மீலாது: இன்றும் இனியும் !

வீன வஹ்ஹாபிகளின் வருகைகளுக்குப் பிறகு மீலாது விழாக்கள் சற்று வீழ்ச்சிகண்டன. மீலாது மேடைகள் இனி மீளாது என்று சொல்லும் அளவுக்கு அவை கீழே தள்ளப்பட்டன. எனினும் அவை இன்று மறுமலர்ச்சி பெற்று ரபீஉல் அவ்வல் மாதம் முழுவதும் ஏன் அதையும் தாண்டி இன்று சிறியதும், பெரியதுமாக மீலாது விழாக்கள் மீண்டும் களைகட்டத் தொடங்கி விட்டன. அல்ஹம்து லில்லாஹ்!

ரபீஉல் அவ்வல் என்ற அரபுச் சொல்லிற்கு முதல் வசந்தம் என்று பொருள் உண்மையிலேயே மீலாது விழாவுக்குப் பிறகு தான் நமக்கு நல்வசந்தம் வீசத்தொடங்குகிறது.

திடீரென்று விழாக்களை நிறுத்தியவர்கள் தான் யோசிக்க வேண்டும் அண்ணனும் பாதி வழியிலேயே கை (காட்டி) நீட்டி விட்டார்…அண்ணலாரும் கை விரித்து விட்டார்கள் இப்போது நாம் எந்தப்பக்கம் போவது என்று…?

இப்படிப்பட்ட ஒரு காலச்சூழலில் தான் நாம் கொண்டாடப் போகிறோம்  மீண்டும் ஒரு மீலாதுந் நபி விழாவை ! கூடிக் கலைவது அல்ல மீலாது விழா. கலைந்து சென்றவர்கள் ஒன்று கூடு வது தான் மீலாது விழா ! நாம் சும்மா வாழ்த்தி விட்டுச் செல்வதல்ல மீலாது விழா. நாம் வாழ்ந்து காட்டுவது தான் மீலாதுந் நபி விழா. இன்றைக்கு வீதி யெங்கும் வீரவிழாக்கள் நடக்காத நாட்களே இல்லையெனலாம். அந்த அளவுக்கு திரும்பிய பக்கமெல்லாம் விழாக்கள் தன் பெயருக்கேற்ப விழாமல் வீர நடை நடந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனாலும் அவற்றிலெல்லாம் இல்லாத ஒரு ஆனந்தமும், மகிழ்ச்சியும், சந்தோஷமும் இந்த ஒரு திருவிழாவில் உண்டு. அவர்களும் இவர்களும் நினைப்பது போல் இந்த விழா ஒரு சர்வ சாதாரணமான ஒரு விழா அல்ல. இஸ்லாமின் பெயரால் கொண்டாடப்படும் அத்தனை விழாக்களுக்கும் இந்த விழா தான் ஆணி வேரான ஒரு விழா. இவ்விழாயின்றி இங்கு எவ்விழாவும் இல்லை. அப்படி இருந்தால் அது விழாவே இல்லை. அல்லது அது விழாமல் இல்லை. அப்படியொரு மகத்தான விழா தான் நமது நபிகளாரின் மீலாதுந்நபிவிழா.

இதைக் குறித்து இன்றைக்கு நமது புரிதல்கள் எப்படியிருக்கின்றன…? என்றைக்காவது நாம், நாம் கொண்டாடுவதாக நினைக்கும் அல்லது கொண்டாடும் மீலாதுந் நபி விழா பற்றி சற்றேனும் சிந்ததித்ததுண்டா ? விழாவின் அசல் நோக்கம் என்ன…? அண்ணலாரை புரியவேண்டும், அண்ணலாரைப் புகழ வேண்டும், அண்ணலாரை பின்பற்ற வேண்டும், அண்ணலாராகவே வாழ வேண்டும் என்றெல்லாம் என்றைக்காவது நாம் யோசித்ததுண்டா…?

மீலாது விழா வருகிறது நாமும் வருகிறோம். விழா செல்கிறது நாமும் கூடவே சென்று விடுகிறோம். இப்படியிருப்பதில் நமக்கு என்ன பலன் இருக்கிறது.? சற்று யோசிக்க வேண்டிய ஒன்று.

