கோலாலம்பூர்.
மஸ்ஜித் இந்தியா.
ஆரை ஏக்கரில் பரந்து, விரிந்து, கம்பீரமாகக் காட்சியளித்தது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி வழியும், தொழுகைக் கூடமும் அமைந்திருந்தது ஒரு வரிசையில் நூறுபேர் நிற்கலாம், மொத்தமாய் ஏழாயிரம் பேர் தொழலாம்.
தஞ்சையில் இருந்து வந்த மௌலானா ஷேக் அலாவுதீன் என்பவர் தான் அங்கே இமாம். சராசரி உயரம், மாநிறம். B.H. அப்துல் ஹமீதின் கண்ணீர் குரல். சுதைஸியின் அரபி லாவகம். வெள்ளி மேடைகளில் பேச்சு அனல் பறக்கும், பேச்சுக்குப் பிறகு அவர் வெளியிடும் அறிவிப்புகள் சுவை கூட்டும்.
B.H. அப்துல் ஹமீதின் குரலோடு, அவரைப் போன்ற ஏற்ற இறக்கத்தோடு அறிவிக்கும் செய்திக்கு மயங்காதவர் எவரும் இருக்க முடியாது. ஏழைகளுக்கு, நோயாளிகளுக்கு, குமர் காரியத்திற்கு, அறுவை சிகிச்சைக்கு என விதவிதமாய் வெளியிடும் அறிவிப்புகளில் அவரது குரலுக்கு மயங்கிய உதவிகள் பெருகும்.
அவரது அறிவிப்பு முறைக்கு ஒரு பின்னணி இருந்தது. அவர் குமரி மாவட்டம் கோட்டாறில் அரபிக்கல்வி பயிற்று கொண்டிருந்த வேளை, வானொலியிலும், தொலைக்காட்சியிலும் பாட்டுக்குப் பாட்டு போட்டி நடத்தும் B.H. அப்துல் ஹமீதின் குரல் அவரது காதில் விழுகிறது, மதராஸாவில் வானொலி கேட்க, தொலைக்காட்சி பார்க்க தடை இருந்தது, என்றாலும் வீதிகளில் செல்லும் போது கேட்பவற்றை வைத்தே அப்துல் ஹமீதின் கண்ணீர்க் குரலை கண்டு பிடித்தார். தனது கற்பனையைக் கலந்து சொற்பொழிவுகளிலும், அறிவிப்புளிலும் அதை வெளிப்படுத்தினார், அது அவரது இமாமத் பணிக்கு கூடுதல் சிறப்பு சேர்த்தது. அன்று வெள்ளிக் கிழமை, கூட்டம் நிரம்பி வழிந்தது. இமாம் சொற்பொழிவைத் துவக்கினார். அவரது பேச்சு இத்தா குறித்து இருந்தது.
கணவன் இறந்தாலோ, மணவிலக்கு நிகழ்ந்தாலோ பெண் இத்தா இருக்க வேண்டும் என்பது இறைக்கட்டளை. அது முந்தைய கணவனுக்கு குழந்தைகள் இருக்கிறதா எனக் கண்டறியவும், அடுத்த வாழ்க்கையைத் திட்டமிடுவதற்கான அவகாசமாயும் அமையும், இத்தாவில் கடுமையான சட்டதிட்டங்களும் தேவையில்லை, அதிகமான சுதந்திரப் போக்கும் அவசியமில்லை.
உழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் பெண்மணி பகலில் வெளியே செல்லலாம் என்பது ஒரு அனுமதி. ஆனால் அதையே சாக்காக வைத்துக் கொண்டு எல்லாப் பெண்களும் வெளியேறுவது இன்றைக்குச் சகஜமாகி வருகிறது. இது தவிர்க்கப்பட வேண்டியது.
அங்குள்ள முஸ்லிம் சமூகத்தில் நிலவும் போக்கை அவரது பேச்சு எடுத்துக் காட்டியது தொடர்ந்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
தென் தமிழகத்தில் இருந்து வந்திருக்கும் ஜனாப் ஜெய்னுல் ஆபிதீன். இவரது இளைய மகனுக்கு இதயத்தில் ஓட்டை அதை அடைக்க தேவைப்படுவதோ இலட்சங்களில்!
கருணை பிறப்பதோ உங்கள் உள்ளங்களில்!
திறக்கட்டும் மனக் கதவு!
அடைபடட்டும் சிறுவனின் இதயச் சுவர்!
வழங்கட்டும் இறை கருணை நம் அனைவருக்கும்!
இதோ! என் பங்கு நூறு வெள்ளி!
உணர்ச்சிப் பிழம்பாய் அறிவித்த இமாம் மக்கள் அறிய நூறு வெள்ளியை ஜெய்னுல் ஆபிதீன் கைகளில் அளித்தார். தொழுகை முடிந்ததும் மக்கள் அவரைக் கவனித்தார்கள். அவர் இமாமுக்கும், மக்களுக்கும் நன்றி சொல்லிக் கிளம்பினார்.
ஒரு நாள் மாலைத் தொழுகைக்குப் பின் இமாமுக்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது, சாதாரண விஷயமாக இருக்கலாம் என எண்ணி; போன இமாம் அங்கு போய் அதிர்ந்து போனார்.
“உட்காருங்கள் இமாம் சாப்” – செயலாளர் இருக்கையை சுட்டிக் காட்டினார்.
“என்ன விஷயம்?”- இமாம் அமர்ந்து கொண்டே கேட்டார். “உங்க மேலே ஒரு புகார்?”
“என்ன புகார்?”
“பள்ளிக்கு யார் வந்தாலும் நீங்க முதல்ல உதவி பண்றீங்களே எப்படி?”
