பறவைகளும் தங்களின் அன்றாடப் பணி முடித்து தத்தம் கூடுகளுக்குத் திரும்பக் கூடிய மாலை நேரம். பறவைகளுக்கு இணையாக மக்களும் தங்களின் வேலைகளை முடித்து வீடுகளுக்குத் திரும்ப ஆயத்தமானதின் அடையாளமாக வடபழனியில் உள்ள ஆற்காடு சாலை முழுவதும் வாகன நெரிசல். ஒரு வழிப்பாதை என்ற போதிலும் மக்களின் அவசரத்தின் காரணமாக இருவழிப்பாதையாக மாறக் கூடிய நேரம். ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்லும் போட்டியின் நிமித்தம் சாலை, வாகனங்கள் ஓட்டும் ரேஸ் களமாக மாறியிருக்கக் கூடிய கோலம். பறவைகளும் தங்களின் அன்றாடப் பணி முடித்து தத்தம் கூடுகளுக்குத் திரும்பக் கூடிய மாலை நேரம். பறவைகளுக்கு இணையாக மக்களும் தங்களின் வேலைகளை முடித்து வீடுகளுக்குத் திரும்ப ஆயத்தமானதின் அடையாளமாக வடபழனியில் உள்ள ஆற்காடு சாலை முழுவதும் வாகன நெரிசல். ஒரு வழிப்பாதை என்ற போதிலும் மக்களின் அவசரத்தின் காரணமாக இருவழிப்பாதையாக மாறக் கூடிய நேரம். ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்லும் போட்டியின் நிமித்தம் சாலை, வாகனங்கள் ஓட்டும் ரேஸ் களமாக மாறியிருக்கக் கூடிய கோலம்.
இந்தச் சாலையை ஒட்டிய சிறிய தெருதான் மசூதித் தெரு என்ற போதிலும் பரபரப்பான மாலை வேளை என்பதால்; மசூதித் தெரு முழுவதும் மக்கள் அங்குமிங்கும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் பள்ளிவாசலில் இருந்து ‘அல்லாஹு அக்பர்’ என மக்ரிப் தொழுகைக்கான பாங்கு சப்தம் கணீரென்று ஒலிக்க ஆரம்பித்தது.
பாங்கு சப்தத்தை செவியுற்றதும் அந்த தெருவில் சிறியதாக பலசரக்குக்கடை வைத்திருக்கும் சாகுல் ஹமீது பாய் தன் கடையில் வேலை பார்க்கும் சிறுவனிடம், “தம்பி! கடையைக் கொஞ்சம் பாத்துக்க. இந்தா தொழுதுட்டு வந்துர்றேன்” என்று சொல்லிய வண்ணம் கீழே இறங்கினார்.
அவ்வமயம் “அஸ்ஸலாமு அலைக்கும்! சாகுல் பாய்” என முகமன் கூறிய வண்ணமாக தன்னுடைய புத்தம்புது பைக்கில் வந்திறங்கினார் மெயின் ரோட்டில் கொஞ்சம் பெரிய மளிகைக் கடை வைத்திருக்கும் காதர் பாய். உடனே சாகுல், “வ அலைக்குமுஸ்ஸலாம் காதர் பாய்” சுகமாயிருக்கீங்களா? வாங்களேன் தொழுதுட்டு வந்து பேசுவோம்” எனச் சொல்ல. “இல்ல பாய்! கைலி கொஞ்சம் அழுக்காயிருக்கு, நான் அப்புறம் தொழுதுக்குறேன். நீங்க போய் தொழுதுட்டு வாங்க” எனக் காதர் சொல்லி மழுப்பினார்.
“சரி! அப்படின்னா நீங்க சிறிது நேரம் வெயிட் பண்ணுங்க. நான் போய் தொழுதுட்டு வந்துறேன்” எனச் சொல்லி வேகமாக பள்ளியை நோக்கி நடையைக் கட்டினார் சாகுல் ஹமீது.
