மாறுதலும் மாற்றுதலும்

 

ந்தியப் பிரதமராக மோடியின் சாகசங்கள் தொடங்கிய நேரத்தில் இதற்குமுன் நாம் கண்டறியாத ஒரு விறுவிறுப்பான, நேர்மையான,. ஒழுக்கமான ஒரு மாபெரும் அரசு இயந்திரம் சுழலப் போவதாக ஊடகங்கள் வரிந்துகட்டிக் கொண்டு எழுதின.  மோடி பேசப்போவதற்கு முன்னாலேயே அவர் பேச்சின் மகாத்மியங்கள் இன்னின்ன என்று அவை தம் கற்பனைக்கோட்டை இழுத்துக்கொண்டு போயின.  தான் பிரதமராக வேண்டும் என்று மோடி நினைத்துக்கொண்ட அதே அளவுக்கு, ஊடகங்களும் நினைத்துக் கொண்டன. மோடியின் உயரத்தைக் கூட்டிக்காட்ட விசுவாச அடிமைகள் தங்கள் முதுகுகளைக் கூனலாக்கிக் கொண்டார்கள்.  இந்த மனிதரின் கையில் சமத்துவமும் சமூகநீதியும் மேம்படுமா என்று அன்று தோன்றிய சந்தேகங்களுக்கு இன்று ஒருமாதிரியான விடை கிடைப்பதைப்போலத் தெரிகிறது.

மோடி சர்வதேச மேடைகளை நோக்கி ஓடுகிறார்; புதிய உத்வேகவாதிபோல பேசுகிறார்.  இந்தியா விடிந்துவிட்டது என்கிற பிரமையை உலகமுழுதும் தோற்றுவிக்கிறார்.  ஆனால் மறுமுனையில் அவரது கைப்பொம்மைகளான அமைச்சர்களும், அவரது இயக்கத்தின் பல்வேறு கிளைகளும் நாட்டின் அமைதியைப் பங்கப்படுத்தும் வகையில் தினசரியும் பேசிவருகிறார்கள்.  நீண்டகாலமாக அடைக்கப் பட்டிருந்த அந்தப் பூதங்கள் தலையெடுத்து ஆடுகின்றன;  ஆட்சி அதிகாரச் சுவையை முழுசாகப் பிரயோகப்படுத்தக் கருதி அவர்கள் இப்போது மதமாற்ற விவகாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.  இது நிச்சயமாக நாட்டின் அமைதியைக் குலைத்து வருகின்றது. பல்வேறு மதத்தினரும் வாழும் ஒரு நாட்டில் பல்வேறு மதத்தினரின் வாக்குகளையும் பெற்று அதிகாரத்தைக் கையெடுத்தவர்கள் மதத் துவேஷங்களைப் பரப்பிவருகிறார்கள்.  நச்சரவங்களைச் சாக்குப் பையில் நிரந்தரமாகக் கட்டிவைத்துவிட முடியாது என்று அண்மை நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. கேரளா, மேற்குவங்கம், உ.பி. என்று பல மாநிலங்களிலும் மதமாற்ற வைபவங்கள் நடந்தபடி இருக்கின்றன.

இந்திய அரசியல் சாசனம் வரையறுத்துத் தந்தபடி ஒவ்வொருவருக்கும் அவர் விரும்பும் மதத்தைக் கடைப்பிடிக்கவும் பிரச்சாரம் செய்யவும் முழு உரிமை உண்டு. இந்தியாவின் மதமாற்றங்கள் காரண காரியங்களைக் கொண்டன; இங்கு நிலவும் சகித்துக் கொள்ள முடியாத சில பண்பாட்டுக் கூறுகள் மதமாற்றத்தைத் தூண்டின. இந்தியாவில் தங்களைச் சாதியின் பெயரால் நீண்டகாலம் அறிந்து கொண்டவர்கள்தான் கோடானுகோடி பேர்.  மதம் மிகக் காலதாமதமாக அறியப்பட்ட ஒன்று.  இந்தியா ஒரே மதத்தின்கீழ் ஒருநாளும் இருந்ததில்லை.  இப்போது மதமாக அறியப்பட்டிருப்பது ஒரு உயர்சாதி அமைப்புதான். அந்த அமைப்பு ஏற்றுக்கொண்ட நூலே மதத்தின் ஒட்டுமொத்த வேதமாக மாற்றவும் பட்டுள்ளது.  எனவே, இப்போது சங்கப்பரிவாரங்கள் சொல்வதுமாதிரி தாய்மதம் என்ற ஒன்று இல்லை.  ஆனால் சங்கப் பரிவாரங்கள் குடிமக்களை வழக்கம்போல மூளைச் சல்வை செய்து தனது ஆதிக்கத்தையும் மேலாண்மையையும் உறுதிபடுத்திக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

