குர்பானி என்ற பதம் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் மிகவும் மதிப்பிற்குரிய, தியாக உணர்வை பொங்கச்செய்யும் ஒரு வார்த்தைப் பிரயோகம் ஆகும். அந்த வார்த்தையைக் கேட்டாலே தியாக எண்ணமும், இறைவனுக்காக செய்யக் கூடிய அர்ப்பணிப்பு உணர்வும் நமது சிந்தைகளிலே மேலோங்கி நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.
பொதுவாக குர்பானி என்ற வார்;த்தை எல்லா தியாகங்களுக்கும் உபயோகிக்கப்பட்டாலும், ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜுப்பெருநாளின் போது இறைத் திருப்தியை நாடி நாம் செய்யக்கூடிய ”உள்ஹிய்யா’ எனப்படும் ஆடு, மாடு மற்றும் பிராணிகளை பலியிடுவது குறித்தே அதிகமாக அறியப்படுகிறது. இது கண்மணி நாயகம் (ஸல்) அவர்களால் அதிகம் வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்.
தமது மகன் இஸ்மாயில்(அலை) அவர்களை அறுத்துப் பலியிடுமாறு அல்லாஹ் கனவின் மூலம் நபி இப்ராஹீம்(அலை) அவர்களுக்குக் கட்டளையிட்டான். இறைவனின் இக்கட்டளையை நிறைவேற்ற அவர்கள் முற்பட்டபோது அல்லாஹ் அதனைத் தடுத்து ஓர் ஆட்டைப் பலியிடுமாறு பணித்;தான். இவர்களின் இந்த ஒப்பற்றத் தியாகத்தை நினைவு கூறும் வண்ணம் உலக முஸ்லிம்கள் அனைவரும் ஈதுல் அழ்ஹா தினத்தில் ஆடு, மாடு மற்றும் ஒட்டகத்தைப்; பலியிட வேண்டுமென அல்லாஹ் கடமையாக்;கியிருக்கிறான். அருமறை அல்குர்ஆனில் பின்வருமாறு அந்த தியாக சரிதம் விவரிக்கப்படுகிறது.
‘எனவே, சகிப்புத்தன்மை மிக்க ஒரு மகன் குறித்து அவருக்கு நாம் நன்மாராயம் கூறினோம். அவருடன் இணைந்து செயற்படும் பருவத்தை (இஸ்மாயீலாகிய) அவர் அடைந்த போது, ‘என்னருமை மகனே! உன்னை நான் அறுப்பதாக நிச்சயமாகக் கனவில் கண்டேன். உனது அபிப்பிராயம் என்ன?’ எனக் கேட்டார். அ(தற்க)வர்,’என்னருமைத் தந்தையே! உங்களுக்கு ஏவப்பட்டதை நீங்கள் செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்னைப் பொறுமையாளர்களில் நீங்கள் கண்டுகொள்வீர்கள்!’ என்று கூறினார். அவ்விருவரும் (அல்லாஹ்வுக்குக்) கட்டுப்பட்டனர். இன்னும் அவர் (மகனாகிய) இவரை நெற்றி நிலத்தில் படக் கிடத்திய போது, இப்றாஹீமே! நிச்சயமாக நீர் கனவை உண்மைப்படுத்திவிட்டீர் என நாம் அவரை அழைத்தோம். நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம்.
நிச்சயமாக இது ஒரு தெளிவான சோதனையேயாகும். இவருக்குப் பகரமாக, மகத்தான ஒரு பலிப் பிராணியை ஆக்கினோம். பின்வருவோரில் அவர் மீது (புகழை) விட்டு வைத்தோம்’. (37: 101-108).
மேலும் குர்பானியின் முக்கிய நோக்கம் பிராணிகளின் இரத்தத்தை ஓட்டுவதோ, இறைச்சிகளை பங்கிடுவதோ அல்ல மாறாக, இறையச்சம் மட்டுமே அதில் பிரதானம் என்பதைப் பின்வரும் இறை வசனங்கள் நமக்குத் தெளிவு படுத்துகின்றன.
‘குர்பானியின் மாமிசமோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. எனினும், உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது. (அல்குர்ஆன்: 22:37).