பள்ளிக்குள் சென்று சாகுல் பாய் தொழுது விட்டு வருவதற்குள் அவரைப் பற்றிய சிறிய அறிமுகம். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்தான் சாகுல் ஹமீது. ஏழ்மையின் காரணமாக ‘கெட்டும் பட்டணம் போய்ச் சேர்’ என்ற முதுமொழிக்கேற்ப கிட்டத்தட்ட முப்பதைந்து வருடங்களுக்கு முன்பு தன்னுடைய பத்தாவது வயதில் சென்னை வந்து சேர்ந்தார்.
ஆரம்பத்தில் ஒரு மளிகைக் கடையில் எடுபிடியாக வேலைக்குச் சேர்ந்து, படிப்படியாக முன்னேறி இன்று ஓஹோ என்று இல்லா விடினும் சிறிய அளவில் ஒரு கடை வைத்து தன்னுடைய வஜீபனத்தை நடத்தி வருகிறார். ஐவேளைத் தொழுகையையும் நேமமாக தொழக்கூடிய தொழுகையாளி. தம் வியாபாரத்தில் நேர்மையாகவும் நியாயமாகவும் நடக்கக் கூடியவர். ஹலால், ஹராமை முழுமையாக பேணக் கூடியவர். எந்த விதமான கெட்டப் பழக்கமும் இல்லாதவர். ஜீனத் என்ற மனைவி. அப்துர் ரஹ்மான், அப்துல்லாஹ், ஆயிஷா என முன்று பிள்ளைச் செல்வங்கள் என நிம்மதியான வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பவர். பெரிய மகன் பன்னிரெண்டாவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.
இதற்கு நேர்மாற்றமானவர் காதர் பாய். வியாபாரத்தில் லாபத்தை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டவர். கள்ளப் பொருட்களில் இருந்து கலப்படப் பொருட்கள் வரை எதையும் தம் கடையில் விற்பதற்கு அஞ்சாதவர். அவரது குறிக்கோள் பணம் மட்டுமே. அது வரக் கூடிய வழிகளைப் பற்றிக் கவலைப்படாதவர். அதன் காரணமாகவே குறுகிய காலத்திற்குள் ரங்கராஜபுரத்தில் ஒரு வீடுää சாலிகிராமத்தில் ஒரு வீடு என வசதியாக வாழக் கூடிய வியாபாரி!
இருவரும் ஆரம்ப காலக்கட்டத்தில் ஓரே கடையில் வேலை பார்த்ததின் காரணமாக ஏற்பட்ட பழக்கம். ஆனாலும் ‘பாய்’ என்ற எல்லையைத் தாண்டாத ஒரு தோழமையாக அதை வைத்துக் கொண்டார் சாகுல் ஹமீது.
இதோ, சாகுல் ஹமீது பாய் தொழுது விட்டு வந்து விட்டார். நாம் கதையைத் தொடர்வோம்.
கடைக்குள் நுழைந்து தம் சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டிக் கொண்டே, “என்ன காதர் பாய்! திடீரென்று இந்தப்பக்கம்? விஷயமில்லாமல் வர மாட்டிங்களே. என்ன செய்தி? என வினவ, “ஒண்ணுமில்ல சாகுல் பாய்! ஒரு முக்கியமான விஷயம் சம்பந்தமாக உங்களிடம் பேசலாம்னுதான் வந்தேன். பேசலாமா?” எனக் காதர் பாய் தன் பேச்சை ஆரம்பித்தார். “அதுக்கென்ன பாய்! தாராளமா டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம். இஞ்சி டீ சாப்பிடுறிங்களா? உடம்புக்கு நல்லது” எனக் கேட்க காதரும் ஆமோதித்தார். “முத்து! போய் இரண்டு இஞ்சி டீ வாங்கிக்கிட்டு வா, அப்படியே உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்க” என்று சொல்லி தன் கடைப்பையனை அனுப்பி வைத்தார். “என்ன சாகுல் பாய்! கடைக்கு வேலை பார்க்க நம்ம பசங்க யாரும் கிடைக்கலையா? ஒரு காஃபிரை வேலைக்கு வைத்து இருக்கீங்களே?” என மெதுவாக தன் பேச்சை ஆரம்பித்தார் காதர்.