இந்த மதமாற்ற நிகழ்ச்சிகள் இந்துத்வா சக்திகளின் திட்டமிட்ட ஏற்பாடுகள் ஆகும்.  பலவிதமான அச்சுறுத்தல்கள் இதில் கையாளப்பட்டுள்ளன; சங்கப் பரிவாரத் தடங்களை அறிந்துகொண்டால் இது சுலபமாகத் தெரியும். ஆனால் எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையைக் கையிலெடுத்ததும் இந்த மதமாற்றங்களுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று சொல்லி ஏமாற்றப் பார்க்கிறார்கள். அவர்களே விரும்பி மதம் மாறிக் கொண்டிருப்பதாக அடுத்த பல்டி அடிக்கிறார்கள்.மூன்றாவது நிமிடம் இந்த மதமாற்றங்கள் தொடரும் என்று அறிவிக்கிறார்கள். எத்தனைபேர், எந்த இடத்தில், என்றைக்கு மாறப்போகிறார்கள் என்கிற பட்டியலைச் செய்தியாளர்களின் மத்தியில் அவர்களே வெளியிடுகிறார்கள். இது பொய்யைப் பரப்பும் தந்திரமா அல்லது அரைவேக்காட்டுச் சாகசமா?

இந்த விவகாரத்தில் மோடியின் பதிலென்ன என்ற கேள்வியை நாடாளுமன்றத்தில் அவர் இருக்கும்போதே எழுப்பியாகி விட்டது.  ஆனால் இன்னொரு மன்மோகன்சிங்காகப் பதில் சொல்லத் தெரியாமல் மௌனம் சாதிக்கிறார் மோடி. இன்னொரு புறத்தில் நாடாளுமன்றத்தில் நேருக்குநேர் பேசாமல் அதே செய்தியாளர்கள் மத்தியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மந்திரிகள் சொன்னால் அது பிரதமரே சொன்னமாதிரிதான் என்று கூறுகிறார்.  எங்கே நேர் எதிர்நின்று பேசுகிறார்களோ அங்கே பதிலைக் கூறும் துணிவின்றி வெளியிடங்களில் பேசி நழுவுகிறார்கள்.  முகநூலிலும் ட்விட்டரிலும் நாள்தோறும் கருத்துக்கள் பகிர முடிந்த பிரதமர் நாட்டின் கண்ணியத்திற்குரிய நாடாளுமன்றத்தைத் துச்சமாக்கி வெளியேறுகிறார்;  வாசகர்களோடு அவ்ர்கள் உடனே கேள்வி எழுப்ப முடியாத இடத்தில் நின்றுகொண்டு தன் திறமைகளைக் காட்டுகிறார்.

ஆகவே, மதமாற்ற விவ்காரம் பிரதமர் மோடியின் கண்ணசைவில் நடந்திருப்பதாகக் கருத இடமுண்டு.  எப்படியிருந்தாலும் அவர் கேள்விகளுக்கான பதிலை யாதாயினும் ஓர் இடத்தில் நின்று பேச வேண்டியது அவசியமாகும்.  ஒரு நாட்டின் பிரதமர் தனது ஆட்சியின் கீழே அமைதியையும் சுபிட்சத்தையும் கொண்டுவர விரும்பவேண்டும்.  காலாவதியான பிரச்சினைகளோடு அவர் மல்லுகட்டக் கூடாது.  மதமாற்றத்தை ஒருவர் விரும்பாமல் இருக்கலாம்;  அதன் காரணத்தை நம்மால் அறியமுடியும். ஆனால் தன் கையில் ஆட்சியும் அதிகாரமும் இருப்பதால் மற்றக் குடிமக்களின் உரிமைகளில் வல்லாந்தம் செய்யக் கூடாது.  அது ஒரு பிறப்புரிமை.  ஆட்சியின் வலிமை கருதிப் பிறரைத் தன் விருப்பத்திற்கு இணங்கச் செய்வது முதிர்ச்சியடையாத மனநிலையாகும்.  நாட்டின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் இவை முட்டுக்கட்டைகளாகும். நாட்டை வலிமைப்படுத்தவும் வளர்ச்சியை உருவாக்கவும் விரும்புகிற ஓர் அரசு அனைத்து மக்களையும் அரவணைத்துச் சென்றாலொழிய வெற்றிபெற இயலாது.  இது மோடி அறியாமல் இருப்பாரென்றால் அவர் ஆளுமைத் திறன் பெற்றவரல்ல.

