இந்தியாவின் குடியரசுதினத்திற்கு வருகை தந்த வட அமெரிக்க அதிபர் ஒபாமாவை வரவேற்கும் வகையில் மத்திய அரசு வெளியிட்ட விளம்பரம் இன்று பெரும் சர்ச்சைக்கு ஆளாகிவருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் மதச்சார்பின்மை என்கிற பதமும் சோசலிசம் என்ற பதமும் நீக்கப்பட்ட முகப்பினை மோடி அரசு தன் விளம்பரத்தில் பயன்படுத்தி இருக்கிறது.
மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் மதச்சார்பின்மையும் அமைதியும் நிலைக்குமா என்கிற கேள்வி எப்போதோ எழுப்பப்பட்டது. அவர் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதே இந்தியாவின் பன்முகத்தன்மை மீது ஒருவகையான பாசிசத் தாக்குதல் தொடங்கியிருந்தது. இன்று அது கேள்விக்கிடமில்லாமல் வலம்வர ஆரம்பித்துள்ளது.
மதச்சார்பின்மையின் மீதும் சோசலிசத்தின்மீதும் பாசிச சக்திகள் எப்போதும் நாட்டம் கொண்டதில்லை. மோடி பதவியேற்றபின் அவர் அரசின் செயல்பாடுகள் மக்களின் நலனைப் புறக்கணித்துச் செல்லும் போக்கு அதிகரித்திருக்கிறது. இதிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியம் மோடிக்கு நேர்ந்துள்ளது. அதே சமயம் மோடி அரசின் பெரும்பான்மை இந்துத்வா பாசிச சக்திகளுக்கு மிகுந்த வேகத்தையும் அளித்திருக்கிறது. குஜராத் கலவரத்தைத் திறம்பட நடத்திமுடித்திட மோடி செயலற்று இருந்த தருணத்தை பாசிச சக்திகள் இப்போதும் பயன்படுத்த விரும்புகின்றன.
எனவே, நாட்டின் பொருளாதார மீட்சி, வளர்ச்சி குறித்த எவ்விதக் கவலையும் இல்லாதவர்கள் இந்துத்வா பாசிஸ்டுகள். இப்போது விட்டால் நமக்கு மீண்டும் இந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விடலாம் என்கிற படபடப்பினால் இந்தியாவின் மதச் சார்பின்மையை உடைத்துவிட்த் தீர்மானித்துள்ளன. சதாசர்வ காலமும் மதவெறிமிக்க கூச்சலை நாடே அதிரும்வண்ணமாக ஆவேசத்தோடு எழுப்பி வருகின்றனர்.
கடந்த தேர்தலில் போலி மதச்சார்பின்மைக்கு எதிரான பிரச்சாரத்தை மோடி செய்தார். ஏற்கெனவே காங்கிரஸ் அரசின் செய்ல்பாடுகள்மீது கடும் அதிருப்தி அடைந்திருந்த வாக்காளர்கள் மோடிக்கு ஒருமுறை வாக்களித்துப் பார்க்க விரும்பினார்கள். இந்தியா ஊழலை ஒழித்துக் கட்டி சுபிட்சப் பாதையில் செல்வதற்கு மோடி முன்முயற்சி எடுப்பார் என அவர்கள் பாமரத்தனமாக நம்பினர். இதனால் மோடிக்கு ஆதரவாக வாக்களிப்பு நடந்தது. ஆனால் இதை மோடியும் இந்துத்வா பாசிஸ்டுகளும் தங்களின் பாசிசக் கொள்கைகளுக்கே வாக்களித்திருப்பதாகக் கருதிக் கொண்டுள்ளனர். இந்தியர்கள் தாங்கள் எழுப்பிய போலி மதச்சார்பின்மை என்ற கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டு வாக்களித்திருப்பதாகக் கருதியதே அவர்கள் இன்று எடுத்திருக்கிற இந்த ஆவேசப் பேயாட்டத்திற்குக் காரணம்.
மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகிய சொற்களை அரசமைப்பின் முகப்பிலிருந்து நீக்கிவிட்டால் தங்களின் அடுத்தக் கட்ட வேலையை முன்னெடுத்துச் செல்ல வாய்ப்பாக இருக்கும் என்று கருதுகிறார்கள் மோடியின் பரிவாரங்கள். எதிர்க்கட்சிகளின் ஆவேச வினாக்களுக்கு மோடி பதில் தந்திருக்கவேண்டும். இதுவரை மோடி பதில் தரவில்லை. இந்நிலையில் எரிகிற தீயில் எண்ணெய் வார்க்கும் முயற்சியாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாடுமுழுக்கவும் மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் என்கிற பதங்களை நீக்க விவாதம் நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இது அமைச்சரின் கருத்தாக இருக்க வாய்ப்பில்லை; மோடியின் குரல் பின்னணியில் ஒலித்திருக்கிறது என்று கருதலாம். அனைத்து மதங்களையும் சமமாக நடத்துதல் என்று காந்தி சொன்ன சொல்தான் இன்றுவரை இந்தியாவின் மதச்சார்பின்மைத் தத்துவத்திற்கான விளக்கம். இதற்கு மேலான விவாதங்களை நாம் நடத்த வேண்டியிருக்கிறது. அப்படி ஒரு வாய்ப்பு வந்துசேராமல் பல ஆண்டுகள் ஓடிவிட்டன. ஏனெனில் அனைத்து மதங்களும் இங்கே சரிசமமாக நடத்தப்படவில்லை. வானில் செயற்கைக்கோள் ஏவப்படும் சமயங்களிலும், அது ஏவி முடித்தபின் அடைந்த வெற்றிக்குக் காணிக்கை செலுத்த ஆலயங்களுக்குச் செல்வதிலும் இந்தியாவின் மதச்சார்பின்மை கேலிக்கிடமாகிறது. மற்ற மதங்கள் சார்ந்த வழிபாட்டு இடங்கள் எவரின் கவனத்திலும் இருப்பதில்லை. இவற்றை இப்படியே நீட்டித்துக் கொண்டு சென்றால் அனைத்துத் துறைகளிலும் இருக்கும் பாரபட்சங்கள் புரிபடும்.
அரசு அலுவலகங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் அனைத்து மதத்தினரும் கலந்திருக்கவில்லை. இட ஒதுக்கீடும் ஏனோதானோ என்று பொறுப்பற்ற முறையில் கையாளப்படுகிறது. சமநீதி எங்கும் தென்படாததால் அலுவலக மட்டங்களில் மேற்கொள்ளப்படும் ஓரம் சாய்ந்த வழிபாட்டுமுறைகள் தடையில்லாமல் நீடிக்கின்றன. நாடாளுமன்றத்திலும் தக்க சட்டங்கள் இயற்றப் படவில்லை. இவை சாதாரணக் குடிமகன்களின் கண்பார்வையில் நடப்பனதான்.
மதச்சார்பின்மையின் பாதுகாவலன் என்கிற வேடத்தைப் புனைந்து இதுநாள்வரையிலும் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வந்தாலும் அதுவும் உண்மையான மதச்சார்பின்மையக் கடைப்பிடித்ததில்லை. சொல்லப்போனால் காங்கிரஸின் மெத்தனமும் அலட்சியமும் மென்மையான இந்துத்வாவும் பா.ஜ.கவின் வளர்ச்சிக்கு இடம் அளித்துவந்தது. பா.ஜ.கவை அமைதிப்படுத்த காங்கிரஸும் மதச்சார்பின்மையைக் கைவிட்டுவிட்டது.
ஆகையால் மதச்சார்பின்மையக் காப்பாற்றுவதில் காங்கிரஸும் பா.ஜ.கவும் தவிர்த்த ஏனைய இடதுசாரி, ஜனநாயக முற்போக்கு சக்திகளின் கைகளை வலுப்படுத்துவது அவசியம். அதேசமயம் நாடு இன்றிருக்கும் நிலையில் அனைத்துச் சமூகத்தினரின் மனமார்ந்த ஆதரவைப் பெறுவதும் அவசியமானது. இதற்கான முயற்சிகளை அனைவரும் தோளோடு தோள் நின்றே எய்த முடியும்.