹ்வின் வேதத்தில் (அர்த்தம் சொல்வதில்) பேசுவது ஹலால் ஆகாது’ என்று கண்டிக்கிறார்கள். (அல் இத்கான் ஃபீ உலூமில் குர்ஆன், பாகம்:4, பக்கம்: 213)

வல்லான் அல்லாஹ் தஆலா அருள்மறையின் சரியான விளக்கத்தை சரியான முறையில் அறிவதற்கு நம் அனைவருக்கும் அருள் புரிவானாக! அவ்வாறு நேரடியாக விளங்க இயலாத மக்கள் யாருக்கு அந்த ஞானம் உள்ளதோ அவரிடம் சென்ற அதன் விளக்கத்தை அறியத் தேடும் பாக்கியத்தையும் நல்குவானாக! ஆமீன்!

– A.M. அலி இப்ராஹீம் ஜமாலி M.A., M.B.A., M.Phil, Ph.D