நபிகளார் நவின்றார்கள்: என் சமூகம் குழப்பமாக இருக்கிற காலத்தில் எவர் எனது வழிமுறையை எடுத்து நடக்கிறாரோ அவருக்கு நூறு ஷஹீத் (-இறைவழியில் போரிட்டு மரணித்த வீரத்தியாகி ) களின் கூலி வழங்கப்படும்.  ( நூல் : மிஷ்காத்-176 )

நாம் வாழும் இந்தகுழப்பமான காலத்தைவிட வேறு எதுவாக இருக்க முடியும்? குழப்பம், குழப்பம் எந்தப் பக்கம் திரும்பினாலும் குழப்பம். இந்நிலையில் நாம் செய்யவேண்டியது என்ன?நபியின் சுன்னத்தை பற்றிப்பிடித்துக்கொள்வது தான் ஒரேவழி…! அதுவே நமக்கு நல்லதொரு கேடயம். கூடவே கூடுதலான உயர்பதவிக் கூலி. இதை விட வேறென்ன வேண்டும் நமக்கு…? நபிகளாரை நாம் ஏன் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதற்கு குர்ஆன் பதிலளிக்கிறது இப்படி :

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.       (அல்குர்ஆன் : 33:21)

அண்ணலாரைக் குறித்து அல்லாஹ் அறிமுகம் செய்கிறபோது தூதரிடம் முன்மாதிரி இருக்கிறது என்று மட்டும் அறிமுகம் செய்யாமல், அத்தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது என்று கூறி நபிகளாரின் “அழகியல் ஆளுமை”யை நமக்கு நல்லறிமுகம் செய்கிறான். அல்லாஹ்வின் ஆழிய அறிமுகத்திற்கேற்ப அண்ணலாரின் வாழ்க்கைப் பயணம் முழுவதும் ஓர் அழகியல் நேர்த்தியும், ஒழுங்கியல் செம்மையும் பின்னிப் பிணைந்திருப்பதை நீங்கள் காணலாம்.

தமது தலைமுடியை சீவுவதிலிருந்து தொடங்கி காலுக்கு செருப்பு அணிவதுவரை, குழந்தை பிறந்ததிலிருந்து தொடங்கி அவன் மரணித்த பின் நல்லடக்கம் செய்யப்படுவதுவரை, அவன் அதிகாலை எழுந்திருப்பதிலிருந்து தொடங்கி அவன் பின்னிரவு தூங்கச் செல்லும் வரை என காரியங்கள் எதுவானாலும் அவை அனைத்திலும் ஓர் அழகிய ஒழுங்குமுறையை நபிகளார் கடைபிடித்து கற்றுக் கொடுத் திருப்பதை நீங்கள் கூர்ந்து கவனித்தால் அதை  நீங்கள் தௌிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

நபிகளாரின் சொல், செயல், உடை, நடை, பாவனை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் அவர்கள் பெற வேண்டிய உரிமைகள் என அனைத்து செயல்பாடுகளிலும் நபிகளார் ஓர் அழகான ஒழுங்கு முறையைக் கடைபிடித்தார்கள். நபிகளாரின் வாழ்வில் எந்தவொரு பகுதியையும் நீங்கள் கூர்ந்து கவனித்தால் கட்டாயம் மெல்லியதாய் ஓர் அழகிய ஒழுங்குமுறைக் கோடு இழையோடுவதைக் காணலாம்.

நபியவர்கள் நடந்தால் நடையழகு,பேசினால்  பேச்சழகு,சிரித்தால் சிரிப்பழகு, ஏன் கோபட்டால், அதுவும் கூட ஓர் அழகு தான் என அவர்களது வாழ்வியல் முழுவதும் இந்த அழகியல் மற்றும்  ஒழுங்கியல் தான் எங்கும் நிறைந்திருந்திருப்பதை நீங்கள் காணலாம்.

இதனால் தான் நமது நபிகளாரின் நற்குணம் தனியொரு இறை வசனத் தின்மூலம் இனிதே புகழ்ந்துரைக்கப் படுகிறது இப்படி : மேலும், (நபியே ! ) நிச்சயமாக நீர் ஆக மிக உயர்ந்த, மகத்தான மாபெரும் நற்குணத்தில்  இருக்கின்றீர்.      (அல்குர்ஆன் : 68:4) சொல்லப் போனால் நபிகளாரின் குணம்,குர்ஆனாகவே மறுமாற்றம் பெற்றிருந்தது என்றால் அது சற்றும் மிகையல்ல !