உயர்ந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவதன் அவசியத்தை மற்றுமொரு திருமறை வசனம் எடுத்துக் கூறுவதுடன் நாயகம்(ஸல்) அவர்களையும் குர்பானி கொடுக்குமாறும் கட்டளையிடுகிறது.
‘உமது இறைவனைத் தொழுது குர்பானி கொடுப்பீராக’ (அல்குர்ஆன்: 108:02).
பெருமானார் (ஸல்) அவர்களும் அல்லாஹ்வின் இக்கட்டளைக்கு அடிபணிந்து தமது வாழ்வில் குர்பானி எனும் அமலை நிறைவேற்றியுள்ளார்கள்.
”கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள’;.
(அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) – நூல்: புகாரி).
இதே வழியைப் பின்பற்றி பெருமானார்(ஸல்) அவர்களின் உம்மத்தினரும் இக்கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என இறைவனால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல! இறைவனின் பாதையில் பிராணிகளை அறுத்துப் பலியிடுவது இறைவனுக்கு மிகவும் உவப்பான ஒரு அமலாகும். எனவேதான், மறுமையில் இறைவனுக்கு மிகவும் உவப்பான செயல் குர்பானியின் இரத்தம் ஓட்டுதல் எனவும், குர்பானியின் இரத்தம் ஓட்டுவதை விட இறைவனுக்கு பிரியமான அமல் வேறில்லை எனவும், குர்பானிப் பிராணியின் இரத்தம் தரையில் சிந்தும் முன் அல்லாஹ் அதை அங்கீகரித்துக் கொள்கிறான் எனவும் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள்.
ஆடு (செம்மறி ஆடு, வெள்ளாடு), மாடு, ஒட்டகம் ஆகிய பிராணிகளை (ஆண், பெண் வேறுபாடின்றி) குர்பானி கொடுக்கலாம். மேற்கூறப்பட்ட மூன்று பிராணிகளை மட்டுமே அறுத்துப் பலியிட வேண்டும். இவை அல்லாத ஏனைய பிராணிகளை அறுத்துப் பலியிட்டால்”உழ்ஹிய்யா’ நிறைவேறாது.
‘ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) நாற்கால் பிராணிகளிலிருந்து அவர்களுக்கு அவன் உணவாக கொடுத்தவற்றின் மீது (அவற்றை அறுக்கும்போது) அல்லாஹ்வின் திருப்பெயரை அவர்கள் கூறுவதற்காக குர்பானியை நாம் ஏற்படுத்தினோம்’. (22:34) என்று அல்லாஹ் அருமறையில் இது குறித்து குறிப்பிடுகிறான்.
வசதியுள்ளவர்கள் தங்கள் குடும்பத்திலிருக்கும் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு ஆடு குர்பானி கொடுக்கலாம். மொத்த குடும்பத்தினருக்கும் சேர்த்து ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பதிலும் தவறில்லை என்ற செய்தியும் திர்மிதியில் காணப்படும் ஒரு ஹதீஸின் மூலம் அறியப்படுகிறது.
ஆடு குர்பானி கொடுக்க இயலாதவர்கள், கூட்டுக்குர்பானியில் பங்கேற்கலாம். கூட்டுக்குர்பானி என்றால் மாடு மற்றும் ஒட்டகம் குர்பானி கொடுக்கப்படுவதில் ஏழு நபர்கள் பங்கு பெறுவதாகும். ஒரு மாடு அல்லது ஓர் ஓட்டகம் 7 ஆடுகளுக்குச் சமமாக இஸ்லாமிய மார்க்கத்தில் கருதப்படுகிறது. உழ்ஹிய்யாவுக்காக அறுத்துப் பலியிடப்படும் பிராணி ஒட்டகம் அல்லது மாடாக இருப்பின் ஏழு நபர்கள் கூட்டாகச் சேர்ந்து கொடுக்கலாம் என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.
ஹுதைபியா என்ற இடத்தில் பெருமானார்(ஸல்) அவர்களுடன் ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும் நாங்கள் அறுத்துப் பலியிட்டோம்’. (அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி) – நூல்: திர்மிதி).
