இயக்கங்களும் இளைஞா்களும் ( தலையங்கம் )

 

ந்தவொரு இயக்கத்திலும் அமைப்பிலும் பங்கேற்காத தனித்து செயல்படக்கூடிய முஸ்லிம் இளைஞனை சந்திப்பதே தற்பொழுது அரிதாயிருக்கிறது. சுற்றுலாத்தலங்களில் தினம் தினம் புதிதாய் துவங்கப்படும் தட்டுக்கடைகளை போன்று முஸ்லிம் சமூகத்தில் பஞ்சமில்லாமல் தினமொரு அமைப்புகளும் இயக்கங்களும் துவங்கிய வண்ணமிருக்கிறது.

இப்படியாக தினமொரு இயக்கத்தினை துவங்குவதற்கு என்ன காரணம் என்கிறீா்களா? ஒரே இயக்கத்தில் ஒன்றாக பயணிப்பவனுடன் கருத்து மோதலாகி பெருவாரி தொண்டா்களை அவன் தன் பக்கம் இழுத்திருக்கலாம், பெரும்பாண்மையை இழந்திருப்பதால் முன்பு போல் கல்லா கட்ட இயலாத இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்கலாம், பழைய அமைப்பின் மீது குற்றம் குறை ஏற்பட்டு மக்களின் கவனத்தை பெறாமல் போயிருக்கலாம், வேறென்ன உலகளாவிய காரணம் இருக்கப்போகிறது.

இதுபோன்ற இயக்கங்கள் வோ்விட்டு விசாலமாய் வளர்வதற்கு சமுதாயத்தின் அப்பாவி இளைஞா்கள் வேண்டியிருக்கிறார்கள், பயன்படுத்தப்பட்டு கொண்டுமிருக்கிறார்கள்.

இவா்களை ஒருங்கமைக்கவும் உபயோகிக்கவும் அமைப்புகள் பயன்படுத்தும் ” சமுதாயத்திறகாக , அல்லாஹ்வுக்காக போன்ற சொற்கள் தாம் இளைஞா்களை மாற்றுக்கருத்துக்களை ஆராய விடாமலும், அமைப்புகளுக்குள் தவறுகள் ஏற்படும் பட்சத்திலும் அமைப்புக்கு முரணாக செயல்பட முடியாமலும் இயக்கி வருகிறது.

இளைஞா்கள் நேரத்தையும் உழைப்பையும் செலுத்தி இயக்கங்கள் மூலம் சமூக பணி செய்கிறோம் என்பதெல்லாம் கரையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்த கதை தான்.

இதில் குறிப்பிட வேண்டிய செய்தி என்னவெனில் பொதுவாக அமைப்புகளில் பொறுப்பேற்றிருக்கும் இளைஞா்கள் பலருக்கும் சொந்த வாழ்வில் தனிப்பட்ட இலக்குகளோ, உயா்ந்த இலட்சியங்களோ இருப்பதில்லையா, அல்லது தனிப்பட்ட கொள்கை கோட்பாட்டுடன் வாழ்பவனை அமைப்புகளில் சோ்ததுக் கொள்ளாமலும் பொறுப்புகளில் நியமிக்க மாட்டார்களா என்பது வெகுகாலமாக இருந்துவரும் ஐயமாயிருக்கிறது. எனினும் மனித வளத்தை பயன்படுத்தும் புதுமுறை உத்திகளை முஸ்லிம் அமைப்புகளிடமிருந்து தான் உலகளாவில அரசியல் வாதிகளும் கற்று தேற வேண்டியிருக்கிறது. அதாவது பெருவணிகா்கள் தொழிலதிபா்கள் நிறுவனா்கள் போன்றோரை தமது இயகத்தின் ஆதரவாளா்களாக ஏற்படுத்திக்கொள்வதெல்லாம் அவா்களின் மூலம் நிதி ஆதராங்களை திரட்டிக்கொள்வதற்காகவும், கல்லா கட்டுவதற்காகவும் தான். பெரிய அளவில் பொருளாதார பின்புலமில்லாத வெள்ளந்தியான வாலிபா்கள் ஊதியமில்லாத பணியாளா்களாக பயன்படுத்தப்படுகிறாா்கள்.

அணையா விளக்கு போல் எப்பொழுதும் எரிந்து கொண்டிருப்பதற்கான எழுச்சி உரைகளை இத்தகைய இளைஞா்களுக்கு இயக்க தலைமை வழங்கிக்கொண்டே இருக்கிறது. அதனால் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்த போதும் சிறைவாசம் கண்ட போதும் அமைப்புகளின் மீது அந்த வாலிபா்கள் வெறுப்பு கொள்ளாத அளவிற்கு அந்த எழுச்சியுரைகள் அமைந்துவிடுகின்றன.