“என்ன பாய் செய்ய சொல்றீங்க? நம்ம பசங்க யார் இந்த வேலைக்கெல்லாம் வர்றாங்க. 15, 16 வயது ஆனவுடனேயே துபாய், மலேசியா போகணும்னு பாஸ்போர்ட் அப்ளை பண்ண ஆரம்பிச்சுடுறாங்க. படிக்கணும்னு கூட நினைக்கிறதில்ல. வெளிநாடு போய் தெரு கூட்டுவது, பரோட்டா போடுவதிலிருந்து என்ன விதமான தாழ்வான வேலை பார்த்தாலும் பரவாயில்ல, ஃபாரீன்ல வேலை பார்க்கிறேன்னு பெருமை பீத்திக்கிட்டு அலையுறாங்க. காலணாக் காசுனாலும் கவுர்மென்ட் உத்தியோகம்னு அந்தக் காலத்தில சொன்ன மாதிரி இந்தக் காலத்துல, பத்து ரூபாய்னாலும் ஃபாரீன் சம்பாத்தியம்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. அப்படியே இங்க வேலை பார்த்தாலும் வேட்டி, சட்டைல கறை படாம வேலை பார்க்கணும்னு நினைக்கிறாங்க. நாமெல்லாம் அந்தக் காலத்துல மூட்டை சுமந்து, அழுக்கோடப் புரண்டு வியாபாரத்தைக் கத்துக்கிட்டோம். ஆனா நம்மோட இந்தக் காலத்துப் பெரும்பாலான இஸ்லாமிய இளைஞர்கள் இதற்கெல்லாம் தயாரா இல்லை பாய். ஏதோ சில பேருதான் இந்த மாதிரி கஷ்டப்பட்டு தொழில் பண்றாங்க. அத விடுங்க பாய்! நீங்க என்ன விஷயமா வந்தீங்க? அதைச் சொல்லுங்க” என்றார்; சாகுல் பாய்.
“ஒண்ணுமில்ல! அப்படியே சும்மாதான் வந்தேன். ஏன் சாகுல் பாய்! கிட்டத்தட்ட பத்து வருஷமா கடை அப்படியேதான் இருக்கு. கொஞ்சமாவது டெவலப் பண்ணக்கூடாதா? கடையைச் கொஞ்சம் மராமத்து வேலை பார்த்து, அதிகமா சரக்கு வாங்கிப்போட்டு வைச்சீங்கன்னா நல்லா இருக்கும் இல்ல! வியாபாரமும் நல்லா நடக்கும். நீங்களும் நாலு காசுப் பார்க்கலாம் இல்ல?” என, தன் துண்டிலை போட்டார் காதர்.
“எனக்கு மட்டும் ஆசையில்லையா பாய்? ஆனா அல்லாஹ் நாடலையே. வரவுக்கும் செலவுக்கும் சரியா இருக்கு. மிச்சம் எதுவும் பண்ண முடியலை. குடும்ப செலவுகளுக்கும், பிள்ளைங்களோடப் படிப்புச் செலவுக்குமே முழி பிதுங்குது. ஏதோ அல்லாஹ்வுடைய கிருபைல வாழ்க்கை கடனில்லாம ஒடிக்கிட்டிருக்கு. அதுக்கே அவனுக்கு அதிகமா ஷுக்ர் செய்யணும். துஆ செய்யுங்க பாய்” எனத் தத்துவார்த்தமாக பதில் சொன்னார் சாகுல்.
