ஒரே விஷயம் குறித்த இரண்டு செய்திகள் நம் கவனத்தைக் கவர்கின்றன. முதலாவது உ.பி. மாநிலத்தில் மீரட் நகரின் ஹாஷிம்புரா பகுதி முஸ்லிம் இளைஞர்க்ள் கொல்லப்பட்ட விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு; பிறிதொன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மாநில முதல்வர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை.
பிரதமர் பேசியதற்கும் ஹாஷிம்புரா படுகொலையாளர்களுக்கு நீதி செயல்பட மறுத்ததற்கும் என்ன தொடர்புகள் இருக்குமென்று நமக்குத் தெரியவில்லை. இது நாமாக உருவாக்கிக்கொண்ட பார்வையாகும். இதற்குமுன் நீதிபதிகளையும் முதல்வர்களையும் ஒருங்கே அமரவைத்துப் பிரதமர் உரையாற்றி இருந்தால் அது ஏன் அப்படி நடத்தப்பட்ட்து எனப் புரிந்துகொள்ள வாய்ப்புகள் இல்லை. கடவுளுக்கு அடுத்தநிலையில் நீதித்துறையைத்தான் மக்கள் அதிகம் நம்புகின்றனர்; அதனால் புலனறிவுமூலம் தீர்ப்புகள் வழங்குவதை நீதிபதிகள் தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார் பிரதமர். நீதித்துறைமீது சிறிதளவு நம்பிக்கை குறைந்தாலும் ஒட்டுமொத்த நாட்டையும் அது பாதித்துவிடும்; அரசியல்வாதிகள் தவறுசெய்தால் நீதித்துறை மூலம் சரிசெய்துகொள்ளலாம்; ஆனால் நீதித்துறை தவறு செய்தால் எல்லாம் முடிந்த கதையாகிவிடும் என்று எச்சரிக்கையும் செய்திருக்கிறார்.
பிரதமர் பேசியிருப்பதைப் பார்த்தால் அது சரியாகத்தானே இருக்கிறது என்று தோன்றலாம். மோடியின் பேச்சு என்றும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருந்ததா? காலம் நமக்குப் போதித்த பாடங்களில் இதுவும் ஒன்று. ஆனால் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அநேகம்பேர்மீது வழக்குகள் ஏராளமாக உள்ளன. அவற்றுக்கு முறையான நீதி நடைமுறைகள் கிடைக்குமாயின் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தண்டனைபெறுவது உறுதி. அம்மாதிரியான நீதி கிடைத்துவிடக் கூடாதென்று நம் பிரதமர் கருதி இப்போது பேசியிருக்கிறாரா? அது போகப்போகத்தான் தெரியும். சிலரின் பேச்சுக்கள் எதிர்மறையான அர்த்தங்களில் ஊடாடி வருபவை. அப்படிப்பட்டவர்களுள் மோடியும் ஒருவர்.
இந்தியாவில் நீதிநெறிகள் சாகடிக்கப்பட்ட கதைகள் பல உண்டு. நீதிமன்றத்துக்கு வெளியேயுள்ள பாமரனுக்கும் நீதிநெறி சார்ந்த அக்கறைகள் தோன்றும்; அத்தகைய உணர்வுநிலைகள் இல்லாமல் நம்முடைய நீதிமன்றங்கள் உலகம் எள்ளிநகையாடும் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளன. மத்தியில் பா.ஜ.க. அரசு இருந்துதான் அப்படிப்பட்ட சீரழிவுகள் நடந்ததாக நாம் சொல்ல முடியாது. காங்கிரஸ் ஆட்சியின் பல ஆண்டுகளும் இரத்தக் கறையில் தோய்ந்திருந்தவை ஆகும். முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை இனத்தவர்கள், சாதீய ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் பெற்ற அநீதியான தீர்ப்புகள் அனைத்தும் காங்கிரஸ் அரசின் தாக்கீதுகள் மூலம் கிடைத்தனவே.