மதமாற்ற விவகாரம் வெறும் ஆசைகளுக்காக நடந்தவை அல்ல. அது இந்தியாவின் அருவருப்பான வர்ணாஸ்ரமக் கருத்தியலின் எதிர்வினை அன்றோ?  மேல்சாதி என்றும், கீழ்சாதி என்றும் மனித குலத்தை இழிவுசெய்த கொடுமை இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் நடக்கவில்லை.  தகுதிகளைப் புறந்தள்ளி பிறப்பால் சுமத்தப்பட்ட சாதீய அடிமை விலங்கை ஏற்பதை ஒரு மனிதன் விரும்பமாட்டான்.  அவனும் பிறரைப் போலவே வாழ உரிமை படைத்தவன்.  ஆனால் வர்ணாஸ்ரமம் தன்னுடைய வன்முறையின் மூலம் மக்களை மாக்களாகப் பிளவுபடுத்தி சிலரின் உல்லாச வாழ்க்கைக்குப் பாதை போட்டது. தங்களின் அறிவின் விகாசத்தால்  சாதீயத் தளைகளை முறியடித்தோர் புதிய மார்க்கத்தைப் பெற்றுக் கொண்டார்கள். அதன்பின் அவர்கள் அடைந்த வாழ்க்கை அவர்களின் தேடலுக்கான வாய்ப்புகளை வழங்கியது.

பொதுவாக மத விவகாரங்களில் மட்டுமே சங்கப்பரிவாரங்கள் ஆர்வம் கொண்டவர்கள்.  அவர்களுக்கு மக்கள் நலன்குறித்து மேலதிகமான சிந்தனைகள்,  ஆர்வங்கள் கிடையாது.  இருப்பினும் இதில் மேலும் சில தந்திரங்கள் உள்ளன.  தான் பதவிக்கு வந்தால் விலைவாசிகள் குறையும் என்றும், நேர்மையான நல்லாட்சி நடக்கும் என்றும் சொன்ன மோடி அயல்நாடுகளிலுள்ள கருப்புப்பணத்தை நூறுநாட்களுக்குள்ளாக மீட்டுக்கொண்டு வந்து எல்லொருக்கும் பகிர்ந்தளிக்கப்போவதாகவும், அதன் காரணமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 15 லட்சம் கிடைக்கும் என்றும் உறுதி கூறினார்.  சந்தேகமில்லை,  ரூ. 15 லட்சம் கிடைக்கும் என்ற பேராசையினால் மக்கள் அணிதிரண்டு வந்து மோடிக்கு வாக்களித்துள்ளார்கள்.  ஆனால் மோடியின் வார்த்தைகளை அவரால் காப்பாற்ற முடியவில்லை;  அதற்கான முயற்சிகளும் இல்லை.  கருப்புப் பணம் மோடியைப் பூஜ்யமாக்குகிறது. மக்களின் கேள்விக்கணைகளும் எதிர்க்கட்சிகளின் கிண்டலும் பெருகிவிட்டன.  இதைச் சமாளிக்க பா.ஜ.க.வாலும் மோடியாலும் முடியவில்லை. எனவே, கருப்புப்பண மீட்பிலும் அதன் விநியோகிப்பிலும் கவனம் கொண்ட வாக்காளர்களின் கவனத்தை எந்த வகையிலாவது திருப்பிக்கொண்டு போகவேண்டிய நெருக்கடியில் மோடியும் பாஜகவினரும் உள்ளனர்.  மதமாற்ற விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டதன் காரணமாக மக்களின் கவனமும் சிதறடிக்கப்பட்டு கருப்புப்பணமும் பதுங்கிவிட்டது. இதில் கொஞ்ச நாளைக்கு வண்டி ஓடலாம்;  அப்புறம் என்ன செய்வார்களோ?