“அல்லாஹ் அவனே நாடுவானா பாய்? நாமதான் முயற்சி செய்யணும். நீங்கதான் வேறு எந்த தொழிலிலும் ஈடுபடறதில்ல. என்னைப் பாருங்க, இந்தத் தொழிலை மட்டும் நம்பாம வேறு பல தொழில் செய்றதனாலதான் இன்னிக்கு இரண்டு வீடு கட்டி, இந்த ஏரியாவுல நானும் ஒரு பெரிய மனுஷனா இருக்கேன்” எனத் தன் பெருமையை மெலிதாக பறைசாற்றிக் கொண்டார் காதர். “அதுக்கென்ன பாய் செய்றது? உங்களுக்கு உதவி, ஒத்தாசை செய்ய உங்க மச்சினர்களும் உறவினர்களும் இருக்காங்க. என் தொழிலை நான்தான் பார்த்தாகனும். அதுவுமில்லாம வேறு வேலையில் ஈடுபட்டா இந்தத் தொழில் அடிபட்டுடும் பாய். தன் கையை ஊன்றி கரணம் பாயறதுன்னு சொல்வாங்க. அது மாதிரிதான் நான் செஞ்சிட்டிருக்கேன். இன்ஷா அல்லாஹ் பிளளைங்கள நல்லபடியா படிக்க வைச்சு பெரிய ஆளாக்கிட்டா அதுவே அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபை” என்றார் சாகுல். “ஏன் பாய்! பெரிய பையனை டாக்டருக்குப் படிக்க வைக்கணும்னு சொன்னீங்களே? அதுக்குக் காசு வேணாமா?” எனக் கேட்டார்; காதர்.
“ஆமா பாய்! அவனும் நல்ல படியா படிக்கிறான். அரசுக் கல்லுரியிலேயே சீட் கிடைச்சுடும்னு சொல்றான். துஆ செய்யுங்க” என்றார் சாகுல். “அதெல்லாம் ரொம்ப சிரமம் பாய். இந்தக் காலத்துல டொனேஷன் இல்லாம அரசு சீட் கிடைக்கிறதுலாம் கஷ்டம். நம்ம பெரியசாமி அண்ணாச்சி தன் மகளை டாக்டருக்குப் படிக்க வைக்க முதல் வருடம் மட்டுமே கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாய் செலவழிச்சுருக்கார் தெரியுமா? அதுக்குத்தான் நான் ஒரு யோசனைச் சொல்றேன் கேட்கறீங்களா?” எனக் காதர் கேட்க, “சொல்லுங்க பாய்” என்றார் சாகுல்.
இதற்கிடையில் முத்து டீயுடன் வர, “டீ எடுத்துக்கங்க பாய்! டீ குடிச்சுக்கிட்டே பேசலாம்” என டீயை நீட்டினார் சாகுல். “என்கிட்ட ஒரு அருமையான தொழில் கைவசம் இருக்கு. அதில் நீங்க சேர்ந்துட்டீங்கன்னா பணப் பிரச்சனையெல்லாம் பஞ்சாப் பறந்து போயிடும். நான் இந்த வியாபாரத்துல சேர்ந்து ஆறுமாசம்தான் ஆகுது. ஆனா மாசம் 30,000 ரூபாய் வருமானம் வருது. உங்கக் கடை வருமானத்தை விட இது அதிகம் தெரியுமா” எனத் தனக்குத்தானே ஆச்சரியப்பட்டுக் கொண்டார் காதர்.
“அப்படிப்பட்ட பெரிய வியாபாரம் என்ன பாய்?” என அதிசயமாக வினவினார் சாகுல்.