எனவே கூட்டுக்குர்பானியில் பங்கெடுத்து நம்முடைய உள்ஹிய்யா கடமையை நிறைவேற்றுவதில் எந்தவிதமான தவறுமில்லை. மேலும் அதன் மூலம் நம்முடைய அமல் முழுமையடையும் என்பதிலும் எந்த விதமான சந்தேகமுமில்லை. ஆனால் கூட்டுக்குர்பானி எவ்வாறு தற்போதைய காலக்கட்டத்தில் நடத்தப்படுகிறது என்பதில் கேள்வி எழுகிறது.
பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த நிலையை தற்போது ஒப்பிட்டுப்பார்த்தால், கூட்டுக்குர்பானி கொடுக்கக்கூடியவர்களின் எண்ணிக்கையும், அதை நடத்தக்கூடியவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது என்பது வெள்ளிடை மலையாகும்.
எது அதிகமாகி விட்டதோ, அதில் தவறுகள் நடக்க வாய்ப்புகளும் அதிகமாகும் என்ற கருத்துக்கு ஒப்ப, இந்த கூட்டுக்குர்பானி என்ற உயரிய வணக்கம், பணம் சம்பாதிக்க வழி வகுக்கும் வணிகமாகி விட்டதோ என்ற அச்ச உணர்வு கடந்த சில வருடங்களாக இஸ்லாமிய சமுதாயத்தில் எழுந்துள்ளது.
ஏனெனில் ஒரு காலத்தில், இந்த கூட்டுக்குர்பானியை எடுத்து நடத்த குறிப்பிட்ட சில மதரஸாக்களும், சில அமைப்புகளும் மட்டுமே இருந்தன. எனவே கூட்டுக்குர்பானி கொடுக்க நாடுபவர்கள், அந்த மதரஸாவிடமோ அல்லது அமைப்பிடமோ மட்டுமே பொறுப்பை ஒப்படைப்பார்கள். தங்கள் கடமையும் சிறப்பான முறையில் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் மிகைத்திருந்தது. உண்மையில் சரியான முறையில் அது நடந்தது என்பதில் பெருத்த சந்தேகம் ஏற்படக்கூடிய அளவிற்கு குறைகளோ, குற்றச்சாட்டுகளோ கூறப்பட்டதில்லை.
ஆனால் இன்று ஊருக்கு ஊர், பகுதிக்கு பகுதி, தெருவிற்கு தெரு என கூட்டுக்குர்பானி கொடுக்கக்கூடிய அமைப்புகள் பெருகி விட்டன. பல இயக்கங்கள் சார்பாகவும், அமைப்புகள் சார்பாகவும், மதரஸாக்கள் சார்பாகவும் ஏன் சில தனிப்பட்ட மனிதர்கள் கூட சில நிறுவனங்கள் பெயரில் கூட்டுக்குர்பானியை எடுத்து நடத்துகிறார்கள். மகிழ்ச்சியான செய்திதான் என்றபோதிலும், அனைவரும் சரியான முறையில் இதை நிறைவேற்றுகின்றனரா என்பதில்தான் பிரச்சனை எழுகிறது. அனைத்து அமைப்புகளையும் குற்றம் சாட்டுவது நோக்கமல்ல, ஏனெனில் சரியான முறையில் கூட்டுக்குர்பானியை நிறைவேற்றி முறையாக கணக்கு வழக்கை காட்டக்கூடிய பலர் இருக்கின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஆனால் எவ்வாறு கூட்டுக்குர்பானி என்ற வணக்கம் வியாபாரமாக்கப்படுகிறது என்பதை உணர்த்துவதும், அவ்வாறான செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள் இறைவனுக்கு அஞ்சி தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதுமே நமது நல்லெண்ணமாகும்.
இந்த கூட்டுக்குர்பானி மையங்கள் பெருகியதில் மற்றோர் கவலைக்குரிய செய்தியும் கவனிக்கத்தகுந்ததாகும். ஆடு வாங்கி அறுத்து அதன் இறைச்சியை பகிர்வது சிரமம் என நினைக்கும் சில இஸ்லாமிய சகோதரர்களும், ஒரு ஆடு வாங்கினால் ஆகக்கூடிய செலவை நான்கு அல்லது ஐந்து நபர்கள் பெயரில் கூட்டுக்குர்பானி பங்குகளுக்கு கொடுத்து விட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கும் சில நண்பர்களும் இந்த கூட்டுக்குர்பானிக்கே பெரும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அது மட்டுமல்ல! தங்கள் பங்குக்கான பணத்தை கொடுத்து விட்டால் தங்களின் உள்ஹிய்யா கடமை நிறைவேறி விட்டதாக எண்ணுகிறார்கள்.