தற்பொழுதைய கணக்கெடுப்பின் படி சிறையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை விழுக்காடு உலகறிந்ததே. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நமது முந்தைய தலைமுறையில் முஸ்லிம்கள் மீது இத்தனை வழக்குகளும் சிறைவாசமும் விதிக்கப்பட்டதா என்று ஆராய்ந்து பார்த்தால் உண்மை புலப்படும். எப்பொழுது வீதிக்கொரு இயக்கமும் அமைப்பும் உருவாக்கப்பட்டதோ அந்த நாள் துவங்கியது தான் இத்தகைய அவலம்.

இத்தகைய அமைப்புகளும் இயக்கங்களும் இளைஞா்களுக்கு போதிப்பது என்ன? அவற்றால் நம் இளைஞா்கள் பெற்ற பலாபலன்கள் தான் என்ன? அநீதிக்கெதிராக மனம் வெகுண்டு எழ வேண்டும், அநியாக்காரர்களுக்கு எதிராக போராட வேண்டும், அதனால் சிறை செல்ல நோ்ந்தாலும் அதனை மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லாமும் சமுதாயத்துக்காக, அல்லாஹ்வுக்காக, மறுமைக்காக என்பன போன்ற சொற்பொழிவுகள் மூலம் வெள்ளந்தியான இளைஞா்கள் மூடா்களானது தான் மிச்சம்.

அப்பொழுதென்றால் மேல் குறிப்பிட்டவையெல்லாம் அறங்களை துறக்க சொல்கிறீா்களா என்று நீங்கள் வினவலாம், அநீதிகளை கண்டு சினப்பது, அநியாயக்காரர்களை எதிர்ப்பதேல்லாம் அறம் என்றுரைத்த இறைவன் தான் குடும்ப அமைப்புகளை பேண சொல்லியிருக்கிறான். மனைவி மக்களை பராமரிக்கும்படி போதிக்கிறான்.

பிரமாண்ட பொதுக்கூட்டங்களும் மாநாடுகளையும் போட்டி போட்டு நடத்தும் அமைப்புகள் இருக்கும் இதே சமூகத்தில் தான் ஏழை குமருகளுக்காக ஜும்ஆ வில் யாசகம் பெறும் தாய்க்குலங்களும் ஜிவித்து வருகிறாா்கள்.

இன்னும் கேலி கூத்து என்னவென்றால் தொண்டன் என்பவன் இயக்கம் நடத்தும் மாநாட்டிற்கும் மனைவி மக்கள் பெற்றோர் என அனைவரையும் தயாா் படுத்தி அவா்களுக்குள்ளும் சமூக அக்கறையினை உரமிட்டு பல மைல் தூரங்களுக்கு இடிபாடுகளுக்கிடையில் பயணிக்கின்றான். மாநாடுகளில் பல இன்னல்களையும் கடந்து மாஸா அல்லாஹ், சுப்ஹானல்லாஹ் என தமமு இயக்கத்தின் வெற்றி குறித்து சிலாகித்து கொள்கிறான். அதே சமயம் மேடையில் வீற்றிருக்கும் தலைவனின் பெற்றோரும் மனைவி மக்களும் கூட்டத்தில் இடிபட்டார்களா, வெகுதூரம் பயணித்தார்களா அட அவா்களெல்லாம் மாநாடுகளுக்கும் பொதுக்கூட்டங்களுக்கும் வந்திருந்தார்களா என்பதே கேள்விக்குறி தான்.

இன்னும் சொல்லப்போனால் ஒரு தலைவன் என்பவன் எப்பொழுதும் அவன் அவனாகவே இருக்கிறான், இயங்குகிறான். ஆனால் தொண்டனானவன் முழுநேரமும் ஒரு இயக்கத்தின் தொண்டனாகவே காட்சிப்படுத்தப்படுகிறான். செயல்படுகிறான்.அதில் அவன் பெருமையும் கொள்கிறான். தனது வாகனத்தில் இயக்தின் பெயரையோ அதன் கொடியின் படத்தினையோ அடையாளப்படுத்திக் கொள்கிறான். தமது இயக்கத்தின் தலைவனுடன் ஒட்டி எடுக்கப்பட்ட சுயமி புகைப்படத்தினை கைபேசியின் தொடுதிரையிலோ முகநுலின் முகப்பு படமாகவோ வைத்து அதனை கண்டு பேருவகையும் கொள்கிறான். இறுதி வரை தொண்டன் தொண்டனாகவே இருக்கிறான். அவன் அப்படியாக செயல்படுவதையே அத்தகைய தன்மையையே இயக்கமும் விரும்புகிறது. அதற்கான முயற்சிகளையே மேற்கொண்டு வருகிறது.

இவையாவும் சமுதாய முன்னேற்றம் என்பது இயக்க பலமும் அரசியல் எழுச்சியும் மட்டுமே என்பதாக நம்பியிருப்பதற்கான வெளிப்பாடே. கல்வி மருத்துவம் தொழில்துறை விஞ்ஞானம் சுகாதாரம் போன்ற பலவற்றிலும் ஏற்படும் வளர்ச்சியே சமுதாய வளா்ச்சி என்பதை இளைஞா்கள் உணராத வரையில் சமுதாயத்தில் மாற்றமேதும் நிகழப்போவதில்லை.