“அவ்வுளவு கஷ்டமான வேலையெல்லாம் இல்ல பாய், குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செஞ்சா போதும். நீங்க இந்த கம்பெனியில மெம்பராயிடலாம். ஏறக்குறைய 4,000 ரூபாய்க்குப் பொருளும் வாங்கிக்கலாம். ஆனா இதுக்கப்புறம்தான் உங்களுக்குக் வேலையிருக்கு. நீங்க உங்களுக்குக் கீழே ஒரு டீமை உருவாக்கணும். குறைந்த பட்சம் இரண்டு பேரு. பிறகு அந்த இரண்டு பேரும் தங்களுக்குக் கீழே இரண்டு பேரு, இப்படியே ஆட்கள் சேர சேர உங்களுக்குக் கீழே ஒரு பெரிய கூட்டமே சேரும். சேரக்கூடிய யாரும் சும்மா இருக்க மாட்டாங்க. அவங்களுக்குக் கீழே ஆட்களைச் சேர்த்துக்கிட்டே இருப்பாங்க. இப்படி ஆட்கள் சேரச்சேர, உங்களுக்கு வருமானம் வந்துக்கிட்டே இருக்கும். மாதம் 50 இலட்ச ரூபாய் சம்பாதிக்கக்கூடிய ஆட்கள் எல்லாம் இருக்காங்க தெரியுமா? பெரியப் பெரிய அரசு அதிகாரிங்களிலிருந்து வியாபாரிகள் வரை எவ்வளவு பேரு இந்தத் தொழிலில் இருக்காங்க தெரியுமா! வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை இதைப் பத்தித் தனியே வகுப்பெல்லாம் எடுக்குறாங்க. இந்த வகுப்புக்குப் போனா தொழிலைப் பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சுக்கலாம். நீங்க மட்டும் ஊம்னு சொல்லுங்க. ஒரே வருடத்துல லட்சாதிபதி ஆயிடலாம். என்ன சொல்றீங்க” என விரிவாக தன் வலையை வீசிய காதருக்கு, இதுவரை ஊம் கொட்டிக்கொண்டிருந்த சாகுல் பேச ஆரம்பித்தார்.
“காதர் பாய்! நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனா இது சரியான வியாபாரமா பாய். சொல்லுங்க பார்க்கலாம். இதற்குப் பெயர் மல்டி லெவல் மார்க்கெட்டிங் அப்படின்னு சொல்வாங்க. ஏற்கனவே ஆம்வே அப்படிங்கிற அமெரிக்க கம்பெனி ஆரம்பிச்சு வைச்சதுதான் இது. ஒரு தொகையை ஆரம்பமா கட்ட சொல்லிட்டு 50 கிராம் பேஸ்ட்டை 100 ரூபாய்க்கும் 100 கிராம் ஷாம்புவை 400 ரூபாய்க்கும் நம்மத் தலையில கட்டிடுவாங்க. ஏன் இது மட்டும் இவ்வளவு விலையின்னு கேட்டா அது அவ்வளவு தரமானது அப்படின்னு வியாக்கியானம் சொல்வாங்க. ஆனா அதுக்கு அப்புறந்தான் பிரச்சனையே ஆரம்பிக்கும். ஆட்களை சேர்க்குறது அவ்வளவு சிரமமான விஷயம். அதையும் தாண்டி பேராசைக் காரணமா அண்ணன், தம்பி, மச்சான், மாமான்னு ஆட்களைச் சேர்த்து விடுவாங்க. ஆனா கொடுமை என்னான்னா சேர்த்து விட்டவங்களுக்கும் லாபம் வராது, இவங்களுக்கும் லாபம் வராது. கடைசியில பிரச்சனையிலதான் முடியும். இந்த ஆம்வே காரணமாகப் பிரிஞ்சுப் போன எத்தனையோ குடும்பங்களை நான் பார்த்திருக்கேன். பேச்சு வார்த்தையே இல்லாம முறிஞ்சுப் போன எத்தனையோ உறவுகளையும் எனக்குத் தெரியும். இதில அதிகமா சேர்ந்தது யாருன்னா, நம்ம இஸ்லாமிய சகோதரர்கள்தான். உழைக்காம அதிகம் சம்பாதிக்க பேராசைப்பட்டு, கடைசியில நஷ்டப்பட்டுப் போயிட்டாங்க. இதெல்லாம் என்னை மாதிரி ஆளுக்கெல்லாம் சரிப்பட்டு வராது பாய்” என விளக்கமாக மறுத்தார் சாகுல் பாய்.