இந்த சோம்பேறித்தனத்தை கூட்டுக்குர்பானி அமைப்பாளர்களும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு வழங்க வேண்டும் என்பது ஷரீஅத் சட்டம். ஆனால் பெரும்பாலும் அந்த விதி பின்பற்றப்படாமல் ஆளுக்கு ஐந்து கிலோ இறைச்சி கொடுத்தால் போதும் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது. மாடு எத்தனை கிலோ இருந்தாலும் பரவாயில்லை, ஒரு பங்கிற்கு கொடுத்த பணத்திற்கு பகரமாக 5 கிலோ கறிக் கொடுத்தால் போதும் என்ற கோட்பாடு(?) உண்டாகி விட்டது.
ஆகவே பெரிய மாடாக இருக்கும் பட்சத்தில் ஏழு பங்குகளுக்கும் அதிகமான பங்குகள் போடப்படுகின்றன. மேலும் சில அமைப்புகள் தாங்கள் அந்த இறைச்சியை தகுதியான ஏழைகளுக்கு விநியோகிப்பதாக சில அமைப்புகள் பறைசாட்டுகின்றன. அது ஏக இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை…
இது மட்டுமல்ல! பலர் மாடு அறுக்கப்படும் இடத்திற்கு பங்கிற்கு பணம் கொடுத்தவர்களை அழைத்து செல்வதில்லை. அந்த இடம் ரொம்ப தூரத்தில் உள்ளது. நீங்கள் ஏன் அங்கு வந்து பெருநாளுமா அதுவுமா சிரமப்படுகிறீர்கள்? கறி உங்கள் வீட்டிற்கு வந்துவிடும்’ என்று வசனம் பேசி அந்த இடத்திற்கு அழைத்து செல்வதில்லை. அறுக்கப்படுகின்ற மாடு தகுதியான மாடுதானா என்பதைக் கூட சிலர் நமக்கு காட்டுவதில்லை. கீழ்க்காணும் நபிமொழி அறிவிக்கும் தன்மைகளையும் நம்மில் பெரும்பாலோர் அறிவதுமில்லை. அறிய முற்படுவதுமில்லை.
‘உழ்ஹிய்யாக் கொடுக்கப்படும் பிராணி குறையற்றுக் காணப்படல் வேண்டும்.
- வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய்
- வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருடு
- வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம்
- மிகவும் மோசமாக மெலிந்திருத்தல் போன்ற குறைகள் இருத்தல் கூடாது’ என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).
நமக்கு தெரிந்த வகையில் ஒவ்வொரு வருடமும் கூட்டுக்குர்பானி மூலமாக ஆயிரக்கணக்கில் இலாபம் சம்பாதிக்கும் ஆசாமிகள் உள்ளனர். அவர்கள் முழுக்க, முழுக்க இதை வணக்கமாக கருதாமல், ஒரு சீசன் வர்த்தகமாகவே கருதுகிறார்கள் என்பது சுடும் உண்மை. அவர்களுக்கு அல்லாஹ்தான் நேர்வழி காண்பிக்க வேண்டும்.
பின்குறிப்பு: மேற்காணும் ஆக்கத்தில் காணப்படும் அனுபவ ரீதியாக, கூட்டுக்குர்பானியில் ஈடுபடும் சிலரின் அனுபவங்களை வைத்தே எழுதப்பட்டது. சொந்தக் கற்பனையல்ல!
வல்லான் அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனது பொருத்தத்தை பெறும் நற்பாக்கியத்தை வழங்குவானாக! ஆமீன்!.
ஆக்கம்:- மௌலவி அல் ஹாஃபிழ் முனைவர்
A.M. அலி இப்ராஹீம் ஜமாலி M.A., M.B.A., M.Phil, Ph.D.