ஆம்! அன்னை ஆயிஷா (ரளி) யிடம் நபிகளாரின் குணம் எப்படியிருந்தது என்று கேட்கப்பட்டபோது அவர்களின் “குணம் குர்ஆனாக இருந்தது” என்று கூறினார்கள். இந்த நந்நபிமொழி நபிகளாரின் குர்ஆனியகுணத்தை நமக்கு நன்கு படம்பிடித்துக் காட்டுகிறதல்லவா.? குர்ஆன் தௌிவானது, அழகானது, அறிவுப்பூர்வமானது. அது ஆதாரப்பூர்வமானதும் கூட அப்படியானால் அண்ணலாரின் வாழ்வும்,வாக்கும் அப்படியே அழகானது. அது ஆதாரப்பூர்வமானது. இதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமேயில்லை. இதனால்தான் ஒருமெய்யான இறை பக்தனைப் பற்றி பேசும் போது நபிகளார் நவின்றார்கள்: “நற்குணத்தில் அழகானவர்கள் தான் ஈமான்எனும் இறைவிசுவாசத்தில் பரிபூரணமானவர்கள் ஆவார் “(புஹாரீ) என்ற இந்நபி மொழி இங்கு நன்குஆழ்ந்து கவனிக் கத்தக்கதாகும்.

இன்றைக்கு நம்முடைய குணங்கள் எப்படியிருக்கின்றன ? வாயைத் திறந்தால் பொய், கண்ணைத்திறந்தால் காமம், கையை நீட்டினால் களவுகாலை வைத்தால் கலவரம் என நம் உடலுறுப்புக்கள் யாவுமே நம்முடைய தீயகுணங்களைப் பிரதிபலிக்கின்றன. பிறகெப்படி நாம் நல்லவர்களாக இம்மண்ணில் மின்ன முடியும் ? பின்வரும் வசனத்தை சற்று நிதானித்து வாசித்தால் அதன் ஆழமான அகலமான அர்த்தங்களை  உடனடியாக நீங்கள் அவதானிக்க முடியும்..!

لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏

(நம்பிக்கையாளர்களே! நம்முடைய) ஒரு தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கின்றார்; அவர் உங்களி லுள்ளவர்தான். (உங்களுக்கு யாதொரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் கஷ்டத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தமாகவே இருக்கும். (அவ்வளவு தூரம் உங்கள் மீது அன்புடையவர்.) அன்றி உங்களுடைய நன்மையையே பெரிதும் விரும்புகின்றவராகவும், நம்பிக்கையாளர்(களாகிய உங்)கள் மீது மிக்க கருணையும் அன்பும் உடையவராகவும் இருக்கின்றார். (அல்குர்ஆன் : 9:128)

இன்றைக்கு  நம் நபியின் பண்புகள் நம்மிடமிருக்கின்றதா? நம்மை ஒட்டி வாழும் நம் சகோதரர்களுக்கு நாம் நன்மையை நாடுகிறோமா? இல்லை தீமையையா?அவர்களுக்காக நாம் எதைவிட்டுக் கொடுத்தோம்? இன்று  வரிசையில் நிற்பது என்பது  நமக்கு சர்வ சாதாரணமாக பழகிப்போன ஒன்று அதில் கூட அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் ஒருவரை “முன்னுக்கு” அனுப்ப மனம் வருவதில்லையே? இதில் பேருந்துகளில் குழந்கைகளுக்கும், முதியவர்களுக்கும், முடியாதவர்களுக்கும் இடமளிப்பதைப்பற்றி சொல்லவே வேண்டாம்! ஏன் சற்று இடம்மாறி வேறு இருக்கையில் இடம் இருக்கையில் அதில் இருக்கக்கூட நம்மவர்கள் பன்மடங்கு யோசிக்கிறார்களே? இதுமாதிரியான பெரும் இக்கட்டான நேரங்களில் தானே நம் நற்குணம் அங்கு நன்கு வௌிப்பட வேண்டும் அல்லது வௌிப்படுத்தப் படவேண்டும் ?அதுதானே நம்முடைய நல் மனிதாபமானத்திற்கு நல்லழகு? அவை இன்று நம்மை விட்டும் எங்கே  போய் ஓடி, ஒளிந்து கொண்டன…?

