இந்தியாவில் ஊடகங்கள்

நேபாளத்தில் ஏப்ரல் 25-ம் நாள் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் உலக நாடுகளைப் பெரும்பீதியில் ஆழ்த்தியது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

அடிப்படைக் கட்டுமானங்கள் தகர்ந்ததால் நேபாளம் என்ன செய்வதென்று அறியாமல் திணறியது.  அது இயற்கை வளத்தில் சிறப்பான நாடாக இருந்தாலும், இன்னமும் நவீன நாடாகவும் விஞ்ஞானத் தொழில்நுட்ப ரீதியாகவும் முன்னேறவில்லை. நேபாள நிலநடுக்கத்தின் பாதிப்பு இந்தியாவையும் தாக்கியதால் இங்கும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாண்டனர்.  இந்தியாவின் தேசியப் பேரிடர் மீட்புப் படை உடனடியாக நேபாளம் விரைந்துசென்று மீட்புப் பணிகளிலும் நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டது.  ஏனைய நாடுகள் இதன்பின்னரே நேபாளம் வர முடிந்தது.

இந்நிலையில் நேபாளத்தின் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து வெளிநாட்டுக் குழுக்களையும் உடனடியாக வெளியேறுமாறு நேபாள அரசு மே மாதம் 4ம் தேதி அதிரடியாக உத்திரவிட்டது. இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மீட்புக் குழுக்களைக் கணக்கிட்டால் மொத்தம் 33 குழுக்கள் அங்குள்ளன. மீட்புப் பணிகளில் மற்ற நாடுகளைவிட இந்தியா மிகச் சிறப்பான முறையில் பணியாற்றியதாகப் பல நாடுகளும் பாராட்டியிருந்தன.  இந்த நிலையில் அனைத்து நாட்டுக் குழுக்களையும் உடனடியாக வெளியேறுமாறு நேபாள அரசு உத்திரவு பிறப்பித்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியுறச் செய்திருக்கிறது.  ஏற்கெனவே நேபாளம் பிற நாடுகளின் உதவிகளையும் நம்பித்தான் தன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை செய்யமுடியும் என்கிற அளவில் பின்தங்கியுள்ளது.  தேவைப்படும் நிதியும் அதன் கைவசம் இல்லை. சேதாரமோ கடுமையானது. இவ்வளவு சிரமங்கள் இருக்கும்நிலையில் நேபாளம் ஏன் இத்தகைய அதிரடியில் இறங்கவேண்டும்?

நேபாளத்தின் அதிரடி இந்தியாவையே முதலில் கலங்கடித்துள்ளது எனத் தெரிய வருகிறது.  ஏனெனில் இந்திய ஊடகங்களின் பொறுப்பற்றத் தன்மையும் விளம்பர மோகமும் இந்தியாவுக்கு இந்தத் தலைகுனிவைக் கொண்டுவந்து சேர்த்துள்ளன.  உயிர்ப் போராட்டம் நடக்கும் நிலையில், அந்த வேதனைக் குரூரங்களை உள்வாங்க மறுத்துள்ளன நம் நாட்டின் தொலைக்காட்சி நிறுவனங்கள்.  தங்களின் தொலைக்காட்சி நிறுவனமே இந்தச் செய்தியை நேரடியாகவும் தத்ரூபமாகவும் தங்கள் நேயர்களுக்கு வழங்குவதாக அங்கு சென்ற செய்தியாளர்கள் பெருமையைக் கொண்டாடி இருக்கின்றனர். காயம்பட்ட ஒரு மனிதனைக் காப்பாற்றுவதைவிடத் தங்களின் நிறுவனத்திற்குப் பிறரின் மரணப்போராட்டத்தைச் செய்தியாகக் கொடுப்பதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.