முன்னர் இருந்த பிரதமர்களும் இவ்வாறான நீதிபதிகள் மாநாட்டில் உரையாற்றி மானுடநேயச் சுடரை ஏற்றியிருக்கிறார்கள். ஆனால் தீர்ப்புகள் கரும்படலமாகவே விரிந்திருந்தன. அண்மையில் ஹாஷிம்புராவின் மாபெரும் படுகொலைகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இந்தியாவின் பாசிச முகத்தை அம்பலமாக்கியிருக்கிறது. 1987-ஆம் ஆண்டில் அந்தப் பகுதியிலிருந்து ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை உ.பி. மாநில ஆயுதக் காவல்படையினர் எங்கோ கூட்டிச்சென்றனர். ஆனால் அவர்கள் பின்னர் வீடு திரும்பவில்லை; 42 இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு அங்குள்ள ஒரு கால்வாயில் வீசப்பட்டிருந்தனர். சுட்டுக்கொன்ற காவல்துறையினர் மீது வழக்கு பதிவாகவில்லை. பலபேர் தங்களின் பணிக்காலம் முழுவதும் யாதொரு இடையூறுமில்லாமல் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்கள். ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் சிலர்மீது மட்டும் வழக்கு பதிவானது. அந்த வழக்கின் தீர்ப்பு 28ஆண்டுகளுக்கு அப்புறம்தான் கிடைத்திருக்கிறது. நீதி கொல்லப்பட்டுள்ளது. ஒருவர்கூட தண்டனை பெறாமல் ஒட்டுமொத்தக் காவல்துறையினரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறுக்கு விசாரணைகளில் ஒரு சிற்றெறும்பு ஊறும் இடைவெளி கிடைத்தால்கூட அதைத் தப்பித்தோடும் பெரும் பாதையாக்கிக் கறுப்பு ஆடுகள் தப்பித்துவந்திருக்கின்றன. 42பேர் கொல்லப்பட்ட்தற்குக் கூட இங்கு போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
இந்தத் தீர்ப்பை வரலாறு வாசிக்கும்போது இந்தியாவின் பேரும்புகழும் என்னவாகும்? அப்படியான ஒரு கவலை இருந்திருந்தால் இத்தகைய ஒரு தீர்ப்பை நீதிபதி வழங்கியிருக்கமாட்டார். வழக்கை நடத்திய காவல்துறை, விசாரித்த நீதிமன்றம் ஆகியன எந்த அளவுக்குப் புரையோடி இருந்தால் இம்மாதிரியான ஒரு அவலம் நம்நாட்டின் நீதித்துறைக்கு ஏற்பட்டிருக்கும்? பாபர் மசூதி இடிப்பு, நாடாளுமன்றத் தாக்குதல்களின் உண்மையான குற்றவாளிகள் அனைவரும் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றார்கள். முஸ்லிம்கள்மீதான அனைத்து வழக்குகளும் வேகவேகமாக விசாரிக்கப்பட்டு அவர்களைக் குற்றவாளிகளாக்கி மரணதண்டனைவரை நிறைவேற்றியும் இருக்கிறார்கள். ஆனால் முஸ்லிம்கள், தலித்துகளுக்கு எதிராக அநீதிகள் புரிந்தோரின் வழக்குகள் இழுத்தடிக்கப் படுகின்றன. சில தீர்ப்புகள் முஸ்லிம்களுக்குச் சாதகமாக அமைந்திருக்குமாயின் அது, அந்த நீதிபதிகளின் தயவுதாட்சண்யம் இல்லாத உறுதி மனப்பான்மையினால் வந்ததாகும். அதற்கு அரசு மனமொப்பி அத்தகைய ஒத்துழைப்பை வழங்கியதில்லை.
எனவே, பிரதமர் மோடி பேசிய பேச்சும் நீதிமனற நடைமுறைகளும் ஒரே தளத்திலானவை என்றே கருதவேண்டியிருக்கிறது. இந்திய நீதித்துறை அவ்வளவு சீக்கிரம் சமயச் சார்பற்ற பார்வையோடு விரைந்து செயல்பட்டுவிடும் என்று நம்ப இயலவில்லை. இந்திய அரசியல் சட்டத்தினை நீதித்துறை விசுவாசமாகப் பின்பற்ற உறுதி எடுக்கவேண்டும். அதன்மூலம் ஓரளவேனும் பாரபட்சமில்லாத தீர்ப்புகள் கிடைக்கலாம். ஒரு இனம் அல்லது ஒரு பிரிவு காலாகாலத்திற்கும் நீதி மறுக்கப்பட்ட நிலையில் இருந்தால் அது நாட்டிற்கு சுபிட்சத்தைக் கொண்டு சேர்க்காது. இதை எச்சரிக்கையாகவும் கருதலாம்; தீர்க்கதரிசனமாகவும் கொள்ளலாம்.