“என்னால முடிஞ்சதை செய்யிறேன்”
“இல்லே – உங்களால் முடியாதத செய்றீங்க”
“என்ன சொல்றீங்க?”
“வெள்ளிக் கிழமையானா நூறு வெள்ளி கொடுக்கறீங்க – மற்ற வேளையிலே பத்து வெள்ளி கொடுக்கறீங்க ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று வேளைகளிலே மக்கள் உதவி கேட்டு வர்றாங்க – அப்போ தொண்ணூறு வெள்ளி, ஒரு மாசத்திலே சராசரியத நாலு ஜூம்மா. அதுக்கு ஒரு நானூறு வெள்ளி. மொத்தமா நானூத்தி தொண்ணூறு வெள்ளி. வெறும் ஆயிரம் வெள்ளி மட்டும் சம்பளம் வாங்குற உங்களாலே இது எப்படி முடியும்?”
வெளியிலே வேறு வேலை பார்க்கக் கூடாது வெளியே அன்பளிப்புக்ள வாங்கக் கூடாதுன்ற – எங்களோட நிபந்தனைகளை மீறி நடக்கிறீங்களா?
“இல்லே- அப்படியெல்லாம் இல்லே”
“அப்போ – எப்படி இதெல்லாம் முடியுது?”
“அதுதான் சொன்னேனே! என்னால முடிஞ்சதை செய்யிறேன்”
“உங்களாலே இது முடியாது! அதுதான் சந்தேகம்!”
“சந்தேகப்பட வேண்டாம்”
“அப்படிச் சொன்னா முடியாது”
“அப்போ?”
“கணக்குக் காட்டுங்க”
“அது என்னால் முடியாது”
“தப்பா நினைக்காதீங்க –சந்தேகம் வந்திருச்சி – பதில் சொல்லாம போக முடியாது”
“அப்போ –நம்ம காஸிம் பாய் பதில் சொல்வாரு”
“அவருக்கும் – இதுக்கும் என்ன சம்பந்தம்?”
“அதையும் அவரே சொல்வாரு”
நிர்வாகம் காஸிம் பாயை அழைக்க அடுத்த ஐந்து நிமிஷத்தில் ஆஜரானார். வுpஷயம் கேட்டறிந்தார்.
“அதுவா – நான் சொல்றேன்”
ஒரு நாள் நானும் இமாமும் பேசிக்கிட்டு இருந்தோம்.
“இமாம் சாப நீங்க நபி(ஸல்) வாரிசு. நுபி சமுதாயத்துக்கு முன்னோடியா இருந்த மாதிரி நீங்களும் முன்மாதிரியா இருக்கணும்”னு சொன்னேன்.
அதுக்கு நம்ம இமாம் சாப்
“அமல்கள் விஷயத்தில் முடிஞ்ச வரைக்கும் முன்னோடியா இருந்திடலாம். பொருளாதார விஷயத்தில என்னால் முடியாது, உதாரணமாக ஏழைகள் எத்தனையோ பேர் உதவி கேட்டு வர்றாங்க, அதை நானே அறிவிப்பு செய்யிறேன். அவங்களுக்கு ஏதாவது செய்ய மனசு துடிக்குது, ஆனா மத்த பேரை கை காட்டிட்டு உட்கார வேண்டியதிருக்கு, இந்த விஷயத்திலே முன்மாதிரியா இருக்க முடியலை”ன்னு வருத்தப்பட்டுச் சொன்னாரு.
ஆப்ப யோசிச்சேன். என்னோட நண்பர்கள் கிட்டே கலந்தேன். அப்ப ஒரு யோசனை தோணிச்சு. நாங்க ஆளுக்குக் கொஞ்சம் பணம் போடுறது. ஆதை இமாம் கையிலே கொடுத்து அவரு கொடுக்கிற மாதிரி ஏற்பாடு பண்றது, இதுலே இமாமுக்கு திருப்தி, மக்களுக்கு ஒரு தூண்டுதல் எங்களுக்கு நன்மை.
“இதை இமாம் கிட்டே தெளிவுபடுத்தி யாரு கிட்டேயும் சொல்லக் கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டோம், அதனால தான் இமாம் சொல்லலை, பாவம், இமாம் தன்னோட சொந்தக் கணக்கிலே ஐயாயிரம் வெள்ளி கடன் இருக்குது. ஆவரால் எப்படி தர்மம் பண்ண முடியும்?”
காஸிம் பாய் சொல்லி முடிக்க அங்கிருந்தவர்களின் கண்கள் பனிந்தன.
“இமாம் சாப் – மன்னிச்சுக்கோங்க – தவறான தகவலாலே உங்கள விசாரிக்கும்படி ஆய்டிச்சி. சுரி பரவாயில்லே – இனி நம்ம மஹல்லாவிலே எல்லாத்துக்கும் நீங்களே முன்மாதிரியா இருங்க!”
“ஹஜ்ஜூப் பயணம், பைத்துல்மால், புதிய கட்டிட துவக்கம் எல்லாத்துக்கும் வழக்கம் போல நீங்களே முதல் தொகையை கொடுங்க – நிர்வாகம் அதற்கான ஏற்பாட்டைச் செய்யும்.” – செயலாளர் வேண்டிக் கொண்டார்.
பரஸ்பரம் ஸலாம் சொல்லிக் கலைந்தனர்.
“புற நடவடிக்கைகளில் மக்களுக்கு என்னை முன்மாதிரியாக்கிய இறiவா! ஆக நடவடிக்கையிலும் முன்மாதிரியாக்கு!
பிரார்த்தித்தவாறே இமாம் இறங்கி நடந்தார்.
எம்.ஏ. ஷாஹுல் ஹமீது ஜலாலீ