தமிழ் வாசகர் ஒருவர் அந்தச் செய்திக்குக் கொடுத்த பின்னூட்டம் மனதில் கொள்ளத்தக்கது. ”கட்டிடம் எப்படி இடிந்து விழுந்தது?  அது இடிந்து விழுந்தபோது உங்களுக்கு எப்படி வலித்தது? உயிர் போறதுக்கு முன்னாடி சொல்லிட்டுச் சாவுங்க…என்று கேட்கும் கொடூர மனம் படைத்தனவாக உள்ளன ஊடகங்கள்” என்று எழுதுகிறார்.  உண்மையில் இந்திய ஊடகங்களின் மனப்போக்கும் விளம்பர மோகமும் இவ்வாறாக உள்ளன என்பதில் எவருக்கும் ஐயம் இருக்க வாய்ப்பில்லை.  நேபாளத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் சுனிதா சாக்யா “ உங்கள் ஊடகங்களும் செய்தியாளர்களும் நேபாள நிலநடுக்கச் செய்தியை வழங்குவதை ஏதோ ஒரு குடும்ப நாடகத் தொடர்களைப் படம்பிடிப்பதுபோல் படம் பிடிக்கின்றனர்”  என்கிறார்.  ”நேபாளம் ஒரு சுதந்திர நாடு, அது ஒன்றும் இந்தியாவின் துணை நகரம் அல்ல” என்று ஒரு நேபாளி தன் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார். அங்குள்ள அரசியல் கட்சிகளும், “உதவி என்ற பெயரில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் நம்மை அடிமை செய்துவிடுவார்கள்;  எனவே நேபாள அரசு அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் “ என்று கோரியுள்ளன.

இந்திய ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்களின் நடத்தை கண்டு கொந்தளித்த நேபாளிகள் 60,000க்கும் மேற்பட்டோர் தங்களின் இணையதள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.  நாடே தகர்ந்துகிடக்கும் நிலையில் நேபாளிகளிடம் தோன்றியிருக்கும் இந்தக் கொந்தளிப்பு இந்திய அரசையும் கேடுகெட்ட தொலைக்காட்சி நிறுவனங்களையும் அதிர வைத்துள்ளது.  இந்தக் கருத்துகளுக்கு மறுப்பு சொல்ல வழியில்லாமல் இந்தியத் தொலைக்காட்சி நிறுவனங்கள் வாயடைத்துப் போயுள்ளன. எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற சொலவடை தமிழில் உண்டு.  ஆனால் அதை ஓர் அந்நிய மண்ணில் அவர்கள் உயிர்ப்போராட்ட்த்தில் தவிக்கும் நேரத்தில்போய் நம் ஊடகங்கள் செய்துள்ளன;  உலக நாடுகள் மத்தியில் கடும் அவமானத்தால் இப்போது இந்தியா நெளிந்து கொண்டிருக்கிறது.

