முத்தலாக்கில் வெற்றி முத்துகளை அள்ள முடியுமா?

முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா மாநிலங்களவையில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.  நாடாளுமன்றத்தில் பாஜகவிற்குப் பெரும்பான்மை இருப்பதால் அங்கு மட்டுமே அந்த மசோதா நிறைவேறியது.  மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் முட்டுக்கட்டையால் அந்த மசோதாவை நிறைவேற்ற முடியாத பாசிச மோடி அரசு அதனைக் கடந்த மாதம் 19ஆம் தேதி அவசரச் சட்டமாக்கியுள்ளது.

 

முத்தலாக் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை;  அதனை இறுக்கமாகவும் முஸ்லிம் சமூகம் பற்றிக்கொண்டிருக்கவில்லை.  மனைவியைப் பிரியும் எண்ணத்திலிருப்போர் உடனடியாக முத்தலாக்கைக் கையிலெடுப்பதும் இல்லை.  அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழும் சம்பவங்களை மொத்தச் சமூகத்தின் நடைமுறையாகக் கருதுகிறது இந்தச் சட்டம்.  ஆனால் முஸ்லிம்கள் முத்தலாக்கின் மூலம் முஸ்லிம் பெண்கள்  கடுமையாகப் பாதிக்கப் படுகிறார்கள் என்கிற தோற்றத்தை உருவாக்க மோடி முயல்கிறார்.  முஸ்லிம் பெண்களின் மீதான மோடியின் கருணையை அவர் நடத்திக் காட்டிய அந்த 2002ஆம் ஆண்டு இனப்படுகொலை நிரூபிக்கும்.  குஜராத் இனப்படுகொலையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களின் வாழ்வைக் குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கியது மோடியின் ஆட்சி.

 

மலிவான அரசியலை முன்னெடுத்திருக்கிறார் மோடி.  மோசடியான கற்பனைகளைப் பரப்புவதில் அவருக்குள்ள முழுத் திறமையையும் இந்த அவசரச் சட்டத்தில் காட்டியிருக்கிறார்.  அவரின் பெயர்த்தன்மைக்கேற்ப இதுவும் ஒரு வித்தைதான்.  அச்சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் அரசுக்கு வேறு வழிகள் இருக்கின்றன.  இருப்பினும் அவசரச் சட்டமாக நிறைவேற்றுவது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை நோக்கிய மோசடித்தனமே.  இவ்வாறு செய்வதன் மூலம் தன் சொந்த மதத்தின் இரட்சகனாகக் காட்ட முயல்கிறார்.

 

எந்தவொரு பிரச்சினையிலும் மோடி அரசு உண்மையான தீர்வை நோக்கி நகர்வதில்லை.  கடந்த நாலரை ஆண்டுகால ஆட்சி அதற்கான சான்றாகும்.  தன் திட்டங்கள் தோல்வியடையும்போது மோடியும் அவரது தளபதி அமித்ஷாவும் செய்யும் வேலை நாடு முழுவதும் சாதி, மதம், இனம் போன்றவற்றின் பிரிவினை வித்துகளைத் தூவுவது.  அந்தப் பிரிவினை நோக்கத்தையே இந்த அவசரச் சட்டமும் நிரூபிக்கிறது.

 

நாட்டின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் மோடி முத்தலாக் நடைமுறைகள் குறித்த ஆலோசனைகளை முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்துடன் நடத்தியிருக்கலாம்;  இதர அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைக் கேட்டுப்பெற்றிருக்கலாம்.  இன்னும் சட்டமாக்கப்பட வேண்டிய தேர்தல்களில் மகளிர்க்கான இட ஒதுக்கீட்டு மசோதா அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.  அதற்கு எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளைக் கூறினாலும் மோடி அரசால் அவற்றைச் செரிமானம் செய்ய முடியவில்லை.  வருடக்கணக்காக மந்தமாய்க் கிடக்கும் பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற முனையாத மோடி அரசுக்குத் திடீரென்று முஸ்லிம் சமூகப் பெண்கள் மீது அக்கறை தோன்றியிருப்பது அசாத்தியாமானதாகும்.  இந்த அவசரச் சட்டத்தைக் கையில் எடுத்திருப்பது தனக்கே தனக்கான அரசியல் ஆதாயத்திற்காகத்தானே அன்றி முஸ்லிம் பெண்களின் நலத்தைக் கருத்தில் கொண்டல்ல.