வெட்டிய உறவுகளோடு ஒட்டி வாழ்! அநீதியிழைத்தவனை மன்னித்திடு! தீங்கு செய்தவனுக்கும் நன்மைசெய்! என்ற நபிகளாரின் நன்மொழியை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விடமுடியுமா ? நபிகளாரின் சொல்லோவியங்கள் யாவுமே வெற்றுச் சொற்களல்ல ! அவையாவுமே அனுபவப்பூர்வமான, செயலாக்கம் பெற்ற வெற்றிச் சொற்கள். சொற்கள் மட்டுமா இல்லையில்லை வெற்றிச் செயல்களும் கூட…! எனவே நாமும் நமது வாழ்நாட்களில் இம்மூன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டால் கூட நிச்சயம் நாம் வெற்றி பெற முடியும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

நற்குணத்துடன் நாம்வாழ வேண்டும் தீய நயவஞ்சகத்தனத்துடன் அல்ல ! இது குறித்து இறைத்தூதர் இப்படிச்சொன்னார்கள்: “நய வஞ்சகன் (முநாஃபிக்) என்பவன் பேசினால் பொய் பேசுவான்; வாக்களித்தால் மாறுசெய்வான்; நம்பிக்கை வைத்தால் மோசடி செய்வான்; ஒப்பந்தம் செய்தால் முறித்து விடுவான்” என்று இந்நான்கு நல் அடையாளங்களை நமக்கு விளக்கிக் கூறினார்கள். நாம் இன்றைக்கு எப்படியிருக்கிறோம்..? என்று நமக்கு நாமே அவ்வப்போது மறுபரிசீலினை செய்து பார்க்க வேண்டிய நேரமிது. நபிகள் நாயகம் அவர்கள் தமது தோழர்களுடன் எப்படி நற்குணத்துடன் நடந்துகொண்டார்கள் என்பதை குர்ஆனிய வசனம் ஒன்று இப்படி வாசித்துக்காட்டுகிறது:

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ‌ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ‌ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِ‌ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ‏

(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்கள் மீது மென்மையானவராக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீர்களானால் உங்களிடமிருந்து அவர்கள் விரண்டோடி இருப்பார்கள். ஆகவே, அவர் (களின் குற்றங்குறை)களை நீங்கள் மன்னித்து (இறைவனும்) அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக! அன்றி, (யுத்தம், சமாதானம் ஆகிய) மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்தே வாருங்கள்! (யாதொரு விஷயத்தை செய்ய) நீங்கள் முடிவு செய்தால் அல்லாஹ் விடமே பொறுப்பை ஒப்படையுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கின்றான். (அல்குர்ஆன் : 3:159)

இவ்வசனத்தை மீண்டும் ஒருமுறை வாசித்துப்பாருங்கள் அடுக்கடுக்காக பல்வேறு உண்மைகள் உங்களுக்கு புலப்படக்கூடும். இப்படியெல்லாம் நபிகளார் பணிவுடனும்,கனிவுடனும் நடந்து கொண்டதனால் தான் என்னவோ நபிகளார்”அகிலத்தார்களின் ரஹ்மத்-அருட்கொடை”என நபியவர்கள் அல்லாஹ்வால் அடையாளப் படுத்தப்படுகிறார்கள் இப்படி :

(நபியே!) நாம் உம்மை அகிலத் தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட்கொடையாகவேயன்றி அனுப்ப வில்லை. (அல்குர்ஆன் : 21:107)

அதேவேளை இன்னொரு இறை வசனம் இப்படிநம்மை எச்சரிக்கிறது:

“வழி கெட்டவர்களைத் தவிர, வேறு எவர் தம் இறைவனுடைய அருளைப் பற்றி நிராசை அடைவர்…?” (அல்குர்ஆன் : 15:56)

ரஹ்மத் எனும் இறையருள் அதுவும் நபிகளார் என்ற ரஹ்மத் எவ்வளவு பாக்கியம் மிக்கது. அந்த அருளை நாம் சும்மா பெற்றுக் கொண்டதால் அதன் அருமையும், பெருமையும் நமக்கு தெரியவில்லை.ஒருமுறை நபி(ஸல்) அவர்களிடம் உமர் (ரளி) அவர்கள் வந்தபோது, தூதரே! நாங்கள் அவ்வப்போது யூதர்களின் வேதச்செய்திகளை செவியுறுகிறோம் அவற்றில் சில எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. அவற்றில் சிலவற்றை நாங்களும் எழுதிவைத்துக்கொள்ளலாமா என்று கேட்டதுதான் தாமதம் நபிகளார் கடிந்து கொள்ள ஆரம்பித்தார்கள் இப்படி :

யூத, கிருத்தவர்களைப் போல் நீங்களென்ன நிலை தடுமாறியவர்களா..? நான் உங்களுக்கு தூய்மையான ஒரு மார்க்கத்தை கொண்டு வரவில்லையா என்ன…? ஒரு வேளை மூசா நபி உயிரோடிருந்தால் என்னைப் பின் பற்றுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. ( நூல்:மிஷ்காத்-பக் 30 )

இந்நிகழ்வு நபிகளாரை நாம் கட்டா யம் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை நன்கு வலியுறுத்துகிறது. நமக்கு ஐம்பது நேரத் தொழுகையை ஐந்து நேரத் தொழுகையாக மாற்றித் தந்த மூசா நபியும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது தான் இங்கு நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியஒன்று.