“பாய்! நீங்க தப்பா நினைச்சிட்டீங்க. இது அந்தக் கம்பெனி இல்ல. இது வேற நிறுவனம். மிகவும் பிரபலமானக் கம்பெனி. உலகம் முழுக்க பல்வேறு நாடுகள்ல கிளைகள் இருக்கு. ரொம்ப நம்பகமானக் கம்பெனி பாய். நம்ம ஏரியாவுல மட்டும் எத்தனை பேரு இதில் சேர்ந்திருக்காங்க தெரியுமா? இதுல நிறைய திட்டங்கள் இருக்கு. நீங்க பொருட்கள்தான் வாங்கணும்னு இல்ல. இன்சூரன்ஸ் கூட எடுத்துக்கலாம். நீங்க வந்து பாருங்க பாய்! உங்க வாழ்க்கையே மாறிப் போயிடும்” என விஸ்தாரமாகத் தன் வலையை மீண்டும் விரித்தார் காதர்.
“நீங்க சொல்றதெல்லாம் சரிதான் பாய்! ஆனா ஒரு மனிதன் சம்பாதிக்கக்கூடிய மிகச் சிறந்த சம்பாத்தியம் அவன் வியர்வையைத் தரையில சிந்தி சம்பாதிக்கறதுதான் அப்படின்னு பெருமானார் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்காங்க. அதனால இப்படி வரக்கூடிய வருமானம் உடம்புல ஒட்டாது பாய். அதுவுமில்லாம இஸ்லாமிய ஷரிஅத்துக்கு இது ஏத்ததில்ல. ஆகவே தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க பாய். மன்னிச்சுக்கங்க” எனத் தன்னிலை விளக்கத்தை சாகுல் பாய் அளிக்க, காதரின் முகம் கடுகடுக்க ஆரம்பித்தது. கோபமாக சாகுலைப் பார்த்து, “உங்கக் கிட்டே வந்தேன் பாருங்க என்னை சொல்லனும், சின்ன வயசில இருந்து நம்ம கூட பழகினவர் ஆச்சே. ஏதோ வாழ்க்கையில கொஞ்சமாவது முன்னுக்கு வரட்டுமேன்னு ஐடியா சொல்ல வந்தா என்னையே அசிங்கப்படுத்திட்டீங்களே! நீங்க இந்த நாத்தத்தையே கட்டிட்டு அழுங்க” என விருட்டென அவ்விடத்தை விட்டும் கிளம்பினார் காதர். அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் தன் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தார் சாகுல் பாய். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து சரக்கு எடுத்துக் கொண்டு தன் சைக்கிளில் சாகுல் பாய் வந்து கொண்டிருந்த போது, காதர் பாய் கடையருகில் எக்கச்சக்க கூட்டம். போலீஸ் தலைகள் வேறு தெரிந்தன. என்னவோ, ஏதோ என கடையருகில் சென்றார்.
அங்கிருந்த ஒருவரிடம் “என்ன ஆச்சு” என வினவினார். அதற்கு அவர், “ஒண்ணுமில்ல பாய்! நம்ம காதர் பாய் ஏதோ வியாபாரம் ஆரம்பிச்சாராம், அதற்காக நிறைய பேர்கிட்ட பணம் வாங்கியிருக்கார். ஆனால் யாருக்கும் அசலையும் திருப்பிக் கொடுக்கல, லாபத்தையும் கொடுக்கல. அதுவுமில்லாம அது ஃபிராடுக் கம்பெனியாம். அதனால பணம் கொடுத்தவங்களெல்லாம் போலீஸில் புகார் கொடுத்துட்டாங்க. இப்ப காதர் பாயைக் கைது பண்ண போலீஸ் வந்திருக்கு, பாவம்” எனக் கூறினார். இதைக் கேட்டவுடன் சாகுல் பாய் அதிர்ச்சியடைந்தாலும் மறுகணம் அவர் நா அவரையுமறியாமல் “அல்ஹம்து லில்லாஹ்” என முணுமுணுத்தது. அப்போது பள்ளியிலிருந்து அஸர் தொழுகைக்கான பாங்கு சப்தம் “அல்லாஹு அக்பர்” என ஒலிக்க ஆரம்பித்தது.¨
-வஜீரா மைந்தன்