சங்கப்பரிவாரம் நீண்ட காலமாக மத மாற்றத் தடைச் சட்டத்தை வலியுறுத்தி வருகின்றது. இப்போது தாங்கள் மதமாற்றத்தடைச் சட்டத்தைக் கொண்டுவரவும் தயார் என்று நல்ல இயக்கம்போலக் கூறிக் கொள்கிறது.  மதம் மாறுவதில் பிரச்சினை இல்லை.  மதம் மாற்றுவதில்தான் பிரச்சினை. இன்றைய மதமாற்றங்கள் வலுக்கட்டாயமாக நிகழ்த்தப்படுகின்றன என்பதில் ஐயமில்லை.  ஏனெனில் விரும்பி மதம் மாறுவதாக இருந்தால் நாடு பூராவிலும் ஒரே சமயத்தில் பலபேர் மாறிச் செல்லமாட்டார்கள். உதிரித்தனமாக நடக்க மட்டுமே வாய்ப்புண்டு.  மதம் மாறுவது என்பது பெரும்பாலும்  சாதீய ஆதிக்கத்தில் வெறுப்படைந்து, அதைத் தமது பிறப்புரிமையால் துறந்து செல்வதுதான்.  காலம் காலமாக நடப்பது இதுவே. இஸ்லாமும் கிறித்தவமும் பௌத்தமும் இப்படித்தான் வளர்ந்துள்ளன. ஆனால் மதமாற்றத் தடைச் சட்டம் என்றால் அதைத் தங்கள் மதத்தவர்  வெளியேறிச் செல்வதைத் தடுப்பதற்கான குயுக்தியாகத்தான் சங்கப்பரிவாரங்கள் கூப்பாடு போடுகின்றன. மதமாற்றத் தடைச் சட்டம் ஒருவரின் உரிமையைப் பறிக்கும் செயல்.

மதமாற்றத்தை சங்கப் பரிவாரங்கள் விரும்பவில்லை என்றால் அவர்கள் உண்மையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டியது வர்ணாஸ்ரமத்தின் பொல்லாங்கையே.  காலத்திற்கொவ்வாத, மானுடத்திற்கு எதிரான கொஞ்சம்கூடச் சகிப்புத்தன்மையற்ற வர்ணாஸ்ரமத்தை அவ்ர்கள் ஒழித்துக் கட்டட்டும்.  தீண்டாமையை உதறி வீசிவிட்டுத் தங்கள் மதத்தினர் என அவர்கள் கருதிக்கொள்ளும் மக்கள் கூட்டத்தை மெய்யாலும் அன்பாலும் ஒருசேர அரவணைத்துக் கொள்ளட்டும்.  தீண்டாமை இருக்கும்வரை மதமாற்றங்கள் இருக்கும். மேலென்றும் கீழென்றும் மனிதர்கள் இல்லை என்று வரலாறு நிரூபித்துக் காட்டிய உண்மையைத் தங்களின் சிந்தனையில் ஏற்றிக் கொள்ள அவர்கள் தயாரா? இந்த மானுட விரோதப் போக்கிரித்தனங்களைக் களையாமல் வெறுமனே மதம் மாற்றிவிடலாம் அல்லது தடுத்துவிடலாம் என்றால் அது பொய்நெல்லைக் குற்றிப் பொங்க நினைத்த கதையாக ஆகும்.

தெரியாமல்தாம் கேட்கிறோம்!  இப்போது மதம் மாறி வந்தவர்களுக்கு நீங்கள் ஒதுக்கிய ஜாதி என்ன?  முதலில் அதைப் பகிரங்கமாகச் சொல்லி மக்களின் மனங்களை வெல்லுங்கள்; மற்றதை அப்புறம் பார்க்கலாம்.