ஒருமுறை அல்லாமா இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள், தம்மிடம் அனஸ் (ரளி) அவர்களின் மூலமாக நபிகளாரின் ரோமங்களில் சில எனக்கு கிடைக்கப் பெற்றது என்று தாபிஈ  உபைதா (ரஹ் ) அவர்களிடம் கூறிய போது, “நபிகளாரின் ஒரேயொரு முடி தம்மிடம் இருப்பது இந்த உலகத்தை விட, இந்த உலகத்திலுள்ளவைகளை விட ஆக மிகப் பெரியது” என்று கூஃபாவைச் சார்ந்தவரான உபைதா (ரஹ்) அவர்கள் பெருமிதத்துடன் கூறியது இன்றும் இங்கும் மிகவும் சிந்திக்கத்தக்கது.

( நூல் :உம்தத்துல் காரீ ஷரஹ் புஹாரீ-பா 2,பக் 483 )

அல்லாஹ்வின் வாள் என்று சிறப்புப் பெயர் பெற்ற ஹாலித் இப்னு வலீத் (ரளி) அவர்கள் கூறினார்கள் : நான் எல்லாயுத்தங்களிலும் வெற்றி பெற்றதற்கு முழுமுதற் காரணம் எனது தொப்பிக்குள் நபிகளாரின் முடியைச் சேர்த்து வைத்திருந்த பரகத்து  தான் என்றார்கள். அது யமாமா யுத்தத்தில் தவறிய போது நானும் தோல்வியைத் தழுவ வேண்டியதாயிற்று என்றார்கள். எங்கு தேடியும் அந்தத் தொப்பி கிடைக்கவில்லை. அப்போது ஹாலித் இப்னு வலீத் (ரளி) அவர்கள் கூறினார்கள் : என் தொப்பி என்பதற்காக மட்டும் அதை நான் தேடவில்லை.அதற்குள் அண்ணலாரின் புனிதமான ரோமம் ஒன்று  இருக்கிறது. அது முஷ்ரிகீன்களின் கைகளில் கிடைத்து விடக்கூடாது என்பதற்காகவும் தான். ( நூல் :உம்தா-பா 2,பக் 484.)

நபிகளாரின் ஒருசிறுமுடி எவ்வளவு ரஹ்மத்தும், பரகத்தும் மிக்கது என்பதை இதன் மூலம் நாம் நன்கு புரிந்து கொள்ளலாம். ஆனால் இன்றைக்கு நாம் நமக்காக பாடுபட்ட அந்த நபியின் மீது ஸலாம் சொல்ல, ஸலவாத் சொல்ல, மவ்லீது ஷரீஃப் ஓத, மீலாது விழா கொண்டாட ரொம்பவும் யோசிக்கிறோம். பிறகு எப்படி அவர்களின் ஷஃபாஅத் எனும் பரிந்துரையை நாளை மறுமையில் நாம் பெற்றுக் கொள்ள முடியும்..? ரொம்பவும் யோசிக்க வேண்டிய ஒன்று.

ஆக, நாமும் நபிகளாரின் நற்குணங்களை செவ்வனே செயல்படுத்தும் போதுநிச்சயம் நாமும் ரஹ்மத் எனும்  இறையருளுக்கு ஆளாவோம். ஏன்சொல்லப் போனால் அந்தப் பேரருள் பெருமானார் (ஸல்)அவர்கள் தானே ! அதை நாம் புறக்கணிக்க முடியுமாஎன்ன…? “உங்களுக்கு நான் தந்தையைப் போன்றவர்” என்ற ஒற்றைச்சொல் நம் செவிகளில் ஓங்கி ஒலிக்கும் காலமெல்லாம் நபிகளாரின் நற்குணங்களில் ஏதேனும் ஒன்றையாவது விட்டுவிடாது கடைபிடிக்க முன்வர வேண்டும் அப்போதுதான் இந்த மீலாதுன்னபி விழா ஆழிய அர்த்த முள்ளதாய் அமையும். அதுதான் உண்மையும் கூட ..!

வாருங்கள்..!
தூய விழாக்களை போற்றுவோம் !
தீய விழாக்களை மாற்றுவோம் !

கீரனூர் SNR ஷவ்கத் அலி மஸ்லஹி