 

முஸ்லிம் சமூகத்தின் மீது மோடியும் அவரது பரிவாரங்களும் தொடர்ந்து காட்டிவரும் வெறுப்பின் அடையாளமே அவசரக்குடுக்கைத் தனமான இந்தச் சட்டம். நாட்டின் வளர்ச்சியை முன்வைத்து 2014ஆம் ஆண்டுத் தேர்தலை நிமிர்த்திய நெஞ்சுடனும் சூடான பிரச்சாரத்துடனும் சந்தித்தார் மோடி.  அவர்குறித்த தெளிவு இல்லாத வாக்காளர்கள் அவரை நம்பி வாக்களித்தனர்.  நாட்டின் கறுப்புப்பணம் அனைத்தையும் கைப்பற்றி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் பதினைந்து இலட்சம் ரூபாயைச் சேர்ப்பதாகவும் அவர் வாக்களித்திருந்தார்.   இத்தகைய ஆசையைத் தூண்டிவிட்டு ஆதரவைப் பெற்று ஆட்சியை அமைத்தார்.  ஆனால் அவர் அளித்த வாக்குறுதிகளை மக்களின் மனத்திலிருந்து அழிக்கும் யத்தனமாகவே இப்போதைய அவருடைய நடவடிக்கைகள் அமைந்துள்ளன.  மீண்டும் ஒருமுறை வளர்ச்சி என்றும்  குஜராத் மாடல் என்றும் வாக்காளர்களிடம் 56அங்குல அகலத்திற்கு அவருடைய நெஞ்சை விரித்துக்காட்ட முடியாது.  எவ்விதப் பொருளாதார முன்னேற்றத்தையும் காணாமல் நாடு கொதித்துக் கொந்தளித்துப்போய்க் கிடக்கிறது.  இதற்கு நேரடியான பதில்கள் அவரிடம் இல்லை.  எனவே, சாதி, மதப் பிரிவினைகளை மறைமுகமாகத் தூண்டிவிட்டு ஆதாயம் பெறுவதைக் காட்டிலும் நேரடியாகவே அதைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறார்.  அதன் விளைவாக நாட்டை உணர்ச்சிகளின் அடிப்படையில் துண்டாட எண்ணி இதுபோன்ற அபத்தமான வேலைகளில் இறங்கிவிட்டார்.

 

அரைவேக்காட்டுத் தனமான இந்தச் சட்டம் அடிப்படையில் முட்டாள்தனமானதுமாகும்.  முத்தலாக் கூறிய கணவன் கைவிடப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று அதன் விதி கூறுகிறது.  அதே சமயத்தில் தலாக் சொன்னவரை மூன்றாண்டு சிறைவாசத்திலும் தள்ளுகிறது;  ஜாமீனில் வெளிவர முடியாமலும் தடுக்கிறது. சிறையிலடைக்கப்படுபவன் எப்படி பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க முடியும் என்கிற கேள்வியைச் சிறுகுழந்தையும் கேட்கும்.  ஆனால் மோடிக்கு இத்தகைய நாணயமான அறிவும் இல்லை.  நாம் முன் வைக்கும் கேள்விகளுக்கு அவர் ஒருநாளும் பதிலளிக்கும் நாணயமான நடத்தை கொண்டவருமல்ல.

எனவே மௌனத்தில் உறைந்துபோய்க்கிடக்கிற ஓர் ஆட்சித் தலைவனோடு மல்லாடும் நெருக்கடியை முஸ்லிம் சமூகம் சந்திக்கிறது.  இதுபோன்ற பாசிச மோசடியாளர்களைச் சந்திப்பதற்குச் சமூகம் தன்னை இரும்புக்கோட்டையாக ஆக்க வேண்டும்.  அதற்கான முயற்சிகளில் சமூகம் ஈடுபடும் என்று நம்புவோம்.