இந்திய ஊடகங்களின் இந்தச் சமூக விரோதப் போக்குகள் நாம் அறியாத விஷயமல்ல. தார்மீக அற உணர்வோடு நம் ஊடகங்கள் செயல்பட்ட காலம் வேகவேகமாக மறைந்துகொண்டு வருகின்றது.  இந்திய மக்கள்தொகையைக் கணக்கில்வைத்து அவர்களின் ஆடம்பர மோகத்தை வளர்க்கவும், வணிகத்தின் சிறிய அளவிலேயே கோடானுகோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கவுமே அவை விரும்புகின்றன.  இப்போது நடந்துவரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இதன் அடையாளம் ஆகும்.  நாட்டின் சில பணக்காரக் குடும்பங்கள் இந்தியர்களுக்குத் தேவையான உப்பு முதல் சுற்றுலா செல்லும் விமானம்வரைக்கும் என எல்லாமும் தம் தயாரிப்புகளாகவே இருக்க வேண்டும் என மும்முரமாகச் செயல்படுகின்றன. சிறிய வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் என அனைவரையும் ஒழித்துவிட்டுப் பணம் கைமாறும் அனைத்து விவகாரங்களும் தம்மை மட்டும் சார்ந்ததாக இருக்க விழைகிறார்கள்.  இதில்கூட பெரும் பணக்காரர்கள் ஒருவரையொருவர் ஒழித்துக் கட்டும் வேலையில் ஈடுபடுகிறார்கள். எல்லோரும் அவரவர் எல்லையில் அவரவர் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் போராடும் நேரத்தில் மத்திய மாநில அரசுகளும் இந்தப் பெருந்தனக்காரர்களுக்கு ஆதரவான சட்டங்கள் அல்லது நடைமுறைகளை உருவாக்கிக் கொடுக்கின்றன.  முன்னர் இருந்த காங்கிரஸ் ஆட்சியும் சரி, இப்போதிருக்கிற பா.ஜ.க.வின் நரேந்திர மோடி ஆட்சியும் சரி பெரும்பெரும் பணக்காரர்களின் துப்பட்டாவாகத்தான் இருக்கின்றன; ஏழை எளியோர்களுக்காகச் செயல்படுவதில்லை.  அனைத்துச் சுகபோகங்களையும் வழங்குதல்,  ஆட்சியாளர்களை வளைத்தெடுத்தல், நிர்வாக நடைமுறைகளை ஒழித்துக்கட்டுதல் என எல்லாவற்றிலும் கைதேர்ந்திருந்தன ஊடகங்கள்; இப்போது நேபாளம் சென்று உதவி வருவதாகப் பாவனை காட்டி மூக்கறுபட்டுள்ளன.

இத்தகைய எதிர்ப்பை இந்தியா என்றைக்கோ இந்த நிறுவனங்களுக்கு எதிராகக்  காட்டியிருக்க வேண்டும்; இந்தியர்களால் முடியாத இந்த மன எழுச்சியை  நேபாளம் காட்டியிருக்கிறது.  தங்களின் வறுமையிலும் நிராதரவான நிலையிலும் அவர்கள் காட்டிய தார்மீக ஆவேசத்தைக் கண்டு அஞ்சி அந்நாட்டு அரசும் செயல்பட்டுள்ளது. கணநேரமும் தாமதிக்காமல் இட்த்தைக் காலி செய்யும்படி எல்லா நாடுகளையும் கேட்டுக்கொண்டது. அது இந்தியாவை நோக்கித்தான் இந்தக் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதை இந்திய அரசு உணர்ந்துள்ளது.  “ நில நடுக்கத்தால் நாங்கள் அதிர்ந்திருக்கிறோம்;  ஆனால் இந்திய ஊடகங்கள் இந்தப் பேரிடரை, ஒரு நிகழ்ச்சியை மேலாண்மை செய்வதுபோல உணர்வற்று எதிர்மறை உளவியல் அணுகுமுறையுடன் செய்திகளை வெளியிட்டு வருகின்றன “ என்ற ஒரு நேபாளவாசியின் குரல் இந்தியாவின்மீது பெரும் களங்கமாகப் படிந்துள்ளது.

இந்திய ஊடகங்கள் மதவாதச் சக்திகளின் கையிலும் இனவாதச் சக்திகளின் கையிலும் தஞ்சமடைந்துள்ளன என தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருவதை இந்நேரம் நினைத்துப் பார்க்க வேண்டுவது அவசியம்.  சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராக அவை விஷம் கக்குவதிலும், பா.ஜ.க. வகையறாக்களின் வெறுப்புப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதிலும் அது பெற்ற அனுபவத்தை நேபாள மண்ணில் செய்யப்பார்த்தது.  கடந்த தேர்தலில் மோடி பெரும் வெற்றியைப் பெற்றதில் இந்த விஷமத்தனத்தின் அளவு அதிகம்.

இந்தியாவில் உப்பைத் தின்ற ஊடகங்கள்,  நேபாளம் சென்று தண்ணீர் குடித்திருக்கின்றன;  அதுவும் அவமானப் பட்டயங்களோடு!